Home Blog Page 31

விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள சூழலில், தாமதமின்றி துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை (03) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கிவருகின்றது. இந்நிலையில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நெற்கொள்வனவில் தாமதங்கள் ஏற்படுமா?

அத்தோடு சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து  கொள்வனவுசெய்து களஞ்சியப்படுத்துவதற்கு  நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் உள்ளதா? இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினர் விளக்கங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இங்குள்ள நெற் களஞ்சியசாலைகளில் நெல் நிரம்பியிருப்பதாக அறியமுடிகின்றது.

அப்படியிருக்கையில் சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடம் கொள்வனவு செய்து எங்கே களஞ்சியப்படுத்தி வைக்கப் போகின்றீர்களென்பது குறித்தும் உரியதரப்பினர் விளக்கந்தரவைண்டுமெனத் தெரிவித்தார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் பதிலளிக்கையில்,

இந்தவிடயம் தொடர்பாக விவசாயத்திணைக்கள பணிப்பாளர் நாயகம், நெல்சந்தைப்படுத்தல்சபையினர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தொடர்பில் தெரிவித்திருக்கின்றோம்.

பெரும்பாலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நம்புகின்றோம்.

குறிப்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை சந்தைப்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. நெல் சந்தைப்படுத்தல் தாமதப்படுவதால்தான், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதிலும் தாமதங்கள் ஏற்படுகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் இதன்போது பதிலளித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தவிடயத்தில் கூடுதல் கவனஞ் செலுத்தப்படவேண்டும். ஏன்எனில் இவ்வாறு சிறுபோக நெல் கொள்வனவில் தாமதங்கள் ஏற்பட்டால் அனைத்து விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.

அவ்வாறு விவசாயிகள் பாதிப்புக்களுக்குள்ளாகாதவாறு, விவசாயிகள் பயன் பெறக்கூடிய வழிவகைகளை மேற்கெள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

பிள்ளையானின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்திவைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான வழக்கு விசாரணையை நிறைவு செய்த உயர்நீதிமன்றம், வழக்கு தீர்ப்பு அறிவிப்பதை ஒத்திவைத்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, அர்ஜூன ஒபேசேகர கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா ‘ பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனது சேவை பெறுநரை கைது செய்து, தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமான செயற்பாடு’ என்று விடயங்களை முன்வைத்தார்.

தமது சேவை பெறுநரை கைது செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான காரணத்தையும் அவருக்கு குறிப்பிடவில்லை. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். என்று அவர் வாதிட்டார்.

அத்துடன் 19 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் விவகாரம் தொடர்பில் கைது செய்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டாலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அந்த விடயத்துக்காக கைது செய்வதற்கு எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் உத்தரவை பெறுவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு போதுமான விடயங்களை முன்வைக்கவில்லை.

ஆகவே தடுப்புக் காவலுக்கான அனுமதி பெற்றுக்கொண்ட விதமும் முற்றிலும் சட்டவிரோதமானது என்று பிள்ளையானின் சட்டத்தரணி சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் ‘ குறித்த மனுதாரர் கைது செய்யப்படும் போது குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை வாய்மூலமாக குறிப்பிட்டுள்ளார்கள். அதன் பின்னர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்” என்று தெரிவித்தார்

பிள்ளையான் என்ற குறித்த மனுதாரர் பொலன்னறுவை செவனப்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடத்திச் சென்ற முகாமில் தனது எதிர்வாதிகளையும் மேலும் பலரையும் அடைத்து வைத்து சித்திரவதைச் செய்துள்ளார்.

இந்த முகாமில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சுப்ரமணியம் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் சாட்சியம் உள்ளது என்றும் பிரதி மன்றாடியர் நாயகம் வெளிப்படுத்தினார்.

இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் நீதவானிடம் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்கள். தீவிர விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பிரதி மன்றாடியர் நாயகம் தெரிவித்தார்

இருதரப்பினாலும் முன்வைக்கப்பட்ட வாய்மூல சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், எழுத்துமூலமான விடயங்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்தியது.

சாட்சியாளர்களின் வாக்குமூல விடயங்களை இரகசியமான முறையில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியர் நாயகத்துக்கு நீதியரசர்கள் குழாம் அறிவுறுத்தியது.

2.5 மில்லியன் டொலர் முறைகேடு தொடர்பான நிதி அமைச்சின் அறிக்கையை ஹர்ஷ டி சில்வா நிராகரிப்பு

நிதியமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கை, தனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டதை அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிராகரித்துள்ளார்.

அத்துடன், இந்த அறிக்கையை குழுவின் பரிசீலனைக்காக பாராளுமன்றத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிதிப் பரிமாற்றம் தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரிடம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னதாகக் கோரியிருந்தது.

இதற்காக அமைச்சுக்கு நான்கு வார கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்த நிலையில், அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அது ஹர்ஷ டி சில்வாவின் தனிப்பட்ட பார்வைக்காக அவருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், “குறித்த அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கோரப்பட்டதே தவிர தனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்பதால், இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, “நான் மக்களின் பிரதிநிதி, அத்துடன் தற்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறேன். இந்த அறிக்கை குழுவினர் கூடி ஆராய்ந்து விவாதிப்பதற்கே கோரப்பட்டது, எனது தனிப்பட்ட பார்வைக்காக அல்ல” என்று குறிப்பிட்டார்.

தனிப்பட்ட சம்பவத்தை இனவாதமாக்கும் முயற்சிக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்தத் தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதைத் தாம் கண்டிப்பதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சிலரால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எமது பீடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்களால் வெசாக் விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஒன்றியத்தின் ஒப்புதல் மற்றும் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை எளிதாக்குவதிலும் அது வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்வதிலும் தமிழ் மாணவர்கள் தங்களின் ஒத்துழைப்பையும் உதவியையும் முனைப்புடன் வழங்கினர்.

