Home Blog Page 30

போர் பதற்றத்தால் மீண்டும் உயரும் எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது.

அதற்கமைய பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 0.86 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 96.86 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 0.85% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 94.61 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

அத்துடன் மேர்பன் ரக மசகு எண்ணெய் விலை 1.66% அதிகரித்து,பீப்பாய் ஒன்றின் விலை 96.09 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.171 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

ஈரான் நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீண்டும் எண்ணெய் விலை அதிகரிப்பதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொன்சேகாவின் முட்டாள்த்தனம் ‘நந்திக்கடல் இரகசியங்கள் மறைக்கப்பட்டாலும் தியாகத்தின் சாட்சியங்கள் மரணிக்காது’ : விதுரன்

மத்திய கிழக்கில் நீடித்து வரும் தீவிரமான போர்ச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கும் பின்னணியில், ஏற்கனவே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு வர முயன்று கொண் டிருந்த இலங்கை, மீண்டுமொரு பாரிய இடருக்குள் தள்ளப் பட்டிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற பின் னர், உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறமிருக்க, சர்வதேச ரீதியாகத் தோன்றி வரும் வெளியக அதிர்ச்சிகள் (External Shocks) நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
அண்மையில் பாராளுமன்ற நிதிக் குழுவின் முன்பாக முன்னிலையாகி இருந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் எச்சரிக்கை அறிக்கை, இலங்கை மீண்டுமொரு அபாயகரமான சூழலை நோக்கி நகர்கிறதோ என்ற நியாயமான அச்சத்தை மக்கள் மத்தியிலும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியிலும் தோற்றுவித்துள்ளது.
தற்போதைய சூழல், கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியின் கோர நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டுள்ளதுடன், புதிய அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கையாளுகைத் திறனை உரைத்துப் பார்க்கும் களமாகவும் மாறியிருக்கிறது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரப்புக்கள் மற்றும் மத்திய வங்கியின் தரவுகளை உற்றுநோக்கும் போது, இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டு வரும் சடுதியான வீழ்ச்சி மிகவும் கவலையளிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பேற்ற போது 289 ரூபாவாகக் காணப்பட்ட அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு, அண்மையில் 354 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்தது.
வெறும் இரு ஆண்டுகளுக்குள் டொலரின் மதிப்பு 65 ரூபாவுக்கும் அதிகமாக உயர்வடைந்திருப்பது சாதாரண மான ஒரு சந்தை மாற்றமல்ல. கடந்த காலங்களில் சதக் கணக்கில் அல்லது மிக மெதுவாகக் குறைந்து வந்த ரூபாவின் பெறுமதி, தற்போது ஒரே நாளில் 10 முதல் 12 ரூபா வரை சரிவடையும் அளவுக்கு ‘ரொக்கட் வேகத்தில்’ வீழ்ச்சி கண்டுள்ளது. இது இப்போது கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் நிச்சமயமற்ற நிலைமையே நீடிக்கிறது.
குறிப்பாக, 2028 ஆம் ஆண்டில் இலங்கை 3.259பில்லி யன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டுள்ள சூழலில், டொலரின் மதிப்பு இவ்வாறு கட்டுப்பாடின்றி அதிகரிப்பதும், அதற்கேற்ப அதன் கையிருப்பு கரைந்து வருவதும் ஆபத்தான எச்சரிக்கை மணி என்பதில் ஐயமில்லை.
மத்திய வங்கியின் விளக்கங்களின்படி, அமெரிக்க டொலரின் உலகளாவிய பலம் மற்றும் அண்மைய நாட்களில் நிலவிய சந்தை ஊகங்கள் (Market Speculations) காரணமாக உருவான செயற்கையான ‘மிகைக் கேள்வி’ (Excess Demand) இந்த சடுதியான வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
பதற்றமடைந்த இறக்குமதியாளர்கள் தமக்குத் தேவையான டொலர்களைக் கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால் சில்லறைச் சந்தையில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டது. எனினும், மத்திய வங்கியின் தலையீடு மற்றும் ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 100 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தி 8.75 சதவீதமாக அதிகரித்தமை போன்ற இறுக்கமான நிதிக்கொள்கை நடவடிக்கைகள் மூலம் இந்தத் தளம்பல் நிலை தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதிலும், 700 பில்லியன் டொலர் என்ற பிரம்மாண்ட அந்நியச் செலாவணி கையிருப்பை வைத்து ள்ள இந்தியாவின் நாணயமே டொலரின் வலுவடைதல் காரணமாக மதிப்பிழந்து வரும் வேளையில், வெறும் 6.8 பில்லியன் டொலர் தேறிய வெளிநாட்டுக் கையிருப்பை மாத்திரம் கொண்டுள்ள இலங்கை, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ள 900 மில்லியன் டொலர் நிதியை மட்டும் நம்பி எவ்வாறு ரூபாவின் ஸ்திரத்தன்மையை நீண்ட காலத்திற்குப் பேணப் போகிறது என்ற கேள்வி பொருளாதார ஆய்வாளர்களால் எழுப்பப்படுகிறது.
