Home Blog Page 2727

ஐ.நா சிறப்பு அறிக்கையாளரை சந்திக்க நீதித்துறையினருக்கு தடை

சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளரை, தலைமை நீதியரசர் உட்பட நீதித்துறை அதிகாரிகள்  சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசிவூல், 2011இல் வெலிக்கடை சிறைச்சாலையில் றொசான் சானக கொலை செய்யப்பட்டமை மற்றும் 2012இல் நிகழ்ந்த ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார் என மகிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஐ.நா. அறிக்கையாளர் நீதித்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவது, நீதித்துறையில் தலையீடு செய்யும் முயற்சி என்றும், இந்தச் சந்திப்பை நடக்காமல் தடுக்குமாறும் அவர் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை நீதி அதிகாரமற்ற நபர் ஒருவர் நீதித்துறையில் தலையீடு செய்ய அனுமதிப்பது, அரசியலமைப்பின் 111சி முதலாவது பிரிவை மீறும் செயல் என தினேஸ் குணவர்த்தனவும் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் தலைமை நீதியரசர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளை, ஐ.நா. அறிக்கையாளருடன் சந்திப்பிற்கு ஒழுங்கு செய்யுமாறு நீதி அமைச்சின் செயலாளரிடம், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அகமட் ஜவாட் கோரியுள்ளார்.

தமிழ் ஈழத்தின் சகோதர சகோதரிகளுக்கு காட்டவேண்டிய குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வைக் கூட இந்த அவை காட்டவில்லை – வா. மைத்ரேயன்

2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் ஈழத்தின் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள், எனது தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இந்த அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவது மௌன அஞ்சலி செலுத்துவது என்பதை விட அது பற்றி இந்த அவை கவனத்தில் கூட எடுத்துக்கொள்ளவில்லை.

இது எனது நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக தைத்துக்கொண்டே இருக்கும். என அ இஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் அவர்கள் மாநிலங்களவையில் ஆற்றிய பிரிவு உபசாரப் பேச்சில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

அவைத்தலைவர் அவர்களே வணக்கம்.

மாநிலங்களவையில் பதினான்கரை ஆண்டு கால நீண்ட சேவைக்குப் பிறகு நான் ஓய்வுபெறுகிறேன். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை இது எனது அஸ்தமன நேரம். இந்த வேளையில் என் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு மூன்று பதவிக்காலங்களுக்கு என்னை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியறிதலை பதிவு செய்ய விரும்புகிறேன். உண்மையில், மாநிலங்களவைக்கு அ.இ.அதிமுக சார்பாக மூன்று பதவிக்காலங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு எம்பி என்ற தனிச் சிறப்பை அவர் எனக்கு வழங்கியிருக்கிறார்.

அவர் மீது என்றைக்கும் மாறாத எனது விசுவாசம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
இந்த அவையில் எப்போதும் என்னை சகோதரராகக் கருதி வழிநடத்திய ஒருவருக்கு நான் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கவேண்டும். அவர் தான் திரு அருண் ஜெய்ட்லி. அவர் விரைவாக உடல் நலம் தேறி என்னைப்போல் மற்றவர்களுக்கு எதிர்காலத்தில் வழிநடத்தவேண்டும் என்று மனதாற விரும்புகிறேன்.

என நீண்ட கால நண்பரும் இந்தியப் பிரதமருமான திரு நரேந்திர மோதி அவர்களை நான் மறக்க இயலாது. 90 களில் இருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. பல ஆண்டுகளாக அவருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் இடையே விசுவாசமான தூதராக செயல்பட்டு வந்திருக்கிறேன். என் மீது தனிப்பட்ட அன்பை வைத்திருப்பதற்காக அவருக்கு நான் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த பதினான்கரை ஆண்டுகளில் நான் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். POTA மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டம், கூச்சல் குழப்பத்துக்கு இடையே மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை, அவர் இந்த அவையின் முன் ஆஜராக அழைக்கப்பட்டது, லோக்பால் மசோதா குறித்து நள்ளிரவு வரை நீண்ட விவாதத்துக்குப் பிறகு திடீரென அவை ஒத்திவைக்கப்பட்டது,

சர்ச்சைக்குரிய இந்தியா-அமெரிக்கா இடையேயான அனுசக்தி ஒப்பந்தம் என இந்தப் பட்டியல் நீள்கிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, தமிழக மீனவர்களின் நடனுக்காக, ஈழத்தமிழர்களின் நிலை ஆகியவை குறித்து திரும்பத்திரும்ப இத்தனை ஆண்டுகளில் இந்த அவையில் நான் உணர்வுபூர்வமாக குரல்கொடுத்து போராடியிருக்கிறேன்.

