தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நாவற்குழி புத்த விகாரை திறப்பு விழா

யாழ். நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் அமைக்கப்பட்ட, புத்த விகாரை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. யுத்தத்தின் பின்னர் வடக்கில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான விகாரையாக இது கருதப்படுகின்றது.

2010ஆம் ஆண்டு, மகிந்த ஆட்சிக் காலத்தில் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் நூற்றுக் கணக்கான சிங்களவர்கள் அத்துமீறி குடியேற்றப்பட்டனர்.  இதற்கு அமைச்சர் சம்பிக ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி உதவி புரிந்தது.

முதலில் விகாரை அமைப்பதை எதிர்த்த பிரதேச சபை பின்னர் அதற்கான அனுமதியை வழங்கியது. “சம்புத்தி சுமன“ என்ற பெயரில் கட்டப்பட்ட இந்த விகாரை இன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னோடியாக விகாரைக்கான புனித தாது, குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நாவற்குழி நோக்கி புறப்பட்டது. அநுராதபுரம் துபராம சைத்திய விகாரையை நேற்று இரவு பேரணி வந்தடைந்தது.

இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக் கணக்கான பௌத்த பிக்குகள் கலந்து கொள்கின்றனர்.

navatkuli 2 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நாவற்குழி புத்த விகாரை திறப்பு விழாதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் 1000 விகாரைகள் அமைக்கும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பௌத்த விகாரைகளின் விரிவாக்கத்தின் மூலம் தமிழர் நிலங்களை விழுங்கி தமிழர் தாயகத்தை இல்லாது செய்யும் சிங்கள அரசின் திட்டத்தை தமிழத் தேசியக் கூட்டமைப்பு செயற்படுத்தி வருவது தமிழ் மக்களிடம் கடுமையான எதிர்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளது.