சிறீலங்காவில் இடம்பெறவுள்ள எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் பதவியை கைப்பற்றுவது தொடர்பில் சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியல்வாதிகளும், கட்சிகளும் மற்றும் உலக வல்லரசுகளும் கடும் போட்டியுடன் களமிறங்கியுள்ளன.
அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களை ஏமாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து திட்டத்தை வகுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. அதற்காகவே தற்போது சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணத்தில் உள்ளார்.
ஆனால் தமது வேட்பாளரே வெற்றியீட்டுவார் என தெரிவித்துள்ளார், எதிர்ச்சட்சித் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மகிந்தா ராஜபக்சா.
தற்போதைய அரசின் இயலாமையை மக்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர். மக்கள் மிகவும் அறிவாற்றல் உள்ளவர்கள் எமது அரசு கடந்த முறை என்ன செய்தது என்பதை அறிவார்கள். தற்போதைய அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. நாட்டில் பாதுகாப்பு முற்றாகவே அற்றுப்போயுள்ளது என மகிந்த இன்று (15) ஊடகவியலாளர்களிடம் பேசும் பொது தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஜே.வி.பி எமது உதவிகளை கோரவில்லை, எம்முடன் கலந்துரையாடவில்லை. அவ்வாறு மேற்கொண்டிருந்தால் நாம் ஆதரவு வழங்கியிருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சஜித் பிரேமதாசாவின் மனைவியான ஜலானி பிரேமதாச தான் நாட்டின் முதலாவது பெண்மணியாக வருவேன் எனவும், அதாவது எதிர்கால சிறீலங்கா அரச தலைவரின் மனைவி எனவும் ஹட்டனில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது நேற்று (14) தெரிவித்துள்ளார்.
மகிந்தா அணியில் இருந்து கோத்தபாயா அரச தலைவராக வருவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகின்றது. ஆனால் அமெரிக்கத் தளம் சிறீலங்காவில் அமைவதை மறைமுகமாக தடுக்கும் இந்தியா தனக்கு சார்பான ஒருவரை தேடிவருகின்றது.
அதேசமயம், சிங்கள அரசின் தேர்தலை புறக்கணித்து தமது அரசியல் எதிர்ப்பையும் இன ஒற்றுமையையும் காண்பிப்பதற்கும், சிறீலங்கா அரசுகளின் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை நிறுத்துவதற்கும் தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நேற்று (14) யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் சிறிலங்கா பிரதமரை ஐக்கிய தேசியக் கட்சியினர் சந்திப்பர்.
அதன் பின்னர் இன்று (திங்கட்கிழமை) சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வார்.
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் அழைப்பின் பெயரில் ரணில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதுடன், ஐந்தரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் கலையரங்கத்திற்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.
மேலும் ரணில் காரைநகருக்கான விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக யாழ். நகர அபிவிருத்திகளில் ரணில் அதிக அக்கறை செலுத்துவதாகத் தெரிகின்றது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் இச் செயலானது, வாக்கு கேட்கும் ஒரு நடவடிக்கையாக அமைவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ். பலாலியிலிருந்து இந்தியா தமிழ்நாட்டின் திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கு இந்தியா இணக்கம் கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாவும் இந்தியா 300 மில்லியன் ரூபாவையும் செலவு செய்யவுள்ளன. தற்போது ஓடுபாதை சீர் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், சிவில் விமான சேவைகள் நிறுவனத்தினால், அனைத்துலக விமான நிலையமாக இயக்கப்படவுள்ளது. இருந்தாலும் சிறிலங்கா விமானப்படையே தொடர்ந்தும் விமான நிலையத்தை நிர்வகிக்கும் என அறிய முடிகின்றது.