மறுபுறத்தில், நாட்டின் பிரதான அந்நியச் செலா வணி உறைவிடமாக விளங்கும் சுற்றுலாத்துறையின் வருமான வீழ்ச்சி அரசாங்கத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்தபட்ச வருமானத்தை ஈட்டிய மாதமாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 257 மில்லியன் டொலராகக் காணப்பட்ட சுற்றுலா வருமானம், இவ்வாண்டு ஏப்ரலில் வெறும் 157 மில்லியன் டொலராகக் கடுமையாகச் சரிந்துள்ளது. ஒரே வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் 100 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது.
இதேபோக்கு அடுத்தடுத்த மாதங்களிலும் தொடரு மானால், ஆண்டுக்கு 1.2 பில்லியன் டொலர் வருமான இழப்பை நாடு சந்திக்க நேரிடும். அதிர்ஷ்டவசமாக, இக் காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் (Worker Remittances) கடந்த ஆண்டின் 2.5 பில்லியன் டொலரிலிருந்து 3.1 பில்லியன் டொலராக அதிகரித்துக் காணப்படுவது ஓரளவுக்கு ஆறுதலளித்தாலும், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியை இதனால் முழுமையாக ஈடுசெய்ய முடியாது.
இந்த வருமான இழப்பு மற்றும் டொலர் பற்றாக் குறையைச் சமாளிப்பதற்காக, வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதித்துள்ள தோடு, கடன்களுக்கான உச்ச வரம்புகளையும் அறிமுகப்படுத்தியுள் ளது. இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் தற்காலிகமாக டொலர் வெளியேற்றத்தைத் தடுத்தாலும், உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளையும் நடுத்தர வணிகங்களையும் முடக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோவின் அண்மைக்காலக் கூற்றுக்கள், இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பா ளர் சபை ஒப்புதல் அளித்து, 695 மில்லியன் டொலர்களை விடுவிக்கத் தீர்மானித்திருப்பது தற்போதைய அநுர அரசாங்கத்தின் கொள்கை அமுலாக்கத்திற்கு கிடைத்த ஒரு சான்றிதழாக இருந்தாலும், கடன்களை மறுசீரமைப்பதில் நிலவும் சவால்கள் இன்னும் தீரவில்லை.
மத்திய கிழக்கு மோதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் விளைவாக, இலங்கையின் உள்நாட்டுப் பணவீக்கம் கடந்த மார்ச்சில் இருந்த 2.2 சதவீதத்திலிருந்து ஏப்ரலில் 5.4 சதவீதமாக உயர் வடைந்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் எச்சரித்துள்ள படி, உலகளாவிய ரீதியில் இந்த ஆண்டில் 14 பில்லியன் முழு நேர வேலை இழப்புகளுக்குச் சமமான பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. இது கொரோனா தொற்றுக் காலப் பாதிப்புகளை விடவும் மிக மோசமானது என்பதால், அதன் நேரடித் தாக்கம் இலங்கை யின் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புச் சந்தைகளிலும் எதிரொலிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.
இந்த இக்கட்டான சூழலில், அநுர அரசாங்கத்தின் அரசியல் எதிர்காலம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அது பொருளாதாரத்தை எவ்வாறு கையாளப் போகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.
முன்னதாக, நாட்டின் பொருளாதாரம் திருப்தி கரமான பாதையில் பயணிப்பதாகக் கூறிவந்த அரசாங்கம், இப்போது நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு ஆபத்துக்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டு வது போல, டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்து, நிலைமை கைமீறிச் சென்றால் அது மற்றுமொரு மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். கடந்த கால கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமும் கொரோனா பெருந்தொற்று என்ற உலகளாவிய புற அதிர்ச்சியைச் சரியாகக் கையாளத் தவறியதாலேயே, மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி வீழ்த்தப்பட்டது.
டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக யுகத்தில், பொரு ளாதாரச் சுமைகளால் விரக்தியடையும் மக்களின் கொந்தளிப்பை ஒருங்கிணைத்து ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் எளிதானதாக மாறியுள்ளது. எனவே, அநுர அரசாங்கம் வீராப்புப் பேச்சுக்களைக் கைவிட்டு, வட்டிவீத உயர்வுகள், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே வரவிருக்கும் தட்டுப்பாடுகள் மற்றும் விலை உயர்வுகளிலிருந்து மக்களைப் பாதுகாத்து, நாட்டின் பொருளாதாரக் கடிவாளத்தை தனது கைகளில் வைத்திருக்க முடியும்.

