Home Blog Page 2790

பிரித்தானியா புதிய பிரதமர் பதவிக்கான போட்டி

பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து தெரசாமே விலகியதையடுத்து, வெற்றிடமாகும் அந்தப் பதவிக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடையே கடும் போட்டி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் (பிரெக்சிட்) இழுபறி நீடித்து வருவதன் காரணமாக அடுத்த மாதம் 7ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக தெரசாமே வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்த நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இதுவரை 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர்.

பிரெக்சிட்டிற்கு ஆதரவான பிரசாரத்தை முன்னின்று நடத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சார் பாெரிஸ் ஜாேன்சன் அடுத்த பிரதமராவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட், சர்வதேச மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ரோரி ஸ்டூவர், சுகாதாரத்துறை அமைச்சர் மத்யூ ஆன்காக், சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மைக்கேல் கோவ், பிரெக்சிட் விவகார முன்னாள் அமைச்சர் டொமினிக்ராப்,  ஓய்யூதியத்துறை முன்னாள் அமைச்சர் எஸ்தெர் மெக்வி, நாடாளுமன்றிற்கான முன்னாள் அரசுப் பிரதிநிதி ஆன்ட்ரியா லெட்சம் உட்பட மேலும் 7 பேர் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்கவிருக்கும் கன்சர்வேட்டிக் கட்சிக் கூட்டத்தில இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை – பூமிகன்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமக்கிடையேயான ஒரு போட்டிக்களமாக வல்லரசு நாடுகள் இலங்கையைப் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் மைத்திரி -ரணில் எனப் பிளவுபட்டிருப்பதும் வல்லரசு நாடுகளுக்கு உதவுகின்றது. இது இலங்கையின் இராசதந்திரத்துக்கு புதியதொரு நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது.

ஈஸ்டர் குண்டு வெடித்த பின்னர் அவசரமாக இலங்கைக்குத் தேவையான புலனாய்வு உதவிகளை வழங்குவதில் அவசரமாக முன்வந்த நாடு அமெரிக்காதான். ஐ.எஸ். அமைப்புடன் அமெரிக்கா ஏற்கனவே போரை நடத்தியிருப்பதால், அது குறித்த அனுபவமும், அறிவும் அவர்களுக்கு உள்ளது. இலங்கையும் உடனடியாகவே அமெரிக்காவை அணுகியது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்களில் ஒன்றான எப்.பி.ஐ. அவசரமாக தமது நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

ஐ.எஸ். அமைப்பை அடக்குவதற்கு உதவுவதுதான் அமெரிக்காவின் இந்த உடனடியான செயற்பாட்டுக்குக் காரணம் என வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. ஆனால், இதில் மறைமுகமான காரணம் ஒன்றும் இருந்தது. இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலான ஒன்று. அதற்கான ஒரு பதில் செயற்பாடாகத்தான் இலங்கைக்கு உடனடியாக உதவிகளுடன் அமெரிக்கா விரைந்தது.

இது வெறுமனே ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக மறைந்துபோகக் கூடாது என்றால், இலங்கையுடன் ஏதோ ஒரு வகையான பாதுகாப்பு உடன்படிக்கைக்குச் செல்ல வேண்டும். அதன் மூலமாகவே இலங்கையில் தொடர்ந்தும் தமது இருப்பைத் தக்கவைக்கலாம். அதுவும் ஐ.எஸ். மூலமான அச்சுறுத்தலைப் பயன்படுத்தித்தான் இதனைச் செய்யலாம் என்ற வகையில் அமெரிக்கா சிந்தித்திருப்பதாகத் தெரிகின்றது.

அதன் பிரதிபலிப்புத்தான் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கடந்த வாரம் வாஷிங்டன்  அழைக்கப்பட்டதும், அங்கு செய்யப்பட்ட உடன்படிக்கைகளும். உயர் மட்டக்குழு ஒன்றுடன் அங்கு சென்ற மாரப்பன, முக்கியமான பேச்சுக்களை நடத்தினார். அவர் முதலில் நடத்தியது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் போர்மியோவுடன். அது ஒரு வழமையான சந்திப்புத்தான்.  அவர்தான் அமெரிக்காவின் வெளிவிவகாரத்தை கையாள்பவர். அதனால் அந்தச் சந்திப்பில் அதிமுக்கியமாக எதுவும் இருக்கப் போவ தில்லை.

அதன் பின்னர் அவர் நடத்திய சந்திப்புத்தான் முக்கியமானது. அடுத்ததாக திலக் மாரப்பனை சந்தித்த நபர் அமெரிக்க சனாதிபதி டொனால்ட ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன். அவர் இலங்கை போன்ற ஒரு நாட்டுடன் அரசியல் விவகாரம் குறித்துப் பேசும் ஒரு நபரல்ல. இவர் பேசினால், அதன் பின்னணியில் ஏதோ இராணுவ விவகாரம் இருக்க வேண்டும். அதுவும் பெரியளவில் இருக்க வேண்டும். அமெரிக்காவின் சர்வதேச வேலைத் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுவிட்டது என்பது இதன் பொருளாக இருக்கலாம். இலங்கை விவகாரத்தில் அமெரிக்க சம்பந்தப்பட்டிருப்பது இப்போது இரகசியமான ஒன்றல்ல. முன்னர் குறிப்பிட்டது போல, எப்.பி.ஐ. இங்கு வந்திருப்பது பகிரங்கமானது. சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுச் சேவையைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்களா என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

100817 F 6824H 007 அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை - பூமிகன்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இப்போது ஏற்பட்டுள்ள உடன்படிக்கை மூலம் ஆலோசகர்கள் வர இலங்கை வர இடமளிக்கப்பட்டுள்ளது. இராணுவம் வந்தால் நிச்சயமாக சர்ச்சை ஏற்படும். இராணுவ ஆலோசகர்கள் பெருமளவுக்கு வரலாம். அது சர்ச்சையை ஏற்படுத்தாது.

