ஒருமைப்பாட்டிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பானது நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
ஒருமைப்பாட்டிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பானது நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்ற போது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருமாவளவன் எழுதிய “அமைப்பாய்த் திரள்வோம்“ நூலின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு “விம்பம்“ என்ற அமைப்பு லண்டனில் ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ஆகஸ்ட் 23ஆம் திகதி திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். இந்த புத்தக விமர்சனக் கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் திகதி லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள ட்ரினிடி சென்டரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் தொடங்கிய போது உள்ளே நுழைந்த சிலர், திருமாவளவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் கூட்ட அமைப்பாளர்களால் வெளியேற்றப்பட்டனர். இதற்குப் பிறகு அந்தக் கூட்டம் நடந்து முடிந்தது. இதற்கு அடுத்த நாள் லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்திலும் திருமாவளவன் பேசினார்.
புத்தக விமர்சனக் கூட்டத்தில் நடந்த சலசலப்பு குறித்து, சமூக வலைத்தளங்களில் பலவிதமான செய்திகள் பகிரப்பட்டன.
கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் உட்பட 100 தமிழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அவர்களால் அனுபவித்து வருகின்றோம். இதற்கு முடிவு கட்டி தமிழர்களின் கலாசாரததை, பண்பாட்டை காக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நிதி உதவி அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஈழத்தமிழர், உன்னைப் போன்ற ஆட்களால் தான் தமிழ் இனமே அழிந்தது, எங்கள் மக்கள் அழிவிற்கு காரணமான தி.மு.க, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த துரோகி. உன்னைப் போல் உள்ளவர்களால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம். இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டு வை. பணம் தானே வேணும் பொறுக்கிக் கொள் என்று பணத்தை விட்டு எறிந்தார். மேலும் தமிழர்களை இனி ஏமாற்றி உங்களால் மதமாற்றம் செய்ய முடியாது. என்று திட்டித் தீர்த்தார்.
இது தொடர்பாக திருமாவளவன் ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில், “விம்பம்“ அமைப்பைச் சே்ந்தவ்கள் நீண்டகாலமாகவே இம்மாதிரி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாகவே இந்த அமைப்பின் புலிகளுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்களால் நடத்தப்படும் கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்கலாமா என வலைத்தளங்களில் எழுதியிருந்தனர்.
கூட்டம் ஆரம்பமானதும் கூட்டத்திலிருந்த இருவர் பலத்த சத்தமிட்டனர். அவர்களின் கைகளில் கலைஞர், அண்ணா, ஸ்டாலின், சோனியா காந்தி ஆகியோரின் படங்கள் இருந்தன. அவர்களை கூட்ட அமைப்பாளர்கள் வெளியேற்றினர். அவர்கள் பேசியதோ, கூச்சலிட்டதோ எனக்குப் புரியவில்லை. சத்தம் போட்டவர்கள் வெளியேறியதும், கூட்டம் சுமுகமாக நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சிக்காக பணம் கேட்டதாக ஊடகவியலாளர் கேட்ட போது, திருமாவளவன் அதை கடுமையாக மறுத்தார்.
அந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல வேறு எங்குமே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களிடம் பணம் கொடுங்கள் என நான் கேட்டதில்லை என்று கூறினார்.
லண்டன் சென்ற மூன்று பேரும் (நான் உட்பட) எங்கள் செலவிலேயே சென்றோம் என்று கூறினார்.
இது பற்றி விழா அமைப்பாளரிடம் கேட்ட போது, திருமாவளவன் காசு திரட்டும் நோக்கில் வரவில்லை என்றும், தங்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு எதிர்கொள்ளும் சவால்களை பற்றிப் பேசவே வந்தார் என்றும் கூறினார். குழப்பவாதிகள் வெளியேறியதும் கூட்டம் சுமுகமாக நடைபெற்றதாகவும் சொன்னார்.
வெலிஓயா (மணலாறு) நிக்கவெவ பகுதியில் சிங்களவர்களால் வழிபட்டு வந்த பிள்ளையார் சிலை காணாமல் போனது தொடர்பாக வெலிஓயா காவல்துறையினரிடம் சிங்கள மக்கள் புகார் அளித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலை வெகுகாலத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதென்றும் அச்சிலை மிகப் பெறுமதி வாய்ந்ததென்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெலிஓயா பிரதேச மக்கள் நெல் பயிரிட்ட பின்னர் முதலாவது அறுவடையை பிள்ளையாருக்காக ஒதுக்குவதாகவும் அனைத்து அறுவடைகளும் முடிந்த பின்னர் பிள்ளையாருக்காக பால்சோறு சமைத்து படையல் செய்து விழா போல கொண்டாடுவது அப்பகுதி மக்களின் வழக்கமாக இருந்து வருகின்றது.