தற்போது 200 பயணிகளைக் கையாளக்கூடிய ஒரேயொரு முனையம் மாத்திரமே உள்ளது. குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் நெருக்கமான ஆசனங்களைக் கொண்ட சிறிய விமானங்களின் மூலம் இந்தியாவின் சில நகரங்களுக்கே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது இங்கிருந்து விமானப்படையின் C – 130, AN – 32, MA – 60 போன்ற விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தினால் 15,400 வணிக விசாக்களும், 121,000 சுற்றுலா விசாக்களும் வழங்கப்பட்டுள்ளன என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், அதேபோல் கொழும்பு – தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், இரண்டு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம், இருதரப்பு வணிக செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் பயணிகள் கப்பல் சேவையின் மூலம் சுற்றுலாத்துறைக்கும், சிறிய அளவிலான வணிகத்திற்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் பௌத்த சுற்றுலாப் பயணிகளுக்கு இது சாதகமாக இருக்கும். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் வாழும் சமூகங்களுக்கு வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும்.
2011இல் தூத்துக்குடி – கொழும்பிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது, என்றாலும் அது வணிக ரீதியாக போதிய வருமானத்தை அளிக்காததால், இந்த கப்பல் சேவையை நடத்திய தனியார் நிறுவனம் அதை நிறுத்திக் கொண்டது. தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தை அரசு தரமுயர்த்தி வருகின்றது. இதற்காக 45.27 மில்லியன் டொலரை இந்தியவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சியில் இந்தியாவும் ஒரு பங்காளியாக உள்ளது. இந்த முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளன. இது 700 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 51% பங்கை சிறிலங்கா வைத்திருக்கும். மிகுதியை எவ்வாறு பிரிப்பது என்பது விவாதத்தில் உள்ளது.
யாழிலிருந்து மேற்கொள்ளப்படும் இந்த கப்பல் சேவை, விமான சேவை என்பனவற்றை மேற்கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் அதிகளவான அக்கறை காட்டி வருகின்றது. இதற்கான அடிப்படைக் காரணம் தமிழ் மக்களின் நன்மைக்காக என்பதல்ல, தமது வியாபாரத்திற்கும் சிங்கள இனத்தவரின் போக்குவரத்திற்கு செலவு குறைவான ஒரு வழியை அமைத்துக் கொடுப்பதும் தான் என்பதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் அறிந்து கொள்ள வேண்டும்.
இப்படியான செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ள முடியாது போனதால், தற்போது இவற்றை அவசர அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் இந்த அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டால், விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொள்வர் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருந்து வந்தது. அத்துடன் எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தாலும் சிங்களவர்கள் இந்த போக்குவரத்தை மேற்கொள்ள நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் என்பது அரசிற்கு நன்கு தெரிந்திருந்தது.
இதனாலே தான் இப்போது இவற்றை செய்கின்றதே ஒழிய தமிழ் மக்களின் அக்கறையிலோ அல்லது வடக்கிற்கான அபிவிருத்தியோ என தவறாக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.
வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II) – பாகம் – 4
ஐ-அமெரிக்க பேரரசு: 1992 இருந்து இன்றுவரை
1991 இல் இராக்கின் மேல் குண்டுகள் போட்ட பின் ஐ-அமெரிக்கா பின் வரும் இடங்களில் தனது இராணுவத் தளங்களை அமைத்துக்கொண்டது: சவுதி அரேபியா, குவேய்த், பஹ்ரேயின், கட்டார், ஒமான், மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்.
1999 இல் யுகோசுலோவியா மேல் குண்டுகள் போட்ட பின் ஐ-அமெரிக்கா பின் வரும் இடங்களில் தனது இராணுவத் தளங்களை அமைத்துக்கொண்டது: கொசோவா, அல்பேனியா, பல்கேரியா, மசிடோனியா, ஹங்கேரி, பொஸ்னியா, மற்றும் குரோசியா.
2001 இல் ஆப்கானிஸ்தான் மேல் குண்டுகள் போட்ட பின் ஐ-அமெரிக்கா பின் வரும் இடங்களில் தனது இராணுவத் தளங்களை அமைத்துக்கொண்டது:; ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்ஜிஸ்தான், ஜோர்ஜியா, மற்றும் யெமென்.
2003 இல் இராக்கின் மேல் குண்டுகள் போட்ட பின் ஐ-அமெரிக்கா இராணுவத் தளங்களை அங்கு அமைத்துக்கொண்டது.
