Home Blog Page 2809

சிறீலங்கா விமானநிலையப் பாதுகாப்பு அதிகரிப்பு – மேலும் தாக்குதல்கள் நடக்கலாம்?

கட்டுநாயக்கா விமாநிலையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக சிறீலங்கா அரசு நேற்று (10) அறிவித்துள்ளது. அதற்குரிய அறிவுறுத்தல்களையும் சிறீலங்கா அரசின் விமான போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் விமானச் சேவையை பாதிக்காது எனவும்இ ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறீலங்காவின் விமானப் போக்குவரத்து துறை தலைவர் தம்மிக்க ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

இந்த வடிவடிக்கைகள் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் அதனை அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். சிறீலங்காப் படையினரும் அதிகளவில் விமான நிலையத்தில் நிறுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசின் புதிய நடைமுறைகளின் பிரகாரம் பயணிகள் நான்கு மணிநேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். பயணிகளை தவிர்ந்த ஏனையோர் விமான நிலையத்திற்குள் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன்இ வாகனங்களுக்கும் அதிகளவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் பயணிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுதுவதுடன்இ சிறீலங்காவின் சுற்றுலாத்துறையையும் அது கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் ஆவணங்களை தேடும் சிறீலங்கா படையினர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு இந்த அகழ்வு நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றது

இதன்போது நீதிமன்ற பதிவாளர் மற்றும் பொலீசார்,  படையினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்,பிரதேச செயலக அதிகாரிகள்,கிராம அலுவலகர் ஆகியோர் முன்னிலையில் குறித்த காணிப்பகுதியில் தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் அங்கிருந்து மீட்கப்படவில்லை.

 முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பின் பத்தாவது வருடத்தை நினைவுகூரும் முயற்சிகளை தமிழ் மக்கள் மேற்கொண்டுவருகையில் அதனை சீர்குலைக்கும் வகையில் சிறீலங்கா அரசும் அதன் படைகளும் வடக்கில் கைதுகள் மற்றும் தேடுதல்கள் என்ற போர்வையில் வன்முறைகளை மேற்கொண்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

vlcsnap 2019 05 08 13h57m47s887 விடுதலைப்புலிகளின் ஆவணங்களை தேடும் சிறீலங்கா படையினர்

கொழும்பு குண்டுத்தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி மரணம்

சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள சங்கரி-லா ஆடம்பரவிடுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க தூதரகத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரி செல்சியா டெகமின்டா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்ததுள்ள நிலையில் அது பலனளிக்காது மரணமடைந்துள்ளதாக ஏ.எப்ஃபி செய்தி நிறுவனம் இன்று (9) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாதம் 21 ஆம் நாள் சிறீலங்காவின் தலைநகரிலும், கிழக்கு மாகாணத்திலும் உள்ள மூன்று ஆடம்பர விடுதிகளிலும் மூன்று தேவாலயங்களிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலைத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதல்களில் 258 பேர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள். டியூக் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த செல்சியா அமெரிக்காவின் வர்த்தகத் திணைக்களத்தில் பணிபுரிந்திருந்தார். அதன் பின்னர் சிறீலங்காவில் பணியாற்றும் நோக்கத்துடன் அவர் அண்மையில் சிறீலங்கா வந்திருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சங்கரி-லா விடுதியில் இரண்டு தற்கொலைதாரிகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த செல்சியாவை அமெரிக்க அதிகாரிகள் விமனம் மூலம் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றிருந்தனர். ஆனால் அவர் சிகிச்சைகள் பலனளிக்காததால் அங்கு கடந்த வார இறுதியில் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு சிறீலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெபிலிஸ் தனது அஞ்சலிகளை செலுத்தியதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் தான் அஞ்சலிகளை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

நாம் இழப்புக்களுக்கு அஞ்சலிகளைச் செலுத்தும் அதேசமயம், தீவிரவாத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராடவேண்டும் என அமெரிக்காவின் வர்த்தகத்துறை செயலாளர் வில்பர் ரோஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, ஆனால் நாடு தற்போதும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதலில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் காணாமல்போயுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள இந்த முரன்பட்ட கருத்தும், விரைவில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என சிறீலங்கா அரசியல்வாதிகள் தொடர்ந்து தெரிவித்துவரும் கருத்துக்களும் அனைத்துலக மட்டத்தில் சிறீலங்கா தொடர்பில் விசனங்களை தோற்றுவித்துள்ளதுடன், சிறீலங்காவிற்கு செல்லும் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா ஆயுத சோதனை: ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நடந்தது

குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்த ஒரு வாரத்திற்கு பின்னர் அடையாளம் காணமுடியாத ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.