சம்பந்தப்பட்ட பிள்ளையார் சிலை கடந்த 27ஆம் திகதி இரவு யாரோ சிலரால் களவாடப்பட்டிருக்கலாம் என காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ள அப்பிரதேச மக்கள், அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிள்ளையார் சிலை காணாமல் போன பின் அப்பிரதேச மக்கள் பெரும் கவலையோடு இருப்பதாக அறிய முடிகின்றது.
எமது தாயகப் பிரதேசமான மணலாறு இன்று வெலிஓயா எனப் பெயரிடப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட ஒரு பிரதேசமாகும். இன்று மணலாறு என்ற பெயர் மறைக்கப்பட்டு (மறக்கப்பட்டு) வெலிஓயா என்ற பெயரே எல்லோருக்கும் தெரிந்த பெயராக உள்ளது. அத்துடன் அந்தப் பகுதியில் வசித்து வரும் சிங்கள மக்கள் அங்கு சுதந்திரமாக வாழ்வதுடன், நெல்பயிரிட்டு வளமாக வாழ்ந்து வருகின்றனர். இதே நேரம் இந்தப் பகுதிக்குச் சொந்தமான தமிழரோ இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தொழில் இன்றி, தங்குவதற்கு வீடு இன்றி பல இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதை அரசாங்கம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதை அரசாங்கம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் இதுவரையில் பதில் கூற முன்வரவில்லை. காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் எவரும் நாட்டின் எந்த சிறைகளிலும் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
ஆனால், இறுதி யுத்தத்தில் தமது பிள்ளைகளை உயிருடன் இராணுவத்திடம் கையளித்த மைக்கான ஆதாரங்களை வைத்துக்கொண்டே தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என எம்மவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றார்கள். இவர்கள் சிறையிலோ அல்லது படையினரிடமோ இல்லையென்றால் படையினர் இவர்களை என்ன செய்தனர் என்று அரசாங்கம் பதில் கூற வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளை கண்துடைப்பு நடவடிக்கைகளாகவும் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவுமே காணாமலாக்கப்பட்டோர் அலுவலகங்களை வடக்கு கிழக்கில் அரசாங்கம் திறந்து வருகின்றது.
ஆகவேதான், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை எமது மக்களும் நானும் ஆரம்பம் முதலே எதிர்த்துவந்தோம். பல்லில்லாத பாம்புகளாகவே தற்போது காணாமலா க்கப்பட்டோர் அலுவலகங்கள் காட்சியளிக்கின்றன.
ஆகவே, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் காத்திரமான ஒரு தலையீட்டை மேற்கொண்டு எமது மக்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும்.
இதேவேளை, வடக்கு கிழக்கின் காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை காலை 10.00 மணிக்கு வடக்கு கிழக்கு இணைந்த போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனையிலும் வவுனியா மாவட்டத்தில் ஓமந்தையிலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
இதற்கு சகல தரப்பினரும் எந்த விதமான கட்சி வேறுபாடுகளும் அரசியல் வேறுபாடு களும் இன்றி தமது முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். தமிழ் மக்கள் கூட்டணி இந்த போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது. எனது கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் 5பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சமூகவலைத் தளத்தில் தொடர்புடையவர்கள் என்று கூறி ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் இதே பகுதியில் முகமது உசேன், ஷாஜகான், ஷேக் அப்துல்லா ஆகியோரின் இல்லங்களில் சோதனை செய்த அதிகாரிகள் அவர்களை கோவை பந்தைய சாலையில் உள்ள தமது அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
குறிப்பாக கடந்த வாரம் லக்ஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை வழியாக கோவைக்கு வந்திருப்பதாக கூறி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தற்போது தேசிய புலனாய்வு அமைப்பினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் 3 மணிநேரம் சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்ற சோதனை முடிவில் 5பேர் வீடுகளில் இருந்து 7 அரபு மொழிப் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த 5பேரையும் நாளை கொச்சி தேசிய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் ஆஜராகும்படி கட்டளை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வருகின்றது. இத்தகைய சூழலில், விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக ரஷ்யாவிடமிருந்து புதிதாக போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 ரக போர் விமானங்களையும், 12 சுகோய்-30 ரக அதிநவீன போர் விமானங்களையும் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு வசம் உள்ள சுகோய்-30 விமானங்கள் சேதமடைந்துள்ள காரணத்தினால், 12 சுகோய்-30 ரக அதிநவீன போர் விமானங்களை வாங்க உள்ளதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் நாளை வெள்ளிக்கிழமை மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியொன்றை நடாத்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைத்தலைவி மதனா பாலகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
