Home Blog Page 2715

சிறிலங்காநாடாளுமன்ற உறுப்பினர் மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க (வயது-61) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணமானார்.

1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் மூலம் முதன்முதலில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அவர், பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கங்களில் அமைச்சரவை அந்தஸ்துடைய, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். ஹிரியால தொகு தியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காஸ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறிப்பு;இரண்டாகப்பிரிப்பு தொடர்பில் சீமான் ,திருமா கண்டனம்

காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துச் செய்து தன்னாட்சி உரிமையைப் பறித்திருப்பது காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்! ஜனநாயகத்தைப் படுகொலை செய்து சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் ஓர் ஒன்றியம். அத்தகைய தேசிய இனங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியா எனும் ஒற்றைக்குடையின் கீழ் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் ஒவ்வொருவிதத் தன்மையுண்டு. பன்முக இயல்புகளுண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், வேளாண்மை, உணவுப்பழக்கவழக்கம், ஆடை அலங்காரம், நிலவியல் சூழல், பொருளாதாரப்பின்புலம் என ஒவ்வொரு தேசிய இனமும் தனித்த குணநலன்களையும், மாறுபட்டப் பண்புகளையும் கொண்டு வாழ்ந்து வருகின்றன. அவையாவற்றையும் சிதைத்தழித்து தேசிய இனங்களின் தனித்தன்மையைக் குலைத்து, தன்னுரிமையை முற்றாக மறுத்து ஒற்றைமுகமாக இந்தியாவை நிறுவ முனைவதே இந்துத்துவச் சித்தாந்தத்தின் அடிநாதம். அதனையேற்று ஆட்சி செய்யும் பாஜக அதற்கான செயல்வடிவத்தினை மாநிலங்களின் அதிகாரப்பறிப்பு மூலமாகச் செய்துவருகிறது. அதன் நீட்சிதான், காஷ்மீரத்தின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்திட்டு, தன்னாட்சி உரிமையைப் பறித்திட்ட இக்கொடுஞ்செயல் என்பதில் துளியவும் ஐயமில்லை.

 இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ‘’காஷ்மீர் மாநிலத்திற்குரிய சிறப்பு அங்கீகாரமான 370, 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசின் முடிவு நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சியினையும், கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தோடு ஜம்மு காஷ்மீர், லடாக்கைப் இரண்டாகப் பிளந்து பிரித்து ஜம்மு காஷ்மீரைச் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியினைச் சட்டமன்ற அங்கீகாரமில்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்ற முனைந்திருப்பது மிகப்பெரும் அநீதி. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது; கண்டிக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்,

’’காஷ்மீர்  மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370 ஐ ரத்து செய்தும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப்   பிரித்தும் இன்று அவசர அவசரமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்காகும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த யுத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக எதிர்க்கிறோம்.  இந்தியாவை அமைதியற்ற பகுதியாக ஆக்குகிற பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்க ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்.

கடந்த சில நாட்களாக காஷ்மீரில் துருப்புகள் குவிக்கப்பட்டன. காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு அனைத்து விதமான தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தம் இந்திய அரசால் தொடுக்கப்பட்டிருக்கிறது .இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ஆணை இதுவரை காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. அதுமட்டுமின்றி அவசர அவசரமாக இன்று மாநிலங்களவையில் சட்ட மசோதா ஒன்றை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்திருக்கிறார். காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.

அரசியலமைப்புச்சட்ட உறுப்பு 370 இன் கீழ் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டது சலுகை அல்ல. அது  காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்போது ஏற்கப்பட்ட நிபந்தனை. அதை ரத்துசெய்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.

மோடி அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்திருக்கிறது. அமைதியை சீர்குலைப்பதன்மூலம் ஆட்சியின் அலங்கோலங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கலாம் என மோடி அரசு நினைக்கிறது. அதற்காக காஷ்மீர் மக்களைப் பலிகடாவாக்கியிருக்கிறது. இதைக் கடுமையாக எதிர்க்கவேண்டும் என அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறோம். ’’