இது ஒன்றும் ஒரு நுண்ணிய வெளிநாட்டுக் கொள்கை அல்ல. நிச்சயமாக இது மறைமுக செயற்பாடும் அல்ல. ஐ-அமெரிக்க பேரரசை ஆளும் ஆண்கள் சுலபமாக சங்கடத்துக்கு ஆளாக மாட்டார்கள்.
ஒரு பேரரசு இப்படித்தான் வளரும். ஒவ்வொரு அயலிலும் இராணுவத் தளங்கள். பேரரசுக்கு உண்மையான அல்லது கற்பனையான ஆபத்து வரும் போல இருந்தால் அதை அடக்க அவை தேவை. இரண்டாம் உலக போர் முடிந்து 58 வருடங்களின் பின்னரும் ஐ-அமெரிக்கா ஜெர்மெனியிலும் ஜப்பானிலும் இராணுவத் தளங்களை வைத்திருக்கிறது. கொரிய யுத்தத்திற்கு பின் 50 ஆண்டுகள் கடந்தும் பல ஆயிரம் பேர்கள் கொண்ட ஐ-அமெரிக்க படை தென்கொரியாவில் தரித்திருக்கிறது.
‘நாங்கள் முன்னெப்போதும் எண்ணியிருக்க முடியாத வகையில் இப்போது மத்திய ஆசியாவில் எமது கவனமும் இருப்பும் தக்க வைக்கப்படும்’ என்று ஐ-அமெரிக்க வெளியுறவு செயலாளர் கொலின் பவல் 2002 சொன்னார். அதே ஆண்டில் ‘வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஐ-அமெரிக்க படைகள் உலகின் மூலைமுடுக்குகளில் இப்போது நிற்கின்றன’ என்றது ஐ-அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு. இவ்வாறான கருத்துக்களை ஐ-அமெரிக்கா எவ்வித தயக்கமுமின்றி வெளியிட்டு வருகிறது.
சோவித் குடியரசு உடைந்த காலத்திலிருந்து மக்களை ஏமாற்றுவதற்காக உயர்ந்த நோக்கங்களை பிரகடனப்படுத்தியும் அதன் நிழலில் உலகை ஆளுவதில் தனக்குள்ள விருப்பத்தையும் காட்டி வருகிறது. இவ்வாறான கருத்துக்கள் வெள்ளை மாளிகை, பென்ரகன் போன்ற இடங்களிலிருந்து வரும் கொள்கைப் பிரகடன்களிலும் அரசால் அமைக்கப்பட்ட ஏனைய கொமிசன்களின் அறிக்கைகளிலும் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
இதன் ஆளும் ஆசையின் வெளிப்பாடகவே 2002இல் அது ஒரு பொதுவிவகார குழுவை உலகின் போர் நடக்கும் இடங்களுக்கு சென்று அங்கு ஊடகவியலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி அங்குள்ள ஐ-அமெரிக்க தளபதிகளுக்கு உதவியாக செய்திகளையும் படங்களையும் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பிவைப்பதற்காக நிறுவியது. அதையே தலைமைச்செயலகம் மக்களிடம் பரப்பும். ‘தகவல் மேலாண்மை’ என்று இந்த செயற்பாட்டை விபரித்தார்கள்.
பனிப்போர் முடிந்தது. நீடுழி வாழ்க பனிப்போர்.
21ம் நூற்றாண்டிலும் ஐ-அமெரிக்கா அப்பாவி மக்கள் மீது பயங்கரமான குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இப்படி உலகம் இருக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. 1980 இல் சோவித் குடியரசின் தலைவர் கோபசேவ் மாற்றங்கள் மூலம் அந்த அரசுக்கு ஒரு முடிவு கொண்டுவந்தார். 1989 இல் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது. ஐரோப்பிய மக்கள் இதை மகிழ்வாக கொண்டாடினார்கள். இதை கொண்டாடுவதற்கு இச்சுவர் விழுந்த சில வாரங்களில், ஐ-அமெரிக்கா பனாமா நாட்டின் மீது படை எடுத்தது.