நாளை 30 ஆம் திகதி சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இந்த பேரணியை நடாத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,கல்லடியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாளை காலை 8.00மணிக்கு கல்லடி பாலத்தில் இருந்து இந்த பேரணி ஆரம்பமாகி காந்தி பூங்காவரையில் சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
கடந்த 10வருடமாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் இதுவரையில் அவர்களுக்கு எந்தவிதமான தீர்வும் கிட்டாத நிலையே இருந்துவருவதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைத்தலைவி மதனா பாலகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
காணாமல்போனோருக்கான நீதியானது சர்வதேச விசாரணைகள் மூலமே பெற்றுக்கொள்ளமுடியும்.கலப்பு பொறிமுறைமூலம் எங்களுக்கான எந்த நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாது.அதேபோன்று மாவட்டம் தோறும் காணாமல்ஆக்கப்பட்டோரை கண்டறியும் அலுவலகம் திறக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.
எமது இந்த போராட்டம் வெற்றிபெறவேண்டுமானால் சகல அரசசார்பற்ற நிறுவனங்களும் வர்த்தக சங்கங்களும்ääபல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் தலைவர்கள்,பொதுமக்கள்,ஆட்டோ சங்கங்கள்,விளையாட்டு,இளைஞர் கழகங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் கிழக்கு மாகாணத்திலும் அதிகளவான மக்கள் காணப்படுகின்றனர்.இதேபோன்று கல்முனையிலும் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் பேரணி நடைபெறவுள்ளது.
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் தளர்ந்த நிலையிலும் போக்குவரத்துகள் செய்யமுடியாத நிலையிலும் உள்ளனர்.அவர்களை கருத்தில்கொண்டே மட்டக்களப்பில் இந்த போராட்டத்தினை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 10வருடத்திற்கும் மேலாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தினை நடாத்திவரும் நிலையில் இந்த அரசாங்கம் பாராமுகமாகவே இருந்துவருவதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக்கூட தெரிவிக்க அரசாங்கம் பின்னடித்துவரும் நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்த காரணத்தினால் சர்வதேசத்தினை நோக்கி தாங்கள் நிற்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் நோய்நொடியிலும் காணப்படுவதாகவும் பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் எனவே இந்த மக்களுக்கு சர்வதேச சமூகம் உரிய நீதியைப்பெற்றுக்கொடுக்கமுன்வரவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் விளைவாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை நம் கண்முன்னே நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போரின்போதும், அதன்பிறகானக் காலக்கட்டத்தின்போதும் எண்ணற்ற ஈழத்தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த எந்த விபரங்களும் இன்றுவரைத் தெரிவிக்கப்படவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:.
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் பலர் உரிய விசாரணையின்றி பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரணடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்டநடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் சீர்திருத்த முகாம்களில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறி வருகின்றது. இவர்களைத் தவிர மேலும் சில ஆயிரம் பேர் காணாமல் போனதாகக் குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன. ஈழப்போர் தொடங்கிய 30 ஆண்டுகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் இவ்வகையில் காணாமல் போனதாகத் தெரிகிறது.
இந்நிலையில், 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் நிலை என்னவானது? அவர்களை உடனடியாக நேர்நிறுத்த வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை மீட்பதற்காக, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழீழத்தில் இலங்கை அரசின் கடுமையான உயிர் அச்சுறுத்தல்களுக்கிடையே 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அறவழியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழீழத்தில் காணாமல் போனோர் சிக்கல் தீர்க்கப்படாமல் இருப்பதோடு நாளுக்கு நாள் காணாமல் போனோரின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்லும் அவலம் தொடர்கிறது.