இலங்கை சிறைகளில் இருந்த 30 மீனவர்கள் விடுதலை!

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 30 இந்திய மீனவர்கள் நேற்று (02) சென்னையை சென்றடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் இந்திய பிரதமரை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராஜதந்திர நடவடிக்கையின் கீழ் விடுவிப்பதற்கான கோரிக்கையினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத்தேர்தல் நடக்கும்; ஆனால் நடக்காது: பா.அரியநேத்திரன்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இந்த ஆண்டு 2026 ல் இல்லை எனவும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால் அவ்வாறு திட்டமிட்டிருந்த வேளையில் நாட்டில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடி சூழலும் உருவானது.
இதன் காரணமாக, அனர்த்த நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக மாத்திரம் 500 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது.  அந்த நிதிதான் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியாகும். இதன் காரணமாகவே இவ்வருடத்தில் எங்களால் தேர்தலை நடத்த முடியாமல் போனது. அத்துடன்  தற்போது சில புதிய சட்டப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில்  மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக இருந்த சட்டரீதி யான வழிமுறைகளில் குளறுபடிகள் ஏற்பட்டதே இதற்குப் பிரதான காரணமாகும் என ரில்வின் சில்வா  கடந்த  (23/05/2026) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் திறந்து வைத்ததன் பின் னர்  கூறியிருந்தார்.
அவர் இவ்வாறான கருத்தை கூறி சரியாக மூன்று தினங்களால் (26/05/2026) அன்று மறுதலித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஷ்ச மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் சட்ட சிக்கலால் தான் தேர்தலுக்கு தேவையான பணம் அரசிடம் உள்ளது எனவும் ரில்வின் சில்வாவின் கூற்றை பொய்யாக்கி பேசினார்.
இதில் யார் கூறியது சரி? மாகாணசபைத் தேர் தல் இந்த வருடம் நடக்கும் ஆனால் நடக்காது என்ற தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் தேசிய மக்கள் சக்தி அரசின் நிலைப்பாடு உள்ளதை இவர்களுடைய இரட்டை நிலைப்பாடும் முரண் பட்ட கருத்துக்களும் கோடிட்டு காட்டுகிறது.
மாகாணசபை தேர்தல் தொடர்பாக இறுதி முடிவு தெரியாத நிலை தொடர்கிறது. இதேவேளை கடந்த  (26/05/2026) ல் கொழும்பில் தேர்தல் முறைமை குறித்து ஆராய கூடிய சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் 42.எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பம் இட்டு மாகாணசபை தேர்தலை பழைய முறையில் அதாவது விகிதாசார முறையில் இந்த ஆண்டு நடத்தவேண்டும் என ஒரு பிரகடனத்தை தயாரித்து அதில் கையொப்பம் இட்டு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் வழங்கியுள்னர். இதில் தேசிய மக்கள் சக்தி ஆளும் தரப்பு மட்டுமே கையொப்பம் இடவில்லை.
இந்த 42, எதிர்கட்சிகளில் 15 கட்சிகள் தற்போதைய நாடாளுமன்றத்தில் ஓரிரு எதிர்கட்சி ஆசனங்களுடன் அங்கம் வகிக்கின்றனர். 27 கட்சிகள் நாடாளுமன்றத்தில் எந்த ஆசனங்களையும் பெறாத கட்சிகளாகும்.
தேசியமக்கள் சக்தியில் ஜனாதிபதி அநுரகுமாரதிச நாயக்க தெரிவாகி 159, ஆசனங்களுடன் கடந்த 2024, நவம்பரில் ஆட்சியமைத்தாலும் ஜனாதிபதிக்கும், அவர் களுடைய ஆட்சியில் உள்ள பிரதமர், மற்றும் அமைச்சர் களுக்கு இல்லாத அதிகாரமும், அந்த கட்சிகளை தீர்மா னிக்கும் சக்தியும் பலமும் மக்கள் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவிற்கே உள்ளது என்பது எழுதப்படாத விதியும் நடைமுறையும் ஆகும். அதனால் ஜனாதிபதி கூறும் விடயங்களை விட ரில்வின் சில்வா கூறும் விடயங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவே நோக்கவேண்டியுள்ளது.
ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் இன்னுமொரு உண்மையை கூறினார். மாகாணசபை தேர்தலை நடத்துமாறு இந்தியத் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.  இந்திய அரசிற்கும் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் இடையிலும் மிகச் சிறந்த, நட்புறவானதொரு தொடர்பு நிலவுகிறது. எமக்கிடையே நல்லதொரு புரிதல் காணப் படுகிறது என்றார்.
அவருடைய கருத்தில் இருந்து அறியக்கூடியது இந்திய அரசானது மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, ஆனால் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமர், இந்திய துணை ஜனாதிபதி, இந்திய தூதுவர்கள், இந்திய இராஜதந்திரிகளுடன் மாகாணசபை தேர்தல் உடனே நடத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என கூறி அவர்களுடன் வரிசையில் நின்று படம் எடுத்து கூறிய கருத்துகள் எவைகளையும் இந்திய அரசு கணக்கில் எடுக்கவில்லை. தமிழ்தேசிய கட்சிகள் கூறியதை இந்திய அரசு ஒரு பொருட்டாக எடுக்காமல் உதாசீனம் செய்துள்ளனர் என்பதையே ரில்வின் சில்வாவின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே வி பி) மற்றும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என் பி பி) ஆகியன கொள்கை அளவில் மாகாண சபை முறைமைக்கு எதிரா னவை. இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த முறைமை, நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தத் தவறிவிட்டதாக கருதும் அவர்கள், எதிர்காலத்தில் இதற்கு மாற்றான புதிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை 1987 தொடக்கம் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.
