வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் உற்சவம் எதிர்வரும் 06.08.2019அன்று ஆரம்பிக்கப்பட்டு, தேர்த் திருவிழா 29.08.2019 அன்று நடைபெற இருக்கும் நிலையில், தேர் உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது என கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதேவேளை உள்வீதியில் சிறிய தேர் உலாவரும் எனவும் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
கோயிலுக்குள் பிரவேசிக்கும் பக்தர்கள் பாதுகாப்பு பரிசோதனைக்கு அப்பால் அனுமதிக்கப்படுவர் என்றும், கோயில் வளாகத்தில் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளிலுள்ள இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் நல்லூர் திருவிழாவிற்காகவே வருகை தருவதுண்டு. அவர்களுக்கு இம்முறை திருவிழா ஏமாற்றத்தை தருமா? அல்லது இறுதி நேரத்தில் முடிவுகள் மாற்றப்பட்டு தேர் வெளிவீதி உலா வருமா என்பது முருகனுக்கு மட்டுமே தெரியும்.
சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இன் முகநூல் கேள்விக்கான பதிலில், சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதியளிக்கவில்லை. ஐ.தே.க.யை ஆட்சியில் வைத்திருக்கவும் அமெரிக்கா முயற்சிக்கவில்லை. மக்களே அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்த அரசையும் அவர்களே தேர்ந்தெடுக்கப் போகின்றனர். முழுமையான இறைமை கொண்ட சிறிலங்காவை அமெரிக்கா ஆதரிக்கும்
மக்களின் விருப்பத்தை அமெரிக்கா ஆதரிக்கும். எந்த அரசு பதவிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பை அமெரிக்கா மதிக்கின்றது.
MCC எனப்படும் Millennium Challenge Corporation உடன்பாடு என்பது ஒரு நிர்வாக உடன்பாடாகும். இது நுழைவு, வெளியேறும் தேவைகள் தொழில்முறை உரிமங்களை அங்கீகரித்தல் மற்றும் பெறப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உட்பட வழமையான நடைமுறைகளை தரப்படுத்துகின்றது. இதற்காக 40 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி கடனாக அல்லாது அமெரிக்க ஒத்துழைப்பு திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் கொடையாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
கன்னியா விவகாரம் உள்ளிட்ட அவசர பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமிழ் தலைமைகள் கலந்துரையாடியிருந்தனர்.
எனினும் இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கு ஆபத்து வருபாேது அவசரமாக செயற்படும் கூட்டமைப்பு எதிர்பார்த்தது பாேல தமிழ் மக்களின் விவகாரத்தை புறக்கணித்துள்ளது.
இந்த சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகள்:
கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகள் நடைபெறுவது இடை நிறுத்தம்.
32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மனோ சமர்பிப்பார்.
கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதை தடை செய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்த திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்கள பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடை செய்ய வேண்டும்.
முல்லை நீராவியடி கோவில் மற்றும் விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.
கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பாரமரிக்க, தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்த பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகிறார். இந்நிலையில் கிணறுகளை பாரமரிப்பது யாரென தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தை கூட்டுவார்.
மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது தவறானது. பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது தவறு. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் மனோ கணேசன், திகாம்பரம். எம்பீக்கள் திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோரும், தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
அனைத்து தமிழ் எம்பீகளுக்கும் அவசர கூட்டம் தொடர்பில் தகவல் அனுப்பியும் ஏனைய எம்பீக்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை. அரவிந்தகுமார், ராதாகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் ஆகிய எம்பீக்கள் வெளிநாடு சென்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் மனாே கணேசன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.
மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்குரிய சைவ ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலயத்தில் காணப்படும் பொருட்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த வயது எல்லை கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் மக்களின் தொன்மையான சைவ ஆலயங்கள் காணப்படும் பகுதிகளில் சிங்கள அரசின் தனிச் சிங்கள அதிகாரிகளைக் கொண்ட தொல்லியல் திணக்களம் பௌத்த ஆலயங்களை நிறுவி தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுவருவது நாம் அறிந்ததே.
