Home Blog Page 30

மன்னார் மக்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியது…

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அதே நாளில் பல பாரிய அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் தீவில் இரண்டு புதிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஓகஸ்ட் 2, 2025 அன்று மன்னார் நகரில் ஆரம்பமான போராட்டத்தில் இணைந்த சிவில் ஆர்வலர் எஸ்.ஆர். குமரேஸ், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என நேற்றைய தினம் திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

“இந்த காற்றாலையால் மன்னார் தீவு இன்று அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த தீவில் வாழும் 75,000 மக்களும் இடம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்படப்போகிறது.

அந்த மக்கள் இடம்பெயர்ந்து பெரு நிலப்பரப்பில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே இவ்வாறான அழிவுகளை நிறுத்த வேண்டும். காற்றாலைக்கு எதிரான இந்த போராட்டம் தொடரும்.”

மன்னார் தீவில் மேலும் காற்றாலைகள் அமைக்கப்பட்டால், ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தீவின் மக்கள் வேறு இடங்கனுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டும் சிவில் சமூக ஆர்வலர், இது போர் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்கனவே காணிப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள வடக்கு மக்களுக்கு இடையில் ஒரு மோதலை ஏற்படுத்தும் என வலியுறுத்துகின்றார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், அதில் எந்த விதமான  அழுத்தத்திற்கும் இடமளிக்கப்படாது எனவும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மன்னார் ஒரு சொர்க்கம் அல்ல என எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கூறியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரலின் பின்னர் மன்னார் தீவில் ஆரம்பிக்கப்பட்ட 20 மெகாவாட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவாட் காற்றாலைத் திட்டம் இரண்டு ஆகியவற்றிள் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தார்.

மன்னார் தீவில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எதிராக ஓகஸ்ட் 11ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த பிரதேச மக்கள், மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினர்.

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளை அடுத்து, காற்றாலை மின் உற்பத்தி நிலைய விசையாழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சாரதிகள் மன்னார் பிரதான பாலத்தின் அருகே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோடு, மேலும் அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்க பொலிஸார் நிறுத்தப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

மன்னார் பகுதியில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஓகஸ்ட் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றதோடு, கலந்துரையாடலின் போது, நாட்டின் எரிசக்தித் தேவைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனவே, அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தும்போது அனைத்து தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் எனவும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார்.

ஒரு மாதத்தைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், பொது அமைப்புகள் காற்றாலை திட்டங்களை மீளப்பெறும் வரை போராட்டை நிறுத்தப்போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் !

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலுள்ள, காலி வீதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதன்படி, காலி முகத்திடல் பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிய காலி வீதியில்  போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் குழுவின் 6 பேர் தங்களது ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களுக்கு அரசாங்கம் அடிபணிவதாக நாமல் எம்.பி குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன் உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்

வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால் சரிந்துள்ளது என்பதைக் சுட்டிக்காட்டிய அவர் இரு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகங்களிடம்  கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது கட்சி நீண்ட காலமாக ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியே இடையே ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் மக்களைப் பிரிப்பதன் மூலம் நடத்தப்படக்கூடாது எனவும் வெறுப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இன்னும் தொலைவில் இருப்பதாகவும், இந்நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி, கரும்பு மற்றும் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் உட்பட விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

மேலும் உள்ளூர் விவசாயத்தை ஆதரிப்பதற்கு பதிலாக உணவை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் கொள்கையையும் விமர்சித்தார்.

புலிகளின் பயங்கரவாதம் தொடர்பான விடயங்களில் கூட, புலம்பெயர்ந்தோரின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருவதாகவும், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை தவறாகக் கையாள்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் உள்ள உள் மோதல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால் வீழ்ந்துள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டாம் நாளாக பளையில் தொடரும் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்

செம்மணிப் புதைகுழி, வடக்கு – கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிக்கான நீதிக்காகவும், நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகியது.

இந்நிலையில், திங்கட்கிழமை (02) பளை நகரப் பகுதியில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்த கையெழுத்து வேட்டை இன்றையதினமும் மிகவும் இடம்பெற்றது வருகிறது.

இவ் கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகளினதும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது.

