அமெரிக்கப் படைகளை நாம் சிறீலங்காவுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்பதுடன், சிறீலங்காவில் அவர்கள் தளம் அமைக்கவும் முடியாது என சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா இன்று (05) தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாம் அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை, எனவே அமெரிக்கப் படைகளை நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதில்லை, அதுமட்டுமல்லாது அவர்கள் இங்கு தளம் அமைக்கவும் முடியாது.
அமெரிக்கா தளம் அமைக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை. நாம் எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமத்தில் பாரம்பரியமாக ஏற்றப்படும் முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்குப் பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக் கொடி ஏற்றப்படுவதாக பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த நடைமுறை எவ்வாறு தோன்றியது. பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்றியது யார் என பலரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
நேற்று கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்ற போது, அங்குள்ள இஸ்லாமியப் பள்ளிவாசலிலேயே கொடி ஏற்றப்பட்டது. அதுவும் அரபு எழுத்துக்களால் ஆன பச்சை நிறக் கொடியே ஏற்றப்படுகின்றது.
கதிர்காம வரலாறுகளின்படி முருகன் கோவிலில் முருகனின் சேவல் கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்து தெய்வானை அம்மன் கோவிலுக்கு கொடி எடுத்து வரப்பட்டு, கொடி புஜை வழிபாடுகள் நடத்தப்பட்ட பின் பக்கீர் மடத்திற்கு (இப்போதைய பள்ளிவாசலின் முன்பக்கம்) கொண்டு வரப்பட்டு அங்குள்ள கொடிக் கம்பத்தில் கட்டப்படும்.
இந்த முறை இப்போது மாற்றப்பட்டு, முஸ்லிம்களின் அரபு எழுத்தினாலான கொடி ஏற்றப்படுவதை கவனத்தில் கொள்வதுடன், இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மீண்டும் சேவல் கொடி ஏற்றுவதற்கு உரியவர்கள் கவனம் எடுக்க வேண்டும் என பக்தர்கள் உரியவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். கோவில் நிர்வாகத்தினர் இதனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மன்னார் சதொச பகுதியில் மீட்கப்பட்ட மனித புதைகுழியின் எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதன் அறிக்கை தொடர்பாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
புளோரிடா காபன் அறிக்கையின் பிரகாரம் குறித்த மனித எச்சங்கள், கி.பி.1404 முதல் 1635 வரையான காலத்திற்குரியவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் 231 ஆண்டு இடைவெளியுள்ளதை சுட்டிக்காட்டிய ராஜ் சோமதேவ, இது தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் மரபுவழித்தாயகமான வடக்கினையும் , கிழக்கினையும் துண்டடுவதற்கான நுட்பமான காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் கீழ்த்தரமான காரியங்களை நோக்குகையில் போருக்குப் பின்பான நிலைமாறு கால நீதிக்குரிய காலப்பகுதியாக உயர் மட்டங்களில் கூறி வரப்படும் கருத்துக்களின் அடிப்படை என்ன எனக் கேட்கத்தோன்றுகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
நேற்று ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் முல்லைத்தீவு நிராவியடி பிள்ளையார் கோவில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகிவரும் தமிழரின் பூர்வீகக் கிராமமான தென்னைமரவாடி பகுதிகளுக்குச் சென்று அங்கு மக்கள் சந்திப்புக்களில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துரைக்கையில்இ தமிழ் மக்களின் வரலாற்று ரீதியிலான நிலங்கள்இ பண்பாடுகள்இ கலாச்சாரம்இ இன ரீதியிலான இருப்புப் போன்றவை வெளித்தொடர்புகள் அற்ற பிரதேசங்களில் சாதாரணமாக அழித்துவிடுவதற்கான உத்திகள் இன்றும் தொடர்கின்றன.
கடந்த காலத்தில் இராணுவம் கைப்பற்றி வைத்திருந்த நிலத்தினை உரியவர்களிடம் கையளிப்பதே நிலைமாறு காலநீதிக்குப் பொருத்தம். எனினும் இங்கிருக்கக் கூடிய இனவிரோத என்னப்பாடுடைய பௌத்த துறவிகள் முல்லைத்தீவு மற்றும் நாம் தற்போது வருகை தந்துள்ள தென்னைமரவாடி பிரதேசங்களில் கச்சிதமாக சிங்கள மயமாக்கத்தினையும் தமிழரின் வரலாற்று அழிப்பினையும் மேற்கொள்கின்றனர்.