சீனப் புலனாய்வாளர்கள் அதிகளவில் இலங்கையிலிருப்பதாக அமெரிக்கா சந்தேகிக் கின்றது. பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் பெயரில் இலங்கை அரசுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவர்கள் நுைழந்திருக்கலாம் என்பது அமெரிக்காவின் கணிப்பு. சீனப் புலனாய்வாளர்கள் இங்கிருப்பதற்கான சாத்தியத்தை இலங்கையின் பாதுகாப்புத் துறையினரும்  மறுக்கவில்லை. ஆனால், தேசிய பாதுகாப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்காத வரையில் பிரச்சினையில்லை என்பதுதான் இலங்கையின் நிலைப்பாடு.

ஆனால், இலங்கையிலிருக்கக்கூடிய சீனப் புலனாய்வாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தாமும் ஏதாவது செய்ய வேண்டும் என அமெரிக்கா சிந்தித்தது. அதன் விளைவுதான் வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள military-to-military cooperation தொடர்பான உடன்படிக்கை. இதிலுள்ள மற்றொரு அம்சம் என்னவென்றால், அமெரிக்கக் கப்பல்களும் இராணுவ அதிகாரிகளும் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என்பதாகும்.

ஐ.எஸ். மீதான சர்வதேசப் போர்ப் பிரகடனம் என்ற பெயரில் ஏதோ ஒருவகையில் இலங்கையைத் தன்னுடைய பாதுகாப்பு வலயத்துக்குள் அமெரிக்கா கொண்டுவந்துவிட்டது. இதனால்தான், எதிர்க்கட்சிகள் இப்போது கிளர்ந்தெழுந்திருக்கின்றன. அமெரிக்க தூதுவர் மகாநாயக்கர்கள் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கையில் நிரந்தரமான முகாமை அமைப்பதற்கான உடன்படிக்கை எதுவும் இல்லை. இலங்கை அரசாங்கம் அழைத்தால் இலங்கை வரும் அமெரிக்கப் படையினர் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமே உடன்படிக்கை இடமளிக்கும்” என விளக்கமளித்து ள்ளார்.

அதாவது, தற்காலிக முகாம்களை அமைப்பதற்கும், அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இலங்கை வந்து “தற்காலிகமாக” தங்கியிருப்பதற்கும் இந்த உடன்படிக்கை இடமளிக்கின்றது. “தற்காலிகமாக” என்பது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதற்கு இரு தரப்பினரிடமும் விளக்கம் இல்லை. அது வருடக்கணக்கிலும் நீடிக்கலாம்.

சனாதிபதி மைத்திரி சீனா சென்று செய்துகொண்டுவந்துள்ள பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்குப் பதிலடியாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான military-to-military cooperation குறித்த உடன்படிக்கை உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதனுடைய நீண்டகாலக் கவலையாக இருந்தது இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்குதான். ஈஸ்ட்டர் குண்டுவெடிப்புக்கள் அதற்கு எதிராக வலுவாக காய்களை நகர்த்துவதற்கு அமெரிக்காவுக்கு சிறப்பான ஒரு வாய்ப்பைக் கொடுத்திருப்பதாகவே கருதப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் இது அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு அதிஸ்டம் தான். தாராளமாக உதவிகளை வல்லரசுகள் போட்டிபோட்டுக்கொண்டு செய்கின்றன. முஸ்லிம்களை அடக்குவதாகக் காட்டிக்கொண்டு, தமிழ் மக்களுடைய சனநாயகப் போராட்டங்களையும் அடக்கமுடியும். அவசரகாலச் சட்டம் இதற்கு உதவும். “பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச யுத்தம்” ஒன்றில் இலங்கையையும் இணைத்துக்கொண்டுள்ள நிலையில், ஜெனீவாவிலோ சர்வதேச அரங்கிலோ இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்க அமெரிக்கா முனையுமா என்பதும் முக்கியமான கேள்வி. ஆக, ஈஸ்டர் தாக்குதலால் அதிகளவு பலனடைந்திருப்பது இலங்கைதான்!

முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி – தீபச்செல்லவன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றார்கள். அத்தனை முகங்களும் சோகம் அப்பிய முகங்கள். விழிகளில் அப்படியொரு தவிப்பு. அவர்கள் முள்ளிவாய்க்காலில் பிறந்தவர்களும், ஒன்றிரண்டு வயதுகளுடன் முள்ளிவாய்க்காலை கடந்தவர்களும்தான். பல்வேறு மறைமுக அச்சுறுத்தல்களின் மத்தியிலும் கண்ணீர் விடவும் தீபமேற்றவும் அதன் வழியே நீதிக்கானதொரு போராட்டத்தை முன்னெடுக்கவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் திரண்டிருந்தனர் ஈழ மக்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஈழத்தமிழர்களால் என்றுமே மறக்க முடியாத வடு. நமது மக்கள் கொத்துக்கொத்தாக கொன்று அளிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்த நிலம். கஞ்சிக்காக பசியில் கிண்ணங்களை ஏந்தி வரிசையில் நின்ற குழந்தைகள் கொன்றொழிக்கப்பட அவர்களின் குருதிகள் கஞ்சிப் பானைகளில் தெறித்த நாட்கள். இனத்தின் விடுதலைக்காகவும் நிலத்தின்  உரிமைக்காகவும் போராடிய ஒரு இனம், தொகுதி தொகுதியாய் கொன்று அழிக்கப்பட்ட காலம் அது. அம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த இனப்படுகொலையில் இருந்து ஈழத் தமிழ் நிலம் தன்னுடைய காயங்களை எந்தளவுக்கு ஆற்றியிருக்கிறது? ஈழத் தமிழ் இனத்தின் காயங்களை ஆற்றுகின்ற, செயல்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா? உண்மையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆறாத ஒரு காயம். அதனை ஆற்றுவதற்கு நீதியே அவசியம். அதுவே மருந்து. பத்தாண்டுகளாக உழலும் எம் இனத்தின் காயங்களில் சிறிதளவேனும் ஆற்றப்படவில்லை. மாறாக காயங்களை பெருப்பிக்கும் முயற்சிகள்தான் நடக்கின்றன.51133892 2360689757288688 4706665887283806208 n முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி - தீபச்செல்லவன்

ஈழ மண்ணிலே, வீட்டுக்கு ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீட்டோடு முழு குடும்பமும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. ஈழ நிலத்திலே, வீட்டுக்கு ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீட்டோடு முழு குடும்பமும் கொன்று அழிக்கப்பட்டிருக்கிறது. கண்களை மூடிக்கொண்டால், முள்ளிவாய்க்கால்தான் எமை அலைக்களிக்கிறது. இரவுகளும் நினைவுகளும் முள்ளிவாய்க்கால் காயங்களையே கிளறுகின்றன. அதற்கான காரணம் எமக்கு நீதி வழங்கப்படவில்லை. அதற்கான பொறுப்பு கூறப்படவில்லை. இந்த நிலை எதுவரை தொடரப் போகிறது?

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஒரு விளக்கினை ஏற்றி அவர்களுக்கு ஒரு துளி கண்ணீர் விட்டு அழுவதற்கு நாம் இந்த பத்தாண்டுகளில் போராடி இருக்கின்றோம். முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதை சொல்வதற்கு போராடியுள்ளோம். இதை சர்வதேச ரீதியிலான போராட்டமாக முன்னெடுப்பதற்குப் பதிலாக நமக்குள்ளான முரண்பாடுகளாகவும் சிக்கல்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்போதும், முள்ளிவாய்க்காலில் யார் பிரதான சுடரை ஏற்றுவது? யார் அஞ்சலி செலுத்துவதை என்பதற்கான சண்டைதான் நடக்கிறது. வெறுமனே எண்ணையில் திரியினை முக்கி, தீபம் ஒன்று ஏற்றுவதே உத்தமான செயல் என்றளவில் உள்ளது எம் நிலவரம்.

நமது தரப்புக்கள் இதற்குள் முரண்பட்டுக் கொண்டிருக்க, சர்வதேச ரீதியில் ஈழ இனப்படுகொலை குற்றத்திலிருந்து எப்படி தப்புவது என்ற தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றது இலங்கை அரசு. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சர்வதேச சமூகத்திற்கு உகந்த அரசாக செயற்படும் மைத்திரிபால சிறிசேன – ரணில் கூட்டரசாங்கம், இன அழிப்பு குற்றத்திலிருந்து தப்பிக்கொள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை வென்றிருப்பது தொடர்ந்தும் இனப்படுகொலைக்கே வழிவகுக்கும். சர்வதேச அரங்கில் ஒரு பேச்சு, நாட்டில் ஒரு பேச்சு என்ற நிலையில்தான் உள்ளது மைத்திரி மற்றும் ரணிலின் போர் குறித்த பொறுப்புக்கூறல்.

தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை உண்டு. அவர்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்களுக்கென்று ஒரு தேசம் அவசியமானது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் இந்த உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறது. தமிழ் மக்கள் தமக்கான மரபுவழித் தாயகத்தையும் அவர்களுக்கான ஆட்சியையும் அதனை பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் இந்த உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. இப்போதைய நகர்வுகள் அதனை பின்னுக்கு தள்ளி, ஐக்கிய இலங்கைக்குள் தமிழரை அழிக்க முனைகின்றது.