இதுகுறித்து விவரிப்பதற்காக, ஆகத்து 30 – பன்னாட்டு காணாமல் போனோர் நாளன்று (International Day of the Disappeard) காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில்* ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் செய்தியாளர்களை அனுப்பி, செய்தி சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமக்கு வாக்களிக்காமல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ளவேண்டும் என முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே, மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வியின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு,
கே: சர்வதேச ரீதியில், மனித உரிமை மீறல் பிரச்சினைகளையும், உங்களுடைய ஆட்சி எதிர்நோக்கியிருந்தது. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதேபோன்ற பிரச்சினைகள் மீண்டும் வலுக்கும் வாய்ப்புள்ளதல்லவா?
இலங்கையின் முடிவுகளை, வேறு நாடுகளுக்குத் தேவையான வகையில் எடுக்க முடியாது. உதாரணத்துக்கு, இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது, ஜனாதிபதியின் தீர்மானமாகும். அதை எம்மால் எதிர்க்க முடியாது.
தற்போது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றியவராவார். ஆனால், அப்போது இருக்காத பிரச்சினை, தற்போது அவர் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாகப் பதவி உயர்வு பெறும்போது வருவது வேடிக்கையானது. அப்படிப் பார்த்தால், இந்நாட்டில் எவருக்கும் பதவி உயர்வு வழங்க முடியாது போகும்.
ஜனாதிபதிதான் இந்த நாட்டின் தலைவர். அதனால், அவருடன் பணியாற்றக்கூடிய ஒருவரைத்தான் இந்த நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும். தவிர, வேறு நாடொன்றுக்குத் தேவையான ஒருவரை நியமித்து, அந்த நாட்டுக்குத் தேவையான விதத்தில் பணியாற்ற முடியாது. அதனால், ஜனாதிபதியின் முடிவு சரியானதே. இருப்பினும், அதை எதிர்ப்பதை, பொதுவான விடயமாகவே பார்க்க முடியும்.
கே: தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் குவிக்க முடியுமென்ற நம்பிக்கை உள்ளதா?
உண்மையில், அவர்களுடைய வாக்குகளை எதிர்பார்த்து, அவர்களுக்காகப் பணியாற்ற நாம் நினைக்கவில்லை. அவர்களுடைய வாக்குகள் எங்களுக்கு முக்கியம்தான். ஆனால், அதுவொன்றையே எதிர்பார்த்துக்கொண்டு, அவர்களுக்கான நாம் பேசவில்லை. அவர்களுடைய நலனுக்காகத்தான், அவர்கள் பற்றி நாம் பேசுகின்றோம்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், நான் என்னுடைய ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து, வேறெந்த அபிவிருத்தியும் அங்கு இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
ஒருவர் கூறியிருந்தால், வடக்குக்கான ஆறு பிரதான வீதிகள் இருந்தன, அவற்றில் ஐந்து, மஹிந்த காலத்தில் புனரமைக்கப்பட்டதோடு சரி, மற்றொன்று இதுவரையில் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைமைகள் பற்றி, இந்த அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை.
விவசாயிகள் பற்றிக் கவனிப்பார் யாருமில்லை இப்போது. அதனால், தனியார் நெல் கொள்வனவாளர்கள் வந்து, 26, 28 ரூபாய்க்கென, நெல்லைக் கொள்வனவு செய்துகொண்டு செல்கிறார்கள்.
இதுபற்றி, எந்தவோர் அரசியல் தலைவரும் பேசவில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில், நெல்லுக்கான உத்தரவாத விலையொன்றை நிர்ணயித்து, விவசாயிகளுக்கு அதைப் பெற்றுக்கொடுத்தோம். இன்று தாம் உற்பத்தி செய்துள்ள மரக்கறிகளைக்கூட, நல்ல விலைக்கு விற்பனை செய்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.
வடக்கில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்க மறுக்கிறார்கள். இப்படியாக, வடக்குக்கென்று எதையும் செய்துகொடுக்கவில்லை. ஜப்பான் உதவியுடன், வடக்கின் வைத்தியசாலையைப் புனரமைத்துக் கொடுத்தேன். கொழும்பிலுள்ள வைத்தியசாலையிலும் பார்க்க, அங்கு பல வசதிகள் உள்ளன. இப்படியாக, மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம். ஆனால், இந்த அரசாங்கம் எதைச் செய்துள்ளது.
