இன்று கன்னியா, நாளை கோணேஸ்வரர் ஆலயம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை(நேர்காணல்) – அகத்திய அடிகளார்

தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் இலக்கு மின்னிதழுக்கு நெஞ்சுருகி பேட்டி

கன்னியா பிள்ளையார் ஆலயம் உட்பட திருமலையில் பாரம்பரியங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் மத சுதந்திரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாக கன்னியா தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் தெரிவித்தார். அவர் வழங்கிய முழு பேட்டி வருமாறு…

கேள்வி:- கன்னியாவின் புராதன இந்து அடையாளங்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப் படுவதன் பின்னணி என்ன?

பதில்:- கன்னியாவின் வரலாறு நெடியது. சுமார் 1000 வருடங்களாக அங்கு தமிழர்கள் தமது மூதாதையர்களிற்கு பிதிர்க்கடன்களை செய்து வருகிறார்கள் என நம்பப்படுகிறது. ஒல்லாந்தர் கால குறிப்புக்களிலும் அது உள்ளது. இராவணன் தனது தாய்க்கு பிதிர்க்கடன் நிறைவேற்றிய இடமென்ற ஐதீகமும் உள்ளது. இந்த பகுதிக்கு சமீபமாக கி.பி 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராஜராஜ பெரும்பள்ளியென்ற (வெல்கம் விகாரை) தமிழ் பௌத்த பல்கலைகழகமும் அமைந்துள்ளது. இன்று உலகிலேயே எஞ்சியுள்ள ஒரேயரு தமிழ் பௌத்த பல்கலைகழகம் அதுதான். கி.பி 10ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அதை புனரமைத்து அதற்கு பல கல்வெட்டுக்களை பரிசளித்திருந்தான். இதன் மூலம் அந்த பகுதியில் தமிழ் சைவர்களும், தமிழ் பௌத்தர்களும் பண்டைக்காலத்திலேயே வாழ்ந்திருந்தார்கள் என்பது உறுதியாகிறது.  எனினும், வாழ்ந்தவர் அனைவரும் தமிழரே.

இந்நிலையில், திருகோணமலையிலிருந்த ஆங்கிலேய அதிகாரியருவர் திடீரென நோய்வாய்ப்பட்டிருந்தார். பல சிகிச்சை செய்தும் அவர் குணமாகவில்லை. இறுதியாக கன்னியா வெந்நீர் ஊற்றில் நீராடி, அருகிலிருந்த பிள்ளையார் ஆலயத்தில் வழிபட்டு குணமடைந்தார். அப்போது அந்த ஆலயத்தை நிர்வகித்து வந்தவரிடம், வெந்நீர் ஊற்று உள்ளிட்ட 8 ஏக்கர் காணியை ஆங்கிலேய அதிகாரி வழங்கினார். அவர்களின் பரம்பரையே அதை நிர்வகித்து வந்தது. பின்னர், தொல்லியல் பிரதேசமாக அது பிரகடனப்படுத்தப்பட்டு, அரசு அதை பொறுப்பேற்றுள்ளது. எனினும், அதற்கான மாற்று காணி அந்த பெண்மணிக்கு வழங்கப்படவில்லை.

இதேவேளை, சுனாமியின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணி நிதியில், கன்னியா பிள்ளையார் ஆலயத்தையும் புனரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஆலயம் உடைக்கப்பட்டது. பின்னர் மீள் கட்டுமானப் பணி ஆரம்பிக்கும் சமயத்தில், தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தொல்லியல் துறையின் பிரதேசத்தில் கட்டுமானம் செய்யமுடியாது என அவர் கோரினார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, பிள்ளையார் ஆலய பணிக்கு தடை உத்தரவிட்டது. இதனால் இப்பொழுது அங்கு பிள்ளையார் ஆலயம் இல்லை. ஒரு பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அந்தப்பீடம் முதலில் உடைக்கப்பட்டது. அதற்கு எதிராக நாம் போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில் அது தடுக்கப்பட்டபோதும் பின்னர் சூட்சுமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கேள்வி:- கடந்த 16ஆம் திகதி ஒன்றிணைந்த சனநாயகப் போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்தமைக்கான காரணம் என்ன?