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர்களின் போராட்டம், தமிழர்கள் ஒரு அரசை உருவாக்க கூடிய, சிறந்த கட்டமைப்புகளை உருவாக்க கூடிய, நிலத்தையும் இனத்தையும் பாதுகாக்கக் கூடிய ஓர் அரசை நடைமுறையில் சாத்தியப்படுத்தியது. ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஓரினத்தின் விடுதலை அமைப்பு, எப்படி போராட்டம் இனி நகர வேண்டும்? இனி எமது ஆயுதம் எது என்று தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் சரியாக பயணிப்பதே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு செய்யும் அஞ்சலியாகும்.Attempt to place Buddha statue after demolishing the foundation of Pillaiyar Temple at Kinniya Trincomalee 2 முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி - தீபச்செல்லவன்

இப்போதும் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இப்போதும் பண்பாடு சிதைக்கப் படுகிறது. அறிவிக்கப்படாத யுத்தமும் கண்ணுக்கு தெரியாத இன அழிப்பும் நீள்கிறது. இந்தப் பத்தி எழுதி கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் கூட முல்லைத்தீவு கொக்கிளாயில் சிங்களக் குடியேற்றங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருகோணமலையின் குச்சவெளி பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். முல்லைத்தீவிலும் புத்தர் சிலைகளை வைப்பதற்காக முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வவுனியாவில் சைவாலயங்களில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக் கின்றன.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் தமது ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்களின் பண்பாட்டை அழிக்கும் நடவடிக்கைகளையும் தமிழர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. மாறாக இன்னமும் விஸ்தரித்துள்ளனர். இன்னமும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பது என்பது மேலே குறிப்பிடப்பட்ட இன, நில அழிப்புக்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளாகத்தான் அமையும்.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை அவையில் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்குகின்ற செயற்பாடுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணை அனுசரணை வழங்குகிறது. இதற்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காணாமல் போனவர்கள் பற்றிய உண்மைகளை வெளியிட மறுக்கின்ற இந்த அரசாங்கத்திற்கு இதற்காக எமது தலைமைகள் ஆதரவினை ஏன் வழங்குகின்றனர் என்ற கேள்வியை காணாமல்போனோரின் உறவுகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. இலங்கை அரசாங்கத்தினுடைய கட்டமைப்புகள் சிங்கள பேரினவாதத்தை வளர்த்தெடுக்கும் நோக்கிலேயே இருக்கிறது. இலங்கை அரசோ, இலங்கை அரசின் நீதிக்கட்டமைப்பிலோ தமிழர்கள் நீதியினை பெற முடியாது. அவ்வாறு பெறக்கூடியதாக இருந்திருந்தால், முள்ளிவாய்க்கால் என்ற ஒரு இனப்படுகொலை ஈழ மண்ணில் நிகழ்ந்திராது. எனவே, நீதியான சர்வதேச தலையீடே இங்கு அவசியமானது.

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், நிகழ்ச்சிகள் மிகவும் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக மண்ணில் நடுவதற்கு மரங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பந்தலிடப்பட்டு வழங்கப்பட்டது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஊடாக நீதியினை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஈழத் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்றும் முள்ளிவாய்க்கால் பிரகடனம், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.

ஈழத்தில் சிங்கள அரசு நிகழ்த்திய இன அழிப்பு போரே சிங்கள தேசத்தின் அரசியலுக்கானது. இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தையும், கொல்லப்பட்டவர்களுக்காக நீதியையும்கூட ஆளும் அரசும் – எதிர்தரப்பும் அரசியலாகவே கையாண்டு வருகின்ற நிலையில், அந்த அரசியலுக்குள் நீதிக்கான போராட்டம் ஒருபோதும் சாத்தியமற்றது. இனப்படுகொலைக்கான நீதியை வழங்கும் பொறுப்பு, முழு சிங்கள தேசத்திற்குமானது. போர்க்காலத்தில், கொல்லப்பட்ட இராணுவத்தை, இன்று காணாமல் போன இராணுவமாக காட்ட முயலும் சிங்கள தேச அரசிடம், எவ்வாறு நீதியைப் பெற முடியும். அப்படி நம்பினால், ஓர் இனத்தின் அரசியலாக இல்லாது, அது ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றும் கட்சி அரசியலாகவே சுருங்கும்.

என்ன நடந்தாலும் ஈரான் பக்கமே நிற்போம் ஈராக்அறிவிப்பு

அமெரிக்கா ஈரானுக்கிடையிலான பிரச்சினையில் எப்போதும் தாம் ஈரான் பக்கமே நிற்போம் என ஈராக் தெரிவித்துள்ளது.

ஈரானை எதிர்க்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களை குவித்து வருகின்றது. அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு படைகளை அனுப்பியுள்ளது.

ஈரான் அமெரிக்காவுடன் மேற்கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்தை இரத்துச் செய்திருந்தது. இதனால் ஈரானின் எண்ணெய் வழங்களை வாங்குவதற்கு உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இதனாலேயே இரு நாடுகளுக்குமிடையில் மோதல் நிலை உருவாகியது. இதனாலேயே ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. 1,20,000 துருப்புக்களை  அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால் ஈராக் வெளியுறவு அமைச்சர் முகமது அலி ஹக்கீம் நேற்று ஈரான் அதிகாரிகளை சந்தித்தார். அப்போதே ஈராக்,  எப்போதும் ஈரான் பக்கமே நிற்போம் என தெரிவித்துள்ளதுடன், இந்தப் பிரச்சினையை நாம் பேசித் தீர்ப்போம் எனவும் ஈராக் தெரிவித்துள்ளது.

