ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகின்றது. ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய கிழக்குப் பகுதியில் போர்க்கப்பல், போர் விமானம் மற்றும் இராணுவ தளபாடங்களை குவித்து வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்று ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ”ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். பொருளாதார தடைகளால் உருவாகியிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியினை நோக்கிப் பயணிக்கிறது.
அமெரிக்காவின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் அடிபணியாது எனக் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக வடக்குப் பிரதேசத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
யாழ். கைதடியிலுள்ள வடமாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டு பேசுகையில், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. எனினும் விரைவில் சோதனைகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதுவரை 4 அநாமதேய கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம், அவற்றில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு நாம் அதிக பாதுகாப்பை வழங்கியுள்ளோம். இவ்வாறு அநாமதேய கடிதங்களை எழுதுபவர்கள் விரைவில் இனங்காணப்பட்டு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும் தமிழகத்தில் நேர்மாறாக தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 300இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் நாடாளுமன்ற தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் இதுவரை தமிழகத்தில் வெற்றி பெறவில்லை. கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் ஜெயலலிதா, பாஜகவிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் பதவியுயர்வை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
2019 மே 10 ஆம் திகதியிலிருந்து இவர்களின் பதவியுயர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன.
இந்த ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளான பல மேஜர் ஜெனரல்கள் ஓய்வு பெற்றதையடுத்து, புதிதாக 10 மேஜர் ஜெனரல்கள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசரகாலச்சட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு தற்போது இராணுவத்தில் பதவி உயர்வுகளை வழங்குவது சிறீலங்காவில் வாழும் சிறுபான்மை இன மக்கள் மனித உரிமை மீறல்களைச் எதிர்கொள்ள நேரிடலாம் எனக் கருதப்படுகின்றது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிலிருந்து மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளில் வாங்குப் பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், வெற்றிடமாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா,அருணாசலப் பிரதேசம், சிக்கம் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடந்தது.
காலை 10.30 வரையான தேர்தல் முடிவின்படி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதிகளில் 12 இடங்களில் தி.மு.கவும். 10 இடங்களில் அ.தி.மு.கவும் முன்னிலையில் உள்ளது. ஆனாலும் இந்த முடிவு சிலவேளைகளில் நேர்மாறாக மாறலாம் என ஆய்வாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். காரணம் எல்லா தொகுதிகளிலும் மிகவும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசமே காணப்படுவதாகவும், இதன் காரணமாக வாக்கு முழுமையாக எண்ணி முடிக்கும் போது நிலைமை மாறலாம் எனவும் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளில் 291தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலையிலும் 2 தொகுதிகளில் அ.தி.மு.கவும் முன்னிலையில் உள்ளன.
இதனால் மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்கலாம்.
இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தல் – ஒரு தொகுப்பு
ஒரு சிறிய பயங்கரவாதக் குழு எவ்வளவு பெரிய சேதங்களை உண்டுபண்ண முடியும் என்பதற்கு சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல் மிகச் சிறந்த உதாரணம். ஐ.எஸ்.ஐ.எஸ் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்கா முஸ்லீம்களே ஐ.எஸ் இனை தெரிவு செய்தனர் என ஆர்.ஏ.என்.டி நிறுவனத்தின் பிரதம ஆய்வாளரும், ஆரசியல்த்துறை விஞ்ஞானியுமான ஜொனா பிளாங் தெரிவித்துள்ளார்.
ஆய்வுகள் மற்றும் கற்கை நெறிகளின் ஊடாக பொதுக் கொள்கை ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பாகும். 1,900 பணியாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் 50 நாடுகளில் இயங்குவதுடன் பல நாடுகள் எதிர்நோக்கும் சவாலான பிரச்சனைகளுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.