அதே நேரத்தில் ஒரு இடதுசாரி அரசை தோற்கடிப்பதற்காக நிக்கராகுவா தேர்தலில் தலையிட்டது. தொடர்ந்து தெற்கு ஆபிரிக்கா நெல்சன் மன்டேலாவை விடுதலை செய்தது. அந்நாட்டின் நிறவெறி அமைப்புக்கள் உடையத்தொடங்கின. 1990 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னரே ஹய்டி நாட்டில் முதல்முதலாக முறையான தேர்தல் நடைபெற்றது. ஒரு முற்போக்கான ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். பல நன்மைகளும் நடைபெறப்போகிறது போன்ற ஒரு நம்பிக்கை உருவாக தொடங்கியது.
ஆனால், அமெரிக்க ஊடகங்களின் வார்த்தையில் ‘கம்யூனிசத்தின் பிடியிலிருந்து புதிதாக சுதந்திரமடைந்த’ பல்கேரியாவும் அல்பேனியாவும் வாஷிங்டனுக்கு ஏற்பில்லாத அரசுகளை தெரிவு செய்த போது ஐ-அமெரிக்கா தலையிட்டு இரண்டு அரசுகளையும் கவிழ்த்தது. இதே காலத்தில் ஐ-அமெரிக்கா இராக்கின் மீதும் அதன் மக்கள் மீதும் 40 நாட்களுக்கு, இரவும் பகலும் எதுவித காரணமுமின்றி குண்டுகள் போட்டது.
ஒரு புதிய உலகம் உருவாகிறது என்ற நம்பிக்கை அத்துடன் முடிவடைந்தது. ஐ-அமெரிக்க தலைவர்களுக்கு இது போதவில்லை. 1993 இல் சோமாலியா நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றும் எண்ணத்துடன் அதன் மீது தாக்குதல் நடத்தினார்கள். லத்தீன் அமெரிக்காவில் பனிப்போர் ஆரம்பித்தது போல, 1960, 1970, 1980, 1990களிலிலும் தொடர்ந்து, பெரு, மெக்சிகோ, கொலம்பியா மற்றும் இகுவடோர் நாடுகளில் தலையிட்டு அங்கு தோன்றிய போராட்ட அமைப்புக்களை அழித்தார்கள்.
1990களில் ஐ-அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசின் பகுதிகளாக இருந்த, ரசியா, மொங்கோலியா மற்றும் பெஸ்னியா நாடுகளின் தேர்தல்களில் தலையிடுவதை காணக்கூடியதாக இருந்தது. 1999 இல் சேர்பியர், கொசோவா நாடுகளின் மேல் 78 நாட்கள் தொடர்ச்சியாக குண்டுகள் போட்டது ஐ-அமெரிக்கா. சோசலிச யுகோஸ்லோவியா நாட்டை உடைக்கும் அதன் திட்டம் இத்துடன் நிறைவேறியது.
மீண்டும் 2001 இல் நிகராகுவா தேர்தலில் நேரடியாக தலையிட்டு இடதுசாரி அரசு வருவதை தடுத்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அதே ஆண்டு குண்டுகள் போட்டு செப்டம்பர் 11 தாக்குதலில் ஐ-அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களை விட அதிகமானோரை கொலை செய்தது. அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்த வெளிநாட்டு ‘பயங்கரவாதிகள்’, அல்கேய்தா முகாம்களில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தவர்கள் உட்பட, சோவியத் படைகளுக்கு எதிராக பேரிடுவதற்காகவோ அல்லது தலிபானின் உள்நாட்டு போரில் ஈடுபடவோ தான் அங்கு நின்றார்கள். அவர்களுக்கு இது ஒரு சமயப்போர்.