மாயமான ராடர்கள் விபரம் அறியாது திணறும் சிறிலங்கா அரசு

2014ஆம் ஆண்டு திருத்த வேலைகளுக்காக சீனாவிற்கு அனுப்பப்பட்ட ராடர் றிசீவர் மற்றும் அன்ரெனா ஸ்கானர் ஆகியன தொலைந்து போயுள்ளதாக, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிற்கு சிறிலங்கா விமானப்படையின் சட்டப் பணிப்பாளர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போன கருவிகளின் பெறுமதி 98மில்லியன் ரூபா என்றும் இவை F – 7 போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்தவை என்றும் கூறியுள்ள விமானப்படை சட்டப் பணிப்பாளர், இவை  ஏதாவதொரு தீவிரவாதக் குழுவின் கையில் சிக்கினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், அத்துடன் சிறிலங்கா விமானப்படையினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு எழுப்பிய கேள்வியை அடுத்தே சிறிலங்கா விமானப்படை இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, உள்ளுர் சரக்கு அனுப்புநரான எம்.எஸ் கெயார் லொஜிஸ்டிக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அந்தக் கருவிகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. நிறுவன இணையத்தளத்துடன் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அதற்கான தொலைபேசியும் இயங்கவில்லை. இந்த நிறுவனத்தின் ஊடாகவே பழுதடைந்த ராடர், றிசீவர் மற்றும் அன்ரெனா சீனாவிற்கு அனுப்பப்பட்டன.

இந்தக் கருவிகளின் பெறுமதி 536,000 டொலர் ஆகும். இவற்றை சீனாவிற்கு அனுப்புவதற்கும் சிறிலங்கா விமானப்படை மில்லியன் கணக்கான ரூபாக்களை செலவு செய்துள்ளது.

உள்ளுர் சரக்கு அனுப்புநர் இந்தக் கருவிகள் அடங்கிய பொதியை 2014 ஏப்ரல் மாதம் எயார் ஏசியா சரக்குப் பிரிவில் கையளித்துள்ளார். இப்பொதி கோலாலம்éர் ஊடாக சீனாவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பொதி சீனாவிற்கு சென்றடையவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது சரக்கு அனுப்புநர் சரியான பதிலை தரவில்லை.

கருவிகள் காணாமல் போய் ஒரு ஆண்டு கழிந்த நிலையில் 2015 ஜுன் மாதம், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என விமானப்படையின் சட்டப் பணிப்பாளர், சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.  இந்தப் பொதியை கண்டுபிடிக்க கோலாலம்éர் தூதரகத்தின் உதவியை நாடியிருந்தது. ஆனால் அவர்களாலும் இதை கண்டுபிடிக்க முடியவில்லை.

கோலாலம்éரிற்கும், சீனாவிற்கும் இந்தக் கருவிகனை அனுப்ப விமானப் போக்குவரத்து முன்பதிவை ஏற்படுத்தியிருந்தாலும், விமானத்தில் அந்தப் பொதி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

விமானப்படை நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, இழப்பீட்டை எடுக்கத் தவறிய அதிகாரியிடமிருந்து 493,438.38 ரூபா (காணாமல் போன பொருட்களின் மொத்த மதிப்பில் ஐந்து சதவீதம்) வசூலிக்க விமானப்படை தளபதி பரிந்துரைத்துள்ளார். மீதமுள்ள 98,194,092.87 ரூபாவை எம்.எஸ்.கெயார் லொஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்தும் கோர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, இந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்கவும், வேறு எந்த அரசு நிறுவனங்களும் இதனுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு தடை விதித்தும், நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தனது பாதுகாப்புக்கு புதிய படையை உருவாக்குகிறார் கோத்தா

சிறீங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறீலங்கா மக்கள் கட்சி பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

50 இற்கு மேற்பட்ட ஒய்வுபெற்ற சிறீலங்கா படையினரைக் கொண்டு இந்த பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்படவுள்ளது. தேர்தலின் போது கோத்தபாயாவுக்கு பாதுகாப்பு வழங்குவதே அவர்களின் பிரதான கடமையாகும்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் பாதுகாப்புக்கள் போதுமானதல்ல, எனவே தான் கட்சி சிறப்பு பாதுகாப்பு பிரிவை உருவாக்கியுள்ளது. கோத்தபாயா ராஜபக்சா இராணுவத்தில் இருந்த போது அவரின் படையணியாக கருதப்பட்ட கஜபா றெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த படையினரைக் கொண்டே இந்த பi-டயணி உருவாக்கப்பட்டுள்ளது.

அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னாள் அரச தலைவரும், கோத்தபயாவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சாவின் மகன்களில் ஒருவரான ஜோசித ராஜபக்சா மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

நல்லூரில் காவல்துறையின் சோதனைகளும், கெடுபிடிகளும்

இன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக ஆலய சூழலில் உள்ள குடியிருப்புகள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கை (மினி றவுண்டப்) மேற்கொள்ளப்பட்டது.

நல்லூரில் பெருமளவு காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டதுடன், சிவில் உடை தரித்த காவல்துறையினரும் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மூத்த பிரதிகாவல்துறை அதிபர் உட்பட அனைத்துப் பிரதேச காவல்துறை நிலையங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன் போது அவர் நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் போது நல்லூரிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்காவின் படைக் கட்டமைப்பில் மாற்றங்கள்

இந்த மாதம் சிறீலங்காவின் படைக்கட்டமைப்பில் இரு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவின் சேவைக்காலம் இம்மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.  தற்போதைய கூட்டுப்படைத் தளபதியாகவுள்ள அட்மிரல் ரவி விஜேகுணரத்னவின் சேவைக்காலம் இம்மாதம் 22ஆம் திகதி நிறைவடையவுள்ளது. புதிய கூட்டுப்படைகளின் தளபதியின் பதவிக்காலம் இம்மாதம் நிரப்பப்படவேண்டியுள்ளது.

இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4ஆம் திகதி சிறிலங்காவின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.  இவருக்கு 55 வயது நிறைவடைவதையடுத்து 2017 ஓகஸ்ட் 18ஆம் திகதி ஓய்வபெறவிருந்தார். ஆனால் ஜனாதிபதியின் அதிகாரத்தினால் இவரின் பதவிக் காலம் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டது.   இதனையடுத்து 2018 ஓகஸ்ட் வரை இராணுவத் தளபதியாக பதவி வகிக்க அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இரண்டாவது தடவையாக ஒருவருட பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. அந்தப் பதவி நீடிப்பு இம்மாதம் 18ஆம் திகதி முடிவடையவுள்ளது.

இந்த இருவரின் பதவி வெற்றிடங்களும்  இந்த மாதம் நிரப்பப்பட வேண்டியுள்ளது.

இலக்கு 37 04-08-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 37 04-08-2019

ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன்-வைகோ

இந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள் காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை என இந்திய நாடாளுமன்றத்தில் பேசும்போது மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வை கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி மாநில அந்தஸ்தை பறித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்றும், லடாக் யூனியன் பிரதேசம் என்றும் பிரித்து, மாநில அந்தஸ்தையே பறித்துவிட்ட மசோதாவை எதிர்த்து மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் உறுப்பினர்களும், எதிர்க் கட்சி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுட்டனர்.

வைகோ எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து மசோதாவை எதிர்த்து முழக்கம் எழுப்பிவிட்டு, தன்னுடைய இருக்கைக்குச் சென்று, நான் இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியோடு மாறுபடுகிறேன். நான் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார்.

தொடர்ந்து பலமுறை கேட்டபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து, வைகோவை பேச அனுமதியுங்கள். அவர் கருத்தை நாங்களும் கேட்க விரும்புகிறோம் என்றார்.

வைகோவின் உரை பின்வருமாறு:-

“இந்திய அரசியல் நிர்ணய சபையில், அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு நிறைவேற்றப்பட்டபோது, தலைசிறந்த பாராளுமன்றவாதியான எச்.வி.காமத் அவர்கள் எழுந்து, “இந்த நாள் வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரிய நாள்” என்றார். அதேபோலத்தான் இந்திய ஜனநாயக வரலாற்றில் 2019 ஆகஸ்ட் 5 ஆம் நாள் இரத்தக் கண்ணீரை வடிக்கச் செய்த நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள்.

1947 நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான் ஆதரவோடு, பக்டூனிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்த நேரத்தில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் அவர்கள், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

அந்த ஒப்பந்தத்தின்படி, எதிர்காலத்தில் காஷ்மீர் தனி அரசமைப்போடு விளங்கும். தனி அரசியல் நிர்ணய சபை, அரசியல் சட்டத்தை உருவாக்கும். அந்த மாநிலத்திற்கு என்று தனி கொடி, தனி பிரதமர் இருப்பார்.

