Home Blog Page 2761

போர்க்குற்றவாளியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பதவிக் காலம் ஜூன் 22 முடிவடைவதாக இருந்தாலும், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் அவரின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் சமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரில் பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட சில்வா மீது அனைத்துலக நாடுகளில் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அவருக்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகையில் சிறீலங்கா அரசு தொடர்ந்து அவற்றைப் புறக்கணித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியப் படையின் ரண்வீர் கொழும்பு துறைமுகத்தில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரண்வீர் என்ற கப்பல் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இந்தக் கப்பல் 146 மீற்றர் நீளத்தைக் கொண்டதுடன் 4560 தொன் எடையைத் தாங்கிப் பயணிக்கக் கூடியதுமாகும்.கப்பலின் கட்டளை அதிகாரி ஷேதன் சந்திரதேவ், மேல் மாகாண கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.இக் கப்பலில் 273 இந்தியக் கடற்படையினர் விஜயம் செய்துள்ளனர். இவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.3 நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள ரண்வீர் எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக அறியப்படுகின்றது.

 

புனித ஞாயிறு தாக்குதல் அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவு: ரணில்

சிறீலங்காவில் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் தற்போதைய தமது அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவு எனவும், எனவே அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று (17) அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

அரச தலைவர் தேர்தல் நாள் அறிவிக்கப்படவில்லை, எனவே நாம் தற்போது அதில் போட்டியிடுபவர் குறித்து முடிவு செய்ய வேண்டியதில்லை. 2015 ஆம் ஆண்டு நாம் வழங்கிய உறுதிமொழிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நாம் இதுவரையில் நிறைவேற்றவில்லை.

அவற்றை நிறைவேற்றிய பின்னரே தேர்தலுக்கான திட்டத்தை வகுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரணில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் என்பது சிங்கள மக்களுக்கானது எனவும், சிறுபான்மை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை எனவும் அரசியல் அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அந்தணரைக் கொண்டு யாகம் – ஆரிய மாயைக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராட்டம்.

அந்தணர்களைக்கொண்டு தாம் யாகம் நடத்தவிருப்பதாக உண்ணாவிரத போராட்ட ஈடுபட்டுள்ள   காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் தெரிவித்தனர். வவுனியாவில் 850 நாட்களாக இந்தப்போராட்டம் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கை சேர்ந்த அந்தணர் ஒன்றியத்தை சேர்ந்த தலைவர்கள் அந்தணர்கள் பங்கு பற்றுகின்ற யாகம்  ஒன்றினை  28ம் திகதி நடாத்த தீர்மானிதுள்ளோம்

குறிப்பாக தமிழர்களின் தீர்வுக்காகவும் காணாமல் போன உறவுகளிற்கு  கிடைத்த முதல் வெற்றியினை தக்க வைப்பதற்காகவும்  யாகம் மற்றும் பயனையும் இடம்பெறவுள்ளது. 28ம் திகதி காலை   9.00 மணியில் இருந்து 11.30 மணி  வரை யாகம் நடைபெறவுள்ளதால் அனைத்து தமிழர்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட தாய்மார்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

நாங்கள் இவ் யாகத்திற்கு எந்த ஒரு அரசியல்வாதியையும்  அழைக்கவில்லை ஏனெனில் இது ஒரு ஆன்மீக நிகழ்வு. இது ஒரு ஆன்மீக ஆத்ம பலத்திற்கான நிகழ்வாக மட்டும் இருப்பதனால் தமிழர்களாக இதில் யாரும் கலந்து கொள்ளலாம். அதற்கு எமக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்தார்.

இதன்போது தற்போதைய சூழலை பயன்படுத்தி தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுவிட முடியும் என கூறப்பட்டு வரும் நிலையில் தாங்களது பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என எண்ணுகின்றீர்களா என ஊடகவியலாளரொருவரால் கேட்கப்பட்டபோது,

எமது போராட்ட ஆரம்ப காலத்திலே தமிழ் தேசிய  கூட்டமைப்பு தமிழர்களுக்கான தீர்வை பெற்றுத்தராது என்று கூறியிருந்தோம். குறிப்பாக எமது போராட்டம் ஆரம்பிக்கும் போதே அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சம்மந்தரின் உருவ பொம்மையை எரித்துதான் எங்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ந்து விடும் தவறுகளையும் அண்மையில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தான் ஒரு போராட்டம் ஒன்றினை நடத்திய தளபதி போன்று தீர்வுக்கு முயலுவோம் என்று  உரையாற்றியிருந்தார். இவ்வுரையானது தமிழர்களிடையேயும், சமுக வலைத்தளங்களிலேயும் ஒரு கேலிக்குரிய விடயமாக நகைச்சுவையான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது. அதனால் இவர்கள் அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்குவதுதான் தமிழர்களிற்கான உண்மையான தீர்வாக அமையும் என தெரிவித்தார்.

