Home Blog Page 2774

தமிழர்களை சிங்கள பயங்கரவாதம், இன அழிப்புச் செய்யவில்லையா?  மைத்திரியிடம் வி.எஸ்.சிவகரன்

வட பகுதி மக்களை தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்படுத்துவது தான் நோக்கமா என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை(7) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு விதமான சோதனைச் சாவடிக்குள் துன்ப துயரத்தை அனுபவித்த தமிழ் மக்களுக்கு மீண்டும் ஏன் இந்த வேதனையான சோதனை?

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் வடக்கில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை என்பது தாங்கள் அறிந்ததே. அப்படியானால் ஏன் இங்கே அடுக்கடுக்கான சோதனைச் சாவடிகள்.

வட பகுதி மக்களை தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்படுத்துவது தான் நோக்கமா?

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இவ்வாறான நெருக்கடிகள் இல்லை.

அப்படியென்றால் இலங்கையில் இரண்டு நாடுகள் உண்டா? சட்டம் யாவருக்கும் சமமல்லவா? உங்கள் அகராதியில் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது சிறுபான்மை இனத்தவர் மட்டுமா?

தமிழர்களை சிங்கள பயங்கரவாதம், இன அழிப்புச் செய்யவில்லையா?

80 கி.மீ பயணத்திற்கு 5 இடத்தில் சோதனைச்சாவடி. நீங்கள் ஒரு முறை சாமானிய மக்கள் போல பயணித்துப்பாருங்கள் வலி புரியும். சகல வலிகளையும் அனுபவித்து நசுக்கப்பட்டு இரண்டாம் தர பிரஜையாக வாழ வேண்டும் என்பதா?  பௌத்த தேசிய வாதத்தின் எழுதப்படாத விதி? பாடசாலைச் சோதனை மிக அருவருப்பாக உள்ளது. பாவம் மாணவர்கள்.

வெறுப்புணர்வை ஏற்படுத்தாதீர்கள். தேசிய பாதுகாப்பில் அக்கறையின்றி இந்த நாட்டில் ஒக்டோபர் 26க்கு பின்னர் இரண்டு அரசாங்கம் உள்ளதா? உங்கள் குடும்பப்பிரச்சினைப் போல் ஆளுக்காள் அரச நிர்வாகத்தில் முரண்படுவது கேலிக்கூத்தானது. அதுதான் தாக்குதலக்கு முக்கிய காரணம். எம்மை சுதந்திரமாக அன்றாடப்பணிகளில் ஈடுபட வழிவகுங்கள்.

அடக்குமுறை விபரீதத்தையே ஏற்படுத்தும். மனகிலேசத்தை வலிமைப்படுத்தும். பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுங்கள். எல்லா இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகளாக நோக்காதீர்கள். இந்த சோதனைச்சாவடிகளால் ஏதாவது ஒரு பயன் கிடைத்ததா? பயங்கரவாதிகளும், வன்முறையாளர்களும் பகிரங்கமாக பொதுவெளியில் நடமாடுவார்களா? பலவீனமான புலனாய்வு கட்டமைப்பும், ஒழுங்கற்ற உழல் நிர்வாக கட்டமைப்பும் தான் இந்த நாட்டில் உள்ளது. அதை முதலில் சீர் செய்யுங்கள்.

எனவே சோதனைச்சாவடிகளை குறையுங்கள். யுத்தத்தால் துன்பப்பட்ட மக்களை வருத்தாதீர்கள்.

இராணுவ நெருக்கடியிலிருந்து மக்களை விடுவியுங்கள். சனநாயக சிவில் இடைவெளியை மழுங்கடித்து விட்டீர்கள். ஆகவே எமது வேண்டுகையை சாதகமாக பரிசீலிக்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் சுற்றுலாத்துறையின் இழப்பு 2 பில்லியன் டொலர்கள்

பிரித்தானியாவின் பயணக்கட்டுப்பாட்டு தளர்வு சிறீலங்காவுக்கு மிகவும் சாதகமானது ஏனெனில் சிறீலங்காவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் பிரித்தானியா மக்களே இராண்டாவது இடத்தில் இருக்கின்றனர் என எக்ஸ்பீரியன்ஸ் ரவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சாம் கிளார்க் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் மொத்த வருமானத்தில் சுற்றுலாத்துறை 11 விகிதம் என்பதுடன் மொத்த மக்கள் தொகையில் 6 விகிதமான மக்கள் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வேலைவாய்ப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஏப்பிரல் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்கா அரசு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சுற்றுலாத்துறை வருமானத்;தை ஏற்கனவே இழந்துள்ளது.