மக்களைப்பொருத்தளவில் எமது நிலம் எமக்கே என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.
தமிழ் மக்களின் மரபுவழித்தாயகமான வடக்கினையும் , கிழக்கினையும் துண்டடுவதற்கான நுட்பமான காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் கீழ்த்தரமான காரியங்களை நோக்குகையில் போருக்குப் பின்பான நிலைமாறு கால நீதிக்குரிய காலப்பகுதியாக உயர் மட்டங்களில் கூறி வரப்படும் கருத்துக்களின் அடிப்படை என்ன எனக் கேட்கத்தோன்றுகின்றது.
தமிழரின் வரலாற்று பூர்வீக நிலத்தில் அமையப்பெற்ற நிராவியடி பிள்ளையார் கோவிலின் வளாகத்தினை பௌத்த வளாகமாக மாற்ற முயற்சிக்கப்படுகின்றது. இந்நிலையில் நீதித்துறையின் தீர்ப்பின் வாயிலாக மக்கள் தீர்ப்பினைப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இவற்றுக்கு மேலாக தென்னைமரவாடி பகுதியில் வரலாற்று ரீதியில் பரம்பரை பரம்பரையாக எம்மவர்கள் கந்தசாமி மலையில் வழிபட்டு வந்த வழிபாட்டுத்தலம் தொல்லியல் திணைக்கள ஆதிக்கத்தின் ஊடாக திரைமறைவில் சிங்கள பௌத்த மயமாக்கத்திற்கான கைங்காரியங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
தமிழ் மக்களின் இவ்வாறான வரலாற்றுக் கிராமங்களில் நிலங்கள் பொளத்த விகாரைகளுக்கும் சிங்களக்குடியேற்றத்திற்கும் புடுங்கி அல்லது அதிகாரத்தினைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றது.
இதுதான் தொடர்கதையாகியுள்ள சூழ்நிலையில் நிலைமாறு காலம் எனவும் நல்லிணக்கம் எனவும் நாட்டில் கூறப்படுவதன் அடிப்படை எவருக்குமே புரியாத சூனியமாகக் காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மக்கள் விவசாயம் செய்கின்ற 1750ஏக்கர் ஒப்பக்காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை இரத்துச் செய்யுமாறு கூறி, ஜனாதிபதி, பிரதமர், வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார்,
இக்கடிதத்தில்,
மேற்குறிப்பிட்ட காணிகளைப் பொறுத்தவரையில் 1980ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் இப்பகுதியில் பல நூற்றக்கணக்கான குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருந்து மேட்டுநிலப் பயிர்செய்கை, வேளாண்மைச் செய்கை, ஏனைய இயற்கையோடு ஒத்த தொழில்களைச் செய்தது மட்டுமல்லாமல் கால்நடை,மீன்பிடி
தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இம் மக்களைப் பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக பல தடவைகள் இடம் பெயர்ந்து வருடாவருடம் நீர் உள்ள காலத்தில் தொழில் செய்து வருவது வழக்கமாகும். நிரந்தரமாக கால்நடை,மீன்பிடி,விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் உறுதி, ஒப்பம், ஒப்பத்திற்கு விண்ணப்பித்த ஆதாரங்கள், இன்னும் ஒருசிலர் சேனைப்பயிர் செய்து கொண்டும் வருகின்றனர் இத்தோடு இப்பகுதியில் நிரந்தரமாக வீட்டுத்திட்டங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக 300ற்குமேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டு காலமாக நிரந்தரத் தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் பிரதேசமாக உள்ளதால் மக்கள் பிரதிநிதிகள்,திணைக்களத்தலைவர்கள்,காணிதொடர்பான குழுக்கள் ஒருவருக்கும் தெரியாமல் இக்காணிகளை வர்த்தமானி பிரகடனப்படுத்தியது கவலைக்குரிய விடயமாகும். உள்நோக்கம் கொண்டதாக அமைகின்றன.