தலைநகர் பியோங்யாங்கின் வடக்கில் சினோ-ரி என்ற இடத்தில் இருந்து அதாவது வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 4.30 மணி அளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தென்கொரிய கூட்டு படைகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவுகணை ஏவப்பட்டதாக கூறிய தென்கொரிய ராணுவம், மேலதிக விவரங்களை வெளியிடவில்லை

அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் தமக்கு சாதகமான சலுகைகளை வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கவே வடகொரியா இந்த ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது எனக் கருதப்படுகிறது.

முடங்கியுள்ள அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றி பேசுவதற்காக அமெரிக்க தூதர் தென்கொரிய தலைநகர் சோலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

கிம் முன்வைத்த மோசமான ஒப்பந்தம் என்று விவரிக்கப்பட்ட இந்த உச்சி மாநாட்டின் பேச்சுவார்த்தையில் இருந்து அதிபர் டிரம்ப் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

படம்: பி.பி.சி.

லத்தீன் அமெரிக்கா (இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு)

நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக இந்நூல் வெளிவருகிறது.அமெரிக்க வட கரோலினா பல்கலைக்கழ பேராசிரியரான ஜோன் சாள்ஸ் செய்டின் ஆங்கிலத்தில் எழுதியுள்ள Born in Blood and Fire என்ற நூலின் தமிழாக்கம் இது.

கியூபா, பொலிவியா, வெனிசுவேலா, பிரேசில், அர்ஜென்டினா என லத்தீன் அமெரிக்க நாடுகளின் ரத்தத்தை உறிஞ்சிய வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கொடுமைகள் நிறைந்த வரலாற்றினையும் அதனை எதிர்த்து நின்ற லத்தீன் அமெரிக்க மக்களின் போராட்ட வரலாற்றினையும் இந்த நூல் ஆராய்கிறது. திரிக்கப்பட்ட பொய் வரலாறுகளை அம்பலமாக்கி> உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நூலக இது அமைந்துள்ளது. 2001 இல் வெளிவந்த இதன் முதற்பதிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து இருவரை மேலும் மூன்று பாதிப்புகள் வெளிவந்துள்ளன.

இத்தகைய ஒரு நூல் தமிழில் கிடைப்பது ஒரு சிறப்பான விடயமே. லத்தின் அமேரிக்காவின் வரலாற்றில் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.இந்த நூலை தமிழின உணர்வாளரும் எழுத்தாளருமாகிய கலாநிதி .ந. மாலதி தமிழாக்கம் செய்துள்ளார். இத்தகையதொரு நூல் தமிழர்கள் அனைவரின் வீடுகளிலும் இருப்பது பயனுள்ளதாகும்.

சிறிலங்காவிலுள்ள வெளிநாட்டு அகதிகள் பிரச்சினை-ஐ.நா அதிகாரிகளுக்கு மைத்திரி விளக்கம்

சிறீலங்கா ஜனாதிபதி தனது செயலகத்தில் ஐ.நா.பிரதிநிதிகள், அமைப்பு க்கள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் அனைத்து தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையாளர்களையும் சந்தித்தார்.

நாட்டில் 1,600 அயல்நாட்டு அகதிகள் இருப்பதாகவும், தற்போதைய சூழல்களில் அவர்களைக் கவனித்துக் கொள்வதில் கஷ்டங்கள் இருப்பதாகவும் சிறீலங்கா ஜனாதிபதி விளக்கினார்.

ஒரு ஏற்கத்தக்க தீர்வைக்காண ஐ.நா. பிரதிநிதிகள் முடிந்த வரை விரைவில் முயற்சிப்பர் என்று உறுதியளித்தார். இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளை குறைப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை பற்றியும், நாட்டில் இயல்பு நிலை திரும்புவதற்கு அரசாங்கத்தால் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் பற்றியும் சிறீலங்கா ஜனாதிபதி விளக்கினார். இந்த நேரத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக சர்வதேச சமூகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தற்போதைய வெற்றிகரமான செயற்பாடு மற்றும் உளவுத் துறையின் வெளிநாட்டு நிபுணத்துவத்தின் உதவியுடன், பயங்கர வாதத்தின் அச்சுறுத்தலானது விரைவில் சீர்குலைக்கப்படலாம் என தான் நம்புவதாக சிறீலங்கா ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல்கள் குறித்து அவர் குறிப்பிடும் போது, சில இனவாத கட்சிகள் அமைதி யின்மையை தூண்டி விடுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்களை மீது இனஅழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசுகள் அவர்களை அகதிகளாக்கி உலகம் எங்கும் அலையவிட்டிருந்தன. இந்த நிலையில் வெளிநாட்டு அகதிகள் மீது அக்கறை காண்பிப்பதுபோல நடிப்பது அனைத்துலகத்தை ஏமாற்றி உதவிகளை பெறும் நோக்கம் கொண்டது என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் அணு ஒப்பந்தம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து அதிபர் ரூஹானி

அணு மின் உற்பத்தி செய்த பிறகு மீதி இருக்கின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளில் விற்றுவிடுவதற்கு பதிலாக  நாட்டிலேயே சேமித்து வைக்கப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஏனைய தரப்புகள், தங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோஃப் கூறியுள்ளார்.

