கொழும்பு குண்டுத்தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி மரணம்

சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள சங்கரி-லா ஆடம்பரவிடுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க தூதரகத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரி செல்சியா டெகமின்டா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்ததுள்ள நிலையில் அது பலனளிக்காது மரணமடைந்துள்ளதாக ஏ.எப்ஃபி செய்தி நிறுவனம் இன்று (9) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாதம் 21 ஆம் நாள் சிறீலங்காவின் தலைநகரிலும், கிழக்கு மாகாணத்திலும் உள்ள மூன்று ஆடம்பர விடுதிகளிலும் மூன்று தேவாலயங்களிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலைத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதல்களில் 258 பேர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள். டியூக் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த செல்சியா அமெரிக்காவின் வர்த்தகத் திணைக்களத்தில் பணிபுரிந்திருந்தார். அதன் பின்னர் சிறீலங்காவில் பணியாற்றும் நோக்கத்துடன் அவர் அண்மையில் சிறீலங்கா வந்திருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சங்கரி-லா விடுதியில் இரண்டு தற்கொலைதாரிகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த செல்சியாவை அமெரிக்க அதிகாரிகள் விமனம் மூலம் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றிருந்தனர். ஆனால் அவர் சிகிச்சைகள் பலனளிக்காததால் அங்கு கடந்த வார இறுதியில் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு சிறீலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெபிலிஸ் தனது அஞ்சலிகளை செலுத்தியதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் தான் அஞ்சலிகளை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

நாம் இழப்புக்களுக்கு அஞ்சலிகளைச் செலுத்தும் அதேசமயம், தீவிரவாத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராடவேண்டும் என அமெரிக்காவின் வர்த்தகத்துறை செயலாளர் வில்பர் ரோஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, ஆனால் நாடு தற்போதும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதலில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் காணாமல்போயுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள இந்த முரன்பட்ட கருத்தும், விரைவில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என சிறீலங்கா அரசியல்வாதிகள் தொடர்ந்து தெரிவித்துவரும் கருத்துக்களும் அனைத்துலக மட்டத்தில் சிறீலங்கா தொடர்பில் விசனங்களை தோற்றுவித்துள்ளதுடன், சிறீலங்காவிற்கு செல்லும் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.