சிறீலங்காவை காப்பாற்றுவதில் பிரித்தானியா தீவிரம் – பயண எச்சரிக்கையில் தளர்வு

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பெரும் வீழ்ச்சி கண்டுள்ள சிறீலங்காவின் சுற்றுலாப் பயணத்துறையை காப்பாற்றுவதில் பிரித்தானியா தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் கொண்டுவரப்பட்ட பயண எச்சரிக்கை தொடர்பில் நாம் சிறீலங்கா அரசுடன் இணைந்து பாதுகாப்பு நிலமைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம்.

அதனால் சில பயணக்கட்டுப்பாட்டு தளர்வுகளை கொண்டுவந்துள்ளோம் என சிறீலங்காவுக்கான பிரித்தானியத் தூதரகம் தனது செய்திக் குறிப்பில் நேற்று (06) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக்கான எந்த பயணமும் பாதுகாப்பானது அல்ல, தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம். இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். சிறீலங்காவின் சுற்றுலாத்துறையின் வருமானத்தில் தங்கியிருப்பவர்களின் வாழ்க்கை கடந்த வாரங்களில் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என நான் அறிவேன் என துணைத் தூதுவர் ரொம் பேர்ன் தெரிவித்துள்ளார்.

எமது பிரதான நோக்கம் மக்களின் பாதுகாப்பே எனவே தாக்குதல் அச்சம் தொடர்ந்தும் உள்ளதாக நாம் எச்சரிக்கின்றோம். எனினும் இன்று நாம் கொண்டுவந்த தளர்வு ஏப்பிரல் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்கா எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளில் இருந்து அது வெளிவருவதற்கு உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.