மாணவர்கள் இந்த முக்கியமான சமய மற்றும் பண்பாட்டு விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கச் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன.

துரதிர்ஷ்டவசமாக ஒரு சில நபர்களால் வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்டுள்ளது, இந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில தனிநபர்கள் இந்தச் சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி ஒட்டுமொத்தத் தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை கண்டிப்பதுடன் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை, தவறாக வழிநடத்துபவை, குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“அதேசமயம், இந்தத் தனிப்பட்ட சம்பவத்தை ஒரு இனப் பிரச்சினையாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

“ஒரு சில தனிநபர்களின் செயல்களைச் சமூகங்களுக்கு இடையே பிளவுகளை உருவாக்கவோ அல்லது நமது பீட மாணவர்களிடையே நிலவும் ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் சீர்குலைக்கவோ பயன்படுத்தக் கூடாது.

அனைத்து மாணவர்களும் பொறுப்புடன் செயல்படுமாறும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியாயமான விசாரணை நடத்த அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக்கூடு சேதமாக்கப்பட்டமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையை வரவேற்று கருத்துரைத்துள்ள அவர், சகல மதங்களினதும் பண்பாட்டு மற்றும் சமய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை: வட்டவன் படுகொலை நினைவேந்தல்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் அமைந்துள்ள வட்டவன் படுகொலை நினைவேந்தல் பகுதியில், 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற வட்டவன் கூட்டுப் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை  (03) பொதுமக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி, வெருகல் பிரதேசத்திற்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தாக்குதல்களின் போது, ஆரிப்பு, பூநகர், பூமரத்தடிச்சேனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, வாழைத்தோட்டம் மற்றும் வட்டவன் உள்ளிட்ட பல கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி தீக்கிரையாக்கப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதல்களின் காரணமாக அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு காடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். எனினும், வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அவர்களது உறவினர்களும் தப்பிச் செல்ல முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் பாதுகாப்பிற்காக ஒரு வீட்டிற்குள் தஞ்சமடைந்திருந்த நிலையில், அங்கு நுழைந்த தாக்குதல்காரர்களால் வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்டதுடன் பின்னர் உடல்கள் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்தனர். இச்சம்பவத்தில் ஒரு கர்ப்பிணித் தாய், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

படுகொலையில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் வருமாறு:

சுபத்திரை

கார்த்திகேசு

கார்த்திகேசு கனகம்மா

ரங்கராசா அமராவதி

ரங்கராசா ராசா

ரங்கராசா சரஸ்வதி

கேதுபாலுப்பிள்ளை

அன்னக்கிளி

சின்னையா கிட்ணப்பிள்ளை

இராசையர் (ஓடாவியார்)

நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவாக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும், போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நீதி மற்றும் உண்மையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

 

இலங்கை மீன்பிடிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜப்பான் இணக்கம்!

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம், கடல்சார் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பப் பீடங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் (State Minister of Agriculture, Forestry and Fisheries) நெமோட்டோ யுகினோரி (Hon. NEMOTO Yukinori) அவர்களுக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான விசேட கலந்துரையாடல் நேற்று (02) டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பானிய கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில், நீரியல் வளர்ப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கையின் கடல் உணவு பெறுமதி சங்கிலியை (Seafood Value Chain) மேம்படுத்துதல் மற்றும் ஜப்பானிடமிருந்து தேவையான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், ஜப்பானிய சந்தையில் இலங்கையின் கடல் உணவுகளுக்கான தேவையை மேலும் அதிகரிப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம், கடல்சார் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பப் பீடங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை இந்தக் கலந்துரையாடலின் குறிப்பிடத்தக்க  வெற்றியாகும்.

இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவித்துரு ஜனக குமாரசிங்க மற்றும்  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அம்பாறையில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 14 வயது இளம் பௌத்த பிக்கு!

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக  துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம  பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை (2) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன்போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில்  3 இளம் பிக்குகள் அண்மையில்  தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும்  2 இளம் பிக்குகள் காவல்துறையினரால் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த தேரர் தீகவாவி பிரதேசத்திற்கு தப்பி சென்றிருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த தேரர்  தீகவாபி பகுதியில் இருந்து   மத்திய முகாம் காவல்துறையினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவை மத்திய முகாம் காவல்துறையினர் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை  சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு சந்தேகத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த தேரரை இன்று (3) புதன்கிழமை அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நீதியரசர்களின் ஓய்வு குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்!

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றக் கட்டமைப்பின் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்தத் தருணத்தில் நீதிமன்றங்களில் தற்போது சேவையாற்றி வரும் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதானது, நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு வெளிப்படையான முயற்சியாகவே பொதுமக்கள் கருதக்கூடும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலத் திட்டமிடல் எதுவுமின்றி இவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வது, அந்த நீதிமன்றங்களின் கௌரவத்திற்கும் நீதியரசர்களின் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாக சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய அரசாங்கம் இத்தகையதொரு நடவடிக்கையை முன்னெடுத்தால், அது எதிர்கால அரசாங்கங்களுக்கும் நீதித்துறை சார்ந்த பணிகள் தொடர்பாக, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி அரசியலமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தை கீழே பார்வையிட முடியும்.

கோட்டாபாய உள்ளிட்ட மூவருக்கு வெளி நாடு செல்ல தடை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தளம் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு மற்றும் அமெரிக்க வான்படைத் தளம் ஆகியவற்றை, தான் இலக்கு வைத்ததாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தங்களது தொலைத்தொடர்பு ஆண்டெனா மற்றும் ஈரானிய எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் ஆகியவற்றை இலக்கு வைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறுகிறது.