முன்னாள் இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சிறுநீரக நோயாளியான சுஷ்மாவிற்கு 2016இல் சிறுநீரகங்கள் செயலிழந்தன. டெல்கி “எயிம்ஸ்“ மருத்துவமனையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய்பட்டது. இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில் சுஷ்மாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 07.08 காலை உயிரிழந்தார்.
இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தியினை மலையக மக்கள் முன்னணி தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சுஷ்மா சுவராஜ் பற்றி குறிப்பிட்டுள்ளதாவது,
இந்தியாவின் அனுபவம் மிக்க அரசியல்வாதியும் சிறந்த பெண் ஆளுமையைக் கொண்டவரும் பெண்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும், இலங்கையின் ஒரு சிறந்த அரசியல் நண்பனுமாக இருந்த முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது செய்தியில், இலங்கையைப் பொறுத்தளவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மிகவும் சாதுர்ஜமாகவும், நுணுக்கமாகவும் செயற்பட்டு அதற்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர். பலமுறை இலங்கைக்கு விஜயம் செய்து இங்கு இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தமிழர் புறக்கணிக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மக்கள் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்றும், மக்களின் வாக்குரிமையை தான் பறிக்கவில்லை என்றும் மேலும் அவர் கூறினார்.
முடிந்தால் எதிர்வரும் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தயார் எனவும் தெரிவித்தார் தற்போதைய அரசாங்கம் நான்கரை வருடங்களாக கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றவில்லை என்பதால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் நல்லதொரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்திய கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்படுவதை தொடர்ந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக இருப்பதை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம். அதேபோல லடாக் பகுதியில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
யூனியன் பிரதேசமாக பிரிப்பதன் மூலம் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக லடாக் மாற இருக்கின்றது. இது குறித்து சிறிலங்கா ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தான் லடாக் சென்றிருப்பதாகவும், அனைவரும் கண்டிப்பாக பயணிக்க வேண்டிய இடம் அது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
70 சதவீதம் பௌத்த மத மக்களை கொண்ட லடாக் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக ஆகின்றது.
சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று 05.08 அன்று விஜயராம மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, மகிந்த பேசுகையில், தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்போதுள்ள அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் அவை எதையும் நிறைவேற்றவில்லை.
இந்த சந்திப்பில் ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன், டியு குணசேகர, திஸ்ஸ விதாரண, ராஜா கொல்லுரே, அருண் தம்பிமுத்து, ரி.சிறிதரன், பி.உதயராசா, வரதராஜப் பெருமாள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதால் பல சிங்களக் கட்சிகள் தமிழ் மக்கள் மீது அதிக அக்கறைகள் காண்பிப்பது போல நாடகமாடும் தமது படலத்தை ஆரம்பித்துள்ளன.
கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் நிர்மாணிக்கப்படும் நிலப்பரப்பு இலங்கைக்கு உட்பட்ட நிலப்பரப்பாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகள் 2023ஆண்டில் நிறைவடையும் என்று இந்தத் திட்டத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் தலைமை அதிகாரி கஸ்யப்ப செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
காணிகளை நிரப்பும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 3கிலோமீற்றர் தூரத்தை கொண்ட கடல் நீர் தடை நிர்மாணிப்பதில் 99 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. நிதி நகரத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 130 கோடி அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் உடற்சோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
பெண் பக்தர்களை சோதனைக் கூடத்திற்குள்ளும், ஆண் பக்தர்களை வெளியிலும் உடற் சோதனை செய்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் எடுத்துச் செல்லும் உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.
தமிழர் தாயகத்தை முழுமையாக பௌத்தமயமாக்கும் தொலைநோக்குடன் இலங்கை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பாளிகளாக உள்ளனர். அவர்களே அதற்கான பொறுப்புக்கூறலையும் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விடயம் குறித்து தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அநுராதபுரம் பௌத்த சமயத்தில் புனித நகரமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தாயகத்தின் முகவாயிலான வவுனியாவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஊடாக பௌத்த சமயத்தின் பெயராலான ஆக்கிரமிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன.