இன்றைய கையெழுத்து போராட்டத்தில் பளை பிரதேச சபை உறுப்பினர் ஈஸ்வரன் டாயாளினி, சுபாஸ்கரன் சுஜீபா, மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன், பொதுமக்கள் மற்றும் சகோதர மொழியினத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்தியசாலை பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக  அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டம் செவ்வாய்க்கிழமை (02) 8 மணி முதல் புதன்கிழமை (03) 8 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்த போராட்டத்தின் போது அவசர மற்றும் உயிர்காக்கும் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வைத்தியசாலையின்  வழமையான வைத்திய சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலின் கைது: அரசியல் கலாசார மாற்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் – விதுரன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் கைது இலங்கை சிங்கள தேசிய பௌத்த அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், நாட்டின் அரசியல் கலாசாரம், அரசியலமைப்பு விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒன்று கூடலை முன்னிறுத்தி ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவித்துள்ளது. இந்த கைது தனிப்பட்ட தலைவருக்கு ஏற்பட்ட நிலைமையாக மட்டும் இல்லாமல், பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது செய் யப்படுவதற்கு அவர், ஜனாதிபதியாக பதவி வகித்தபோது 2023 செப்டம்பர் 13 முதல் 20 வரையான காலத்தில் கியூபா மற்றும் அமெரிக் காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களுக்கு, லண்ட னில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக் கழகத்தில் தனது மனைவி, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ‘கௌரவப் பட்டம்’ பெறும் நிகழ் வில் கலந்துகொண்டார்.
மைத்திரி விக்கிரமசிங்க, களனி பல் கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும், பாலின ஆய்வுகள் தொடர்பான துறைக்கு நிறுவ னராகவும் இருந்துள்ளார். அவர் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர் என்பது முக்கியமான விடயம். அதே நேரம், லண்டனுக்குச் சென்ற மேற்குறித்த இரண்டு நாட்கள் பயணத்தை ரணில் தம்பதியினர் ஒரு தனிப்பட்ட விஜயமாக வெளிப் படுத்தாது அதற்கான செலவுகளுக்கு அரசாங்க நிதியை பயன்படுத்தியுள்ளார் என்பது தான் பிரதான குற்றச்சாட்டாகும்.
குறித்த இரு நாட்களுக்கு மட்டும், ஜனாதிபதி செயலகம் மற்றும் பொலிஸ் பாதுகாப்புச் சேவை உட்பட, சுமார் 166 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ரணில் தம்பதியின ரின் தனிப்பட்ட விஜயம், பின்னர் உத்தியோகபூர்வ விஜயமாக ஆவணங்களில் மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில், ரணில் ஜனாதிபதியாக இருந்தபோது அவரது தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா, முதலில் ஒரு தனிப்பட்ட விஜயமாகத்தான் கருதப் பட்டதாகவும், பின்னர் விக்கிரமசிங்கவே அதை தனிப்பட்ட விஜயம் அல்ல என்று கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், வோல்வர்ஹாம்டன் பல்கலைக் கழகம் லண்டனில் 206கிலோமீற்றர் தொலைவில் இருந்தபோதிலும், விக்கிரமசிங்க லண்டனில் உள்ள ஆடம்பரமான ஹோட்டலான லாண்ட் மார்க்கில் தங்கியிருந்துள்ளார். இதனால், வாகன வாடகை, உணவு என்று தங்கிய நாட்களில் அதிக செலவுகள் செய்யப்பட்டிருப்பது போன்றவை முறைகேடுகளுக்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப் படுகின்றன.
இலங்கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிப்பீடத்தை அலங்கரித் தவர் ரணில். ஆறு முறை பிரதமராகப் பதவி வகித்த ஒருவர், அத்தகையவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நடவடிக்கையின் மூலமாக ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதை நிரூபிப்பதாகக் கூறினாலும், இதுவொரு திட்டமிட்ட அரசியல் நாடகமாகவே பரவலாகக் கருதப்படுகிறது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க 1977 கலவரம், யாழ் நூலக எரிப்பு, 1983 ஜூலை கலவரம், 1988-1989 ஜே.வி.பி. கிளர்ச்சி, மற்றும் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளை ரணில் மீது அடுக்கியிருந்தார்.  ஆனால், இந்த பாரிய குற்றங்களுக்குப் பதிலாக, அரசாங்க நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டார் என்ற அற்பமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அரசாங்கத்தின் இச்செயற்பாடு தனது இல்லத்தை ரோயல் கல்லூரிக்கு எழுதிவைத்துள்ள ரணில் போன்றவருக்கு எதிராக நியாயப்படுத்தக்கூடியதாக காணப்படவில்லை. அரசாங்கம் அதன் சட்ட ரீதியான கடமையின் பேரிலானதல்ல, மாறாக அரசியல் பழிவாங்கல்தான் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் அனுதாப அலையை உருவாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, ஒருபுறம் அரசாங் கத்தின் வலுவான நடவடிக்கைகளை வெளிப் படுத்துவதாக தோன்றினாலும், மறுபுறம் அதன் பலவீனத்தையும் அனுபவமின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.
தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலைமை இன்னமும் உள்நாட்டில் நீடிக்கிறது என்பதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், குற்றமிழைத்த பெரும் எண்ணிக்கையிலான அரசபடையினரும், அதிகாரிகளும் இன்னமும் சுதந்திரமாகவே இருக்கின்றனர்.
இது, அரசியல் தலைவர்கள் தங்கள் எதிரிகளை ஒடுக்குவதற்கு சட்டத்தைப் பயன் படுத்துகிறார்கள் என்ற பழைய அரசியல் கலா சாரத்தையே மீண்டும் தோற்றுவித்துள்ளது. இச் செயல்பாடு அநுர அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறையான விம்பத்தை தோற்றுவிப்பதற்கும் அதன் சரிவுக்கு வழிவகுக்கக் கூடிய ஆபத்துக்களை உருவாக்கியுள் ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது, அரசி யலமைப்பு ரீதியாக நிறைவேற்று அதிகாரங் களையுடைய ஜனாதிபதி ஒருவரின் அதிகாரங் கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான விவா தங்களுக்கம் வழிகோலியுள்ளது. இலங்கை அரசிய லமைப்பின் 33(ஊ) உறுப்புரை, ஜனாதிபதிக்கு தனது பதவிக்கு உட்பட்ட காலத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரங்க ளையும் வழங்குகிறது.
ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டது அவரது தனிப்பட்ட பயணம் என்றாலும், அது அவரது பதவிநிலை சார்ந்ததொன்றாகவே கருதப்பட முடி யும் என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி போன்ற சட்ட வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.  ஏனெனில், அவர் இலங்கையின் ஜனாதிபதி என்ற காரணத்தினாலேயே அப்பல்கலைக்கழகம் அவருக்கு சிறப்பு அழைப்பும், விருந்துபசாரமும் வழங்கியது. இதுவொரு பாரம்பரியம் எனக் கொள்ளப்படலாம் என்ற தர்க்கம் வெகுவாகவே உள்ளது.அதனால் ரணிலின் இக்கைது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பயணங் கள் மற்றும் தனிப்பட்ட பயணங்கள் என்பவற்றுக் கிடையேயான தெளிவான வரையறையின் அவசியத்தை உணர்த்துகிறது.
இந்த விவாதம், எதிர்காலத்தில் நிறை வேற்று அதிகார ஜனாதிபதிகள், அரசாங்க நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதலை உருவாக்கக்கூடும். அதேவேளை, இந்த விவாதம் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயற் பாடு களையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஜனாதிபதி அநுர, கடந்த பாராளுமன்ற, உள்ளு ராட்சித் தேர்தலின்போது தனது கட்சிப் பிரசாரங்களுக்கு அரசாங்க வாகனங்களையும், வளங்களையும் பயன்படுத்தியதை எதிர்க்கட்சி கள் சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் அவரும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக் கூடும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இதே நேரம், ரணில் விக்கிரமசிங்கவின் கைது, சிதறிப்போயிருந்த எதிர்க்கட்சிகளை மீண் டும் ஒரே அணியில் ஒன்றிணைத்துள்ளது. சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் தங்கள் அரசியல் வேறு பாடுகளை மறந்து, ரணிலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த ஒற்றுமை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் ‘ஆளை ஆள் குழி பறித்த’ எதிர்க்கட்சிகள், ரணிலின் கைதுடன் ஒரே அணியாக கூடியுள்ளமையானது அரசாங்கம் தன்னிச்சையாகவும், அடாவடித்தனமாகவும் செயற்படுகிறது என்ற தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த விவகாரத்தில் இருந்து விலகியே இருந்தன. ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகள் காரணமாகவே அக்கட்சிகள் அமைதி காத்திருக்கின்றன.
1983 கலவரம், யாழ் நூலக எரிப்பு போன்ற சம்பவங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டியவர். தமிழர்களுக்கு நீதியை மறுப் பதற்கும், சர்வதேச சமூகத்துடன் தனது உறவு களைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அவர் காரணமாக இருந்தவர். இந்த வரலாற்றுப் பின்னணி காரணமாக, தமிழ்க் கட்சிகள் அவருடன் நெருக்கமாக இருந்தாலும், மென்போக்குத் தன்மை காணப் பட்டாலும் அவருக்காகக் பகிரங்க வெளியில் குரல் கொடுப்பதை விரும்பவில்லை.
தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செய லாளர் சுமந்திரன் கூட ரணிலின் விவகாரத்தில் தெளிவற்றதொரு பதிவையே இட்டிருந்தார். ஆனால் அவரால் பொது எதிரணியின் கூட்டங்க ளில் பங்குபற்றுமளவுக்கு துணிவு ஏற்பட்டிருக்க வில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது, அரசியல் பழிவாங்கல், அரசியலமைப்பு விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணிதிரளல் போன்ற பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் சட்டத் தின் ஆட்சி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதுமட்டுமன்றி, ‘ஒரு கட்சி ஆட்சியை’ மையப்படுத்திய ஜே.வி.பியின் முயற்சிகள் குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இந்தக் கைது திடமான புடம்போட்டிருப்பதால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க் கலாம்.