 

தமிழர் நலன்சார்ந்து செயற்பட முடியாத நிலையில் அரசின் அங்கமாகஇருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – சுரேஷ் பிரேமச்சந்திரன்

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு கவுழும் நிலை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது தமிழ் மக்கள் நலன்களை மறந்து அரசை தாங்கிப்பிடிக்க கூடியவர்களாக கூட்டமைப்பு இருக்கின்றது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் இலக்கு வாரஇதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு.

கேள்வி:- அவசரகால நிலைமைகள் அமுலாக்கப்பட்டதன் பின்னர் தமிழர் தாயகத்தின் நிலைமை என்ன?

பதில்:- ஏற்கனவே தமிழர் தாயகம் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாக்கப் பட்டிருக் கின்றது. ஆனாலும்கூட இராணுவம் முகாம்களுக்குள் முடங்கியிருந்தது. ஆனால் இப்பொழுது வடக்கு-கிழக்குப் பிரதேசங்களின் பல பகுதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகளும் இராணுவ சுற்றி வளைப்புகளும் கைதுகளும் ஆரம்பித்துள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணம் என்பது யுத்தத்திற்குப் பின்னர் மிகவும் அமைதியான பிரதேசமாக இருந்து வந்தது. அத்தகைய வடக்கு மாகாணம் இன்று ஏதோ ஒரு யுத்தப் பிரதேசம் போன்று காட்சி அளிப்பதுடன் மக்களும் அச்சநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைப்போன்றே சில வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். வயதான பிரயாணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட தொடர்ச்சியாக பிரயாணம் செய்வோர் பல்வேறு சோதனைச் சாவடிகளில் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். வடக்கு-கிழக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை முன்வைத்திருக்கும் சமயத்தில் இராணுவம் இதனை தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வருகிறது. ஆகவே இந்த அவசரகால நிலை என்பது தமிழ் மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த சனநாயகத்தையும் கேள்விக்குட்படுத்தும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற வான் ஒன்றில் பயணித்த பயணிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் வானில் தாங்களே சில பொருட்களை வைத்துவிட்டு வானில் வந்தவர்களைக் கைது செய்ததாகவும் பின்னர் காவல் துறையினரின் திட்டமிட்ட செயல் அம்பலமானதும் வேறு வழியின்றி அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதன் மூலம் அவசரகாலச் சட்டத்தின்கீழ் அமைதியாக இருக்கும் தமிழர்கள் திட்டமிட்டு சீண்டப்படுவது நிரூபணமாகிறது.

கேள்வி:- ஐ.எஸ் தாக்குதலின் பின்னர் இலங்கையில் இனமுறுகலை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையின் பின்னணி என்னவாக உள்ளது?

பதில்:- உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற தொடர் தற்கொலைக் குண்டு தாக்குதல் என்பது மிகப் பயங்கரமானது என்பதும் அது திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்பதிலும் எமக்குக் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் இந்த சம்பவம் நடைபெறுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பாகவே இலங்கையில் இருக்கும் சில முஸ்லிம் நபர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெறுவதாகவும் இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் ஊடக வெளியில் பேசப்பட்டு வந்திருக்கின்றது.

அது மாத்திரமல்லாமல், முக்கியமாக முஸ்லிம் மதத் தலைவர்கள் இதுதொடர்பாக முன்னைய பாதுகாப்புச் செயலாளர் உட்பட பாதுகாப்புப் பிரதானிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். ஆனால் உரிய தரப்பினரால் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்குப் பின்னர், புத்தளம் வனாத்தவில்லு பிரதேசத்தில் ஆயுதங்களுடன் முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதுதொடர்பான தொடர் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. பின்னர் வவுணதீவில் சோதனைச் சாவடியில் காவலில் இருந்த இரண்டு காவல் துறையினர் கழுத்துவெட்டி கொலை செய்யப்பட்டனர். அப்பொழுதும் ஒழுங்கான விசாரணை மேற்கொள்ளப்படாமல் அதனை திசை திருப்பும் நோக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட அப்பாவியொருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டார்.

இரண்டு காவல் துறையினர்  கொல்லப்பட்டபோதுகூட உண்மையைக் கண்டறிவதில் பாதுகாப்புப் பிரிவினர் அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை. இதற்குப் பின்னர், காத்தான்குடியில் ஒரு மோட்டார் சைக்கிளில் குண்டுவைத்து வெடிக்க வைக்கப்பட்டது. அதனையும்கூட காவல் துறையினரோ  அல்லது புலனாய்வுப் பிரிவினரோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இப்பொழுது அரச தரப்பிலிருந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருக்கின்ற 26 முஸ்லிம்கள் ஐஎஸ் ஐஎஸ்சில் இணைந்து அவர்களுக்கான பணிகளை மேற்கொண்டதாகவும் அவர்களுக்கான ஊதியம் இலங்கை இராணுவத்தினரிமிருந்து இன்றுவரை சென்றுகொண்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார்.