போரின் பின்னரான சூழலில் முல்லைத்தீவிலும், மன்னாரிலும், கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும், கூட்டமைப்பின் தலைமையின் கோட்டையான திருமலையிலும், மட்டக்களப்பிலும், அம்பாறை என்று தமிழர் பிரதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பௌத்த விகாரைகளையும் உருவச் சிலைகளையும் நிர்மாணிக்கும் பணிகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. போர் நிறைவுக்கு வந்து பத்து ஆண்டுகளாகியிருக்கின்றன. தற்போது வரையில் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நிர்மானங்களில் ஆகக்குறைந்தது ஒன்றைக் கூட தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பாதுகாத்திருக்கின்றோம் என்று கூறுவதற்கு எந்தவொரு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இயலுமை அற்றவர்களாக இருக்கின்றமையானது மிக வேதனைக்குரிய விடயமாகும். இவ்வாறிருக்க இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் நல்லூர் ஆலய முன்னறலில் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜா, பௌத்த ஆக்கிரமிப்புக்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தலையீடுசெய்ய வேண்டும் என்ற பொருள்பட உரையாற்றியிருந்தார். இதேபோன்று தான் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும்,சாந்தி சிறீஸ்கந்தராசாவும் இந்தியாவின் தலையீட்டினை கோரியிருக்கின்றார்.
போர் நிறைவுக்கு வந்து பத்து வருடங்களில் தமிழ்த் தேசிய அரசியலை நீக்கமுறச்செய்ததோடு இலங்கை அரசை இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாதுகாக்கும் முனைப்புடன் செயற்பட்டதோடு பிராந்திய,சர்வதேச தரப்புக்களுடனான உறவுகளை வலுவாக்குவதிலிருந்து விலகியிருந்து விட்டு தற்போது நடுக்கடலில் கப்பல் மூழ்கும் நிலையை அடைந்ததும் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தை கோரும் கூட்டமைப்பின் தன்நலம் சார்ந்த வியூகத்தை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களும் உணர்வார்கள். இதுவொருபுறமிருக்க, பௌத்த சமயத்தின் பெயரால் ஆக்கிரமிப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றபோது கூட புதிய அரசியலமைப்பு வருகிறது என்று தமிழ் மக்கள் மத்தியில் கண்கட்டு வித்தை காட்டிக்கொண்டிருந்த கூட்டமைப்பினர் ஆகக்குறைந்தது இடைக்கால அறிக்கையிலாவது பௌத்தத்திற்கு முதன்மை தானம் வழங்குவதையாவது எதிர்த்திருக்கலாம். ஆனால் அதனைச் செய்திருக்கவில்லை.
வரவு செலவுத்திட்டங்களுக்கும், நம்பிக்கையில்லாப்பிரேணை நிறைவேற்றுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் தயாகப்பிரதேசங்களில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பௌத்த நிர்மனங்களை முழுமையாக அகற்றவேண்டும் என்று ஒன்றொன்றாக கோரிக்கை வைத்திருந்தாலாவது இற்றைக்கு அரைவாசி நிர்மானங்கள் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவ்விதமான கருமங்கள் எவற்றையுமே சம்பந்தன் ஐயா தலைமையிலான கூட்டமைப்பு முன்னெடுக்காது பின்னடித்தமைக்கான காரணம் என்ன? ஆக, பௌத்த சமய நிர்மானங்கள் தாயகத்தினை ஆக்கிரமிப்பதை நாம் எதிர்க்கவில்லை என்பது தானே பொருளாகின்றது. அவ்வாறாயின் போருக்கு பின்னரான பௌத்த ஆக்கிரமிப்புக்கள் பற்றி பேசுவதாயின் கூட்டமைப்பினரே அதற்கான பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டியவர்களாகின்றனர். இதிலிருந்து இவர்கள் ஒருபோதும் விலகி நிற்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு அடுத்த தேர்தல்களிலும் அதன் பக்கமே சாயவுள்ள நிலையில் தற்போது தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பௌத்த நிர்மானங்களை தடுத்து நிறுத்தி அகற்றுவதற்கான திராணி கூட்டமைப்பிடம் இருக்கின்றதா?
கன்னியா விவகாரத்தில் இளைஞர் சமூகத்தின் எழுச்சியின் அச்சத்தால் நீதிமன்றத்தினை கூட்டமைப்பு நாடியதே தவிரவும் இதய சுத்தியுடன் கூட்டமைப்பு செயற்பட்டிருக்கவில்லை என்பது திண்ணம். தமிழ் தேசிய அரசியல் தலைமையின் கோட்டைக்குள்ளேயே நிலைமை அவ்வாறு இருக்கையில் ஏனைய பகுதிகள் பறிபோனாலும் வெறும் கூக்குரல் சத்தத்துடன் அனைத்தும் நின்றுவிடும்.