இவைமட்டுமின்றி பன்சேனைப்பகுதியில் இரும்பன்ட குளத்திற்கு அருகிலுள்ள
548அரைஏக்கர் காணியில் 50ஏக்கர் காணியை சூரிய மின்சக்தி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 30வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கி உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது. இக்காணிகளை நீண்டகாலமாக 300ற்கு மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து பராமரித்து ஓப்பங்கள் வழங்கி, ஒப்பத்திற்கு விண்ணப்பித்து ஆளுகைப்படுத்தி வருகின்ற போது இக்காணிகளை வர்த்தமானி பிரகடனப்படுத்தி சூரிய மின்சக்தி திட்டத்திற்கு இக்காணிகளை வழங்குவது
பொருத்தமானதாக இருக்காது என்பதனால் வர்த்தமானி பிரகடனப்படுத்தப் பட்டதையும், காணி வழங்கியதையும் நிறுத்தி அக் காணியைப் பயன்படுத்துகின்ற மக்களுக்கு கிடைக்கக் கூடியவாறு ஒழுங்குகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் விரிவான கடிதங்களை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேசசபை தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜேர்மன் நாட்டு தூதுவர் ஜோன் ரொட் அவர்களை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (04) அன்று சந்தித்துப் பேசிய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடமாகாண நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார்.
29 வருடங்களுக்குப் பின்னர் காங்கேசன்துறை, கீரிமலை மக்கள் தற்போது தமது பிரதேசங்களை பார்வையிட சென்றுள்ளனர். இவர்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்கும் நிகழ்வுகள் ஏப்ரல் 21இன் பின்னர் தற்போது சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதை தூதுவருக்கு தெரிவித்தார்.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளித்த ஆளுநர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு உதவ முடியுமான வழிகளில் உதவும்படி கேட்டுக் கொண்டார். வடமாகாணம் எதிர்காலத்தில் முகம்கொடுக்கவுள்ள நீர்ப் பிரச்சினை தொடர்பாக விளக்கமளித்ததுடன் ஐந்து திட்டங்கள் குறித்து விளக்கமளித்து, முதல் திட்டமாக வடமராட்சி களப்பு திட்டம் குறித்து விளக்கமளித்தார், அத்துடன் வடமாகாண பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிட உள்ளதாகவும், அது தொடர்பில் கட்சி திட்டமிட்டுவருவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் தேர்தலில் கடந்த பல வருடங்களாக ஐ.தே.கா தோல்வியடைந்து வருகின்றது. எனவே நாம் ஒரு பிரபலமான போட்டியாளரை நிறுத்த வேண்டிய கட்டயத்தில் உள்ளோம் என சமரவீரா தெரிவித்துள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெக்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன, அதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐ.தே.கட்சியோ அல்லது சுதந்திரக் கட்சியோ தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யவில்லை என்பதுடன், தொடர்ந்து நில ஆக்கிரமிப்பையும், திட்டமிட்ட இன அழிப்பையும் முன்னெடுத்து வருவதால் தமிழ் மக்கள் சிங்கள அரச தலைவருக்கான தேர்தலில் பங்கெடுப்பதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நிறைவுடன் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசமும் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் எண்ணுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியான பெர்னான்டோ என்பவர் வியாங்கொட ரயில்வே நிலையத்தில் ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ரம்புக்கனையைச் சேர்ந்த இவர் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இவரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியப்படவில்லை.
மக்கள் தனக்கு வழங்கிய ஆணைக்கு ஏற்ப தான் செயலாற்றப் போவதாகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தான் அரச தலைவருக்கான போட்டியில் இருந்து விலகப்போவதில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார்.
நேற்று (3) அவரை பார்வையிடுவதற்காக சிங்கப்பூர் சென்ற ஒரு தொகுதி சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இருதைய அறுவைச் சிக்சைக்கு பின்னர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் கோத்பாயா ஒய்வெடுத்து வருகின்றார்.
சிகிச்சைக்கு பின்னர் தான் விரைவாக நலமடைந்து வருவதாகவும், அரச தலைவருக்கான போட்டிகளில் இருந்து தான் ஒருபோதும் விலகப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில் அதற்கான தயாரிப்பு வேலைகளை தான் எவ்வாறு மேற்கொண்டு வருகின்றார் என்ற விளக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்னா ரணதுங்கா அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் கோத்தபாய தற்போது அவருக்கு எதிராக அமெரிக்கா வழக்குகளை முன்னெடுத்து வரும் நிலையில் சிங்கப்பூர் வைத்தியசாலையை நாடியுள்ளார்.
இதனிடையே, சிறீலங்காவின் அரச தலைவருக்கான தேர்தலில் தாம் எவரையும் ஆதரிக்கப்போவதில்லை என தமிழ் மக்கள் முடிவெடுத்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத நம்பிக்கை வைத்து தமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல்தீர்வுவரை அனைத்தையும் அடைய எதிர்பார்த்திருந்தனர். யார் கண் பட்டதோ கூட்டமைப்பின் ஒற்றுமை அன்றிலிருந்தே சிதைய ஆரம்பித்து விட்டது.