ஒரேயொரு விஷயம் மட்டும் எப்போதும் என் நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது. இந்த அவை பல நேரங்களில் பலருக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தது, இறந்து போன மக்களுக்கு இரங்கல் தீர்மானங்களை நிறைவேற்றி, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் மௌன அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் ஈழத்தின் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள், எனது தொப்புள்கொடி உறவுகள், இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, இந்த அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவது மௌன அஞ்சலி செலுத்துவது என்பதை விட அது பற்றி இந்த அவை கவனத்தில் கூட எடுத்துக்கொள்ளவில்லை.

இது எனது நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக தைத்துக்கொண்டே இருக்கும். எனது தமிழ் ஈழத்தின் சகோதர சகோதரிகளுக்கு காட்டவேண்டிய குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வைக் கூட இந்த அவை காட்டவில்லை. எனது வாழ்வின் முடிவு ஏற்பட்டாலும் கூட எந்தவித இரங்கல் தீர்மானமோ மௌன அஞ்சலியோ இந்த அவையில் எனக்கு வேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

எனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் வேளையில் என் மீது மாறா அன்பு காட்டிய இந்திய அரசியலில் பழுத்த அனுபவசாலியான மாநிலங்களவைத் தலைவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் மீது ஆழமான அன்பையும் பாசத்தையும் செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், இந்த அவையில் எனது கட்சித் தலைவர் திரு நவநீதகிருஷ்ணன், மற்றும் இதர அதிமுக எம்பிகளுக்கு என நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என அன்புக்கு பாத்திரமான நண்பர்கள்- ஜெய்ராம் ரமேஷ், அலுவாலியா, நெராஷ் அகர்வால், ராம்கோபால் யாதவ், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி, டி. ராஜா, டி.கே ரங்கராஜன் மற்றும் பலருக்கு என் நன்றி. மாநிலங்களவை தலைமைச் செயலர் மற்றும் செயலக ஊழியர்களுக்கும் நான் நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தின் முன்னோடி பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது நாடாளுமன்ற பணிகளை இந்த அவையில் இருந்து தான் தொடங்கினார். பின்னர் அவர் மாநில அரசியலுக்குச் சென்றார். எனது இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 1984 முதல் 1989 வரை இந்த அவையில் ஒரு உறுப்பினராக தனது பணிகளைத் தொடங்கினார். பின்னர் தமிழ்நாட்டு அரசியல் நுழைந்து மாநிலத்தின் மிகப் பிரபலமான தலைவராக உருவெடுத்தார்.

மாநிலங்களவையில் எனது மிக நீண்ட கால பணி அனுபவத்துக்குப் பிறகு மாநில அரசியலுக்கு நான் திரும்பவேண்டிய காலகட்டம் இது. நாடாளுமன்றத்தில் இது எனது அஸ்தமனக் காலம் என்பது உண்மை தான்; ஆனால் மாநில அரசியலில் எனது சூரியோதயக் காலம் என்று சொல்லவேண்டும்.

எனது குரல் இந்த அவையில் ஒலித்த பல நினைவுகூரத்தக்க நிகழ்வுகள் உள்ளன.

எனது பெயர் மறைந்துபோகலாம்; எனது முகம் மாறக்கூடும், என்னை நீங்கள் நினைவுகொண்டால் எனது குரல் மட்டுமே அடையாளமாக இருக்கும்.

நன்றி.

இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும் – சிறிதரன்

இந்து மதத்தையும் தமிழர்களையும் இலங்கையில் அழிக்கும் சூழ்ச்சி இடம் பெற்று வருகின்றது.இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்
இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்இ “திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப்பிரதேசம் இன்று அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மக்களுக்கு கிருத்தியங்களைச் செய்ய
முடியாதுள்ளது. கடந்த 16ஆம் திகதி ஆதீனத்துக்கான உரிமையாளர் ரமணியம்மாள் மற்றும்அகத்தியர் ஆகியோர் அங்கு சென்றபோது அவர்கள் மீது காடையளர்கள் சுடுநீரை ஊற்றியுள்ளனர்.

