உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: சிறிநேசன் குற்றஞ்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கே உதய கம்மன்பில தற்போது முயற்சிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று, செட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“தற்கொலை குண்டுதாரிகளே பிரதான சூத்திரதாரிகள்” எனக் கூறி, உண்மையான குற்றவாளிகளை மறைக்க உதய கம்மன்பில தனது புத்தகத்தின் ஊடாக முயல்வதாகச் சிறிநேசன் சுட்டிக்காட்டினார்.

269 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான கோடிக்கணக்கான பணம் ஒருசில அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த நிதியை அரசாங்கம் மீட்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு மீட்கப்படும் நிதியைக் கொண்டு பூர்த்தி செய்யப்படாத வீட்டுத் திட்டங்கள் மற்றும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்ற முடியும் என அவர் யோசனை தெரிவித்தார்.

இதனிடையே, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடலாம் என அரசாங்கம் நினைப்பது தவறு எனச் சுட்டிக்காட்டிய சிறிநேசன், புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு முறையான அரசியல் தீர்வு வழங்கப்பட்டால் மட்டுமே இலங்கைக்குச் சிறந்த எதிர்காலம் அமையும் எனத் தெரிவித்தார்.

மேலும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் இதன்போது மீள வலியுறுத்தினார்.