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்துள்ள புத்த விகாரை

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தின் வழிபாட்டு பகுதி, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை பலதரப்பினரிடம் தெரிவித்தும் இதுவரையும் எதுவித பலனும் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரதேசம் யுத்தத்தின் போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு ஒரு பெரிய புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்டது. இந்தப் பிரதேசத்தில் பௌத்த மதத்தவர்கள் எவரும் இல்லாத நிலையில் இங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது நில ஆக்கிரமிப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கை என மக்களால் அஞ்சப்படுகின்றது.

இது தொடர்பாக எவரும் கவனத்தில் கொள்வதாக காணப்படவில்லை. அண்மையில் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருமாறு உரியவர்களிடம் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

அமெரிக்க கடற்படையின் சிறப்பு படையணி திருமலையில்

கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பலன்ஸ் ஸ்ரைல் 2019/01 திட்டத்தின் கீழ், அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினரால் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சிகள் எதிர்வரும் ஜுலை 05ஆம் திகதி நிறைவடையும்.

மூன்று வாரங்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணியைச் சேர்ந்த 24பேர் மற்றும் 4ஆவது அதிவேக தாக்குதல் அணியைச் சேர்ந்த 12பேர் என மொத்தம் 36 கடற்படையினர் பங்குபற்றியுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, அமெரிக்க இராணுவத்தின் 19ஆவது சிறப்புப் படையைச் சேர்ந்த வான்வழி தரையிறக்க அணியின் 10 பயிற்சி நிபுணர்கள் திருகோணமலைக்கு வந்துள்ளனர்.

 

 

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகொப்டர்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் ஒன்றை அனுப்பபோவதாக செய்தி வெளியாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ முடியுமா? என்று பல விண்கலன்களை அனுப்பி, பல ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகிறது.

தற்போது நாசா செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இத்திட்டத்தின் மேலாளர் மிமி ஆங், இதுவரை யாருமே மார்ஸ் ஹெலிகொப்டரை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடவே இல்லை என்று   கூறியுள்ளார்.

 

பாகிஸ்தான் உளவுப் பிரிவுத் தலைவராக பியாஸ்

பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவ மேஜர் ஜெனரலாக இருந்து கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டு ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் தலைமையக துணை ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.  மேலும் ஏற்கனவே ஐஎஸ்ஐயின் உள்நாட்டு பாதுகாப்புத் தலைவராக பணிபுரிந்துள்ளார். அத்துடன் இராணுவத் தலைமை ஜெனரல் குமார் பஜ்வாவிற்கு மிகவும் நெருக்கமானவர்.

இதுவரை ஐஎஸ்ஐ தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாகவே லெப்.ஜெனரல் பியாஸ் ஹமீத் ஐஎஸ்ஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபரில் ஐஎஸ்ஐ தலைவராக பதவியேற்ற நவீத் முக்தர் ஓய்வு பெற்றதையடுத்து ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மாற்றப்பட்டதனாலேயே பியாஸ் ஹமீத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நைஜீரியாவில் தற்கொலைத் தாக்குதல் – 30 பேர் பலி

நைஜீரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 42 பேர் காயமடைந்துள்ளனர் என றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்கள் நிறைந்த சந்தைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 தற்கொலைதாரிகள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். பெண் தற்கொலை தாக்குதலாளி ஒருவரின் குண்டு வெடிக்காததால் அவர் கைதுசெய்யப்பட்டதாக நைஜீரியா படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் எந்த குழுவினரும் இதுவரையில் உரிமைகோரவில்லை எனவும், ஆனால் பொகோகாராம் அமைப்பின் பிரிவினரே இதனை மேற்கொண்டதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கால்பந்து போட்டிகளை பார்ப்பதற்காக மக்கள் கூட்டமாக இருந்த பகுதியிலேயே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டில் இருந்து வட மேற்கு பகுதியில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் 1,000 இற்கு மேற்பட்ட மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளதுடன், பல பத்தாயிரம் வீடுகள் எரிக்கப்பட்டும், பெருமளவான தொழில் வளங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

கிழக்கில் உருவாகிய ”தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம்“

கிழக்கில் தமிழர்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு பல புத்திஜீவிகள் ஒன்றிணைந்து “தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையத்தை“ ஆரம்பித்துள்ளனர்.

தமது அமைப்பு குறித்தும், எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க என ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகள் எல்லாமே இறுதியில் அரசியல் கட்சியாக தோற்றமெடுத்தது. எனவே இதனால் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் சாராத ஒரு அமைப்பு நீண்ட நாட்களாக இல்லாதிருந்தது. இந்தக் குறையைத் தீர்க்கவே கிழக்கிலுள்ள புத்திஜீவிகள் பலர் ஒன்றிணைந்து 08.06.2019இல்   தமிழர்களின் நலன்கள் தொடர்பாக ஆராய்வதற்காக “தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம்” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இவர்களின் நோக்கங்களாக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வடக்கு கிழக்கு மக்களின் கல்வி, பொருளாதார, காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், சிவில் சமூக அமைப்புகளை இணைத்து மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தல், பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவை இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.