ஜுலை கலவரம் இடம்பெற்று 36 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில்
இவ்வாறான சம்பவங்கள் இன்னமும் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனைக்குரியதாகும்.நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இன்னும் எந்தளவு தூரம் பயணிக்க
வேண்டியுள்ளது என்பதை முதலில் சிங்கள சமூகத் தினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கல்முனைவடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்ன தேரர்
போன்றவர்கள்இ ஏன் தமது மதவெறிகளைத் தூக்கி வைத்துவிட்டு நியாயபூர்வமாகஇந்துக்களுக்காக குரல்கொடுக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பிரயோகிப்பாளர்கள்- தமிழ்தேசிய மக்கள் முன்ணி

சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையினை கட்டவிழ்த்து விட்டு வருகின்றார்கள் இவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அன்று யூலைப்படுகொலை தொடக்கம் இன்று வடக்கு கிழக்கில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு வரை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கையாள்பவர்களின் கையில்தான் அரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்தேசிய மக்கள் முன்ணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கருப்பு ஜூலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் நினைவுரையினை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்கள் நிகழ்தியுள்ளார்.

சீனா – ரஷ்யா கூட்டு விமான ரோந்து

முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக விமான ரோந்து நடவடிக்கையை, சண்டை விமானங்களின் துணையோடு ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் மேற்கொண்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதன் போது நான்கு குண்டு வீசும் விமானங்களும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதை எதிர்த்து பதிலுக்கு தென்கொரியா தமது ஜெட் விமானங்களை அனுப்பியதாக அறிவித்துள்ளது

இச்சம்பவம் தொடர்பாக ரஷ்யா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளையும் ஜப்பான் கண்டித்துள்ளது.

இந்த சம்பவம் டோக்டோ/டகேஷிமா தீவுகளுக்கு மேல் நடந்துள்ளது. இவை தென்கொரிய ஆக்கிரமிப்பில் உள்ள தீவுகளாகும் .இருந்தும் இவற்றிற்கு ஜப்பான் உரிமை கோரி வருகின்றது.

கொரிய வான் பாதுகாப்பு  மண்டலத்தில் செவ்வாய்கிழமை காலை  ரஷ்ய மற்றும் சீன விமானங்கள் உள்நுழைந்துள்ளன.

இந்தப் பகுதியில் சமீப ஆண்டுகளாக ரஷ்ய, சீன குண்டு வீசும் விமானங்களும், உளவு விமானங்களும் அவ்வப்போது பறந்துள்ளன.

இன்று கன்னியா, நாளை கோணேஸ்வரர் ஆலயம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை(நேர்காணல்) – அகத்திய அடிகளார்

தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் இலக்கு மின்னிதழுக்கு நெஞ்சுருகி பேட்டி

கன்னியா பிள்ளையார் ஆலயம் உட்பட திருமலையில் பாரம்பரியங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் மத சுதந்திரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாக கன்னியா தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் தெரிவித்தார். அவர் வழங்கிய முழு பேட்டி வருமாறு…

கேள்வி:- கன்னியாவின் புராதன இந்து அடையாளங்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப் படுவதன் பின்னணி என்ன?

பதில்:- கன்னியாவின் வரலாறு நெடியது. சுமார் 1000 வருடங்களாக அங்கு தமிழர்கள் தமது மூதாதையர்களிற்கு பிதிர்க்கடன்களை செய்து வருகிறார்கள் என நம்பப்படுகிறது. ஒல்லாந்தர் கால குறிப்புக்களிலும் அது உள்ளது. இராவணன் தனது தாய்க்கு பிதிர்க்கடன் நிறைவேற்றிய இடமென்ற ஐதீகமும் உள்ளது. இந்த பகுதிக்கு சமீபமாக கி.பி 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராஜராஜ பெரும்பள்ளியென்ற (வெல்கம் விகாரை) தமிழ் பௌத்த பல்கலைகழகமும் அமைந்துள்ளது. இன்று உலகிலேயே எஞ்சியுள்ள ஒரேயரு தமிழ் பௌத்த பல்கலைகழகம் அதுதான். கி.பி 10ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அதை புனரமைத்து அதற்கு பல கல்வெட்டுக்களை பரிசளித்திருந்தான். இதன் மூலம் அந்த பகுதியில் தமிழ் சைவர்களும், தமிழ் பௌத்தர்களும் பண்டைக்காலத்திலேயே வாழ்ந்திருந்தார்கள் என்பது உறுதியாகிறது.  எனினும், வாழ்ந்தவர் அனைவரும் தமிழரே.

இந்நிலையில், திருகோணமலையிலிருந்த ஆங்கிலேய அதிகாரியருவர் திடீரென நோய்வாய்ப்பட்டிருந்தார். பல சிகிச்சை செய்தும் அவர் குணமாகவில்லை. இறுதியாக கன்னியா வெந்நீர் ஊற்றில் நீராடி, அருகிலிருந்த பிள்ளையார் ஆலயத்தில் வழிபட்டு குணமடைந்தார். அப்போது அந்த ஆலயத்தை நிர்வகித்து வந்தவரிடம், வெந்நீர் ஊற்று உள்ளிட்ட 8 ஏக்கர் காணியை ஆங்கிலேய அதிகாரி வழங்கினார். அவர்களின் பரம்பரையே அதை நிர்வகித்து வந்தது. பின்னர், தொல்லியல் பிரதேசமாக அது பிரகடனப்படுத்தப்பட்டு, அரசு அதை பொறுப்பேற்றுள்ளது. எனினும், அதற்கான மாற்று காணி அந்த பெண்மணிக்கு வழங்கப்படவில்லை.

இதேவேளை, சுனாமியின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணி நிதியில், கன்னியா பிள்ளையார் ஆலயத்தையும் புனரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஆலயம் உடைக்கப்பட்டது. பின்னர் மீள் கட்டுமானப் பணி ஆரம்பிக்கும் சமயத்தில், தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தொல்லியல் துறையின் பிரதேசத்தில் கட்டுமானம் செய்யமுடியாது என அவர் கோரினார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, பிள்ளையார் ஆலய பணிக்கு தடை உத்தரவிட்டது. இதனால் இப்பொழுது அங்கு பிள்ளையார் ஆலயம் இல்லை. ஒரு பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அந்தப்பீடம் முதலில் உடைக்கப்பட்டது. அதற்கு எதிராக நாம் போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில் அது தடுக்கப்பட்டபோதும் பின்னர் சூட்சுமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கேள்வி:- கடந்த 16ஆம் திகதி ஒன்றிணைந்த சனநாயகப் போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்தமைக்கான காரணம் என்ன?

பதில்:- அண்மையில் கன்னியா பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் பௌத்த தாதுகோபுரம் ஒன்று அமைக்கும் முயற்சி வில்கம் விகாரை விஹாராதிபதி அமபிட்டிய சீல வன்ச திஸ்ஸ ஸ்திர தேரரால் முன்னெடுக்கப்பட்டது.  இது பற்றிய முறைப்பாடுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டதோடு ஜுன் மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கணைப்புக்குழு கூட்டத்தில்  பூர்வீக பிள்ளையார் ஆலய இடத்தில் அதை உடைத்து பௌத்த தாது கோபுரம் அமைக்கப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்று தீர்மானம் மெற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேரர் கன்னியாவில் தாது கோபுரம் அமைக்கும் முயற்சியை தமிழ் அரசியல்வாதி ஒருவர் தலையிட்டு தடுத்து வைத்துள்ளார். இது பௌத்த சாசனத்துக்கு எதிரான நடவடிக்கையென சனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் முறைப்பாடு செய்திருந்தார்.  இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு சனாதிபதி காரியாலயம் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்நாயகம் பேராசிரியர் மண்டாவெலவுக்கு உடனடியாக தாதுகோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி  ஆணையன்றை பிறப்பித்திருந்தது. கடந்த ஜுன் மாதம் 24 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் சனாதிபதியின் மேலதிக செயலாளரால் திருகோணமலை அரச அதிபர் புஸ்மகுமாரவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து தாது கோபுரத்தை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான  ஏற்பாடுகளை திருமலை அரச அதிபர் செய்திருந்தார். இதனாலேயே நாம் போராடுவதற்கு தீர்மானித்திருந்தோம்.

கேள்வி:- சனநாயக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது நடந்தது என்ன?

பதில்:- கவனயீர்ப்பு போராட்டம் நடத்துவதற்கான முன் அனுமதி காவல்துறையினரிடம் பெறப்பட்டிருந்தது. அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன, மதம் கடந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்திருந்தனர். திருவாசகத்தை ஓதிய வண்ணம் ஆலயத்துக்கு செல்ல முயன்றோம். கன்னியா பிரதான வீதியில் பெருந்தொகையான இராணுவம், காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆலய வளாகத்துக்குள் வருவதற்கு முன்பே நூற்றுக்கணக்கான காடையர்கள் வெந்நீரூற்று வளாகத்துக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.  அவர்களுக்கு ஆதரவளித்து பிக்குமார்கள் குழுவும் இருந்தது. நாங்கள் அமைதியான முறையில் ஆலயத்தை தரிசிக்க செல்கிறோமென வழி மறித்து நின்ற காவல்துறையினரிடம் கூறினோம். அவர்கள் ஆலயத்துக்கு செல்வதற்கோ வழிபடுவதற்கோ முடியாது நீதிமன்றத்தினால் தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதெனக் கூறி தம்மிடமிருந்த தடையுத்தரவு கட்டளையை வாசித்து காட்டினார்கள். அது சிங்களத்திலிருந்த காரணத்தினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என இளைஞர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

மீண்டும் கன்னியா நீர் கிணற்றுக்கு அருகிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை வழிபடவும் அவ்வாலயம் இருந்த இடத்தில் சேதம் விளைவிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறியவும் அனுமதி வழங்கும்படி காவல்துறையினரிடம் கோரினோம். நானும் கன்னியா பிள்ளையார் ஆலய தர்ம கர்த்தா கோகிலரமணி அம்மாவும் இரண்டு காவல்துறையினரின் உதவியுடன் பிரதான வீதியிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள நீரூற்றுப் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டோம். ஏராளமான காடையர்கள் குவிந்து நின்றிருந்தார்கள் நாங்கள் சென்ற வண்டியை விட்டு இறங்கிய போது அங்கு நின்ற சிங்கள காடையர்கள் அருவருக்கத்தக்க தகாத வார்த்தைகளால் எங்களை பேசியதோடு உள்ளே இறங்கினால் கொல்வோம் என்று கடுமையான தொனியில் எங்களை எச்சரித்து எம்மீது சுடுதேநீரை ஊற்றினார்கள். ஆனால்  எம்மை அழைத்து சென்ற காவல்துறையினர் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்ததோடு எம்மை திருப்பியும் அழைத்து வந்தனர்.

கேள்வி:- இதனையடுத்து உங்கள் தரப்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

பதில்:- பௌத்த  மேலாதிக்கம் நிறைந்த இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு அரசியல் விமோசனமுமில்லை, ஆன்மீக சுதந்திரமும் இல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக கன்னியா காணப்படுகின்றது. இதனைக் கவனத்தில் கொண்டு நாம்  இலங்கையில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ளோம். அது மட்டுமன்றி வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.  இதனைவிடவும் நாம் பல தரப்பினருடனும் கலந்துரையாடி  எடுத்துரைத்துள்ளோம். இந்த விடயம் குறுகிய மற்றும் நீண்டகாலத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றியும் பல தளங்களில் வெளிப்படுத்தியுள்ளோம்.

ஆனால் நடந்தேறியது ஒன்றுமேயில்லை. நாங்கள் சிங்கள மக்களுக்கோ பௌத்தத்துக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் எமக்கு எதிரான ஆக்கிர மிப்புக்களும் அடாவடித்தனங்களும் எங்களை கதிகலங்க வைக்கிறது. இது ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படாத பட்சத்தில் நல்லிணக்கம் புரிந்துணர்வு சமய பாதுகாப்பு என்பது வராமலே போய்விடும்.

கேள்வி:-திருமலையில் தமிழர்களின் பூர்விகங்கள் முற்றாக பறிபோகும் ஆபத்துள்ளதாக கூறப் படுகின்றதே?

பதில்:- ஆம், எங்கள் அரசியல் தலைமை களின் கையாலாகத்தன்மையின் காரணமாகவே படிப்படியாக பூர்வீக இடங்களையும் வரலாற்றுப் பெருமை கொண்ட இடங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம். ஏலவே திருகோண மலை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் பறிபோய் விட்டன. இன்னும் பல கேந்திர இடங்கள் பறிக்கப்படும் நிலையிலேயே காணப்படுகிறன. தென்னவன்மரவடி, இங்குள்ள கந்தசாமி மலை, பிள்ளையார்  ஆலயம் என ஆக்கிரமிப்பு பட்டியல் நீடிக்கின்றது. கன்னியா மலை அடிவாரத்தில் பௌத்த மடமொன்று நிர்மாணிக்கப்பட்டு விகாரை கட்டுவதற்கரிய கைங்கரியங்கள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கள பௌத்த அரசானது தமிழர் வரலாற்றை மஹாவம்ச வரலாறாக திரிபு படுத்த முயற்சிக்கின்றது. வரலாற்றை  திரிபு படுத்துவது மாற்றுவது என்பதை அரசும் தொல் பொருள் திணைக்களமும் வடகிழக்கிலுள்ள பல திணைக்களங்களின் ஊடாக தனது திட்ட மிடல்களை முன்னெடுக்கின்றது.