இந்த நிலையில் இந்த ஆலயமும் சிறீலங்கா அரசின் இன அழிப்பில் இருந்து தப்புமா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த 6.07. 2019 அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வின் போது ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நேற்று இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்றுமுறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாக செயலாளர் சி .ராஜா “நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக குரு கந்த ரஜமகா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதங்களில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பௌத்த பிக்கு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
அன்றைய தினம் மேல்நீதிமன்றின் வழக்கு விசாரணையின் போது குறித்த எமது பிள்ளையார் ஆலய பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ பௌத்த பிக்குவோ எவ்வாறான அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பௌத்த பிக்கு எமது ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக்கொடி களை மிகவும் கீழ்த்தரமான முறையில் அடாத்தாக அறுத்து வீதியோரத்தில் எறிந்திருக்கின்றார் அத்தோடு 24 மணித்தியாலமும் இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருக்கின்றார்கள்.
ஆலயம் இருக்கின்ற இடத்திற்கு எதிர்ப்பக்கமாக மிகவும் குறுகிய தூரத்தில் இராணுவக் காவலரண் ஒன்றை அமைத்து 24 மணி நேரமும் இராணுவத்தினர் கடமையில் இருக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் எல்லோரும் கடமையில் இருக்கின்ற போது இந்த இந்த நந்தி கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளது.
அடாத்தாக எமது ஆலய பகுதியில் வந்து தங்கியிருந்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மேலும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றதை பொலிசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் செயற்பாடாகவே இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ள சம்பவத்தை நாம் பார்க்கின்றோம்.” என தெரிவித்தார்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எவரும் கடைசிக் கட்டங்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்திடமே தங்களைக் கையளித்தனர்”என உண்மைக்கு மாறான தகவலை சிறிலங்கா இராணுவத்தின் தகவல் தருதலுக்குப் பொறுப்பான பிரிகேடியர் சுமித் அட்டபத்து, தகவல் அறிதற்கான சட்டத்தின் கீழ் தகவல் கோரிய‘ தமிழ்மிரர்’ ஊடகவியலாளர் பி.நிரோஸ்குமார்க்கு அளித்த பதிலில் தெரிவித் துள்ளார்.
2012 இல் சிறிலங்கா இராணுவ விசாரணை நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறைப்பிடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள, 2013இல் திரு. கோத்தபாய ராஜபக்ச ஊடகவியலாளர்களுக்குப் 11800 தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்ததாக அறிவிக்க, 2016இல் 58வது படைப்பிரிவின் தளபதி சரணடைந்தவர்களின் விபரப் பட்டியல் இராணுவத்திடம் உள்ளதாகவும், 2018இல் ராஜபக்ச அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சரணடைந்தவர்கள் இராணுவப் பாதுகாப்பில் இருக்கையில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவற்றைச் சுட்டிக்காட்டி உண்மைக்கு மாறான தகவல்களை சிறிலங்கா இராணுவத் தகவல்தரு பிரிகேடியர் சுமித் அட்டபத்து வெளியிட்டுள்ளார் என்பதை 12.07.2019 இல் மீள்நினைவுபடுத்தியுள்ள சமுக ஊடகமான“ கொழும்பு டெலிகிராப்”இல் வெளிவந்த கட்டுரையின் கட்டுரையாளர் வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்கள் மற்றொரு தகவலையும் வெளியிட்டுள்ளார். “சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் குறித்த விடயங்களைக் கையாளும் அதிகார பூர்வமான நிறுவனம் மறுவாழ்வுக்கான பொதுமேல் ஆணையாளர் ஆணையமே ஆகும். அவர்களிடமே தயைகூர்ந்து தேவையான விபரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்”என சிறிலங்கா இராணுவத்தின் தகவல்தரு பொறுப்பாளர் பிரிகேடியர் சுமித் அட்டபத்து வழிகாட்டியுள்ளார் என்பதே அத்தகவல். இதன் மூலம் சிறிலங்கா இராணுவமே சிறிலங்கா அரசுமீதான அனைத்துலக யுத்தக் குற்ற விசாரணை ஒன்றே உண்மையை வெளிப்படுத்த முடியும் என்கிற தமிழ் மக்களின் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.
இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்டகாலம் முதலாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்களின் பாதுகாப்பையும் அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் உறுதி செய்வதற்கான முறைமையாக இலங்கைப் பாராளுமன்றதை 1948இல் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் உருவாக்கியது.
இனங்களுக்கோ மதங்களுக்கோ எதிரான சட்டங்கள் இலங்கைப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பிரித்தானியப் பிரிவிக் கவுன்சிலுக்கு மேன் முறையீடு செய்யலாம் என்ற சோல்பரி அரசியலமைப்பின் மாற்றப்பட முடியாததும் உறுதியானதுமான ஏற்பாட்டை இனங்களுக்கும் மதங்களுக்குமான பாதுகாப்புக்கான நிபந்தனையாக ஏற்றே, பிரித்தானிய காலனித்துவ அரசிடம் இழக்கப்பட்ட தங்களின் இலங்கைத் தீவிலான தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையையும் அரசியல் உரிமைகைளயும் மீளப்பெற வேண்டும் என்ற நோக்கில் சிங்களத் தேச இனத்துடன் இணைந்து சுதந்திரத்திற்காகப் போராடிய இலங்கைத் தமிழ்த் தேச இனத்தினர், சிங்களப் பெரும் பான்மையினரின் இலங்கைப் பாராளமன்ற ஒற்றை ஆட்சியில் தங்களின் இறைமையையும் பகிர்ந்துவாழச் சம்மதித்தனர் என்பது வரலாறு.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இலங்கைப் பாராளமன்றத்தின் இறைமை தொடர்ந்தும் பிரித்தானியாவிடமே தொடர்கிறது என இரஸ்யா ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையைத் தனியான உறுப்பு நாடாக அனுமதிக்கக் கூடாதென இரு தடவைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது இரத்து உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி 1956 வரை தடைசெய்தது. இலங்கைத் தமிழர்களுக்குப் பிரித்தானியாவே அதி உச்ச அதிகாரமுள்ள அரசாகத் தொடர்ந்தது என்பதை கோடீஸ்வரன் என்பவர் சிங்களம் மட்டும் சட்டத்தின் கீழ் வேலையில் இருந்துவிலக்கப்பட்டது தொடர்பாகப் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் செய்த மேன் முறையீட்டின் தீர்ப்பும் உறுதி செய்தது.
இதுவே சிங்கள பௌத்த பேரினவாதிகளை தன்னிச்சையாக சோல்பரி அரசியல் அமைப்பை மீறி 22.05.1972இல் இலங்கையை பௌத்தத்திற்கும் சிங்களத்துக்கும் முதன்மை கொடுக்கும் சிறிலங்கா குடியரசாகப் பிரகடனம் செய்து பிரித்தானிய முடிக்குரிய அரசாகத் தாம் தொடர்வதில் இருந்து விலகச் செய்தது.
இலங்கை அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் இறைமையைப் பகிரச் செய்த சோல்பரி அரசியலமைப்பைச் சிங்கள பௌத்த பேரினவாதிகள் வன்முறைப்படுத்தியதன் விளைவாகத் தமிழ் மக்களின் இறைமை தமிழ் மக்களிடமே திரும்பிவிட்ட இயல்பானநிலையில்இலங்கைத் தமிழர்கள் நாடற்ற தேச இனமாக மாற்றப்பட்டதினால் 1977 தேர்தலைத் தமக்கான குடியொப்பமாக அறிவித்துத் தங்களின் தேர்தல் அறிக்கையில் இதனைச் சிறிலங்கா சனநாயக முறையில் ஏற்றுக்கொள்ளவிட்டால் எந்த வழிகளினாலும் அடைவோம் எனவும் உறுதி செய்து அதற்கான மக்கள் தீர்ப்பையும் பெற்று இலங்கைத் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே உறுதிசெய்யும் தங்கள் விருப்பைஉலகுக்குஅறிவித்தனர்.
இதன் பின் விளைவாகவே படைபலம் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பணிவைப் பெறும் சிறிலங்காவின் பௌத்தசிங்கள அரசாங்களின் திட்டமிட்ட முறையிலான தமிழின அழிப்புக்களையும் தமிழ்க்கலாச்சார இன அழிப்புக்களையும் நாளாந்தவாழ்வில் இனங்காணக்கூடிய அச்சங்களையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
இவை தமிழ் மக்களுக்கான பாதுகாப்பையும் அமைதியையும் வளர்ச்சியையும் பேணும் அரசாகத் தங்களைக்குடிகளாக அறிவிக்கும் சிறிலங்கா அரசு செயற்படுவதில்லை என்ற தமிழ் மக்களின் நிலைப்பாட்டை உறுதிசெய்வதினால் தாங்கள் உலகின் குடிகளாகவும் உள்ளனர் என்பதன் அடிப்படையில் தங்களின் வெளியகசுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி அனைத்துலக நாடுகளையும் உலக அமைப்புக்களையும் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் பிரிக்கப்பட முடியாத பிறப்பு உரிமையை நிலைநாட்ட உதவும் படி கேட்டுவருகின்றனர்.
இதன் முக்கியத்துவத்தை 2009 ஆண்டு முதல் இன்று வரை பத்தாண்டுகளாக இலங்கைத் தீவில் அதன் தொன்மையும் தொடர்ச்சியுமான குடிகளாகிய தமிழ் மக்களுக்கு நடாத்தப்பட்ட இன அழிப்புக்கள் தொடர்பான விசாரணைகளோ அல்லது மறுவாழ்வு முயற்சிகளோ எதுவும் தமிழ் மக்களுக்கான நீதியையோ சமத்துவத்தை யோசு தந்திரத்தையோ உறுதிப்படுத்தக் கூடிய முறையில் முன்னெடுக்கப்படாமை மீளவும் உறுதி செய்கிறது.
இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமே இவற்றுக்கான பொறுப்புக்கூறல் வேண்டுமென அதன் இராணுவத்தின் தகவல் தரு இராணுவ அதிகாரியே உறுதிப்படுத்தியுள்ளார். இது தங்களின் உள்ளக சுயநிர்ண உரிமை சிறிலங்காஅரசாங்கத்தால் தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் மறுக்கப்பட்டு வருகிறது என்ற இலங்கைத் தமிழ் மக்களின் கூற்றைத் தெளிவாக்குகிறது.
இந்நிலையில் உலகெங்கும் புலம்பெயர் தமிழர்களாகவும் உலகின் பல நாடுகளின் சிறுபான்மையினமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்கள் தாயக மக்களின் உண்மையை வெளிப்படுத்தும் குரலாக ஒருமைப்பாட்டுடனும் உறுதியுடனும் காலந்தாழ்த்தாது அந்த அந்தநாட்டுச் சட்டங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பச் செயற்படவேண்டிய அதிமுக்கியமான தேவையை இலங்கை இராணுவத்தின் தாம் சரணடைந்தவர்களுக்குப் பொறுப்பில்லையென்ற கை கழுவல் அறிவிப்பு முக்கியத் துவப்படுத்துகிறது.
சிறிலங்கா அரசாங்க மேசரணடைந்தவர்களுக்குப் பொறுப்பு என்பதை அதன் இராணுவமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அனைத்துலக விசாரணை மூலமே தமிழ் மக்களுக்கான நீதியும் மறுவாழ்வும் சாத்தியம் என்பதை உறுதிப்படுத்தி உலகநாடுகளின் அக்கறையின்மையே தமிழ் மக்களுக்கான நீதி கடந்தபத்தாண்டுகளாகக் கிடைக்காமைக்கான மூலகாரணம் என்பதையும் உறுதியுடனும் பலமாகவும் எடுத்துச் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்புபுலம் பெயர் தமிழ் மக்களாகவும் உலகின் பலநாடுகளின் சிறுபான்மையினமாக அந்த அந்த நாட்டின் அரசியலில் பங்கேற்கும் உரிமையுள்ளவர்களாகவும் உள்ள ஈழத்தமிழர்களின் தலையாய வரலாற்றுக்கடமையாகிறது.
