ரணிலின் கைது: அரசியல் கலாசார மாற்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் – விதுரன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் கைது இலங்கை சிங்கள தேசிய பௌத்த அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், நாட்டின் அரசியல் கலாசாரம், அரசியலமைப்பு விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒன்று கூடலை முன்னிறுத்தி ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவித்துள்ளது. இந்த கைது தனிப்பட்ட தலைவருக்கு ஏற்பட்ட நிலைமையாக மட்டும் இல்லாமல், பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது செய் யப்படுவதற்கு அவர், ஜனாதிபதியாக பதவி வகித்தபோது 2023 செப்டம்பர் 13 முதல் 20 வரையான காலத்தில் கியூபா மற்றும் அமெரிக் காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களுக்கு, லண்ட னில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக் கழகத்தில் தனது மனைவி, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ‘கௌரவப் பட்டம்’ பெறும் நிகழ் வில் கலந்துகொண்டார்.
மைத்திரி விக்கிரமசிங்க, களனி பல் கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும், பாலின ஆய்வுகள் தொடர்பான துறைக்கு நிறுவ னராகவும் இருந்துள்ளார். அவர் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர் என்பது முக்கியமான விடயம். அதே நேரம், லண்டனுக்குச் சென்ற மேற்குறித்த இரண்டு நாட்கள் பயணத்தை ரணில் தம்பதியினர் ஒரு தனிப்பட்ட விஜயமாக வெளிப் படுத்தாது அதற்கான செலவுகளுக்கு அரசாங்க நிதியை பயன்படுத்தியுள்ளார் என்பது தான் பிரதான குற்றச்சாட்டாகும்.
குறித்த இரு நாட்களுக்கு மட்டும், ஜனாதிபதி செயலகம் மற்றும் பொலிஸ் பாதுகாப்புச் சேவை உட்பட, சுமார் 166 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ரணில் தம்பதியின ரின் தனிப்பட்ட விஜயம், பின்னர் உத்தியோகபூர்வ விஜயமாக ஆவணங்களில் மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில், ரணில் ஜனாதிபதியாக இருந்தபோது அவரது தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா, முதலில் ஒரு தனிப்பட்ட விஜயமாகத்தான் கருதப் பட்டதாகவும், பின்னர் விக்கிரமசிங்கவே அதை தனிப்பட்ட விஜயம் அல்ல என்று கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், வோல்வர்ஹாம்டன் பல்கலைக் கழகம் லண்டனில் 206கிலோமீற்றர் தொலைவில் இருந்தபோதிலும், விக்கிரமசிங்க லண்டனில் உள்ள ஆடம்பரமான ஹோட்டலான லாண்ட் மார்க்கில் தங்கியிருந்துள்ளார். இதனால், வாகன வாடகை, உணவு என்று தங்கிய நாட்களில் அதிக செலவுகள் செய்யப்பட்டிருப்பது போன்றவை முறைகேடுகளுக்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப் படுகின்றன.
இலங்கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிப்பீடத்தை அலங்கரித் தவர் ரணில். ஆறு முறை பிரதமராகப் பதவி வகித்த ஒருவர், அத்தகையவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நடவடிக்கையின் மூலமாக ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதை நிரூபிப்பதாகக் கூறினாலும், இதுவொரு திட்டமிட்ட அரசியல் நாடகமாகவே பரவலாகக் கருதப்படுகிறது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க 1977 கலவரம், யாழ் நூலக எரிப்பு, 1983 ஜூலை கலவரம், 1988-1989 ஜே.வி.பி. கிளர்ச்சி, மற்றும் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளை ரணில் மீது அடுக்கியிருந்தார்.  ஆனால், இந்த பாரிய குற்றங்களுக்குப் பதிலாக, அரசாங்க நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டார் என்ற அற்பமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அரசாங்கத்தின் இச்செயற்பாடு தனது இல்லத்தை ரோயல் கல்லூரிக்கு எழுதிவைத்துள்ள ரணில் போன்றவருக்கு எதிராக நியாயப்படுத்தக்கூடியதாக காணப்படவில்லை. அரசாங்கம் அதன் சட்ட ரீதியான கடமையின் பேரிலானதல்ல, மாறாக அரசியல் பழிவாங்கல்தான் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் அனுதாப அலையை உருவாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, ஒருபுறம் அரசாங் கத்தின் வலுவான நடவடிக்கைகளை வெளிப் படுத்துவதாக தோன்றினாலும், மறுபுறம் அதன் பலவீனத்தையும் அனுபவமின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.
தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலைமை இன்னமும் உள்நாட்டில் நீடிக்கிறது என்பதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், குற்றமிழைத்த பெரும் எண்ணிக்கையிலான அரசபடையினரும், அதிகாரிகளும் இன்னமும் சுதந்திரமாகவே இருக்கின்றனர்.
