சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தை புறக்கணித்து, ஊழல் மிக்கதொரு நிர்வாக கட்டமைப்புக்குள் செல்லும் நோக்கத்தை கொண்ட தரப்பினருக்கு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் மக்கள் தற்போது தெளிவாகவும், யதார்த்தத்தை விளங்கிக்கொண்டதாகவும் உள்ளார்கள்.
நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தை அமுல்படுத்தியதால் தான் நிதி ஒழுக்கம் பேணப்பட்டு, பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. மறுசீரமைப்புக்களை மாற்றியமைத்தாலோ அல்லது புறக்கணித்தாலோ இந்த அரசாங்கமும் நெருக்கடிக்குள்ளாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2019 மற்றும் 2020ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பொருளாதார கட்டமைப்பில் ஏற்படுத்திய குறுகிய கால மாற்றங்களினால் நாடு மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
பாரிய போராட்டத்தின் பின்னர் தான் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்டத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நாணய நிதியத்தின் செயற்திட்டத்தின் கடன் தவணை பெறுவது மாத்திரம் பிரதான இலக்கு என்று சுட்டிக்காட்டுவது முற்றிலும் தவறானது.
பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டை தள்ளிய தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களை குறிப்பிட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. அரசியல் தரப்பினரை காட்டிலும் மக்கள் தற்போது தெளிவாக உள்ளது வரவேற்கத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தால் தான் நாட்டின் நிதி ஒழுக்கம் பேணப்பட்டு, மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஊழல் இல்லாதொழிக்கப்பட்டு, புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நாட்டின் வரி கொள்கை வினைத்திறனாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை தேர்தல் கால பிரசாரமாக பயன்படுத்தக் கூடாது.நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் நிதி ஒழுக்கம் பேணப்பட வேண்டும். 2027 ஆம் ஆண்டுக்கு பின்னர் இச்செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தீர்மானிக்க வேண்டும்.
அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற கொள்கைக்கு அப்பாற்பட்டு எதிர்க்கட்சிகள் நாட்டை முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும். பொருளாதார மீட்சிக்கான திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அரசியல்மயப்படுத்தக்கூடாது. வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு எடுக்கும் தீர்மானங்கள் தற்காலிகமானதாக அமைந்தாலும் அது கடினமாதாகவே இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த 03 ஆண்டுகளில் கடுமையான தீர்மானங்களை செயற்படுத்தியதால் தான் நாடு விரைவாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெற்றது. இவ்வாறான நிலை இனியொருபோதும் ஏற்படாத வகையில் நிலையானதொரு கொள்கைத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.
நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை புறக்கணித்து, ஊழல்மிக்கதொரு நிர்வாக கட்டமைப்புக்குள் செல்லும் நோக்கத்தை கொண்ட தரப்பினருக்கு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் மக்கள் தற்போது தெளிவாகவும், யதார்த்தத்தை விளங்கிக் கொண்டதாகவும் உள்ளார்கள்.
நாட்டை விட்டு நான் தப்பித்துச் செல்வதற்கு முயற்சிப்பதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு நான் ஒருபோதும் முக்கியத்துவம் வழங்க போவதில்லை. இருப்பினும் நாட்டு மக்களுக்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். 2022 ஆம் ஆண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தான் ஆளுநர் பதவியை பொறுப்பேற்றேன். சவால்களையும், நெருக்கடிகளையும் கண்டு நான் ஒருபோதும் தப்பிச் சென்றதில்லை. அவ்வாறு செல்வதாயின் 2022 ஆம் ஆண்டு பதவியை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன் என்றார்.



