முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தங்களை தாங்களே சுய விமர்சனத்திற்குள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான சக்தியாக உருவாக முடியுமென தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.அதேவேளை சிங்கள பௌத்த தேசியவாதமே இரு தரப்புக் கும் பொதுவான எதிரி எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் 2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான போர் நிறைவடைந்த பின்னர் பொருளாதார மட்டத்தில் பலமாக வளர்ந்த முஸ்லிம் மக்கள் மீது குறிவைக்கப்படும் என்பதை நாங்கள் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதனை இன்றைய சம்பவங்கள் மிக தெளிவாக அடிக்கோடிட்டு காட்டியிருக்கின்றன. முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையில் விரிசல்கள் உள்ளது. கோபங்கள் உள்ளது. அவை தீர்க்கப்படவேண்டியவையும், தீர்க்ககூடியவையும் கூட.
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்தும், முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் எம்மை பிரித்தாழும் முயற்சிகளுக்கு நாம் இடமளிக்ககூடாது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலிலும் கூட அதிகளவில் பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள். ஆனாலும் கூட தமிழ் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தவில்லை. இதனை முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைவர்களும் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் உரிமைசார் போராட்டத்தை முஸ்லிம் தலைவர்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்திடம் காட்டிக் கொடுத்தார்கள்.

இன்று அதே சிங்கள பௌத்த தேசியவாதம் முஸ்லிம் மக்கள் மீது கைவைக்கும் நிலையில் முஸ்லிம் தலைவர்களிடம் மனமாற்றம் நிச்சயமாக தேவை. இந்த விடயத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களை தாங்கே சுயவிமர்சனங்களுக்கு உள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான ஐக்கியத்தை உருவாக்க முடியுமெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் .