இறுதியாக இத்தகைய ஒரு தாக்குதல் நடைபெறப்போகிறது என்பதை இந்தியப் புலனாய்வுத்துறை இலங்கைக்கு அறிவித்திருந்தது. அந்த அறிவித்தலும் கண்டுகொள்ளப்படவில்லை. அதற்குப் பின்னரே கடந்த 21ஆம் திகதிய உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் அரசும் புலனாய்வுப் பிரிவினரும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதன் உள்நோக்கம் என்ன?

மிக நீண்டகாலமாக ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு தொடர்பாக பல தகவல்கள் கிடைத்தும் அவை எதுவும் கையாளப்படாமல் அத்தீவிரவாத அமைப்பு தன்னை பாரிய அளவில் வளர்த்துக்கொள்ள இலங்கை பாதுகாப்புத்துறையினர் ஊக்கமளித்துள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. நிச்சயமாக ஒரு அரசியல் தேவை கருதி ஓர் அரசியல் பின்னணி ஊடாகவே இது நடைபெற்றிருக்க முடியும். முன்னைய அரசாங்கத்திற்கும் இன்றைய அரசாங்கத்திற்கும் இதில் பங்கிருப்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகின்றது. இவை ஒருபுறமிருக்க, உயிர்த்த ஞாயிறன்று குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும்கூட மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மறுதாக்குதல்களோ கலவரங்களோ நடைபெறவில்லை. ஆனால் மூன்றுவாரம் கழித்து முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் வர்த்தக நிலையங்கள் மீதும் வீடுகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை பிற இடங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இவை ஒரு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. நிச்சயமாக ஒரு அரசியல் தேவை கருதியே இத்தகைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான இன முறுகல் இன முரண்பாடுகளை அதிகரிப்பதினூடாக சிங்கள பௌத்த வாக்கு வங்கியை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியும் என்று நம்புபவர்களே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகவும் ஊடகவியலாளர்களினூடாக அறியக்கூடியதாக உள்ளது.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைச்சர் ரிசாட், ஆளந ர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா போன்றவர்கள் மீது குற்றச்சாட்டு க்கள் மேலெழுந்துள்ள நிலையில் அதுபற்றி கட்சித்தலைவர் என்ற அடிப்படையில் உங்களின் கருத்து என்ன?

பதில்:- ஹிஸ்புல்லா அசாத்சாலி போன்றவர்களை ஆளுநர்களாக சனாதிபதி முஸ்லிம் வாக்குவங்கியைக் கைப்பற்றுவதற்காகவே நியமித்துள்ளார். அதேபோன்று ரிசாட் பதியுதீனை அமைச்சராக்குவதன் மூலம் ஐ.தே.க. தனது முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தனது தற்போதைய அரசாங்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் இவர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவர்கள் தொடர்பாக இப்பொழுது பாரிய குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியிலிருந்து எழுந்துள்ளது. இவர்கள் அரசியலுக்கு வரும்பொழுது, சாதாரணமானவர்களாகவே வந்தார்கள். இவர்கள் இலட்சாதிபதிகளாகவோ கோடீஸ்வரர்களாகவோ இருக்கவில்லை. ஆனால் இன்று தொழிற்சாலைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் என பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக இவர்கள் மாறியுள்ளனர். இவ்வளவு பெரும்தொகை நிதி இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது? ஒன்றில் இவர்கள் அமைச்சர்களாக இருந்தபொழுது பாரிய அளவு ஊழல் செய்திருக்க வேண்டும் அன்றேல் இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான நிதி கிடைத்திருக்க வேண்டும்.

இவர்கள் தமது அரசியல் பலத்தை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதை ஹிஸ்புல்லா பல இடங்களில் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். அதனை சமூக வலைதளங்களில் காணக்கூடியதாக உள்ளது. இவர்களது அரசியல் அதிகாரத்தினூடாக தமிழ் மக்களுக்கு அல்லது சைவ கோயில்களுக்கு உரித்தான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டன. தமிழ் மக்கள் இவர்களால் அனைத்துத் துறையிலும் புறக்கணிக்கப்பட்டனர். இவற்றிற்கு மேலாக பல குற்றச்சாட்டுகளும் மக்களால் சுமத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு படிமேல் சென்று வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடுமென்றும் அமைச்சுப் பதவியைத் துறந்தேனும் வடக்கு-கிழக்கு இணைப்பைத் தடுத்து நிறுத்துவேன் என்று ஆளுநர் ஹிஸ்புல்லாவும் ரிசாட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆளுநர்களுக்கும், அமைச்சருக்கும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட அடிப்படைவாதிகளுக்குமிடையில் தொடர்புகள் இருப்பதாகவும் அவர்களைப் பாதுகாப்பதில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் பல தரப்பிலிருந்தும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு சூழலில் இவர்களை இவர்களது பதவிகளிலிருந்து இடைநிறுத்தி இவை தொடர்பான ஒரு முழுமையான விசாரணையை நடத்தி மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த நிலைப்பாட்டை சனாதிபதியோ பிரதமரோ எடுப்பதாகத் தெரியவில்லை.

எதிர்கால அரசியலே அவர்களது இலக்காக உள்ளது. குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள் இழுத்து மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மீண்டெழுவதற்கு இன்னும் பல ஆண்டு ஆகலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. இந்த குண்டுத்தாக்குதல்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில்கூட சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்பதும் குறுகிய அரசியல் இலாபமே இவர்களது முதன்மையான விடயமாக இருப்பதையும் நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.