பதில்:- அண்மையில் கன்னியா பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் பௌத்த தாதுகோபுரம் ஒன்று அமைக்கும் முயற்சி வில்கம் விகாரை விஹாராதிபதி அமபிட்டிய சீல வன்ச திஸ்ஸ ஸ்திர தேரரால் முன்னெடுக்கப்பட்டது.  இது பற்றிய முறைப்பாடுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டதோடு ஜுன் மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கணைப்புக்குழு கூட்டத்தில்  பூர்வீக பிள்ளையார் ஆலய இடத்தில் அதை உடைத்து பௌத்த தாது கோபுரம் அமைக்கப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்று தீர்மானம் மெற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேரர் கன்னியாவில் தாது கோபுரம் அமைக்கும் முயற்சியை தமிழ் அரசியல்வாதி ஒருவர் தலையிட்டு தடுத்து வைத்துள்ளார். இது பௌத்த சாசனத்துக்கு எதிரான நடவடிக்கையென சனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் முறைப்பாடு செய்திருந்தார்.  இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு சனாதிபதி காரியாலயம் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்நாயகம் பேராசிரியர் மண்டாவெலவுக்கு உடனடியாக தாதுகோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி  ஆணையன்றை பிறப்பித்திருந்தது. கடந்த ஜுன் மாதம் 24 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் சனாதிபதியின் மேலதிக செயலாளரால் திருகோணமலை அரச அதிபர் புஸ்மகுமாரவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து தாது கோபுரத்தை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான  ஏற்பாடுகளை திருமலை அரச அதிபர் செய்திருந்தார். இதனாலேயே நாம் போராடுவதற்கு தீர்மானித்திருந்தோம்.

கேள்வி:- சனநாயக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது நடந்தது என்ன?

பதில்:- கவனயீர்ப்பு போராட்டம் நடத்துவதற்கான முன் அனுமதி காவல்துறையினரிடம் பெறப்பட்டிருந்தது. அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன, மதம் கடந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்திருந்தனர். திருவாசகத்தை ஓதிய வண்ணம் ஆலயத்துக்கு செல்ல முயன்றோம். கன்னியா பிரதான வீதியில் பெருந்தொகையான இராணுவம், காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆலய வளாகத்துக்குள் வருவதற்கு முன்பே நூற்றுக்கணக்கான காடையர்கள் வெந்நீரூற்று வளாகத்துக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.  அவர்களுக்கு ஆதரவளித்து பிக்குமார்கள் குழுவும் இருந்தது. நாங்கள் அமைதியான முறையில் ஆலயத்தை தரிசிக்க செல்கிறோமென வழி மறித்து நின்ற காவல்துறையினரிடம் கூறினோம். அவர்கள் ஆலயத்துக்கு செல்வதற்கோ வழிபடுவதற்கோ முடியாது நீதிமன்றத்தினால் தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதெனக் கூறி தம்மிடமிருந்த தடையுத்தரவு கட்டளையை வாசித்து காட்டினார்கள். அது சிங்களத்திலிருந்த காரணத்தினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என இளைஞர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

மீண்டும் கன்னியா நீர் கிணற்றுக்கு அருகிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை வழிபடவும் அவ்வாலயம் இருந்த இடத்தில் சேதம் விளைவிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறியவும் அனுமதி வழங்கும்படி காவல்துறையினரிடம் கோரினோம். நானும் கன்னியா பிள்ளையார் ஆலய தர்ம கர்த்தா கோகிலரமணி அம்மாவும் இரண்டு காவல்துறையினரின் உதவியுடன் பிரதான வீதியிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள நீரூற்றுப் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டோம். ஏராளமான காடையர்கள் குவிந்து நின்றிருந்தார்கள் நாங்கள் சென்ற வண்டியை விட்டு இறங்கிய போது அங்கு நின்ற சிங்கள காடையர்கள் அருவருக்கத்தக்க தகாத வார்த்தைகளால் எங்களை பேசியதோடு உள்ளே இறங்கினால் கொல்வோம் என்று கடுமையான தொனியில் எங்களை எச்சரித்து எம்மீது சுடுதேநீரை ஊற்றினார்கள். ஆனால்  எம்மை அழைத்து சென்ற காவல்துறையினர் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்ததோடு எம்மை திருப்பியும் அழைத்து வந்தனர்.