எதிர்வரும் மாதங்களே அதிக சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்யும் காலப்பகுதியாகும், எனவே பிரித்தானியாவின் இந்த பயணக்கட்டுப்பாட்டு தளர்வுகளைத் தொடர்ந்து தமது பயணங்களை ஏற்கனவே நிறுத்தியவர்கள் அதனை மீள் பரிசீலனை செய்யும் வாய்ப்புக்கள் உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “லவ் சிறீலங்கா” என்ற பரப்புரை ஒன்றை சிறீலங்கா அரசு அதன் சுற்றுலாத்துறைப் பணியாளர்கள் மூலம் சமூகவலைத் தளங்களினூடாக மேற்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிறீலங்காவில் தற்போதும் அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும்,அங்கு சிறுபான்மை இன மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவசரகாலச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தமிழ் சமூக ஆவலர் ஒருவர் எனவே சிறீலங்கா பாதுகாப்பு அற்ற தேசம் என்ற பரப்புரையில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும் என கருத்துக் கூறியுள்ளார்.

சிறீலங்காவை காப்பாற்றுவதில் பிரித்தானியா தீவிரம் – பயண எச்சரிக்கையில் தளர்வு

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பெரும் வீழ்ச்சி கண்டுள்ள சிறீலங்காவின் சுற்றுலாப் பயணத்துறையை காப்பாற்றுவதில் பிரித்தானியா தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் கொண்டுவரப்பட்ட பயண எச்சரிக்கை தொடர்பில் நாம் சிறீலங்கா அரசுடன் இணைந்து பாதுகாப்பு நிலமைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம்.

அதனால் சில பயணக்கட்டுப்பாட்டு தளர்வுகளை கொண்டுவந்துள்ளோம் என சிறீலங்காவுக்கான பிரித்தானியத் தூதரகம் தனது செய்திக் குறிப்பில் நேற்று (06) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக்கான எந்த பயணமும் பாதுகாப்பானது அல்ல, தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம். இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். சிறீலங்காவின் சுற்றுலாத்துறையின் வருமானத்தில் தங்கியிருப்பவர்களின் வாழ்க்கை கடந்த வாரங்களில் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என நான் அறிவேன் என துணைத் தூதுவர் ரொம் பேர்ன் தெரிவித்துள்ளார்.

எமது பிரதான நோக்கம் மக்களின் பாதுகாப்பே எனவே தாக்குதல் அச்சம் தொடர்ந்தும் உள்ளதாக நாம் எச்சரிக்கின்றோம். எனினும் இன்று நாம் கொண்டுவந்த தளர்வு ஏப்பிரல் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்கா எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளில் இருந்து அது வெளிவருவதற்கு உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேரரின் காலம் கடந்த ஞானம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போது, ”தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறாகும். இதை நாம் இப்போதே உணருகின்றோம்.” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தல்களை, ஆபத்தை  நாடு சந்திக்கவில்லை. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்கள். அவர்களை அழித்தமை பெரும் தவறாகும் என்று கூறியிருக்கின்றார்.

இன்று தங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுவதாகவும், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை விரைவில் மீட்டெடுப்போம் என்றும் கூறியதுடன், சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய அனைவரும் இங்கு சுதந்திரமாக வாழ போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

சீனா – ரஷ்யா இடையேயான இராணுவ – பொருளாதார ஒப்பந்தங்கள்

சீன அதிபர் ஷி ஜின்பிங், 3 நாள் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு புதன் கிழமை ரஷ்யா சென்றுள்ளார். வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்கவே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே வணிகப் போர் நடக்கும் சூழலிலேயே சீன அதிபரின் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் விவகாரத்தில் மேற்குலக நாடுகளுடனான உறவு மோசமடைந்ததையடுத்து, ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக கிழக்கு நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

இந்தப் பயணத்தின் போது மாஸ்கோ வனவிலங்குப் éங்காவில் இரண்டு பன்டா கரடிகளை காட்சிப்படுத்துவதை தொடக்கி வைத்தார்.

பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தனக்கும் விளாடிமிர் புதினுக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக சீன அதிபர் குறிப்பிட்டார். கடந்த ஆறு ஆண்டுகளில் நாங்கள் இருவரும் 30இற்கும் மேற்பட்ட தடவைகள் சந்தித்துள்ளோம் . தான்  அதிக தடவைகள் பயணம் செய்த நாடு ரஷ்யா தான் என்றும் தெரிவித்தார்.

இருநாட்டு உறவகளும் எதிர்பாராத அளவுக்கு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. 2018இல் இரு நாடுகளிடையேயான வணிகம் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இரு நாட்டு இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை எதிர்காலத்தில் இன்னும் நெருக்கமாக்க இரு நாடுகளும் உறுதி éண்டுள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் விவகாரத்தினால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராகத் திரும்பின. அதன் மீது பொருளாதார தடைகளையும் விதித்தன. இதனையடுத்தே இரு நாட்டு உறவில் விரிசல் உண்டானது.

2015ஆம் ஆண்டு சிரியாவின் அசாத் அரசை ஆதரித்ததற்காகவும் ரஷ்யா விமர்சனத்திற்குள்ளாகியது. அது போல டிரம்ப் அரசு பொறுப்பேற்றதிலிருந்து சீனா அமெரிக்கா உறவு சுமுகமாக இல்லை. இப்போது இரு நாடுகளிடையே வணிக யுத்தம் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளுமே மாறி மாறி வரி விதித்து வருகின்றன.

ஹுவாவே நிறுவனம் ரஷ்யாவின் எம்டிஎஸ் நிறுவனத்திற்கு 5G  சேவையை மேம்படுத்தி தரும் ஒப்பந்தம் இந்த சுற்றுப் பயணத்தில் கையெழுத்தாகியது. ஹுவாவே நிறுவனம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அமெரிக்கா அதனை தடை செய்தது.

இந்த தடை உத்தரவின் பேரில் ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஹுவாவே சிக்கலை எதிர்நோக்குகின்றது.

 

முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தங்களை தாங்களே சுய விமர்சனத்திற்குள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான சக்தியாக உருவாக முடியுமென தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.அதேவேளை சிங்கள பௌத்த தேசியவாதமே இரு தரப்புக் கும் பொதுவான எதிரி எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் 2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான போர் நிறைவடைந்த பின்னர் பொருளாதார மட்டத்தில் பலமாக வளர்ந்த முஸ்லிம் மக்கள் மீது குறிவைக்கப்படும் என்பதை நாங்கள் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதனை இன்றைய சம்பவங்கள் மிக தெளிவாக அடிக்கோடிட்டு காட்டியிருக்கின்றன. முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையில் விரிசல்கள் உள்ளது. கோபங்கள் உள்ளது. அவை தீர்க்கப்படவேண்டியவையும், தீர்க்ககூடியவையும் கூட.
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்தும், முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் எம்மை பிரித்தாழும் முயற்சிகளுக்கு நாம் இடமளிக்ககூடாது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலிலும் கூட அதிகளவில் பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள். ஆனாலும் கூட தமிழ் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தவில்லை. இதனை முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைவர்களும் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் உரிமைசார் போராட்டத்தை முஸ்லிம் தலைவர்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்திடம் காட்டிக் கொடுத்தார்கள்.

இன்று அதே சிங்கள பௌத்த தேசியவாதம் முஸ்லிம் மக்கள் மீது கைவைக்கும் நிலையில் முஸ்லிம் தலைவர்களிடம் மனமாற்றம் நிச்சயமாக தேவை. இந்த விடயத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களை தாங்கே சுயவிமர்சனங்களுக்கு உள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான ஐக்கியத்தை உருவாக்க முடியுமெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் .

பிரதமர் ,பொலிஸ் மா அதிபர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரை அழைக்க வேண்டாம் என்கிறார் ஜனாதிபதி – ஹேமசிறி பெர்னாண்டோ

பிரதமர் ,பொலிஸ் மா அதிபர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு 2018 நவம்பர் 13 ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை .

அவர்களை அழைக்க வேண்டாமென ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் ஆஜராகி சாட்சியமளித்த போது கூறினார்.

பிரதமர் ,பொலிஸ் மா அதிபர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு 2018 நவம்பர் 13 ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை .அவர்களை அழைக்க வேண்டாமென ஜனாதிபதி என்னிடம் கூறினார்.அன்று முதல் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதிவரை தேசிய பாதுகாப்பு சபையின் நான்கு கூட்டங்கள் நடந்தன.