இந்த யாதார்த்தத்தை தாயக உறவுகள் புரிந்துகொண்டு பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்கு எதிராக சனநாயக வீச்சுமிக்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதோடு தமிழர் தாயகத்திலே கட்டமைப்பு ரீதியான இன அழிப்பை செய்துவரும் அரசை கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக எந்தவொரு முன் நிபந்தனையும் விதிக்காமல் ஆதரித்த தமிழ் சக்திகளை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த தீர்ப்பு தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது. அதாவது, டெனிஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத்திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
முன்னைய அமைச்சரை நீக்குவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டும் ஏன் அதனை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை என்ற கேள்வியை நீதியரசர்கள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்துப் பற்றி நீதியரசர்கள் ஆராய்ந்திருக்கத் தேவையில்லை.
ஆளுநர் தன் கடமையில் தவறிவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும். எனினும், ஆளுநருக்கே சகல உரித்துக்களும் உண்டு என்று நீதிமன்றம் கூறுவதில் இருந்து 13வது திருத்தச்சட்டத்தின் குறைபாட்டை மக்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இந்த 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டிய அரசியல் யாப்பையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ‘புதிய யாப்பு’ என கூறுகின்றது.
ஆளுநர் அரசாங்க முகவர் முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர். மக்கள் பிரதிநிதிக்கு இல்லாத உரித்து ஆளுநருக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளதை வைத்து 13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.
இனியாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றெடுக்க முன்வருவார்களா?” என தெரிவித்துள்ளார்.
சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள் ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சனாதிபதி மைத் திரிபால சிறிசேன தன்னுடைய ஆதரவை ஒக்டோபர் 18ஆம் திகதி மீளப்பெற் றதால் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தோம். இன்றைக்கு எங்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருகின்றது உண்மைதான். மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வ தென்று எங்களுக்கும் தெரியாமல் இருகின்றது.
ஆனால் நாங்கள் நம்பிக்கையிழக்கக் கூடாது. தொடர்ந்தும் நாங்கள் ஒரே போக்கில் செல்ல முடியாது. எங்களுடைய போக்குகளில் நாங்கள் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370 – வது அரசியல் சட்டப் பிரிவை நீக்குவதாக இந்திய அரசு செய்துள்ள முடிவு காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்டும் நம்பிக்கை துரோகமாகும் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கூறிய வாக்குறுதிகளை ஏற்காமல் இந்தியாவுடன் இணைவது என காஷ்மீர் மக்கள் முடிவு செய்த போது அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டது.
இந்திய அரசின் ஆளும் கட்சிகள் மாறலாம்.ஆனால் அரசு அளித்த வாக்குறுதி நிலையானது அதை மீறுவது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
காஷ்மீர் மக்களுக்கு நேர்ந்த நிலை நாளை தமிழ்நாட்டிற்கும் பிற மாநிலங்களுக்கும் நேரலாம்.எனவே இந்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
காசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்! – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் எச்சரிக்கை!
இதனிடையே, 05.08.2019 சம்மு காசுமீர் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் வெளியிட்ட அறிப்பை, முற்பகல் உள்துறை அமைச்சர் அமீத்சா மாநிலங்களவையில் வெளியிட்டார். அதில் சம்மு – காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி உரிமைகள் கொண்ட உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்ல, சம்மு – காசுமீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் ஒன்றிய அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதிலும், லடாக் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது!
சம்மு காசுமீர் மக்களின் தேசிய இன உரிமைகளைப் பறித்து பா.ச.க. ஆட்சி நிகழ்த்தியுள்ள சனநாயகப் படுகொலையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஆங்கிலேய ஆட்சியின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, சம்மு காசுமீர் மன்னராட்சியின் கீழ் தனிநாடாக இருந்தது. இந்திய விடுதலையின் போது, சம்மு காசுமீரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள பாக்கித்தான் கேட்டது; இந்தியா தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கேட்டது. பாக்கித்தானிலிருந்து படையெடுத்து வந்த ஒரு பிரிவினர் – காசுமீரின் ஒரு பகுதியைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அந்தப் பகுதிதான் இப்போது பாக்கித்தானில் உள்ள “ஆசாத் காசுமீர்”. காசுமீரைக் கைப்பற்ற இந்தியப் படைகளும், பாக்கித்தான் படைகளும் மோதிக் கொண்டன.
அந்த நேரத்தில், காசுமீர் மன்னர் அரிசிங்கிற்கும் இந்திய அரசுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. மன்னர் அரிசிங் அந்த ஒப்நத்ததில் 26.10.1947 இல் கையெழுத்திட்டார். இந்தியா சார்பில் அன்றைய வைசிராய் மவுண்ட் பேட்டன் 27.10.1947இல் கையெழுத்துப் போட்டார். அதில் தனி நாடாக இருந்த சம்மு காசுமீரின் தன்னுரிமைக்கு – தன்னாட்சிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கூறப்பட்டது.
அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் சவகர்லால் நேரு, “சம்மு காசுமீரிலிருந்து இந்தியப் படையை விடுவித்துக் கொள்வோம். காசுமீர் யாருடன் இருப்பது என்பதை காசுமீர் மக்களே முடிவு செய்யட்டும்” என்று உறுதி கூறினார். இந்த உறுதிமொழியை அன்றைய பாக்கித்தான் தலைமையமைச்சர் லியாகத் அலிகானுக்கு நேரு 31.10.1947 அன்று தந்தியாகக் கொடுத்தார். பின்னர், 1953ஆம் ஆண்டு ஆகத்து 20 அன்று புதுதில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் பண்டித நேரும், பாக்கித்தான் தலைமையமைச்சர் முகமது அலி போக்ராவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் காசுமீர் மக்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாக்கித்தானோடு இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா என்பது பற்றி சம்மு காசுமீரிலும், ஆசாத் காசுமீரிலும் “கருத்து வாக்கெடுப்பு” (Plebiscite) நடத்தப்படும் என்று உறுதியளித்தார்கள்.
இந்தப் பின்னணியிலிருந்து சம்மு காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் கொடுத்த தனிச்சிறப்புரிமைகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
சம்மு காசுமீர் சட்டப்பேரவை – அம்மாநிலத்தின் அரசமைப்பு அவையும் (அரசியல் நிர்ணய சபையும்) ஆகும். சம்மு காசுமீருக்கு இந்திய அரசுக் கொடியும் உண்டு, மாநில அரசின் தனிக்கொடியும் உண்டு. சம்மு காசுமீரில் வெளி மாநிலத்தவர் நிலம் போன்ற சொத்துகளை வாங்கத் தடை, வெளி மாநிலத்தவர் குடியுரிமை பெறத் தடை உள்ளிட்ட சிறப்புரிமைகள் இருக்கின்றன.
இவற்றைவிடக் கூடுதல் உரிமைகள் சம்மு காசுமீருக்கு ஏற்கெனவே இருந்தன. 1952இல் சம்மு காசுமீர் முதலமைச்சர் தலைமையமைச்சர் (பிரதமர்) என்று அழைக்கப்பட்டார். அங்கு ஆளுநர் பதவி இல்லை!
இவற்றையும் இன்னபிற காசுமீர் அதிகாரங்களையும் காங்கிரசு ஆட்சி பறித்துவிட்டது. இப்போது, இதர இந்திய மாநில அரசுக்குள்ள மிகக்குறைந்த அதிகாரங்களையும் பா.ச.க அரசு பறித்துவிட்டது.
சம்மு காசுமீரை இரண்டு மாநிலங்களாக்கி – யூனியன் பிரதேசமாக மாற்றியதை இப்போது நாம் கண்டிக்கிறோம். இனி, தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களையும் இதேபோல் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முயற்சியின் முன்னோட்டம் தான் சம்மு காசுமீர் பிரிவினையும் உரிமைப்பறிப்பும்!
சம்மு காசுமீரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் சனநாயகக் கட்சி போன்றவை தங்களின் பதவி வெறிக்காக காங்கிரசு, பா.ச.க. கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி சேர்ந்து இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளன. இன்னொருபக்கம், மக்களுக்கு வெளியே வெடிகுண்டு விடுதலைப் போராளிகள் நடத்தும் தீவிரவாதச் செயல்கள், மக்களின் மீதான அரசின் அடக்குமுறையை தீவிரப்படுத்தத்தான் பயன்படுகின்றன.
காசுமீரின் அவ்விரு கட்சிகளைப் போன்றவைதான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். காசுமீருக்கு ஏற்பட்டது போன்ற ஆபத்துகள் தமிழ்நாட்டிற்கு வந்தால் இவ்விரு கழகங்களாலோ, இவைபோல் முதலமைச்சர் – அமைச்சர் அதிகாரத்துக்காக மூச்சை வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகளாலோ தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியாது!
பதவி ஆசையற்ற இலட்சியத் தமிழ்த்தேசியத்தின்பால் இலட்சோப இலட்சம் வெகுமக்கள் திரண்டு அறப்போராட்டம் – சனநாயகப் போராட்டம் நடத்தும் ஆற்றல் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டு உரிமைகளை காக்க முடியும் என்ற படிப்பிணையைத் தமிழர்கள் பெற வேண்டும்.