வடக்கில் இனவாதம் வேண்டாம் என்ற ஜனாதிபதி,தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியதால் சர்ச்சை

வடக்கில் வந்து இனவாதம் வேண்டாம் என பேசும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்துக்கான நேற்றைய அடிக்கல் நாட்டு விழாவில் சர்வமத தலைவர்கள் வரிசையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.

தையிட்டி விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அது தொடர்பில்   கரிசனை கொள்ளாது, ஜனாதிபதி செயற்பட்டமை காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரம் பேசப்பட்ட போது எதுவித பதிலும் பேசாது மௌனமாக இருந்த ஜனாதிபதி, விகாரைக்கு மாற்றுக் காணிகளை வழங்க துணை போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்கள் காணி மக்களுக்கே என்றும் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என பேசும் ஜனாதிபதி அது தொடர்பில் உண்மையாகவே செயற்படுகிறாரா என காணி உரிமையாளர்கள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும், பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யுத்தத்தை காரணியாக கொண்டு பெருமளவிலான காணிகள் கைப்பற்றப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. நாட்டில் யுத்த அச்சுறுத்தல் ஏதும் இனி கிடையாது. விடுவிக்க கூடிய சகல காணிகளையும் விடுவிப்பேன். வடக்கு மக்களுக்கு அவரவரின் காணி உரிமை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை திங்கட்கிழமை (01)ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

விலகி மற்றும் பிரிந்திருந்த என்மை ஒன்றிணைத்த தீர்மானமிக்க தேர்தலாகவே நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் அமைந்திருந்தது. எமக்கு முன்னால் உள்ள சவால்கள்  அனைத்துக்கும் ஒன்றிணைந்தே நாம் முகங்கொடுக்க வேண்டும்.

எமது பிள்ளைகள் பிளவுப்பட்டிருக்கும் வகையிலான நாட்டை மீண்டும் உருவாக்க கூடாது. வடக்கு,கிழக்கு மற்றும் தெற்கு என்ற வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். வடக்கு மாகாணத்தில் பெரும்பாலானோர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அவர்களுக்கான காணி உரிமையை வழங்க வேண்டும்.

யுத்தத்தை காரணியாக கொண்டு பெருமளவிலான காணிகள் கைப்பற்றப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. நாட்டில் யுத்த அச்சுறுத்தல் ஏதும் கிடையாது.

யுத்தம் என்பதொன்று மீண்டும் தோற்றம் பெறும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு பொதுமக்களின் காணிகளை தொடர்ந்து கையகப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. யுத்தம் தோற்றம்பெறுவதை தடுக்கும் வகையில் தான் எமது அரசாங்கம் செயற்பட வேண்டும்.

ஒருசில அரசாங்கங்கள் யுத்தம் மீண்டும் தோற்றம் பெறும் என்ஞ நினைத்துக் கொண்டு காணிகளை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.விடுவிக்க கூடிய காணிகள் மற்றும் திறக்க கூடிய வீதிகள் அனைத்தையும் மக்களுக்கு வழங்குவோம்.

வடக்கு மாகாண மக்களின் பிறிதொரு ஜீவனோபாயமாக கடற்றொழில் காணப்படுகிறது.மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.அதற்காகவே மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எதிர்வரும் காலங்களில் மேலும் பல மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும். நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும்,பாதுகாக்கப்படும் என்றார்.

சூடானில் ஒரு கிராமத்தையே சூறையாடிய பாரிய நிலச்சரிவு : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி இருக்கிறார்.

சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை இராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.

2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இரு தரப்பினர் இடையே கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்த யுத்தத்தில் அப்பாவி மக்கள் உள்பட இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை.

உள்நாட்டு போரால் கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். இந் நிலையில், சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் திடீரென பாரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, 1000 பேர் பலியாகி இருக்கின்றனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.

இந்த தகவலை சூடான் விடுதலை இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிராமமே முற்றிலும் தரைமட்டமாகி விட்டதாக சூடான் விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்தி வரும் அப்டேல்வாஹித் முகமது நூர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நிலச்சரிவில் கிராமமும், அங்குள்ள வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. ஏராளமான பெண்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கிராமமே முற்றிலும் அழிந்துவிட்டது. இவ்வாறு அப்டேல்வாஹித் முகமது நூர் கூறி உள்ளார்.

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (1) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 40வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.