வட கிழக்கு எங்கும்  மிகப்பாரிய அளவில் சிங்கள பௌத்த மயமாக்கல்  தாராளமாக இடம் பெறுகிறது. குறிப்பாக 2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பௌத்த மயமாக்கல் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. தமிழர் பிரதேசத்தை முழுமையாக பௌத்த பூமியாக மாற்றும் உள்நோக்குடனேயே அனைத்தும் திட்டமிடப்படுகின்றனவா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இன்று பெரும் கவலையாக எழுகின்றது இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் தலைமைகளோ அல்லது சிவில் அமைப்புக்களோ அதிக கவனம் செலுத்தவில்லை என்பதை நினைக்க மிகவும் வேதனையளிக்கிறது. இன்று கன்னியாபிள்ளையார் ஆலயம். நாளை கோணேஸ்வரர் ஆலயமாக மாறும் நிலை உருவாகினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அப்போதும் நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போகின்றோம் ஐ.நா மனித உரிமை சாசனத்தில் ஒரு மனிதனின் வழிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான உரிமைகள் வலியறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப எமது பண்பாட்டு அடையாள உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் சனநாயக வழியில் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வெரவேண்டும்.

மும்முனைப் போட்டியில் ஐ.தே.க.விட்டுக்கொடுக்க மறுக்கும் ரணில் – பூமிகன்

சனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் வர முன்னரே இரு அணிகளுக்குள்ளும் தமது வேட்பாளர் யார் என்ற சர்ச்சை சூடுபிடித்துள்ளது. மகிந்த ராஜபக்‌சவின் மொட்டு அணி எடுக்கப்போகும் தீர்மானம்தான் ஐ.தே.க.விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மொட்டு அணியில் கோத்தாவின் பெயர்தான் முன்னணியில் உள்ளது. ஆனால், ஐ.தே.க.வில் மூன்று பெயர்களும் சமபலத்துடன் இருக்கிறது.

கோத்தாவை இறக்குவதென மொட்டு முடிவெடுத்தால், சஜித்தைப் போட்டிக்கு இறக்கினால்தான் வெல்ல முடியும் என்ற கருத்து ஐ.தே.க.வில் உள்ளது. அதேவேளையில், புதிய குழப்பம் ஒன்றும் ஐதே.க.வில்  ஆரம்பமாகியிருக் கின்றது. மொட்டு அணி தமது வேட்பாளரை அறிவிக்கும் வரையில் பார்த்துக்கொண்டிருக்காமல் தமது வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஐ.தே.க. உறுப்பினர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

ஐ.தே.க. மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் கட்சிகள் இணைந்த புதிய முன்னணி ஒன்றை எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்போகின்றார்கள். சனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு தமது கூட்டணிக்கு புதிய பெயர், புதிய சின்னம் என புதிய தோற்றம் ஒன்றைக்கொடுப்பதற்கு ஐ.தே.க. தலைமை திட்டமிடுகின்றது. அதனுடன் சனாதிபதி வேட்பாளர் யார் என்ற விபரமும் அறிவிக்கப்பட்டு, தேர்தலை நோக்கிய செயற்பாடுகள் முடுக்கிவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், ஐ.தே.க. வேட்பாளர் யார் என்பதற்குத்தான் இன்னமும் பதில் கிடைக்கவில்லை.

ஐ.தே.க. சார்பாக களமிறங்குபவர் சிறுபான்மையினருடைய ஆதரவைப் பெறக் கூடியவராக இருக்கவேண்டும் என்ற கருத்து உள்ளது. சிறுபான்மையினருடைய ஆதரவைப் பெறக் கூடியவரென்றால் ரணில் அல்லது கருதான் இறங்கவேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது.

இதில் கருவுக்குள்ள ஒரேயரு மைனஸ் என்னவென்றால், அவர் சில காலம் மகிந்தவுடன் இணைந்து அமைச்சர் பதவியையும் அனுபவித்தவர். ஐ.தே.க.வில் களத்தில் உள்ள மூவரில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற ஒரு கேள்வியும் இப்போது எழுப்பப்படுகின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அதன் தலைமை ரணிலைத்தான் விரும்புவதாகத் தெரிகின்றது. ஆனால், ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படும் மனோ – திகா- ராதா அணிகளும், ஹக்கீம்- ரிஷாத் ஆகியோரும் சஜித்தை விரும்புகிறார்கள்.

சனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்குமாறு கட்சி ஐ.தே.க. எம்.பி.க்கள் தலைமைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கியிருப்பதாக உள்ளகத் தகவல்கள் சொல்கின்றன. கட்சியின் செயற்குழுவை அவசரமாகக்கூட்டி, இது குறித்த தமது முடிவை அறிவிக்குமாறு அவர்கள் கேட்டுள்ளார்கள். தமது ஊர்களுக்குச் செல்லும் போது, வாக்காளர்கள் இந்தக் கேள்வியைத்தான் தம்மிடம் எழுப்புவதாகத் தெரிவிக்கும் எம்.பி.க்கள், சனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவித்தால்தான் தமது பணிகளை தமது தொகுதிகளில் செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் தலைமைக்கு கூறியிருக்கின்றார்கள்.

கட்சி எம்.பி.க்களில் ஒரு பகுதியினர் சஜித்தை சனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள். சஜித் தன்னுடைய விருப்பத்தை கட்சித் தலைமைக்கு இதுவரையில் உத்தியோகபூர் வமாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், மாத்தறையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து முதல் தடவையாக தனது விருப்பத்தை சஜித் வெளியிட்டார். அமைச்சர் மங்கள அரசியலில் பிரவேசித்து 30 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைவிட சஜித்தின் மனைவி, ஜலனியும் தன்னை எதிர்கால “முதற் பெண்மணி” என குறிப்பிட்டமையும் சஜித் ஜனாதிபதித் தேர்தலில் இறங்குவதற்கான காய் நகர்த்தலை ஆரம்பித்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியது.

ஜனாதிபதி வேட்பாளராக தன்னைப் போட வேண்டும் என்பதற்கான பரப்புரைகளை சஜித் தீவிரமாக முன்னெடுக்கவில்லை என்பது உண்மைதான். அவருக்கு ஆதரவான எம்.பி.க்களே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார்கள். சஜித்தும் இதற்கு இசைவான வகையிலேயே தனது பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்துகின்றார். ரணிலுடன் நெருக்கமானவர்களாக இருந்த சிலரும் இப்போது சஜித்தை ஆதரிக்கத் தொடங்கியிருப்பது ரணில் முகாமைப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. மங்கள பகிரங்கமாகவே தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார். மலிக்கும் சஜித்தையே ஆதரிப்பதாக உள்ளகத் தகவல்கள் சொல்கின்றன.

சஜித்தும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக சில விடயங்களில் செல்ல முற்படுகின்றார். குறிப்பாக, மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை கட்சி எடுத்திருக்கும் நிலையில், அதற்கு முரணாக மரண தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கின்றார். இதன் மூலம், கட்சியில் தனித்துவத்தை வெளிப்படுத்த சஜித் முற்படுகின்றார். மைத்திரிக்கு ஆதரவான நிலைப்பாடு இது எனவும் கட்சிக்குள் சொல்லப்படுகின்றது. சஜித் போட்டியிட்டால், மைத்திரியின் ஆதரவை பெறக் கூடியதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகின்றது. இதன் மூலம் 5 முதல் 7 வீதம் வரையிலான வாக்குகளை அவர் அதிகமாகப் பெறலாம். . அதனைவிட, மைத்திரி பதவியிலிருக்கும் நிலையிலேயே தேர்தல் நடைபெறும் என்பதால், சட்டம் ஒழுங்கு கூட சஜித்துக்கு ஆதரவாக கொஞ்சம் வளைந்துகொடுக்கும்.

ஐ.தே.க.வில் மற்றொரு குழுவினர் கரு ஜயசூரியவைக் களமிறக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார்கள். தானும் தயாராக இருப்பதாக  கருவும் அறிவித்துவிட்டார். தான் போட்டியிட முடியாது என்ற ஒரு நிலை வரும்போது கருவைக் களத்தில் இறக்கும் முடிவுக்கு ரணிலும் வரலாம் எனவும் உள்ளகத் தகவல்கள் சொல்கின்றன.