இந்த ஒப்பந்தத்துக்கு காஷ்மீர் மக்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த ஷேக் அப்துல்லா முழு ஆதரவு தந்தார். காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பண்டித ஜவஹர்லால் நேரு உறுதிமொழி அளித்தார்.

1948 லும், 1948 லும், 1950 களிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வந்தார்.

நான் ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த மரியாதை கொண்டவன். அவர் எழுதிய நான் கண்ட இந்தியா, உலக சரித்திரத்தின் ஒளிக் கதிர்கள் என்ற இரு நூல்களும் ஈடு இணையற்றவை. அதற்கு நிகரான ஒரு வரலாற்று நூல் உலகிலேயே இல்லை. ஆனால், காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லாவை 1950 களில் கைது செய்து, தமிழ்நாட்டின் கொடைக்கானலில் சிறை வைத்தது வரலாற்றுப் பிழை ஆகும்.

1980 ஆம் ஆண்டு, என் இனிய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவை நான் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். அப்பொழுது ஷேக் அப்துல்லா அவர்கள் என்னிடம் கூறிய சொற்கள் மறக்க முடியாதவை.

“என் தமிழ்நாட்டு இளைய நண்பனே! காங்கிரஸ் கட்சியின் அரசியல் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடம் இல்லை” என்றார்.

காங்கிரஸ் கட்சியோடு பரூக் அப்துல்லா கூட்டணி வைத்தபோது, அவர் தந்தையாரின் வார்த்தைகளை நினைவுபடுத்தினேன். அதன் விளைவாக ஒரு நாள் காலை முதலமைச்சர் பரூக் அப்துல்லா தேநீர் அருந்திக்கொண்டு இருந்தபோது, அவரது ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசு கவிழ்த்தது என்ற செய்தி வந்தது.

காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்சினை இப்படி வெடிப்பதற்கே காங்கிரஸ் கட்சிதான் காரணம். பண்டித நேரு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

1960 களின் தொடக்கத்தில், ஐ.நா.வின் இந்தியத் தூதராக இருந்த எம்.சி.சாக்லா, ஐ.நா. சபையில் கூறினார், “காஷ்மீரில் மூன்று பொதுத்தேர்தல் நடத்திவிட்டோம். அதுதான் பொது வாக்கெடுப்பு” என்றார்.

இதைவிட ஒரு பெரிய மோசடி உலகில் எங்கும் நடக்கவில்லை.

கார்கில் யுத்தம் வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் சரவணன் உள்ளிட்ட இளைஞர்கள் உயிரைத் துச்சமாக மதித்து வீரத்துடன் போராடி, இரத்தம் சிந்தி மடிந்தனர்.

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமை அமைச்சராக இருந்தார். என் உயிர் நண்பர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இராணுவ அமைச்சராக இருந்தார்.

இன்றைக்கு உள்ள நிலைமை என்ன?

பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க. உறுப்பினர் அவரைத் தாக்கினர். நாசீர் அகமதுவை மாநிலங்கள் அவை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர். இந்தப் பிரச்சனையில் அவர் இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக் கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன். நான் இந்திய அரசியல் சட்டத்தின் இந்தி மொழிப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தியவன்.

நண்பர் சிதம்பரம் காங்கிரஸ் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “தி.மு.க.வினர் கோழைகள், அரசியல் சட்ட வாசகத்தை தாளில் எழுதித்தான் கொளுத்தினோம் என்று நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தந்தவர்கள்” என்றார்.

நான் குறுக்கிட்டுப் பேசினேன், “இல்லை. நான் அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தினேன் என்று நீதிமன்றத்திலேயே பிரமாண வாக்குமூலம் தந்தேன். அதனையே இதே மன்றத்திலும் சொன்னேன். என் எம்.பி. பதவி பறிக்கப்பட்டாலும் கவலை இல்லை” என்று சொன்னேன்.

இன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்.

ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்கள், மறுபக்கம் பாகிஸ்தனில் அல்கொய்தா அமைப்பினர், ஒரு பக்கம் நம் மீது வெறுப்பு கொண்டிருக்கும் செஞ்சீனா தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது, அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு திறமையான குள்ளநரி. கொசாவோ பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். சூடான் பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். கிழக்கு தைமூர் பிரச்சினை போல் பிரச்சினை ஆகும். ஐ.நா.மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும் தலையிடும்.