மாகாண சபை முறைமைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.தற்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் தற்போதைய அநுராவிடம் (அப்போது அவர் ஜனாதிபதி இல்லை) கடந்த 2023,ஜனவரி,31ல் கேட்ட போது அவர் கூறிய பதில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற தன்மை காணப்பட்டது. அக்காலக்கட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் தலைமைகளின் இணக்கப்பாடான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட வில்லை. இந்தியாவின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது. தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை தற்போது உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்க்க போவதில்லை என கூறினார்.
2024 செப்டம்பர் 21 ல் ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகிய அநுரா 2024 நவம்பர் 14 பொதுத்தேர்தலில் 159 அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பின்னர் 2025 பெப்ரவரியில் ஊடகங்களுக்கு கருத்து கூறிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  ரில்வின் சில்வா, 13ஆவது திருத்தத்தின் கீழான மாகாண சபை முறை மையானது இலக்குகளை அடையவில்லை ஆனால், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் வரை அதனை ஒழிக்க மாட்டோம் என்ற தொனியிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
அப்படியென்றால், தமிழர்களுக்கான நியாயமான தீர்வு என்ன? என்பதை அவரால் கூறமுடியவில்லை. தற்போது ஆளும் தரப்பை விட எதிர்கட்சிகளான சிங்கள, தமிழ், முஸ்லீம், கட்சிகளுக்கு மாகாணசபை தேர்தல் தேவை யாக உள்ளது மாகாணசபை தேர்தலில் தமது பலத்தை காட்டுவது மட்டுமே.
வடகிழக்கில் உள்ள தமிழ்த்தேசிய கட்சிகளும் அதிகாரப்பரவலாக்கத்துக்காக மாகாணசபை தேர்தலை இப்போது கோரவில்லை மாறாக ஆட்சியில் ஆசனங்களை பெற்று தமது பலத்தை நிருபிக்கவும் முதலமைச்சர் கதிரைகளை அலங்கரிக்கவும் பதவி ஆசைக்காகவுமே உடனே மாகாணசபை தேர்தலை பழைய  விகிதாசார முறையில்   நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக் கின்றனர். அறிக்கை விடுகின்றனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைவர் பதவியின் (இரா.சம்மந்தன்) 2015 தொடக்கம் 2020 வரை செயல்பட்டது. இந்த காலப்பகுதியான 2017 செப்டம்பர் 22 ல் நிறைவேற்றப்பட்ட மாகாணசபை புதிய திருத்தச் சட்டம் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் களை நடத்துவதற்கான முறையை மாற்றுவதற்காக நிறைவேற்றப் பட்டது.
இச்சட்டத்தின்படி 60% வீதம் உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும் மீதமுள்ள 40% வீதம் உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களைப் போலவே மாகாண சபைகளிலும் பெண்களுக்கு 25% வீதம் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டது.
இந்த சட்டத்திற்கு அமைய மாகாண சபைத் தொகுதிகளை மீளமைக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அது நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதாலும், சட்டச் சிக்கல்கள் எழுந்ததாலும் இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதில் தொடர்ச்சியாக நல்லாட்சி தொடக்கம் தற்போது வரை சிக்கல் தொடர்கிறது.
இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் காலவரையறையின்றிப் பிற்போடப்பட்டு, பல வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்காமல் உள்ளன. இந்த இழுபறிக்கு இலங்கையில் உள்ள சகல கட்சிகளும் நல்லாட்சி காலத்தில் விட்ட தவறாகும்.
2017 ல் நல்லாட்சிக்கு முட்டுக்கொடுத்த அனைத்து கட்சிகளும் மாகாணசபை திருத்த சட்டத்தை எதிர்க்க வில்லை. அப்போது நல்லாட்சி அரசை தூக்கி தலையில் வைத்து கொண்டாடும்போது மாகாணசபை சட்டமூலத்தை திருத்தத்தை தமிழரசுக்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் ஏற்றனர். அன்று ஆதரவு வழங்கிய எல்லா கட்சிகளுக்கும் இப்போது தங்களுடைய பதவி ஆசைகளுக்காக மாகா ணசபை தேர்தல் தேவைப்படுகிறது என்பதே உண்மை.
அதிகாரப்பரவலுக்காக இதில் எவருமே மாகாண சபை தேர்தலை கோரவில்லை. தமது கட்சிகளின் செல் வாக்கை நிருபிக்கவும், முதலமைச்சர் பதவிகளை பெறவும் மாகாணசபை தேர்தலை பயன்படுத்த பார்ப்பதே சகல எதிர் கட்சிகளின் கொள்கையாக உள்ளது.