பயங்கரவாதமோ அல்லது ஐ-அமெரிக்காவுக்கு எதிரானதோ அல்ல. ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பல்லாயிரம் மக்களில் ஒருவராவது செப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புள்ளவர்கள் என்று அடையாளப்படுத்தப்படவில்லை. செப்டம்பர் 11 தாக்குதல் செய்தவர்கள் ஒரு அடையாள கட்டடத்தை அதற்கு தெரிவு செய்தார்கள். ஐ-அமெரிக்காவும் பதில் தாக்குதலுக்கு ஒரு அடையாள நாட்டை தெரிவு செய்தார்கள். ஆப்கானிஸ்தான் மீது கொடுமையான தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில், வாஷிங்டன் வெனிசுவேலாவின் தலைவர் ஹூகோ சாவேஸையும் அவரின் பிரபலமான அரசையும் கவிழ்க்கும் திட்டத்திற்கும் உதவி வழங்கினார்கள்.
இதே காலத்தில் கியூபாவின் கழுத்தை நெரித்த படியும், அந்நாட்டின் கொன்டானமோ பேஸை பிடித்துவைத்துக் கொண்டு, அதை ஒரு சாத்தானின் தீவாக மாற்றி, உலகின் பல பாகங்களிலிருந்தும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பிடித்து வந்தவர்களை, சிறுவர்கள் உட்பட, அடைத்து வைக்கும் இடமாக்கியது ஐ-அமெரிக்கா. பனிப்போர் முடிந்து எதிர்பார்த்தபடி சமாதானத்தின் பலன்கள் எதுவும் ஐ-அமெரிக்கர்களுக்கோ உலகின் ஏனைய மக்களுக்கோ கிட்வில்லை.
சோவியத் குடியரசு உடைந்தும், அதனுடன் சேர்ந்திருந்த நாடுகள் விடுதலை பெற்றும், முன்னாள் கம்யூனிச நாடுகள் முதலாளித்துவ நாடுகளாக மாறியும், ஐ-அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை எதுவும் மாறவில்லை.
ஐரோப்பாவை சோவியத் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காக என்று மக்களிடம் சொல்லி உருவாக்கப்பட்ட இராணுவ அமைப்பான நேரோ (NATO), சோவியத் குடியரசு உடைந்த பின்னரும் தொடர்நதது. எங்கேயெல்லாம் ஐ-அமெரிக்காவின் கொள்கை, இரணுவத்தை போகச் சொல்கிறதோ அங்கெல்லாம் அதன் அடியாளாக செல்வதற்கு ஆயத்தமாக இது மேலும் வளர்ந்தது.
இதன் இராணுவம் பால்கன் நாடுகளின் மேல் ஆதிக்கம் செய்வதற்கும், நேரோவின் அங்கத்துவ நாடுகள் ஆப்பானிஸ்தானில் ஐ-அமெரிக்காவுடன் சேர்ந்து கொள்வதை நியாயப்படுத்துவதற்கும் இது வளர்ந்தது. இது முழுவதுமே ஒரு ஏமாற்றுத்தான். சோவியத் குடியரசும், கம்யூனி அச்சுறுத்தல் என்று சொல்லப்பட்டதும் உண்மையான காரணங்கள் அல்ல. உண்மையான எதிரி யாரென்றால், ஐ-அமெரிக்கா பேரரசின் விரிவுக்கு தடையாக இருக்கும் எந்தவொரு அரசோ, அமைப்போ, தனி மனிதரரோ தான். இதற்கு ஐ-அமெரிக்கா எதேதோ பெயர்கள் கொடுக்கும்: கமியூனிஸட், கெட்ட அரசு, போதைபொருள் கடத்துபவர், பயங்கரவாதி இத்தியாதி.
ஐ-அமெரிக்கா உண்மையில் பயங்காரவாதத்தின் எதிரியா?
அரசியல் காரணத்திற்காக ஒரு விமானத்தை தாக்கி 73 பொதுமக்களை கொன்றவரை எப்படி அழைக்கலாம்? ராஜதந்திரிகள் பலரை கொல்ல முயற்சித்தவரை எப்படி அழைக்கலாம்? ஐ-அமெரிக்க துறைகளில் தரித்திருக்கும் கப்பல்களின் மேல் குண்டுகள் எய்பவரை எப்படி அழைக்கலாம்? ஐ-அமெரிக்காவிலும் ஏனைய இடங்களிலும் வணிக கட்டிடங்களிலும் தூதுவராலயங்களிலும் குண்டுகள் வைப்பவரை எப்படி அழைக்கலாம்? அவர் ஐ-அமெரிக்காவிலுள்ள மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டை சேர்ந்த ஒலன்டோ போஸ்ச்.