ஒற்றுமை சிதைவடைவதை அறிந்த பின்னரும் எந்தவொரு தனிநபரோ அல்லது கட்சியோ தமக்கான விடிவைக் கொண்டுவராது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருந்தனர். அதன் விளைவாகவே கூட்டமைப்பைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சி தன்னை வளர்த்துக்கொண்டபோதிலும், இதனை நன்குணர்ந்த நிலையிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தமது முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர். அதனால்தான் 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் கூட்டமைப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்றிருந்தது.
ஆயுதப்போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், அனைவரும் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்திய வேளையில், தற்பொழுது யுத்தநிறுத்தம் மேற்கொண்டால் அது புலிகளுக்கு ஒட்சிசன் வழங்கியதுபோல் ஆகிவிடும் என்று கூறிய புளொட்டையும் கூட அது கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஒரே காரணத்திற்காக தமிழ் மக்கள் தற்காலிகமாக அதன் தவறை மறந்து அதற்கும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
புளொட் கூட்டமைப்பில் இணைந்த உடன் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பரப்புரையின்போது அதன் தலைவர் திரு.சித்தார்த்தன், “அரசியல் கட்சிகள் இணைந்துவிட்டோம். இனி மக்கள் தாங்கள் ஐக்கியமாக இருக்கிறோம் என்பதையும் எங்களது ஐக்கியத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்பதையும் அனைவருக்கும் தெரிவிப்பது, தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோகமாக வெற்றியடையச் செய்வதிலேயே தங்கியுள்ளது” என்றும் கேட்டுக்கொண்டார். மக்களும் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்குத் தயாராக இருப்பதை தேர்தல்களின் மூலம் தெளிவாகவே வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட உடன் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இலங்கை தமிழரசுக் கட்சி தனது மக்கள் விரோதக் கொள்கையை ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் உட்கட்சி சனநாயகப் போராட்டத்தினூடாக தமிழரசுக் கட்சியை வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று அப்போது அங்கத்துவக் கட்சிகள் நம்பின.
பின்னர் சில அங்கத்துவக் கட்சிகள் என்ன காரணத்திற்காகவோ தமிழரசுக் கட்சி கிழித்த கோட்டைத் தாண்ட மறுக்கின்றன. இதுவே தமிழரசுக் கட்சி இன்று தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து, மக்கள் வழங்கிய ஆணைகளுக்கு மாறாக, எதேச்சாதிகாரமாகச் செயற்படுவதற்கும் அங்கத்துவக் கட்சிகள் கையறு நிலைக்குச் சென்றிருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கையின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதன்போது 2010ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னிக்கு நேரடியாகச் சென்று மீள்குடியேறிய மக்களைச் சந்தித்து இறுதி யுத்தத்தின்போது அவர்களது அனுபவங்களையும் இழப்புக்களையும் குறித்து தாம் சேகரித்திருந்த சாட்சியங்களை ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தில் கையளிக்க முடிவு செய்திருந்தனர்.
ஆனால் பின்னர் அமெரிக்கா அதனை விரும்பவில்லை என்று காரணம்கூறி தமிழ் மக்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவின் காரணமாக தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த சுமந்திரன் தெரிவித்தார். இதிலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விரோதச் செயற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.
2012ஆம் ஆண்டு பிரேரணையை அன்றைய மகிந்தராஜபக்ச அரசாங்கம் நிராகரித்திருந்தது. அதன் பின்னர் அமெரிக்கா மீண்டும் 2013ஆம் ஆண்டு ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்தக் கூட்டத்தொடரில் அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியிலிருந்த மங்கள சமரவீரவும் பங்குபற்றியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இதிலும் இலங்கை அரசாங்கம் ஏராளமான விடயங்களை ஏற்க மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் சுமந்திரன், மங்களசமரவீர, ரணில், சந்திரிகா அம்மையார் போன்றவர்கள் அவ்வப்போது சிங்கப்பூர் சென்றுவந்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு சர்வதேச சமூகத்தினருக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்தது. இதன் பயனாகவே அவர்களின் முயற்சியால் 2015ஆம் ஆண்டு சனாதிபதியாக மைத்திரிபால சிறீசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்பொழுதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து தமிழ் மக்களின் நலன்களைப் புறந்தள்ளிச் செயற்படத் தொடங்கிவிட்டது.