செம்மணியில் இதுவரை 263 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 263ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன.

இதன்போது, புதிதாக என்புத்தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேலதிகமாக மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் தென்பட்ட போதிலும், அவை இன்னும் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்படவில்லை.

அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து கண்டறியப்பட்ட நாணயக்குற்றி வடிவிலான பொருளானது 97ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டு, நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த என்புத்தொகுதியின் தலைப்பகுதியில் முழுமையான தேங்காய் சிரட்டை ஒன்றும் அடையாளம் காணப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியானது மயான எல்லைக்குள் அமைந்திருப்பதால், அது ஏதேனும் தென்னங்கன்றுகளின் அடிப்பகுதியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக 263 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 262 என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ருகுணு பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையைச் சேர்ந்த பத்து மாணவர்கள், நேற்று முதல் இந்த அகழ்வுப் பணிகளில் இணைந்து கொண்டுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதி, மூன்று வார கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க கோரிக்கை!

இலங்கையின் எரிபொருள் சந்தையில் ஈடுபட்டுள்ள லங்கா ஐஓசி (Lanka IOC), சினோபெக் (Sinopec) மற்றும் ஆர்.எம். பார்க் (RM Parks) ஆகிய எரிபொருள் நிறுவனங்கள், எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய விலைகளின் கீழ் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், அந்த நஷ்டத்தை மேலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும், தனியார் நிறுவனங்கள் விடுத்துள்ள இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு உறுதியான பதிலையும் வழங்கவில்லை என்பதுடன், தீர்மானம் எடுப்பதை மேலும் தாமதப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க, எரிபொருள் செயல்பாட்டு நஷ்டத்தை மேலும் தாங்க முடியாது என்பதால், விலை திருத்தம் அவசியம் என்ற கோரிக்கை அந்த நிறுவனங்களிடமிருந்து அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அனுமதியின்றி மாகாண சபைத் தேர்தல் நிதி வேறு தேவைகளுக்காக மறு ஒதுக்கீடு செய்யப்பட்டதா?