தலைசிறந்த நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், மேக்பத் துன்பியல் நாடகத்தில் பின்வருமாறு சொல்வான்:- “ஆயிரம் ஆயிரம் அரேபியாவின் வாசனாதி திரவியங்களாலும், மேக்பத் சீமாட்டியின் கையைச் சுத்தப்படுத்த முடியாது.”

அதேபோலத்தான் இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்களை வரலாறு மன்னிக்காது.

காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது.

இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்.”

வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் என்பது ஒரு சதி ; முகத்தை மூடும் உடைக்கு தடையுத்தரவு கூடாது – ஹக்கீம்

‘ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் என்பது வெளிச்சக்திகளின் சதியின் ஒரு வெளிப்பாடு. அதில் பகடைகளாக பாவிக்கப்பட்டவர்கள் ஒரு கூலிப்படையினர். இந்த தீவிரவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறிகள் விடயத்தில் நாங்கள் சிறிது அசட்டையாக இருந்துவிட்டோம். ஆனால், ஜம்மியத்துல் உலமா ஜனவரி மாதத்திலேயே இதுகுறித்து அபாய அறிவிப்பை விடுத்திருந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அவசியமில்லை. நிரந்த தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படபோது, அதற்கான மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவார கால அவகாசம் கோரியிருக்கிறேன்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற, முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் என்பது வெளிச்சக்திகளின் சதியின் ஒரு வெளிப்பாடு. அதில் பகடைகளாக பாவிக்கப்பட்டவர்கள் ஒரு கூலிப்படையினர். இந்த தீவிரவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறிகள் விடயத்தில் நாங்கள் சிறிது அசட்டையாக இருந்துவிட்டோம். ஆனால், ஜம்மியத்துல் உலமா ஜனவரி மாதத்திலேயே இதுகுறித்து அபாய அறிவிப்பை விடுத்திருந்தது.

பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்துக்கும் முடிச்சுப்போடுவதற்கு எத்தனிப்பவர்கள், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீது கை வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விடயங்களைப் பார்த்து பதற்றப்படுவதை நாங்கள் முதலில் நிறுத்தவேண்டும். இஸ்லாம் வளர்ந்தமைக்கு பிரதான காரணம் சகிப்புத்தன்மையாகும். ஒருசில பித்தலாட்டக்காரர்களின் செயற்பாடுகளினால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிடுவோம் என்ற மனப்பாங்கை கைவிடவேண்டும்.

பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் எங்களது உரிமைகளுக்காக அத்தனை பலங்களையும் பிரயோகித்து போராட வேண்டும். இந்தப் போராட்டம் அரசியல், ஆன்மீக, தொழில்சார் ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். தெளிவான முறையில் பேசுவதன்மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம் என்பதில் நாங்கள் பூரண நம்பிக்கைகொள்ள வேண்டும்.

அமைச்சு பதவிகளை பொறுப்பெடுத்த மறுநாள் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், நிகாப் மற்றும் புர்கா உடையை நிரந்தரமாக தடைசெய்வதற்கான உத்தரவை அமைச்சர் தலதா அத்துகொரல சமர்ப்பித்திருந்தார். அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட்டால் நிகாப், புர்கா தடை இல்லாமல் போய்விடும். அதன்பின்னர் நாட்டிலுள்ள பேரினவாத அமைப்புகள் அதை தூக்கிப்பிடித்து பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் அதை நிரந்தரமாக தடைசெய்வதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டுகிறது.

குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நான் வாசித்துப் பார்த்தபின், இந்தப் பிராந்தியத்தில் நிகாப், புர்கா ஆடைகளை தடைசெய்யும் முதலாவது நாடாக இலங்கை வருவதற்கு எந்த தேவையுமில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன். ஜனாதிபதிதான் இந்த விடயத்தை அவசரப்படுத்துவதாக தலதா அத்துக்கொரல சொன்னார். நான் ஜனாதிபதியிடமும் விடயத்தை எடுத்துக்கூறி, சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேசி மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவாரம் காலஅவகாசம் கேட்டிருக்கிறேன். இந்த சட்டமூலம் குறித்தும் நான் பிரதமரிடம் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் பெண்களின் உடைமைகளுக்கும் கண்ணியத்துக்கும் சில சோதனைகள் வரலாம். இந்த சூழ்நிலையில் முகம் மூடுவதை தற்காலிகமாக தவிர்ந்துகொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பெண்களுக்கு அறிவிறுத்தியிருந்தன. நிகாப், புர்காவுக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. தனிமனித உரிமைகளில் கைவைக்க முடியாது. அது அடிப்படை மனித உரிமை மீறலாகவே கருதப்பட வேண்டும்.