அறுபது நாட்களில் உயரிய நிலையிலான யுரேனிய செறிவூட்டலை மீண்டும் உருவாக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கு அதில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈரானும், ரஷ்யாவும் வலியுறுத்திய சற்று நேரத்திற்கு பின்னர் இந்த கூற்று வந்துள்ளது.

ஈரான் எடுத்துள்ள முடிவை அணுசக்தி ஒப்பந்தத்தின் பிற உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது முதல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் சர்ச்சை தோன்றியது.

ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, அதன் மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றி கொள்வதாக கூறி ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் கூட்டு விரிவான திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படும் ஈரான் பொருளாதாரத் தடைகள் நிவாரணத்திற்கு பதிலாக தனது அணுசக்தி நடவடிக்கைகளை குறைக்க ஒப்புக்கொண்டது.

அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்ததால், ஈரானின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

பட உதவி: பி.பி.சி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்தை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, அவருடன் இறந்த ஒருவரது மகனான எஸ்.அப்பாஸ் குழுவினர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர், இந்த வழக்கை வியாழக்கிழமை பரிசீலித்தனர்..

“இந்த மனுவில் விசாரணைக்கு ஏற்ற உரிய வாதம் ஏதும் இல்லை” என்று கூறி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டர். ராஜீவ் கொலையில் உடன் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வேண்டும் என்றும் அப்பாஸ் கோரினார்.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432வது பிரிவின் கீழ் 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கில் மத்திய சட்டத்தின் கீழ், மத்திய புலனாய்வு நிறுவனம் புலன் விசாரணை மேற்கொண்டதால், மத்திய அரசுடன் ஆலோசித்து விடுதலை செய்ய வேண்டும் என்று இதே சட்டத்தின் 435ஆவது பிரிவு  கூறுகிறது.

எனவே, மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வருவதற்காக காத்திருக்கப் போவதில்லை என்றும், உடனடியாக அவர்களை விடுதலை செய்யப் போவதாகவும் கூறியது.

ஆனால், ஆலோசனை என்பது மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது என்று வாதிட்ட மத்திய அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு, குற்ற நடைமுறைச் சட்டத்தின் 435 (2) பிரிவின் கீழ் மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரித்த வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்றால், மத்திய அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்  161ன் பிரிவிகீழ் அவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படாமல் இருக்கிறது என்று இரண்டு முறை உச்ச நீதிமன்றம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியிருந்தது.

இந்நிலையில் 2018 செப்டம்பர் மாதத்தில், இந்த ஏழுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, அதை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரையாக அனுப்பியது. அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியாது. இந்நிலையில் இந்தப் பரிந்துரை மேல் முடிவெடுப்பதை ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில்தான், ஏழு பேர் விடுதலையை நிறுத்தவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வழக்கின் தீர்ப்பு  வெளியாகியது , பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி !

முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர்  விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது .

அதாவது அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்ச்சி திணைக்களகளின்  அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்புவழங்கியுள்ளது .

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் முதலாம் தரப்பாக பிள்ளையார் ஆலய வளவில் விகாரை அமைத்துள்ள குருகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் இரண்டாம் தரப்பாக நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர் . இதில் பிள்ளையார் ஆலயம் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டதரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர். மிக நீண்டநேரம் இடம்பெற்ற இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி முதலாம் தரப்பான பௌத்த மதகுரு இரண்டாம் தரப்பான  பிள்ளையார் ஆலயத்தினரின் வழிபாட்டுக்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் கட்டுமான வேலைகளின்போது உரிய அனுமதிகளை உள்ளூராட்சி திணைக்களங்களில் பெற்று மேற்கொள்ளவேண்டும் எனவும் அதேபோல் இரண்டாம் தரப்பான பிள்ளையார் ஆலயதரப்பினர் வழிபாடுகளை சுயமாக தடைகளின்றி மேற்கொள்ளமுடியும் எனவும் கட்டுமானங்களை மேற்கொள்ளவிருந்தால் உரிய அனுமதிகளை பெற்று மேற்கொள்ளமுடியும் எனவும் ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் என இருந்த பெயர்பலகையை மாற்றி கணதேவி தேவாலயம் என பௌத்த பிக்கு பெயர் பலகையை நாட்டியிருந்தார் .ஆகவே அது வழமையாக இருந்ததைப்போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மீண்டும் அமைக்கப்படவேண்டும் எனவும்  அதனை உறுதிசெய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி பொலிசாருக்கு கட்டளையிடடார் .