அவரை அமெரிக்க அரச துறைகள் எதுவும் தொந்தரவு செய்வதில்லை. மியாமி நகரம் ஒரு முறை அவரை மதிக்கும் விதமாக அவர் பெயரில் ஒரு நாளை பிரகடனப்படுத்தி இருந்தது. விமானத்தை தாக்கியதற்காக அவர் வெனிசுவேலாவில் சிறையிடப்பட்டிருந்தார். ஐ-அமெரிக்காவின் அழுத்தங்களினால் விடுதலை செய்யப்பட்டார். அவர் 1988இல் ஐ-அமெரிக்காவுக்கு திரும்பினார். ஐ-அமெரிக்க நீதிமன்றம் அவரை கொடுமையான பயங்கரவாதி என்று கண்டித்து அவரை நாடு கடத்துவதற்கு ஆயத்தமானது. இதை ஜனாதிபதி முதலாவது புஷ் தடுத்தார். அவ்வறானால் புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரானவரா அல்லது தமக்கு நண்பனாக இல்லாத பயங்கரவாதிகளுக்கு மட்டும் எதிரனவரா?
வாஷிங்டனின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை வேறும் பல விடயங்கள் கேள்விக்கு உட்படுத்தும். அவர்கள் ஆதரித்த கொசவோ விடுதலை அமைப்பு பல்கனின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. ஆனால் தாக்கப்பட்டவர்கள் வாஷிங்டனுடன் சேர்ந்து நிற்காதவர்கள். 1980களில் கம்யூனிசத்திற்கு எதிரான வியட்நாம், கம்போடியா மற்றும் லவோஸ் நாட்டை சேர்ந்தவர்கள் ஐ-அமெரிக்காவில் தங்கி தமது சொந்த நாட்டவர்களுக்கு மேல் தாக்குதல் நடத்த ஐ-அமெரிக்க உதவிகள் செய்தது. இவர்கள் தமது நாட்டிற்கு சென்று அத்தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.
ஒரு கேள்வியை நாம் கேட்க வேண்டும். உலகத்தில் எந்த நாட்டில் அதிகமாக பயங்கரவாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். மேலே குறிப்பிட் போஸ்ச் என்பவரை தவிர மேலும் மியாமில் வசிக்கும் பல கஸ்ரோவுக்கு எதிரான கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்களையும் அவர்களை போல கௌதமாலா, எல்சல்வடோர், ஹய்டி, இந்தனேசியா இன்னும் பல நட்பான பயங்கரவாதிகளை ஐ-அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் வாகனம் தடம்புரண்டதில் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டதுடன், 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் லயன்ஸ் கோப்ரல் தரத்தை சேர்ந்தவர் எனவும், வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனையே விபத்துக்கு காரணம் எனவும் சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதற்கு எதிராக அதனை தடுக்கும் போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
1000 பௌத்த விகாரைகள் அமைப்பது என்ற திட்டத்தின் மூலம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணையுடன் ரணில் தலைமையிலான சிறீலங்கா அரசு இந்த நாசகாரத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கு எதிரான போராட்டம் ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கி தமிழ் மக்களின் நிலங்களை மீட்பதற்கு உதவுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் அமைக்கப்பட்ட, புத்த விகாரை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. யுத்தத்தின் பின்னர் வடக்கில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான விகாரையாக இது கருதப்படுகின்றது.
2010ஆம் ஆண்டு, மகிந்த ஆட்சிக் காலத்தில் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் நூற்றுக் கணக்கான சிங்களவர்கள் அத்துமீறி குடியேற்றப்பட்டனர். இதற்கு அமைச்சர் சம்பிக ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி உதவி புரிந்தது.