இரண்டு தடவைகள் நான் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதிக்கு விளக்கிக் கூற முயன்றேன்.ஆனால் அரச புலனாய்வுப் பணிப்பாளர் தம்மிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டதாக ஜனாதிபதி என்னிடம் சொன்னார்.நான் பதவியில் இருந்த ஐந்து மாத காலத்தில் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு விபரிக்கும் நடைமுறை இருந்ததில்லை.

அரச புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கும் ஜனாதிபதிக்கும் நேரடித் தொடர்பு இருந்தது.நான்கு வருட காலம் ஜனாதிபதிக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வுப் பணிப்பாளர் ஒரு தடவை என்னிடம் கூறியிருந்தார்.

பாதுகாப்பு செயலாளரான நான் எனது அமைச்சரை சந்திக்க கூட முடியாத நிலையில் இருந்தேன் இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை கூட சந்திக்க கஷ்டமாக இருந்தது.அவருக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை.ஒரு கையொப்பம் பெறவே மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியேற்பட்டது.

ஏப்ரல் 9 ஆம் திகதியில் இருந்தே அச்சுறுத்தல் இருந்ததால் வழமைபோல அந்த தகவலையும் புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு கூறியிருக்குமென நான் யூகித்தேன்.தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் என்னை சந்திக்க அழைத்தாலும் அவரை சந்திக்க செல்ல ஜனாதிபதி என்னை அனுமதிக்கவில்லை.

முஸ்லீம் அமைச்சர்கள் ஏற்கனவே பதவிவிலகல் கடிதங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டனர் – ரணில் விக்கிரமசிங்க

பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு அவர்களது இராஜினாமாக் கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும் அது தொடர்பில் அதற்கு மறுநாளே அமைச்சரவையில் வைத்து தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர்,

பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு என்னிடம் அவர்களது இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்.

நான் அதை ஏற்றுக் கொண்டு அதற்கு அடுத்த நாள் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கு அது தொடர்பில் அறிவித்தேன் . எனினும், நம் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இராஜினாமாக் கடிதம் தனித்தனியே வழங்கப்பட வேண்டும் என்பதை அப்போது ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.

அதனையடுத்து நான் அவர்களிடம் தனித்தனியே இராஜினாமாக் கடிதங்களை கோரினேன். அவர்கள் அதனை இன்றைய தினம் தருவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

எவ்வாறெனினும் இடைப்பட்ட சில தினங்களில் முஸ்லிம் மக்களின் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அதனால் முஸ்லிம் அமைச்சர்கள் தமது ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில் அவர்களால் தமக்கான இராஜினாமாக் கடிதத்தை வழங்க முடியாமல் போயுள்ளது

அவர்கள் இன்றைய தினம் தனித்தனியே தமது இராஜினாமாக் கடிதங்களை எமக்கு கையளிப்பர் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார் .

தினேஷ் குணவர்தன எம்.பி தமது கேள்வியின்போது,

சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் தமது இராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சில தேசியப் பத்திரிகைகள் அந்த இராஜினாமாக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு இதுவரை கிடைக்கவில்லையென ஜனாதிபதியின் செயலாளரே அதனை குறிப்பிட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இராஜினாமாக் கடிதம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகினார்களா? அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவில்லாத நிலையே உள்ளது

அந்த இராஜினாமாவை உறுதி செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் அது தொடர்பில் அறிவிக்க வேண்டுமென தினேஷ் குணவர்தன எம். பி கேட்டுக்கொண்டார்

இதனையடுத்து பதிலளித்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன என்பவரே முன்னாள் ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜனாதிபதி சட்டத்தரணி உப்புள் திசாநாயக்கவூடாக முன்வைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதியன்று தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த வேளை குறித்த அலைவரிசையொன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘டோக் வித் சத்துர’ எனும் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஆளுநர் நீதித்துறை தொடர்பில் தரக்குறைவாக பேசியதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் இக்கருத்தானது நீதித்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக அவரை அரசியலமைப்பின் 105(3) சரத்துக்கமைய தண்டிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா விஜயம் – வீதிகளை மூடி கடும் பாதுகாப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சிறிலங்காவிற்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்திய தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது   விஜயம் இதுவாகும்.

இவரை வரவேற்கும் உத்தியோகéர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதனிடையே இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளை மூடி சிறீலங்கா அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.