சமூக ஊடகங்களில் இந்த மூவரையும் மையப்படுத்திய பரப்புரைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தாக்குதல்களும் ஆரம்பமாகியிருக்கின்றன. சஜித்தை களமிறக்கும் முடிவு எதனையும் கட்சி ஒருபோதும் எடுக்காது என ரவி கருணாநாயக்க பகிரங்கமாகவே தெரிவிக்க மற்றொரு மோதலுக்கான மற்றொரு களம் திறக்கப்பட்டது. இந்த மோதல்களைப் பார்த்துக்கொண்டு வழமைபோல கூலாக இருக்கிறார் ரணில். அவருக்கு ஆதரவாகவும் ஒரு குழுவினர் களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். கள நிலவரங்களை அவதானிக்கும் சிலருடைய கருத்தின்படி ரணிலுக்கான ஆதரவு குறைவடைந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால், சனாதிபதிக் கனவை அவர் கைவிட்டுவிடவில்லை. அடுத்த வாரம் கர்னபடகவிலுள்ள மூலாம்பிகை கோவிலுக்குச் செல்லவிருக்கும் ரணில், அங்கு தரிசனத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய உடனடியாகவே சனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட தமது செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவார். ஆக, மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்கும் நிலையில் ரணில் இல்லை.

மொட்டு அணி எப்படியும் சிங்கள வாக்குகளை நம்பித்தான் தமது வேட்பாளரைக் களத்தில் இறக்கும். அந்த வாக்குகளை அவர்களால் பெருமளவுக்கு அறுவடை செய்யக் கூடியதாக இருக்கும் என்பதும் உண்மை. அதனால், சிறுபான்மையினருடைய வாக்குகளை முழுமையாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை களத்தில் இறக்க வேண்டும் என்ற கருத்து ஐ.தே.க.வில் உள்ளது. இந்தத் தேர்தலிலும் கோட்டைவிட்டுவிட்டால், மொட்டுவில் களம் இறங்குபவர்- அவர் கோத்தாவாக இருந்தாலும் மற்றொருவராக இருந்தாலும்,  அடுத்து வரும் இரண்டு பதவிக் காலத்துக்கு இருந்துவிடலாம் என்பதால், இம்முறை எப்படியும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஐ.தே.க. உள்ளது. அதனால், ஐ.தே.க.வின் வேட்பாளர் யார் என்ற கேள்வி கொழும்பு அரசியலில் பலமாக உள்ளது.

மகிந்த அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று (23) சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலினா பி.டெப்லிட்ஸை தனது கொழும்பிலுள்ள அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில், சிறிலங்கா – அமெரிக்காவிற்கிடையிலான 3 ஒப்பந்தங்கள் குறித்து கவலை வெளியிட்டிருந்தார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தேர்வு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராவார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட பிரெக்ஸ்ட் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறமுடியாததால் பிரதமர் திரேசா மே பதவி விலகியிருந்தார்.

ஆட்சியில் உள்ள கட்சியின் தலைவரே பிரதமர் பதவியை வகிக்க முடியும் என்ற பிரித்தானியாவின் சட்டத்திற்கு அமைவாக ஆட்சியில் உள்ள கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

இதில் இறுதிச்சுற்றில் ஜெரமி கன்டிற்கும், ஜோன்சனுக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் ஜோன்சன் 92,153 வாக்குகளும், கன்ட் 46,656 வாக்குகளையும் பெற்றிருந்தார்.

நேற்று (23) இந்த முடிவு அறிவிக்கப்பட்டபோதும், இன்று (24) பிற்பகல் பக்கிங்கம் அரன்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவி ஏற்புக்கான கடிதத்தை உத்தியோகபூர்வமாக ஜோன்சன் கையளிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜுலை இனப்படுகொலை தொடர்பில் இளையோர் அமைப்பின் கண்காட்சி

1983 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலை மற்றும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானியாவில் இளையோர் அமைப்பனால் இனப்படுகொலை தொடர்பான கண்காட்சி ஒன்று நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

கலை என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் இல்லை அது ஒரு ஆயுதமும் கூட. விடுதலைக்கான ஆயுதமாக கலைழய அடுத்துவரும் எல்லா தலைமுறைகளும் கையிலெடுக்கும் என்பதையே இந்த கண்காட்சி எடுத்துக்காட்டுகின்றது.

july 2019 4 ஜுலை இனப்படுகொலை தொடர்பில் இளையோர் அமைப்பின் கண்காட்சிjuly 2019 1 ஜுலை இனப்படுகொலை தொடர்பில் இளையோர் அமைப்பின் கண்காட்சி july 2019 3 ஜுலை இனப்படுகொலை தொடர்பில் இளையோர் அமைப்பின் கண்காட்சி