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வேறு தேவைகளுக்காக மறுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழு அவசர விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு நேற்று திங்கட்கிழமை திகதியிட்டு மனோ கணேசன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது:-

“மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அரசால் அனர்த்த மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கருத்துத் தெரிவித்திருந்தார்.

எனக்குத் தெரிந்த வரை, இத்தகையதொரு தேர்தல் நிதியை வேறு செலவினத் தலைப்புகளுக்கு மாற்றுவதற்கோ அல்லது மறு ஒதுக்கீடு செய்வதற்கோ நாடாளுமன்றம் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை. ரில்வின் சில்வாவினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை துல்லியமானது எனின், அது நாடாளுமன்ற அனுமதியின்றி பொது நிதியை அங்கீகரிக்கப்படாத வழிகளில் பயன்படுத்திய பாரதூரமான செயலையே குறிக்கின்றது.

பொது நிதி மீதான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கே காணப்படுகின்றது. எனவே, தேர்தல் நிதியை மாற்றுவது, மறு ஒதுக்கீடு செய்வது அல்லது செலவிடுவது போன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் மற்றும் நிதி விதிமுறைகளை மீறி நடந்துள்ளதா என்பதை அரச நிதி பற்றிய குழு உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அத்துடன் இந்தக் குழு, தனது அதிகார வரம்புக்குள் இதற்குரிய தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” – என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

பொன்.சிவகுமாரனின் 52வது நினைவேந்தலுக்கு வலி.கிழக்கு பிரதேச சபை அழைப்பு

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன்.சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அறிவித்துள்ளது.

உரும்பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்திலேயே ஈகைச்சுடர் ஏற்றி அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்னெடுத்து வருகிறது.

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக, தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய பொன்.சிவகுமாரன், 1974 ஜூன் 5ஆம் திகதி கைது செய்யப்பட்டபோது நஞ்சருந்தி உயிர்மாய்த்துக்கொண்டார்.

தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலை சுட்டிக்காட்டி, தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துப் போராடிய பொன்.சிவகுமாரன், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுதவழியிலான வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து உயிர்த்தியாகம் செய்த இளைஞனாக இவர் நினைவுகூரப்படுகிறார்.

பொன்.சிவகுமாரனின் தியாகத்தினை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை இந்த ஆண்டும் நினைவேந்தலை வழமைபோன்று உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக சகலரும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவால் நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து உலங்கு வானூர்திகள்!

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger) பன்முகப் பயன்பாட்டு உலங்கு வானூர்திகள் கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளன.

இவற்றின் வருகையானது, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், இலங்கை விமானப்படையின் செயற்பாட்டு மற்றும் பயிற்சித் திறன்களை மேம்படுத்துவதில் ஒரு மதிப்புமிக்க பங்களிப்பாகவும் விளங்குவதாக விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த உலங்கு வானூர்திகள் தற்போது இரத்மலானை விமானப்படை தளத்தில் கட்டமைப்பு மாற்றங்களுக்கும் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

தேவையான ஆய்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வமாகச் சேவையில் இணைக்கப்பட்டு செயற்பாட்டுப் பணிகளுக்காக நிறுத்தப்படும்.

இவை, இலங்கை விமானப்படையின் விமானப் பயிற்சித் திறனை கணிசமாக வலுப்படுத்தும் அதேவேளையில், பரந்தளவிலான தேசியத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவை முதன்மையாக விமானி பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண செயல்பாடுகள், தேடல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் இலங்கை விமானப்படையினால் மேற்கொள்ளப்படும் ஏனைய பொதுச் சேவை கடமைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக விமானப்படை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உடனான பேச்சை இடைநிறுத்திய ஈரான்!

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடனான அமைதி பேச்சினை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேற்காசியாவில் நிலவும் போர் சூழலை அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த சூழலில் மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. அது தொடர்பாக இரு தரப்பும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து வருகின்றன. இருப்பினும் இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த சூழலில் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடன் மத்தியஸ்தர்கள் மூலம் மேற்கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தையை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை உடன் தொடர்பு கொண்டார் TANSIM செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக, ஈரான் மீது கடந்த வாரம் அமெரிக்க தாக்குதல் நடத்தியது. இந்தியா இரண்டு தரப்பு உறுதி செய்தன. மேலும், அமெரிக்கா போர் நிறுத்த அத்துமீரத்தில் ஈடுபட்டதாக ஈரான் அதை கண்டித்தது.

கடந்த பிப்.28-ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்.9-ம் திகதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.