முஸ்லிம் விவாவக, விவாகரத்து சட்டத்தில் இரு அறிக்கைகள் இருப்பதாகவும், எங்களுக்குள் உள்முரண்பாடு காணப்படுவதுமான தோற்றப்பாடு வெளியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இருக்கின்ற ஓர் அறிக்கையில் சில விவகாரங்களில் உடன்பாடு காணப்படாமல் இருப்பதே உண்மையாகும். முன்வைக்கப்படும் மாற்றுத் தீர்வுகளில் சட்டம் (ஷரீஆ) தொடர்பான  பிரச்சினைகள் குறித்து நாங்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம். இதில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து, இதனை சட்டவாக்கப்படுவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

முஸ்லிம் விவாவக, விவாகரத்து சட்டம் முழுவதும் ஷரீஆ அல்ல. அதற்கு முரணான சில விடயங்களும் அதில் காணப்படுகின்றன. உதாரணமாக, இஸ்லாத்தில் இல்லாத சீதனம் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இதை இல்லாமல் செய்யவேண்டும். சமூகத்தில் செய்யப்பட்ட சில வழக்காறு விடயங்களையும் உள்வாங்கி செய்யப்பட்ட இந்த சட்டத்தில், இன்னும் ஓரிரு விடயங்கள் மாத்திரமே இணக்கப்பாடில்லாமல் இருக்கிறது. இவற்றுக்கும் விரைவில் விடைகாணலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்துகொண்டிருக்கிறோம்.

மத்ரசாக்களை நெறிப்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்வதற்கான சட்டவாக்கம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. மத்ரசாக்களில் காணப்படும் சமூகம்சார்ந்த பலவீனங்களை களைவதுதான் இதன் நோக்கமாகும். மத்ரசாக்களிலிருந்து வெளியேறும் ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்)  தரமானவர்களாவும் தொழில்பயிற்சி பெற்றவர்களாவும் இருப்பதற்கான திட்டங்களை அரசாங்கத்தினூடாக செய்வதற்கு துறைசார்ந்தவர்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

இக்கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் நாடளாவிய ரீதியிலிருந்து வருகைதந்த பெருந்திரளான சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.

நல்லூர் ஆலய வளாகம் படைத்துறை பாதுகாப்பில்

நல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 01ஆம் திகதி வரையில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் ஆலயத்தின் பாதுகாப்பையும் , ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்து மூடப்பட்டு வீதி தடைகள் போடப்பட்டு , மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆலய சூழலில் இன்றைய தினம் விசேட தேடுதல் நடவடிக்கைகளை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்டு ஆலய சூழலை தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

ஆலயத்திற்கு வருவோரில் சந்தேகத்திற்கு இடமானவர்களை சோதனை செய்தவதற்கான சோதனை கூடங்கள் ஆலயத்திற்கு செல்லும் நான்கு வீதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை இம்முறை ஆலய சூழலில் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 25 இலட்ச ரூபாய்க்கு மேல் யாழ்.மாநகர சபை செலவு செய்வதாக தகவல்கள் மூலம் அறிய கிடைத்துள்ளன.

நல்லூர் ஆலய சூழலில் 650 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான செலவீனமாக 20 இலட்ச ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது.

நல்லூர் ஆலய சூழலில் உள்ள 5 பாடசாலைகளில் பொலிசார் தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள பாடசாலைக்கான மின்சார கட்டணம் , இதர தங்குமிட செலவீனம் , தேநீர் , சிற்றுண்டி குடிதண்ணீர் போத்தல் என சுமார் 20 இலட்ச ரூபாய் செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை 8 சோதனை கூடங்களை அமைப்பதற்காக 3 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் வீதி தடைகளுக்கான செலவு என சுமார் 25 இலட்ச ரூபாய் பாதுகாப்புக்காக யாழ். மாநகர சபை செலவு செய்யவுள்ளது என தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.