சனாதிபதித் தேர்தல் நேரத்தில் எந்த மைத்திரிக்காக வக்காளத்து வாங்கி தமிழரசுக் கட்சி செயற்பட்டதோ அதே கட்சி பின்னர் அவருக்கு எதிராக மட்டுமே செயற்பட ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு மார்ச்மாத ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நடக்கவிருந்த விவாதத்தை திருவாளர் சுமந்திரனும் மங்கள சமரவீரவும் அவசர அவசரமாக அமெரிக்காவிற்கும் ஜெனீவாவிற்கும் பறந்தோடி அதனை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடத்துவதற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நேரத்தில் இலங்கைக்கு நேரடியாக விஜயம் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டு மக்களிடமிருந்து நேரடியாக வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்டு தமது அறிக்கையை சமர்ப்பிக்கவிருந்த அன்றைய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் திருமதி நவீப்பிள்ளை தனது பதவிக்காலம் முடிவடைந்து விடைபெறுகிறார். அவர் சமர்ப்பித்திருந்த இடைக்கால அறிக்கையிலேயே இலங்கை குறித்து காட்டமான கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் பதவியில் இருந்தபோது இந்த விவாதம் நடைபெற்றிருந்தால் இலங்கை பாரிய அழுத்தத்திற்கு முகங்கொடுத்திருக்கும். இதிலிருந்து இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியவர்கள் தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அன்றைய வெளிவிவகார அமைச்சருமே.
இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அன்றைய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் திரு.சையத் றாட் அல் ஹசைன் நவீப்பிள்ளையின் அறிக்கையை மையப்படுத்தி தனது காட்டமான விமர்சனங்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்திருந்தார். இலங்கை இனியும் தனது நாட்டில் நடைபெற்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முன்மொழிவுகளைச் செய்திருந்தார்.
இதன்போது மீண்டும் திருவாளர் சுமந்திரன் அமெரிக்காவிற்கும் ஜெனீவாவிற்கும் பறந்து அதனை நீர்த்துப் போகச் செய்து இலங்கையில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஒரு கலப்பு விசாரணைப் பொறிமுறையினை மேற்கொள்வதற்கான திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றி இலங்கை அரசாங்கத்தையும் அதற்கு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொள்ளச் செய்திருந்தார். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இதுவே 30/1 தீர்மானம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழரசுக் கட்சியின் அன்றைய தலைவரான திரு.சம்பந்தரினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு வடக்கு மாகாண முதலமைச்சாராக முடிசூட்டி வைக்கப்பட்ட திருவாளர் விக்கினேஸ்வரன் அவர்கள் இதிலிருந்துதான் தனது தலைவர்களுடன் முரண்பட ஆரம்பித்தார். இதனாலேயே அவர் அன்றைய நாடாளுமன்றத் தேர்தலின்போது இரட்டைப்பொருள்பட தமிழர்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 நடைமுறைப்படுத்தாத நிலையில், அதில் எத்தகைய மாற்றமுமின்றி 34/1 தீர்மானத்தின் மூலம் மேலும் இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டிருந்த போதிலும், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் சர்வதேசமயப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கம் யுத்தம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுள்ளது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் செயல்கள் இடம்பெற்றுள்ளன என்று சர்வதேச நாடுகள் தெரிவிக்கும் அளவிற்கும் அதனோடு மட்டுமல்லாமல் இத்தகைய செயற்பாடுகள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் கருத்துரைக்கும் அளவிற்கு ஆயுதப் போராட்டம் பல கதவுகளைத் திறந்திருந்தது.
அரசியல் தீர்வு இதோ வரப்போகிறது. பொங்கலுக்குள் வந்துவிடும் தீபாவளிக்குள் வந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திருவாளர் சம்பந்தன் திருவாய் மலர்ந்திருந்தார். அதற்கான எத்தகைய முன்முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஐ.நாவில் இலங்கைக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்து சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெற்றிருந்த தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அரசாங்கத்துடன் இணைந்து நீர்த்துப் போகச் செய்வதில் முனைப்புடன் செயற்பட்ட பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் அதன் சிரேஸ்ட தலைவர் திருவாளர் சம்பந்தரையும் அவரது கைப்பாவையும் ரணிலின் செல்லப்பிள்ளையுமான சுமந்திரனையுமே சாரும்.
அரசியல் தீர்வு ஒருபுறம் இருக்கட்டும். இவர்களது இவ்வளவு விட்டுக்கொடுப்புகளும் முண்டுகொடுப்பும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததா? காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுத்ததா? இராணுவத்தினரும் அரசாங்கத்தின் திணைக்களத்தினரும் அடாத்தாகக் கபளீகரம் செய்துள்ள தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டதா?