 மேலும் இரண்டு தரப்பும் தலா இரண்டுலட்ஷம் ரூபா பெறுமதியான பிணைமுறியின் செல்லலாம் எனவும் மன்று கட்டளையிட்டது .

 இந்த வழக்கு கடந்த 4 மாதங்களாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது . பழையச்செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் உற்சவத்தை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 14.01 .2019 அன்று செம்மலை கிராம மக்கள் சென்றவேளை குறித்த பிள்ளையார் ஆலய வளவை அபகரித்து குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையையும் பிரம்மாண்ட புத்தர் சிலையையும் அமைத்துள்ள பௌத்த பிக்குவும் தென்பகுதியிலிருந்து வருகைதந்த ஒரு குழுவினரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர் . இதனை தொடர்ந்து பொலிஸார்  தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சமாதான குலைவு ஏற்பட்ட்தாக தெரிவித்து வழக்கு ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர் .

 அதன் பிரகாரம் விசாரணைகள் பல்வேறுகட்ட்மாக இடம்பெற்றுவந்தநிலையில் குறித்த பிரதேசம் தொல்லியல் பிரதேசம் எனவும் அங்கே ஒரு விகாரை இருந்ததாகவும்  தொல்லியல் திணைக்களத்தால் மன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டது . இதன் தொடர்சியாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மன்றில் முன்னிலையாகி குறித்த பகுதி தொல்லியல் பிரதேசம் எனவும் ஆனால் விகாரை அமைப்பதற்கான அனுமதியை தாம் வழங்கவில்லை எனவும் மாறாக சிபாரிசை வழங்க முடியும்எனவும்  தெரிவித்திருந்தார் .  மேலும் இப்பகுதியில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துவருகின்றமை தொடர்பில் பிள்ளையார் ஆலய தரப்பால் பல சான்றாதாரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

மேலும் இது தொடர்பில் சிரேஸ்ட சட்டவளரான அன்ரன் புனிதநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய தினம் நீராவியடிப் பிள்ளையார் கோவில் தொடர்பான கட்டளை மன்றினால் வழங்கப்பட்டது.

குறித்த கட்டளையின் பிரகாரம் முதலாம் இரண்டாம் பகுதியினர் பிணை முறி ஒன்றினை நிறைவேற்றிச் செல்லுமாறு மன்று கட்டளை ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

முதலாம் பகுதியினர் குறித்த இரண்டாம் பகுதியினரின் வழிபாட்டிற்கு எந்தவித இடையூறையும் செய்யக்கூடாதெனவும், ஏதாவது அபிவிருத்தி வேலைகள் செய்வதாக இருந்தால் உரிய உள்ளூராட்சித் திணைக்களம், உள்ளூராட்சிச் சட்டங்களுக்கு அமைவாக கட்டடங்களை அமைக்கவேண்டும் எனவும்.

அதேபோல் இரண்டாம் பகுதியினர் தங்களுடைய வழிபாடுகளை சுயமாக செய்ய முடியுமெனவும், இரண்டாம் பகுதியினருடைய வழிபாட்டிற்கு முதலாம் பகுதியினர் எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது எனவும்

இரண்டாம் பகுதியினர் ஏதாவது, அதாவது நீராவியடிப் பிள்ளையார் கோவிலைச்சேர்ந்த பரிபாலன சபையினர் அந்தக் கோவிலில் ஏதாவது கட்டடங்கள் கட்டுவதானால் உரிய அனுமதிகளைப்பெற்று தங்களுடைய வேலைகளைச் செய்யலாம் எனவும், இரண்டு தரப்பினரும் இன்றைய நாள் தலா இரண்டு இலட்சம் உரூபாய் பெறுமதியான பிணை முறியில் செல்லுமாறும் நீதிமன்று கட்டளையிட்டது.

இந்தப் பிணைமுறியின் நிபந்தனைகளை மீறினால் நீதிமன்று உரிய தண்டனை வழங்குமெனவும் மன்று கட்டளையிட்டது.

இன்றைய தினம் குறித்த கட்டளையானது முதலாம் பகுதியினருக்கு சிங்கள மொழியிலே வழங்கப்பட்டதன் பின்னர் இரு பகுதியினரையும் வழக்கேட்டிலும், குறித்த பிணை முறியிலும் கையெழுத்துட்டுமாறும் மன்றுகட்டளையிட்டது. என்றார்.