ஐ.எஸ் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்கா முஸ்லீம்களே ஐ.எஸ் இன் கொள்கையை தெரிவு செய்தனர் – ஆர்.ஏ.என்.டி

ஒரு சிறிய பயங்கரவாதக் குழு எவ்வளவு பெரிய சேதங்களை உண்டுபண்ண முடியும் என்பதற்கு சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல் மிகச் சிறந்த உதாரணம். ஐ.எஸ்.ஐ.எஸ் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்கா முஸ்லீம்களே ஐ.எஸ் இனை தெரிவு செய்தனர் என ஆர்.ஏ.என்.டி நிறுவனத்தின் பிரதம ஆய்வாளரும், ஆரசியல்த்துறை விஞ்ஞானியுமான ஜொனா பிளாங் தெரிவித்துள்ளார்.

ஆய்வுகள் மற்றும் கற்கை நெறிகளின் ஊடாக பொதுக் கொள்கை ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பாகும். 1,900 பணியாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் 50 நாடுகளில் இயங்குவதுடன் பல நாடுகள் எதிர்நோக்கும் சவாலான பிரச்சனைகளுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.

அமெரிக்காவின் ஹவாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் கல்வியை நிறைவு செய்த ஜொனா ஆர்.ஏ.என்.டி நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான வெளியுறவுக் கொள்கைப் பிரிவில் பணியாற்றியிருந்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கடந்த வாரம் அவர் வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

புனித ஞாயிறு தாக்குதலின் பின்னர் வரலாற்றில் மிகவும் உணர்திறன் மிக்க காலப்பகுதியை சிறீலங்கா அரசு கடந்து கொண்டிருக்கின்றது. முதலில் இந்த தாக்குதல் அரசியல் தவறு அதன் பின்னர் தான் அதனை நாம் புலனாய்வுப் பிரிவின் தோல்வி எனக் கூறலாம்.

இரண்டாவதாக ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதிகள் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் குழுக்களே ஐ.எஸ் இனை தெரிவு செய்தனர். அவர்கள் ஐ.எஸ் இடம் இருந்து பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் தாக்குதல் திட்டத்தை அவர்களே வகுத்துக் கொண்டனர்.

johna blank ஐ.எஸ் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்கா முஸ்லீம்களே ஐ.எஸ் இன் கொள்கையை தெரிவு செய்தனர் - ஆர்.ஏ.என்.டிசிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளுடன் போரிட்டிருந்தாலும், இவ்வாறான ஒரு தாக்குதலை அவர்கள் வரலாற்றில் எதிர்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்கள் எதிர்கொண்டது ஒரு இனத்தின் அடையாளம் மற்றும் அரசியல் தொடர்புடைய பிரச்சனை. ஆனால் தற்போதைய தாக்குதலில் எதிர்கொள்வது மதம் தொடர்புடைய பிரச்சனை. ஐ.எஸ்.ஜ.எஸ் தோற்றம் பெறுவதற்கு முன்னர் கிறிஸ்த்தவர்கள் குறிவைக்கப்படவில்லை.

இந்த தாக்குதலில் ஒற்றை ஓநாய் தத்துவம் பின்பற்றப்படவில்லை. ஒரு குழு எந்தவித வெளித்தொடர்புகளுமின்றி ஐ.எஸ் இன் தத்துவங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பின்பற்றி இந்த தாக்குதலை நடத்தி முடித்துள்ளது.

அரசின் மிகவும் பின்தங்கிய செயற்பாட்டால் ஏற்பட்ட அரசியல் தோல்வியே இந்த தாக்குதல். எச்சரிக்கைகள் முன்னரே கிடைத்திருந்தன ஆனால் அதனை சிறீசேனாவின் அலுவலகமே தாமதித்திருந்தது. அவர் அதனை ரணிலின் அலுவலகத்திற்கு அனுப்பவில்லை அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று அவர் ரணிலை நம்பவில்லை, இரண்டாவது அவருக்கும் ரணிலுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள். மேலும் இந்தியா ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கருதியதால் இந்தியாவின் புலனாய்வுத்தகவல்களை அவர் அனுப்பவில்லை.

ஒரு நாட்டின் இரு அரசியல் தலைவர்கள் தமக்கிடையே உள்ள முரன்பாடுகளை தீர்க்காத வரையில் அவர்களால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் எனில் பல நாடுகளின் உளவு அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கடும்போக்கை முன்னர் கடைப்பிடித்திருந்தது. அதுவே விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தியிருந்தது. அதே தவறை அரசு தற்போது முஸ்லீம்கள் விடயத்தில் மேற்கொள்ளக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.