அரசியல் தீர்விற்காக அனைத்தையும் ஒத்திவைத்திருப்பதாக திருவாளர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். அதற்காகவே முன்னர் மைத்திரி – ரணில் அரசாங்கம் கொண்டுவந்த அனைத்து விடயங்களையும் கேட்டுகேள்வி இன்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதற்கு உதவினார். இன்று வடக்கு-கிழக்கில் குவிந்துள்ள இராணுவத்தினரை வெளியேற்றக்கோரி நீலிக்கண்ணீர் வடிக்கும் கூட்டமைப்பின் எம்பிக்கள், கடந்த நான்கு வருடங்களாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அதிகளவு நிதியை எதிர்த்து ஒரு வசனம் கூட பேசாமல் அல்லது நாடாளுமன்றத்தில் வாய்கிழிய கத்திவிட்டு பின்னர் அதற்கு ஆதரவாகத்தானே வாக்களித்துள்ளனர்.
சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ரணிலால் வெற்றிபெற முடியாது என்பதால்தானே பத்தொன்பதாவது திருத்தத்தின் மூலம் சனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து அதனை பாராளுமன்றத்தினூடாக பிரதமருக்கு வழங்கும் 19ஆவது திருத்தத்தை ஐ.தே.கவுடன் இணைந்து சுமந்திரன் தயாரித்தார். அதற்கு தனது சகாக்கள் அனைவரையும் ஆதரவளிக்கச் செய்தார். நூறுநாள் வேலைத்திட்டத்தில் இதனை நிறைவேற்ற முடிந்த சம்பந்தர் கூட்டத்திற்கு நான்கு ஆண்டுகளில் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே.
ஒவ்வொருமுறை வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கும் அரசாங்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பதற்கும் ஏதோவொரு வெகுமதியைக் கூட்டமைப்பினர் பெற்றுக்கொண்டுள்ளனர். முதலில் நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு புதிதாக வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே தீர்வையற்ற வாகனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இதுவும் கூட்டமைப்பினரை மையப்படுத்தியே வழங்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆமோதித்ததற்காகவும் 2018ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததற்காகவும் அவசர அவசரமாக உருவாக்கபப்ட்ட உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்த சட்டத்திற்கு கண்மூடி ஆதரவு வழங்கியதற்காகவும் கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி நிதியாக தலா இரண்டரை கோடி ரூபாய் பெற்றுக்கொண்டனர்.
2018ஆம் ஆண்டில் எமது பிரச்சினைகளை திட்டமிட்டு திசை திருப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தில் வேண்டுமென்றே சனாதிபதிக்கு எதிரான நிலையெடுத்து, ரணிலைக் காப்பாற்றி தனியாக ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வழிசெய்தமைக்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் அபிவிருத்தி என்னும் போர்வையில் பெற்றுக்கொண்ட தொகை நாற்பது கோடி.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்தித் தருவதிலோ தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதிலோ அக்கறையின்றி இருப்பதுடன் அவற்றிற்கு சாட்சிகளாக நின்று காணி உறுதி வழங்குவதும் எதனடிப்படையில்? தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி அதில் பௌத்தவிகாரைகள் அமைப்பதை தடுக்க முடியாமலிருப்பதன் காரணம் என்ன? தலைவரின் சொந்தத் தொகுதியிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்க வெந்நீரூற்றைக் காக்க முடியாமல் போனது ஏன்?
தமிழ் மக்களின் நலன்களை வென்றெடுத்து தருவோம் எங்களை நம்புங்கள் நான் இருக்கிறேன் என்று சொல்லி நம்பிக்கையூட்டி அவர்களை நடுத்தெருவில் விட்டதற்கான சன்மானங்களா அவை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த செயலை எப்படி அழைப்பது?
ஆங்கிலத்தில் என்றால் நெகோசியேட்டர், பார்கைனர், பெசிலிடேட்டர், புரோக்கர், கமிசன் ஏஜென்ட் என்று சூழலுக்கேற்ப அவர்களை அழைப்பதற்குப் பலவகையான சொற்கள் உள்ளன. ஆனால் இவைகளுக்கு தமிழில் தரகர் என்ற சொல்லே பாவனையில் உள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மக்களின் மன ஓட்டத்தை தனக்குத் தெரிந்த சொல்லில் அதனைக் கூறியுள்ளார்.