அமெரிக்காவின் ஹவாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் கல்வியை நிறைவு செய்த ஜொனா ஆர்.ஏ.என்.டி நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான வெளியுறவுக் கொள்கைப் பிரிவில் பணியாற்றியிருந்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கடந்த வாரம் அவர் வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
புனித ஞாயிறு தாக்குதலின் பின்னர் வரலாற்றில் மிகவும் உணர்திறன் மிக்க காலப்பகுதியை சிறீலங்கா அரசு கடந்து கொண்டிருக்கின்றது. முதலில் இந்த தாக்குதல் அரசியல் தவறு அதன் பின்னர் தான் அதனை நாம் புலனாய்வுப் பிரிவின் தோல்வி எனக் கூறலாம்.
இரண்டாவதாக ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதிகள் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் குழுக்களே ஐ.எஸ் இனை தெரிவு செய்தனர். அவர்கள் ஐ.எஸ் இடம் இருந்து பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் தாக்குதல் திட்டத்தை அவர்களே வகுத்துக் கொண்டனர்.
சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளுடன் போரிட்டிருந்தாலும், இவ்வாறான ஒரு தாக்குதலை அவர்கள் வரலாற்றில் எதிர்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்கள் எதிர்கொண்டது ஒரு இனத்தின் அடையாளம் மற்றும் அரசியல் தொடர்புடைய பிரச்சனை. ஆனால் தற்போதைய தாக்குதலில் எதிர்கொள்வது மதம் தொடர்புடைய பிரச்சனை. ஐ.எஸ்.ஜ.எஸ் தோற்றம் பெறுவதற்கு முன்னர் கிறிஸ்த்தவர்கள் குறிவைக்கப்படவில்லை.
இந்த தாக்குதலில் ஒற்றை ஓநாய் தத்துவம் பின்பற்றப்படவில்லை. ஒரு குழு எந்தவித வெளித்தொடர்புகளுமின்றி ஐ.எஸ் இன் தத்துவங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பின்பற்றி இந்த தாக்குதலை நடத்தி முடித்துள்ளது.
அரசின் மிகவும் பின்தங்கிய செயற்பாட்டால் ஏற்பட்ட அரசியல் தோல்வியே இந்த தாக்குதல். எச்சரிக்கைகள் முன்னரே கிடைத்திருந்தன ஆனால் அதனை சிறீசேனாவின் அலுவலகமே தாமதித்திருந்தது. அவர் அதனை ரணிலின் அலுவலகத்திற்கு அனுப்பவில்லை அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று அவர் ரணிலை நம்பவில்லை, இரண்டாவது அவருக்கும் ரணிலுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள். மேலும் இந்தியா ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கருதியதால் இந்தியாவின் புலனாய்வுத்தகவல்களை அவர் அனுப்பவில்லை.
ஒரு நாட்டின் இரு அரசியல் தலைவர்கள் தமக்கிடையே உள்ள முரன்பாடுகளை தீர்க்காத வரையில் அவர்களால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.
மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் எனில் பல நாடுகளின் உளவு அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கடும்போக்கை முன்னர் கடைப்பிடித்திருந்தது. அதுவே விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தியிருந்தது. அதே தவறை அரசு தற்போது முஸ்லீம்கள் விடயத்தில் மேற்கொள்ளக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வன்னிப் போரில் பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதல் நடத்திய மற்றும் கெயிட்டியில் அமைதிப் பணியில் ஈடுபட்டபோது சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு சிறீலங்காவில் மீண்டும் அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அங்கு சட்ட ஒழுங்கு மிகப் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளது என உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பும், சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பும் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:
புனித ஞாயிறு இடம்பெற்ற தாக்குதலை சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் குழுக்களே நிகழ்த்தியிருந்ததாக நம்பப்பட்டது எனினும் ஐ.எஸ் அமைப்பு அதற்கு உரிமை கோரியிருந்தது.
இந்த தாக்குதலின் பின்னர் சிறீலங்காவில் அச்சம் தோன்றியுள்ளது. மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 10,000 படையினர் மேற்கு மாகாணத்தில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போர் நடைபெற்ற காலத்தில் இந்த படையினருக்கு கைது செய்யவும், தடுத்து வைக்கவும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. தற்போது சிறீலங்கா அரசு மீண்டும் அவசரகாலச்சட்டத்தை பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் அனுமதியின்றி தேடுதலை மேற்கொள்ளவும், கைது செய்யவும் படையினருக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
புலானய்வுத்துறையினரை தண்டனைகளில் இருந்து காப்பாற்றும் திட்டம் ஒன்றை ஏற்கனவே சிறீலங்கா முன்வைத்துள்ளது. இது துன்பமான விடயம், ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தண்டிக்கப்படவில்லை.