கேள்வி:- இதனையடுத்து உங்கள் தரப்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

பதில்:- பௌத்த  மேலாதிக்கம் நிறைந்த இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு அரசியல் விமோசனமுமில்லை, ஆன்மீக சுதந்திரமும் இல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக கன்னியா காணப்படுகின்றது. இதனைக் கவனத்தில் கொண்டு நாம்  இலங்கையில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ளோம். அது மட்டுமன்றி வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.  இதனைவிடவும் நாம் பல தரப்பினருடனும் கலந்துரையாடி  எடுத்துரைத்துள்ளோம். இந்த விடயம் குறுகிய மற்றும் நீண்டகாலத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றியும் பல தளங்களில் வெளிப்படுத்தியுள்ளோம்.

ஆனால் நடந்தேறியது ஒன்றுமேயில்லை. நாங்கள் சிங்கள மக்களுக்கோ பௌத்தத்துக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் எமக்கு எதிரான ஆக்கிர மிப்புக்களும் அடாவடித்தனங்களும் எங்களை கதிகலங்க வைக்கிறது. இது ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படாத பட்சத்தில் நல்லிணக்கம் புரிந்துணர்வு சமய பாதுகாப்பு என்பது வராமலே போய்விடும்.

கேள்வி:-திருமலையில் தமிழர்களின் பூர்விகங்கள் முற்றாக பறிபோகும் ஆபத்துள்ளதாக கூறப் படுகின்றதே?

பதில்:- ஆம், எங்கள் அரசியல் தலைமை களின் கையாலாகத்தன்மையின் காரணமாகவே படிப்படியாக பூர்வீக இடங்களையும் வரலாற்றுப் பெருமை கொண்ட இடங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம். ஏலவே திருகோண மலை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் பறிபோய் விட்டன. இன்னும் பல கேந்திர இடங்கள் பறிக்கப்படும் நிலையிலேயே காணப்படுகிறன. தென்னவன்மரவடி, இங்குள்ள கந்தசாமி மலை, பிள்ளையார்  ஆலயம் என ஆக்கிரமிப்பு பட்டியல் நீடிக்கின்றது. கன்னியா மலை அடிவாரத்தில் பௌத்த மடமொன்று நிர்மாணிக்கப்பட்டு விகாரை கட்டுவதற்கரிய கைங்கரியங்கள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கள பௌத்த அரசானது தமிழர் வரலாற்றை மஹாவம்ச வரலாறாக திரிபு படுத்த முயற்சிக்கின்றது. வரலாற்றை  திரிபு படுத்துவது மாற்றுவது என்பதை அரசும் தொல் பொருள் திணைக்களமும் வடகிழக்கிலுள்ள பல திணைக்களங்களின் ஊடாக தனது திட்ட மிடல்களை முன்னெடுக்கின்றது.

வட கிழக்கு எங்கும்  மிகப்பாரிய அளவில் சிங்கள பௌத்த மயமாக்கல்  தாராளமாக இடம் பெறுகிறது. குறிப்பாக 2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பௌத்த மயமாக்கல் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. தமிழர் பிரதேசத்தை முழுமையாக பௌத்த பூமியாக மாற்றும் உள்நோக்குடனேயே அனைத்தும் திட்டமிடப்படுகின்றனவா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இன்று பெரும் கவலையாக எழுகின்றது இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் தலைமைகளோ அல்லது சிவில் அமைப்புக்களோ அதிக கவனம் செலுத்தவில்லை என்பதை நினைக்க மிகவும் வேதனையளிக்கிறது. இன்று கன்னியாபிள்ளையார் ஆலயம். நாளை கோணேஸ்வரர் ஆலயமாக மாறும் நிலை உருவாகினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அப்போதும் நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போகின்றோம் ஐ.நா மனித உரிமை சாசனத்தில் ஒரு மனிதனின் வழிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான உரிமைகள் வலியறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப எமது பண்பாட்டு அடையாள உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் சனநாயக வழியில் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வெரவேண்டும்.