Home Blog Page 29

திருகோணமலை: வட்டவன் படுகொலை நினைவேந்தல்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் அமைந்துள்ள வட்டவன் படுகொலை நினைவேந்தல் பகுதியில், 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற வட்டவன் கூட்டுப் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை  (03) பொதுமக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி, வெருகல் பிரதேசத்திற்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தாக்குதல்களின் போது, ஆரிப்பு, பூநகர், பூமரத்தடிச்சேனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, வாழைத்தோட்டம் மற்றும் வட்டவன் உள்ளிட்ட பல கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி தீக்கிரையாக்கப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதல்களின் காரணமாக அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு காடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். எனினும், வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அவர்களது உறவினர்களும் தப்பிச் செல்ல முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் பாதுகாப்பிற்காக ஒரு வீட்டிற்குள் தஞ்சமடைந்திருந்த நிலையில், அங்கு நுழைந்த தாக்குதல்காரர்களால் வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்டதுடன் பின்னர் உடல்கள் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்தனர். இச்சம்பவத்தில் ஒரு கர்ப்பிணித் தாய், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

படுகொலையில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் வருமாறு:

சுபத்திரை

கார்த்திகேசு

கார்த்திகேசு கனகம்மா

ரங்கராசா அமராவதி

ரங்கராசா ராசா

ரங்கராசா சரஸ்வதி

கேதுபாலுப்பிள்ளை

அன்னக்கிளி

சின்னையா கிட்ணப்பிள்ளை

இராசையர் (ஓடாவியார்)

நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவாக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும், போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நீதி மற்றும் உண்மையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

 

இலங்கை மீன்பிடிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜப்பான் இணக்கம்!

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம், கடல்சார் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பப் பீடங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் (State Minister of Agriculture, Forestry and Fisheries) நெமோட்டோ யுகினோரி (Hon. NEMOTO Yukinori) அவர்களுக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான விசேட கலந்துரையாடல் நேற்று (02) டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பானிய கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில், நீரியல் வளர்ப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கையின் கடல் உணவு பெறுமதி சங்கிலியை (Seafood Value Chain) மேம்படுத்துதல் மற்றும் ஜப்பானிடமிருந்து தேவையான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், ஜப்பானிய சந்தையில் இலங்கையின் கடல் உணவுகளுக்கான தேவையை மேலும் அதிகரிப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம், கடல்சார் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பப் பீடங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை இந்தக் கலந்துரையாடலின் குறிப்பிடத்தக்க  வெற்றியாகும்.

இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவித்துரு ஜனக குமாரசிங்க மற்றும்  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அம்பாறையில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 14 வயது இளம் பௌத்த பிக்கு!

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக  துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம  பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை (2) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன்போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில்  3 இளம் பிக்குகள் அண்மையில்  தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும்  2 இளம் பிக்குகள் காவல்துறையினரால் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த தேரர் தீகவாவி பிரதேசத்திற்கு தப்பி சென்றிருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த தேரர்  தீகவாபி பகுதியில் இருந்து   மத்திய முகாம் காவல்துறையினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவை மத்திய முகாம் காவல்துறையினர் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை  சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு சந்தேகத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த தேரரை இன்று (3) புதன்கிழமை அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நீதியரசர்களின் ஓய்வு குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்!

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றக் கட்டமைப்பின் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்தத் தருணத்தில் நீதிமன்றங்களில் தற்போது சேவையாற்றி வரும் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதானது, நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு வெளிப்படையான முயற்சியாகவே பொதுமக்கள் கருதக்கூடும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலத் திட்டமிடல் எதுவுமின்றி இவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வது, அந்த நீதிமன்றங்களின் கௌரவத்திற்கும் நீதியரசர்களின் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாக சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய அரசாங்கம் இத்தகையதொரு நடவடிக்கையை முன்னெடுத்தால், அது எதிர்கால அரசாங்கங்களுக்கும் நீதித்துறை சார்ந்த பணிகள் தொடர்பாக, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி அரசியலமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தை கீழே பார்வையிட முடியும்.

கோட்டாபாய உள்ளிட்ட மூவருக்கு வெளி நாடு செல்ல தடை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தளம் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு மற்றும் அமெரிக்க வான்படைத் தளம் ஆகியவற்றை, தான் இலக்கு வைத்ததாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தங்களது தொலைத்தொடர்பு ஆண்டெனா மற்றும் ஈரானிய எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் ஆகியவற்றை இலக்கு வைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறுகிறது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 695 மில்லியன் டொலர் நிதியுதவி!

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை அடுத்தே இந்த இரு தவணைகளுக்கான நிதியும் ஒரே கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தகவல்களின்படி, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இந்த பெருந்தொகை நிதியானது நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த கால பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையையும், சந்தை நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த நிதியுதவி ஒரு குறிப்பிடத்தக்க பக்கபலமாக அமையும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

இந்த அரசாங்கமும் நெருக்கடிக்குள்ளாகும் – நந்தலால் வீரசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தை புறக்கணித்து, ஊழல் மிக்கதொரு நிர்வாக கட்டமைப்புக்குள் செல்லும் நோக்கத்தை கொண்ட தரப்பினருக்கு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் மக்கள் தற்போது தெளிவாகவும், யதார்த்தத்தை விளங்கிக்கொண்டதாகவும் உள்ளார்கள்.

நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தை அமுல்படுத்தியதால் தான் நிதி ஒழுக்கம் பேணப்பட்டு, பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. மறுசீரமைப்புக்களை மாற்றியமைத்தாலோ அல்லது புறக்கணித்தாலோ இந்த அரசாங்கமும் நெருக்கடிக்குள்ளாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்டம், நாட்டின் நிதி நிலைமை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2019 மற்றும் 2020ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பொருளாதார கட்டமைப்பில் ஏற்படுத்திய குறுகிய கால  மாற்றங்களினால் நாடு மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

பாரிய போராட்டத்தின் பின்னர் தான் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்டத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நாணய நிதியத்தின் செயற்திட்டத்தின் கடன் தவணை பெறுவது மாத்திரம் பிரதான இலக்கு என்று சுட்டிக்காட்டுவது முற்றிலும் தவறானது.

பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டை தள்ளிய தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களை குறிப்பிட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. அரசியல் தரப்பினரை காட்டிலும் மக்கள் தற்போது தெளிவாக உள்ளது வரவேற்கத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தால் தான் நாட்டின் நிதி ஒழுக்கம் பேணப்பட்டு, மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஊழல் இல்லாதொழிக்கப்பட்டு, புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நாட்டின் வரி கொள்கை வினைத்திறனாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை தேர்தல் கால பிரசாரமாக பயன்படுத்தக் கூடாது.நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் நிதி ஒழுக்கம் பேணப்பட வேண்டும். 2027 ஆம் ஆண்டுக்கு பின்னர் இச்செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தீர்மானிக்க வேண்டும்.

அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற கொள்கைக்கு அப்பாற்பட்டு எதிர்க்கட்சிகள் நாட்டை முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும். பொருளாதார மீட்சிக்கான திட்டங்களையும், நடவடிக்கைகளையும்  அரசியல்மயப்படுத்தக்கூடாது. வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு எடுக்கும் தீர்மானங்கள் தற்காலிகமானதாக அமைந்தாலும் அது கடினமாதாகவே இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த 03 ஆண்டுகளில் கடுமையான தீர்மானங்களை செயற்படுத்தியதால் தான் நாடு விரைவாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெற்றது. இவ்வாறான நிலை இனியொருபோதும் ஏற்படாத வகையில் நிலையானதொரு கொள்கைத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை புறக்கணித்து, ஊழல்மிக்கதொரு நிர்வாக கட்டமைப்புக்குள் செல்லும் நோக்கத்தை கொண்ட தரப்பினருக்கு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் மக்கள் தற்போது தெளிவாகவும், யதார்த்தத்தை விளங்கிக் கொண்டதாகவும் உள்ளார்கள்.

நாட்டை விட்டு நான் தப்பித்துச் செல்வதற்கு முயற்சிப்பதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான  குற்றச்சாட்டுக்களுக்கு நான் ஒருபோதும் முக்கியத்துவம் வழங்க போவதில்லை. இருப்பினும் நாட்டு மக்களுக்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். 2022 ஆம் ஆண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தான் ஆளுநர் பதவியை பொறுப்பேற்றேன். சவால்களையும், நெருக்கடிகளையும் கண்டு நான் ஒருபோதும் தப்பிச் சென்றதில்லை. அவ்வாறு செல்வதாயின் 2022 ஆம்  ஆண்டு பதவியை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன் என்றார்.

மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்த விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நிரோஷன் பாதுக்க விடுத்துள்ள விசேட அழைப்புக் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கான அரசியல் உத்திகள் மற்றும் கட்டமைப்பு ரீதியான வேலைத்திட்டங்கள் குறித்த மிக முக்கியமான விடயங்களை ஆலோசிப்பதற்காக இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீர்மானமிக்க இந்தத் தேர்தல் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு, முன்னாள் மாகாணசபை பிரதிநிதிகள் பெற்றுள்ள அரசியல் அனுபவங்களும் பெறுமதிமிக்க கருத்துக்களும் அத்தியாவசியமானவையாகக் கருதப்படுகின்றன.

எனவே, இந்த விசேட கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் அழைக்கப்படுகின்றீர்கள்.

யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதப்படுத்தல் குறித்து தீவிர விசாரணை – நளிந்த ஜயதிஸ்ஸ

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. எனினும், சமூக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்த வரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மாணவர்களே இந்த வெசாக் கூட்டை மிகவும் அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர்.
எனவே, இந்த நல்லிணக்க முயற்சியைச் சீர்குலைப்பதற்காக ஏதேனும் ஒரு தரப்பினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயலா இது என்பது குறித்துப் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் மேலதிக விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியும் என்றார்.