முதலில் விகாரை அமைப்பதை எதிர்த்த பிரதேச சபை பின்னர் அதற்கான அனுமதியை வழங்கியது. “சம்புத்தி சுமன“ என்ற பெயரில் கட்டப்பட்ட இந்த விகாரை இன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னோடியாக விகாரைக்கான புனித தாது, குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நாவற்குழி நோக்கி புறப்பட்டது. அநுராதபுரம் துபராம சைத்திய விகாரையை நேற்று இரவு பேரணி வந்தடைந்தது.
இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக் கணக்கான பௌத்த பிக்குகள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் 1000 விகாரைகள் அமைக்கும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பௌத்த விகாரைகளின் விரிவாக்கத்தின் மூலம் தமிழர் நிலங்களை விழுங்கி தமிழர் தாயகத்தை இல்லாது செய்யும் சிங்கள அரசின் திட்டத்தை தமிழத் தேசியக் கூட்டமைப்பு செயற்படுத்தி வருவது தமிழ் மக்களிடம் கடுமையான எதிர்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி ரஸ்யாவின் தயாரிப்பான எஸ்-400 எனப்படும் நீண்டதூர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை துருக்கி கொள்வனவு செய்துள்ளது அமெரிக்காவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏவுகணைகளை நாம் தெரிவுசெய்யவில்லை அது எமக்கு அவசியமானது, ஏனெனில் நாம் மிகப்பெரும் ஆபத்துக்களை சந்தித்துள்ளோம் என துருக்கி பாதுகாப்பு அமைச்சர் நேற்று (13) அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தொகுதி ஏவுகணைகளை ஏற்றிவந்த விமானம் வெள்ளிக்கிழமை (12) துருக்கியை வந்தடைந்ததைத் தொடர்ந்து இந்த கருத்தை துருக்கி தெரிவித்துள்ளது.
ரஸ்யாவுடனான ஏவுகணை உடன்பாட்டில் இருந்து வெளியேறும்படியும் அவ்வாறு இல்லையெனில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவரப்போவதாகவும் அமெரிக்கா மிரட்டியபோதும் துருக்கி ஏவுகணைகளை பெற்றுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை துருக்கிக்கு 2 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தவல்லது.
இதனிடையே அமெரிக்கா தனது பெற்றியாட் ஏவுகணைகளை வாங்குப்படி துருக்கிக்கு தற்போது ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால் தாம் முன்னர் கேட்கும்போது அமெரிக்கா மறுப்பு தெரிவித்ததால்தான் ரஸ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கியதாக தெரிவித்துள்ள துருக்கி, ரஸ்யா தமக்கு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கிவருவதாக தெரிவித்துள்ளது.
ஏவுகணைகளை ஏற்றிவந்த நான்காவது ரஸ்ய விமானமும் சனிக்கிழமை துருக்கியை வந்தடைந்துள்ளது.
யாழ். வலி வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் பெளத்த விகாரை ஒன்றை இராணுவத்தினர் பெருமெடுப்பில் கட்டி வருவதாக பொது மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.
முழுமையாக விடுவிக்கப்படாத தையிட்டி பிரதேசத்தில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தமிழ் மக்கள் போராடி வரும் சூழலில் இந்த பெளத்த விகாரை அங்கு கட்டப்படுவது மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் செயலாகும்.
இது தொடர்பாக இவர்கள் பிரதேச சபையிடம் அனுமதி பெற்றார்களா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
இதேவேளை நாவற்குழியில் கட்டப்பட்ட விகாரை இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
இவ்வாறான விகாரைகள் கட்டப்படுவது சிங்கள குடியிருப்புகளை நிறுவுவதற்கான ஆரம்ப செயற்பாடாகவே மக்கள் இதனை கருதுகின்றார்கள். இதை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அல்லது அவர்களின் அனுமதியின்றியே இவை எல்லாம் நடக்கின்றனவா என்பதை மக்கள் இனங்கண்டு கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். இதற்கு ஓர் தீர்க்கமான முடிவை உரியவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பதே மக்களின் அபிப்பிராயமாகும்.