அரச தலைவர் தேர்தல் போட்டியில் சிங்கள தேசம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் பதவியை கைப்பற்றுவது தொடர்பில் சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியல்வாதிகளும், கட்சிகளும் மற்றும் உலக வல்லரசுகளும் கடும் போட்டியுடன் களமிறங்கியுள்ளன.

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களை ஏமாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து திட்டத்தை வகுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. அதற்காகவே தற்போது சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணத்தில் உள்ளார்.

ஆனால் தமது வேட்பாளரே வெற்றியீட்டுவார் என தெரிவித்துள்ளார், எதிர்ச்சட்சித் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மகிந்தா ராஜபக்சா.

தற்போதைய அரசின் இயலாமையை மக்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர். மக்கள் மிகவும் அறிவாற்றல் உள்ளவர்கள் எமது அரசு கடந்த முறை என்ன செய்தது என்பதை அறிவார்கள். தற்போதைய அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. நாட்டில் பாதுகாப்பு முற்றாகவே அற்றுப்போயுள்ளது என மகிந்த இன்று (15) ஊடகவியலாளர்களிடம் பேசும் பொது தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஜே.வி.பி எமது உதவிகளை கோரவில்லை, எம்முடன் கலந்துரையாடவில்லை. அவ்வாறு மேற்கொண்டிருந்தால் நாம் ஆதரவு வழங்கியிருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சஜித் பிரேமதாசாவின் மனைவியான ஜலானி பிரேமதாச தான் நாட்டின் முதலாவது பெண்மணியாக வருவேன் எனவும், அதாவது எதிர்கால சிறீலங்கா அரச தலைவரின் மனைவி எனவும் ஹட்டனில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது நேற்று (14) தெரிவித்துள்ளார்.

மகிந்தா அணியில் இருந்து கோத்தபாயா அரச தலைவராக வருவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகின்றது. ஆனால் அமெரிக்கத் தளம் சிறீலங்காவில் அமைவதை மறைமுகமாக தடுக்கும் இந்தியா தனக்கு சார்பான ஒருவரை தேடிவருகின்றது.

அதேசமயம், சிங்கள அரசின் தேர்தலை புறக்கணித்து தமது அரசியல் எதிர்ப்பையும் இன ஒற்றுமையையும் காண்பிப்பதற்கும், சிறீலங்கா அரசுகளின் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை நிறுத்துவதற்கும் தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.