கேள்வி:- ஆளும் தரப்பு பிரதிநிதிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற அச்சம் காணப்படுகின்ற நிலையில் தமிழர் தரப்பு இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்று கருதுகின் றீர்கள்? 

பதில்:- தமிழர் தரப்பாக இன்று பாராளுமன்றத்தில் செயற்படக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவாகவும் அரசுக்கு ஆதரவளிக்கும் ஒரு குழுவாகவுமே செயற்பட்டு வருகின்றது. இது தமிழரசுக் கட்சியாக இருந்தாலும் சரி ரெலோவாக இருந்தாலும் சரி புளொட்டாக இருந்தாலும் சரி இறுதியாக இவர்களது கூட்டு முடிவென்பது அரசைப் பாதுகாக்கும் ஒரு விடயமாகவே இருக்கின்றது. ஆகவே இப்பொழுதுகூட ரிசாட்பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தினையே தெரிவித்து வருகின்றனர். தமிழ் மக்களின் நலன்களிலிருந்து இன்றும்கூட அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வக்கற்றவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதென்பதும் ஒரு வருந்தத்தக்க செயலாக இருக்கின்றது. ஆளும் தரப்புப் பிரதிநிதியின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஆட்சி கவிழும்நிலை ஏற்பட்டால் அதனைத் தாங்கிப் பிடிக்கக்கூடியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களின் குறைந்த பட்ச கோரிக்கைகள் பலவற்றை இவர்களால் நிறைவேற்ற முடியும். ஆனால் இவை தொடர்பாக அரசுடன் பேசி அவ்வாறான விடயங்களை கையாள்வதற்குப் பதிலாக கண்மூடித்தனமாக அரசாங்கத்தைப் பாதுகாப்பது ஒன்றே இவர்களது ஒரே கடமையாக இவர்களது செயற்பாடுகள் அமைந்திருப்பது அருவருக்கத்தக்கதாக இருக்கின்றது.

கேள்வி:-இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளை எப்படிப்பார்க் கின்றீர்கள்? அடுத்த கட்டம் இந்தியத் தரப்பினை தமிழ்த் தலைமைகள் எவ்வாறு அணுக வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- இந்தியாவில் பா.ஜ.கவும் தமிழகத்தில் தி.மு.கவும் பெருவெற்றி பெற்றுள்ளன. இந்திய மக்களின் ஆணை பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் எதிர்பார்ப் புக்களுடன் வழங்கப்பட்டிருகின்றது. அவ்வாறிருக்க, எம்மைப்பொறுத்த வரையில், தமிழர் பிரச்சினையினை தீர்ப்பதற்கு பல்வேறு அணுகுமுறைகள் காணப்படு கின்றன. அதில்மிக முக்கியமானதொரு விடயமாகவே அயல் நாடான இந்தியாவுடனான அணுகுமுறையை கொள்ளவேண்டியுள்ளது.

இலங்கையில் மஹிந்த, மைத்திரி, ரணில் இப்படி யார் ஆட்சிப்பீடத்திலிருந்தாலும் சீன சார்பான நிலைப்பாடொன்றே மையங்கொண்டுள்ளது. முதலீடுகளைச் செய்வதற்கு அனுமதிக்கின்றமை முதல், இறுதியாக செய்யப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் வரையில் கணிசமான இடைவெளிகளில் அந்நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இதன்மூலம் ஆட்சியாளர்களின் போக்கினை தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது.

அப்படியிருக்கையில், அபிலாசைகளைப் பெறுவதற்கான உரிமைப்போராட்ட பயணத்தில் தமிழர்கள் தனியே சிங்கள ஆட்சியாளர்கள் மீதும், சர்வதேசத்தினையும் மட்டும் நம்பிக் கொண்டிருப்பது பொருத்தமற்ற செயற்பாடாகவே கொள்ளவேண்டியுள்ளது. அவர்களு டனான அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதேசமயத்தில் பிராந்திய ரீதியிலும், அயல் நாடு என்ற வகையிலும் இந்தியாவுடன் இறுக்கமான தொடர்புகளைப் பேண வேண்டியுள்ளது.

அண்மைக்காலமாக தமிழ் தலைவர்கள் மத்தியில் இந்திய மத்திய அரசுடன் மட்டுமல்ல, தமிழக தரப்புக்களுடனேயே தொடர்ச்சியான பிணைப்பொன்று இருப்பதை அவதானிக்க முடியவில்லை. இது மிகப்பெரும் வெற்றிடத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நிலையில் தற்போது இந்திய மத்திய அரசு அறுதிப்பெரும்பான்மை பெற்று ஸ்திரமான ஆட்சியொன்றை கொண்டுள்ளது. ஆகவே கடந்தகாலத்தினை விடவும் தமிழர்களின் விடயத்தினை மிகவும் அவதானத்துடன் ஆழமாக அவர்கள் ஊடாக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொடர்ச்சியான அணுகு முறைகள் ஊடாக கொள்கைரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி எமது நியாயமான தீர்வினைப் பெறுவதற்குரிய நகர்வுகளைச் செய்ய வேண்டும்.பூகோள அரசியல் போக்கினை சரியாக புரிந்துகொண்டு இந்த நகர்வுகளைச் செய்தாக வேண்டியுள்ளது. ஆகவே தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதனையாவது சரியாக பயன்படுத்திக்கொள்வதோடு தமிழக உறவுகளையும் புதுப்பித்துக்கொள்வது அவசியமாகின்றது.

மைத்திரி கூறியும் யாழில் இராணுவ கெடுபிடிகள் குறையவில்லை

வடக்கில் இராணுவ கெடுபிடிகளைக் குறைக்குமாறு, இராணுவத் தளபதிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்ட போதிலும், அதில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், சோதனைகள் இடம்பெற்றிருந்தது.

எனினும் நாட்டின் பிற இடங்களைவிட வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் போடப்பட்டிருப்பதுடன், பயணிகளின் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுவதுடன், பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது.

இதை தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்தனர். பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.  அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகளைக் குறைக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதியிடம் கோரியிருந்தார். இதனை ஏற்ற ஜனாதிபதி இராணுவத் தளபதியிடம் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் வடக்கில் குறிப்பாக பூநகரி, ஆனையிறவு, நாவற்குழி போன்ற இடங்களில் இராணுவத்தினர் பயணத் தடைகளை விதித்து, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் இராணுவத்தின் கெடுபிடியில் சிக்குண்டு பயணிக்கின்றமையை காணமுடிகின்றது.

தமிழீழ மக்களுக்குச் சார்பான வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவிடம் பேசத் தயார் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

இலங்கைத்தீவு தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையில், தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஏற்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமரமாக மீண்டும் பதவியேற்க்கவுள்ள நநேரந்திர மோடிக்கு எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியடைந்து தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமக்கெனத் தனியரசொன்றினை அமைக்கும் முயற்சியினை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருக்கக் கூடும்.

தமிழீழ மக்கள் இந்திய மக்களுடன் வரலாற்றுபூர்வமாக நட்புறவைக் கொண்டவர்கள். எமது மக்கள் இந்த நட்புறவு தொடர வேண்டும் என்பதில் பெருவிருப்பு கொண்டுள்ளார்கள் என்பதனையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத் தருணத்தில், இலங்கைத்தீவில் இரு அரசுகள் என்ற தீர்வுத்திட்டம் தமிழீழ மக்களுக்கும் இந்திய நாட்டுக்கும் ஒரு சேரப் பயன்தரக்கூடியது என்பதனை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். தமிழீழ தேசம் என்றும் இந்தியாவின் நட்புசக்தியாகவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் இருக்கும் என்பதனையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அடுத்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இலங்கைத்தீவு தொடர்பாக இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். தாங்கள் அமைக்கவிருக்கும் ஆட்சியானது இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி சுமங்கல டயஸ்

சிறிலங்கா விமானப்படையின் தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி நாளை மறுதினம் ஓய்வுபெறவிருப்பதால், புதிய தளபதியாக விமானப்படை அதிகாரி எயார் வைஸ் மார்ஸல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளார்.

நியமனத்திற்கான உத்தியோகéர்வ அறிவித்தல் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஓய்வுபெறவுள்ள எயார் மார்ஸல் கபில ஜயம்பதி 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் விமானப்படைத் தளபதியாக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக, ரவி விஜயகுணவர்த்தன, யாழ். காங்கேசன்துறையிலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

TRO வின் ஆவணங்கள் வவுனியாவில் சிக்கின

இன்று (27.05) காலை, வவுனியா மரக்காரம்பளை பகுதியிலுள்ள, பாவனையற்ற வீடொன்றிலிருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு (TRO) சொந்தமான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

படையினர், புலனாய்வு அமைப்பினர் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, மேற்படி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அங்கு விடுதலைப் புலிகள் ஆட்சியிலிருந்த போது செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினருக்குச் சொந்தமான அங்கிகள், ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு என்பனவே மீட்கப்பட்ட பொருட்களாகும்.

ஆட்சி மாற்றம் ஏற்படும் நேரம் வந்துவிட்டது – நாமல் ராஜபக்ஷ

அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்படும் அனைத்து பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகவும், ஆட்சி மாற்றத்திற்கான  நேரம் இப்போது வந்து விட்டது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகளும் வெற்றியடையுமா, தோல்வியடையுமா என்பது பற்றி சொல்ல முடியாது.

தவறென்று தெரிந்தும், பல அரசியல் காரணங்களை சுட்டிக்காட்டி, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பவர்களுக்கும் எதிராக மக்கள் செயற்படுவார்கள் என மேலும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தென்னிலங்கை அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஒன்று நிகழ்வதற்குரிய சாத்தியங்கள் தென்படுவதாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா தலைமையிலான குழுவினர் ஆட்சியை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அதனைத் தடுப்பதற்கு மேற்குலகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கோத்தபாயா மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னியும் அதுவே என தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு ஆதரவுகளை வழங்கவேண்டிய நிலைக்கு முஸ்லீம் சமூகம் தள்ளப்பட்டுள்ளதும், கோத்தபாயாவுக்கு சதகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.