தற்போது படையினரை வழிநடத்தும் அதிகாரிகளின் விபரத்தை இந்த ஆவணத்தில் ஆராய்ந்துள்ளோம். பாதுகாப்பு முக்கியமானது எனினும் மனித உரிமைகளையும் நாம் உறுதிப்படுத்தவேண்டும். ஆனால் தற்போதை பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிகளவு மனித உரிமை மீறல்களுக்கான வாய்ப்புக்கள் உள்ளது.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள படை அதிகாரிகளில் பலர் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பெருமளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள். அவர்களில் இருவரின் பெயர்கள் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் உள்ளது.
ஒருவர் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர், மற்றும் இருவர் கெயிட்டி பகுதியில் அமைதிப்படையாக பணியாற்றிய சமயம் சிறுவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டவர்கள்.
கூட்டு நடவடிக்கை தலமைப் பொறுப்பு ஏப்பிரல் மாதம் 29 ஆம் நாளில் இருந்து மேஜர் ஜெனரல் சத்தப்பிரியா லியனகேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பிரிவின் தலைமையை பதுகாப்பு படையின் பிரதம அதிகாரியான அட்மிரல் ரவீந்திரா விஜயகுணரட்ன ஏற்றுள்ளார்.
2009 ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர். தற்போதைய நிமனத்திற்கு முன்னரே மேஜர் ஜெனரல் லியனகே 37 அதிகாரிகளையும் 1,783 படையினரையும் கொண்டு மேற்கு மாகாணத்தில் உள்ள ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
2009 ஆம் இடம்பெற்ற போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30-1 இல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை. மறுவளமாக அவர்களுக்கு அதிக அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. போரில் பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அமைதிப் பணியில் சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட அதிகாரிகள் இவர்கள். எனவே சிறீலங்காவில் சட்ட ஒழுங்கு மிகப் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கையை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.
சீனாவில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்கள், பிற நாடுகளில் தரவுகளைத் திருடி, பீஜிங்கில் உள்ள உளவு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
சீன – அமெரிக்க வணிகப் போரினிடையே, முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனாவின் தொழில்நுட்பத் துறையானது கண்காணிப்பை செலுத்துவதால் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த D J J நிறுவனம் தான், உலகில் பயன்படுத்தப்படும் வணிக ஆளில்லா விமானங்கள் 70% அளவிற்கு உற்பத்தி செய்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தயாரித்த ஆளில்லா விமானங்களை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
மேலும் சீன நிறுவனமான ஹுவேய் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி தனது நெருங்கிய நட்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
சிறிலங்காவில் அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கும் விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில் அவரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை கருத்திற் கொண்டு, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் அவசரகாலச் சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறீலங்கா அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சிறுபான்மை இன மக்களை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் ஏழுந்துள்ள நிலையில் தற்போது அவசரகாலச்சட்டத்தை அது கொண்டுவந்துள்ளது சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கும் உத்தியாகும் எனக் கருதப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் நாடுகடந்த தமிழீழ அரசின் ஒரு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடையை நீக்குவது குறித்து அந்தக் குழுவினரிடம் இந்த வருட இறுதியில் நீதிமன்றம் சாட்சியம் கோரும் என்று “மோர்ணிங் ஸ்டார்” இற்கு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் வழக்கினை விசாரிக்கும் மேன்முறையீட்டு ஆணையத்தில் இந்த விடயம் இரகசியமாக விசாரிக்கப்பட வேண்டுமென அரச திணைக்களம் விருப்பம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய நீதிமன்றம் தமிழர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரித்தானியா உள்ளிட்ட, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.