இது, அரசியல் தலைவர்கள் தங்கள் எதிரிகளை ஒடுக்குவதற்கு சட்டத்தைப் பயன் படுத்துகிறார்கள் என்ற பழைய அரசியல் கலா சாரத்தையே மீண்டும் தோற்றுவித்துள்ளது. இச் செயல்பாடு அநுர அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறையான விம்பத்தை தோற்றுவிப்பதற்கும் அதன் சரிவுக்கு வழிவகுக்கக் கூடிய ஆபத்துக்களை உருவாக்கியுள் ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது, அரசி யலமைப்பு ரீதியாக நிறைவேற்று அதிகாரங் களையுடைய ஜனாதிபதி ஒருவரின் அதிகாரங் கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான விவா தங்களுக்கம் வழிகோலியுள்ளது. இலங்கை அரசிய லமைப்பின் 33(ஊ) உறுப்புரை, ஜனாதிபதிக்கு தனது பதவிக்கு உட்பட்ட காலத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரங்க ளையும் வழங்குகிறது.
ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டது அவரது தனிப்பட்ட பயணம் என்றாலும், அது அவரது பதவிநிலை சார்ந்ததொன்றாகவே கருதப்பட முடி யும் என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி போன்ற சட்ட வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.  ஏனெனில், அவர் இலங்கையின் ஜனாதிபதி என்ற காரணத்தினாலேயே அப்பல்கலைக்கழகம் அவருக்கு சிறப்பு அழைப்பும், விருந்துபசாரமும் வழங்கியது. இதுவொரு பாரம்பரியம் எனக் கொள்ளப்படலாம் என்ற தர்க்கம் வெகுவாகவே உள்ளது.அதனால் ரணிலின் இக்கைது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பயணங் கள் மற்றும் தனிப்பட்ட பயணங்கள் என்பவற்றுக் கிடையேயான தெளிவான வரையறையின் அவசியத்தை உணர்த்துகிறது.
இந்த விவாதம், எதிர்காலத்தில் நிறை வேற்று அதிகார ஜனாதிபதிகள், அரசாங்க நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதலை உருவாக்கக்கூடும். அதேவேளை, இந்த விவாதம் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயற் பாடு களையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஜனாதிபதி அநுர, கடந்த பாராளுமன்ற, உள்ளு ராட்சித் தேர்தலின்போது தனது கட்சிப் பிரசாரங்களுக்கு அரசாங்க வாகனங்களையும், வளங்களையும் பயன்படுத்தியதை எதிர்க்கட்சி கள் சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் அவரும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக் கூடும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இதே நேரம், ரணில் விக்கிரமசிங்கவின் கைது, சிதறிப்போயிருந்த எதிர்க்கட்சிகளை மீண் டும் ஒரே அணியில் ஒன்றிணைத்துள்ளது. சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் தங்கள் அரசியல் வேறு பாடுகளை மறந்து, ரணிலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த ஒற்றுமை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் ‘ஆளை ஆள் குழி பறித்த’ எதிர்க்கட்சிகள், ரணிலின் கைதுடன் ஒரே அணியாக கூடியுள்ளமையானது அரசாங்கம் தன்னிச்சையாகவும், அடாவடித்தனமாகவும் செயற்படுகிறது என்ற தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த விவகாரத்தில் இருந்து விலகியே இருந்தன. ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகள் காரணமாகவே அக்கட்சிகள் அமைதி காத்திருக்கின்றன.
1983 கலவரம், யாழ் நூலக எரிப்பு போன்ற சம்பவங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டியவர். தமிழர்களுக்கு நீதியை மறுப் பதற்கும், சர்வதேச சமூகத்துடன் தனது உறவு களைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அவர் காரணமாக இருந்தவர். இந்த வரலாற்றுப் பின்னணி காரணமாக, தமிழ்க் கட்சிகள் அவருடன் நெருக்கமாக இருந்தாலும், மென்போக்குத் தன்மை காணப் பட்டாலும் அவருக்காகக் பகிரங்க வெளியில் குரல் கொடுப்பதை விரும்பவில்லை.
தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செய லாளர் சுமந்திரன் கூட ரணிலின் விவகாரத்தில் தெளிவற்றதொரு பதிவையே இட்டிருந்தார். ஆனால் அவரால் பொது எதிரணியின் கூட்டங்க ளில் பங்குபற்றுமளவுக்கு துணிவு ஏற்பட்டிருக்க வில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது, அரசியல் பழிவாங்கல், அரசியலமைப்பு விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணிதிரளல் போன்ற பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் சட்டத் தின் ஆட்சி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதுமட்டுமன்றி, ‘ஒரு கட்சி ஆட்சியை’ மையப்படுத்திய ஜே.வி.பியின் முயற்சிகள் குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இந்தக் கைது திடமான புடம்போட்டிருப்பதால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க் கலாம்.