இலங்கை அரசாங்கத்தையும் உலகநாடுகளையும் உலக அமைப்புக்களையும் பொறுப்புக்கூறவைத்தல் புலம்பெயர் தமிழர்களின் ஒருங்கிணைத்த முயற்சிகளிலேயே தங்கியுள்ளது. காணமல் போனவர்கள் என்ற நிலையில் அவர்களைத் தேடித் தவித்துத் தினம் வாடித் துடித்து விடாது போராட்டங்கள் நடாத்திவரும் தாயக உறவுக ளுக்கு ஆறுதலளிக்கும் சத்திபுலம்பெயர் தமிழர்களிடமே உள்ளது என்பதை ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் உணர்ந்து செயற்பட வேண்டியநேரமிது.
சிறீலங்காவில் உள்ள பௌத்த ஆலயங்களில் பணியில் உள்ள பௌத்த துறவிகளில் 90 விகிதமானவர்கள் பிரதம துறவிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டுவருவதாக சிறீலங்கா அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.
ஆனால் பௌத்த மகாசங்கத்தினரின் மனம் நோகும்படி பேச வேண்டாம் என ரணில் விக்கிரமசிங்கா ராமநாயக்காவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதும் பிரதம பௌத்த துறவிகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய துறவிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணத்தை தான் ரணிலிடம் காண்பித்ததாகவும், அவர் அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் இவ்வாறு தவறாக நடக்கும் துறவிகளிடம் மன்னிப்புக் கேட்கப்பேவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்காவில் உள்ள பௌத்த துறவிகள் அதிக வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாகவும், இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் இனஅழிப்பு நடவடிக்கைகளில் அவர்களே முன்னனியில் இருப்பதாகவும் கொழும்பைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரசியலில் அதிக செல்வாக்குகளை செலுத்திவரும் துறவிகள் மத போதனைகளை விட அரசியல் மற்றும் ஏனைய இனங்கள் மீதான வன்முறைகளையே அதிகம் தூண்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் அடுத்த ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா களனியில் ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்
புலனாய்வு அதிகாரிகளின் புகைப்படங்கள் வெளியிடாமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பயங்கரவாத தாக்குதுல்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றால், அது தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
சாட்சியத்திற்காக பிரதமர், ஜனாதிபதி மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் சாட்சியங்கள் மிகவும் பெறுமதியானவை. சாட்சியமளித்த பின்னர் மீண்டும் தெரிவுக் குழுவிற்கு சிலர் அழைக்கப்படவுள்ளனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கன்னியாவில் சிங்கள அரசு மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் பெருமளவில் நேற்று (16) மேற்கொண்ட போராட்டத்தை தடுப்பதற்கு சிங்களக் காடையர்களும் சிங்கள பௌத்த துறவிகளும் வன்முறைகளைத் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் தமிழ் மக்கள் மீது கொதி நீரையும் ஊற்றியிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறீலங்காவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறசேனவை அமைச்சர் மனோ கணேசன் தொடர்பு கொண்டபோது கன்னியாவில் விகாரை அமைக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்புச் செயலாளருக்கு தான் கூறவில்லை என மைத்திரி தெரிவித்துள்ளார்.
இந்த விவாரம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு மைத்திரிபால இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து நாளை (18) காலை அரச தலைவர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்றிற்கு வருமாறு மனோ கணேசன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மனோவின் இந்த அழைப்பை ஏற்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஒற்றுமையை காண்பிப்பார்களா? என்பது தான் தற்போது உள்ள முக்கிய கேள்வி?
ஏனெனில் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றிவரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரட்டக்களத்தில் மக்களுடன் நின்று போராடுவது போன்று நாடகம் ஆடிவிட்டு பின்னர் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக சந்திப்புக்களை தவிர்ப்பது வழமையான செயற்பாடுகள் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கன்னியா விவகாரம் தொடர்பில் இறுதியான முடிவு எட்டப்படும்வரையில் விகாரை கட்டும் பணிகளுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என திருமலைமாவட்ட செயலாளர் புஸ்பாகுமாராவை பணித்துள்ளதாக மனோ மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியான, திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் என்பவர் பிணை கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
2008 ஜனவரி கைது செய்யப்பட்ட கனகசபை தேவதாசன் மீது கொழும்பு நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையையும் மற்றைய வழக்கில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிகள் இன்றி தாமே வாதாடியதாகவும், அதனால் போதுமான சாட்சியங்களைத் திரட்ட முடியாது போனதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி கூறியிருந்தார்.