பாடசாலைகள், விஞ்ஞானகூடம் போன்றவற்றைக் கொடுத்தோம். யுத்தத்தால் பல ஆண்டு பின்னோக்கி நகர்ந்த பிரதேசம் முன்னேற வேண்டுமாயின், இவ்வாறான வசதிகளைக் கொடுத்துதான், அங்கிருக்கும் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும். அப்போது, சரியானவர் யார், தவறானவர் யாரென்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
கே: தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, உங்களுடைய தரப்பு மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் உங்கள் சகோதரரைப் பார்த்தால் பயப்படுகிறார்கள். அந்த அச்சநிலையைப் போக்குவதற்கான உங்கள் தரப்பு நடவடிக்கைகள் என்ன?
உண்மையில், இந்தக் “கோட்டா பயம்” என்பது, தவறான கண்ணோட்டமாகும். யுத்தத்துக்குப் பின்னர் உருவாக்கி விடப்பட்ட பொய்ப் பிரசாரமே இந்தக் “கோட்டா பயம்” ஆகும். கோட்டாபய வருகிறார் என்ற அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அவர் மீதான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அதுவரையில், அவர் பற்றிய அச்சம் இருக்கவில்லை.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற சில திருமண வைபவங்கள், மரணச் சடங்குகளிலும் கோட்டாபய பங்கேற்றிருந்தார். அப்போது, கோட்டாபய யாரெனத் தெரியாததால் அவர் பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இன்று, கோட்டாபய தான் வேட்பாளர் என்ற நிலை வந்ததும், அவரைப் பார்த்து பலரும் அச்சப்படுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கி விடப்பட்டதே இந்த கோட்டா பயமாகும். அதனால் எவருக்கும், குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, “கோட்டா பயம்” தேவையில்லை. நானும் அவர் கூடவேதான் இருக்கப்போகிறேன். அதனால், எவரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை, அழுத்தம் திருத்தமாகக் கூறிக்கொள்கிறேன்.
உண்மையில் இந்தப் பயம், மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவானால்தான் ஏற்பட வேண்டும். ஒரு நாட்டில், பயங்கரவாதம் தலைதூக்குமாயின், அந்தப் பயங்கரவாதியைப் பாதுகாக்க, எவரும் விரும்பமாட்டார்கள்.
வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள், அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு, அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டு, தமது முஸ்லிம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்தார்கள்? அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள், அரசாங்கத்தைக் காப்பாற்றினார்கள், எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால், மக்களுக்குத் தேவையானது எதுவெனப் பார்த்து, அரசாங்கத்தினூடாக அவற்றைச் செய்துகொடுக்கவில்லை.
வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு பிரச்சினைகள் உள்ளன, பட்டாரிகள் வேலையற்று இருக்கிறார்கள். இவை பற்றி அவர்கள் பேசவில்லை.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதை விடுத்து, அரசமைப்பு உருவாக்குவது பற்றி மட்டுமே பேசினார்கள். கூட்டமைப்பினர் அவர்களுக்கான கடமைகளைச் செய்யவில்லை என்று அதனால்தான் சொல்கிறேன். இதற்கு, கூட்டமைப்பினரே பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் அவர்களுடைய மக்களைப் பார்த்துக்கொள்ளவில்லை என்பதை, குற்றச்சாட்டாகவே நான் முன்வைக்கிறேன்.
கே:. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா?
ஆம். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். முதலில், கோட்டாபயவை அந்த மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கொழும்பிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள், அவரை அறிவார்கள். அதனால் கொழும்பிலுள்ளவர்களுக்கு அவரைப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஆனால், வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி, அவர் மீதுள்ள அச்சத்தைப் போக்க வேண்டும்.
இப்படியாக, மக்கள் மத்தியில் சென்று, மக்கள் ஆதரவைத் திரட்டுவோம். காரணம், என்மீது தமிழ் மக்களுக்கு அன்பு இருக்கிறது. அதை நான் நம்புகிறேன். அதனால், அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள். அந்த ஆதரவை, என் சகோதரனுக்கும் அவர்கள் வழங்குவார்கள். ஆனால், ஊழலின்றி, அபிவிருத்திகளைச் சரியாகச் செய்வதற்கு கோட்டாவே சிறந்தவர். அதை அவர் நிரூபித்தும் உள்ளார்.
கே: உங்களுடைய ஆட்சி மீண்டும் வந்தால், வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம், இராணுவ முகாம்கள் அதிகரிக்கப்படும் வாய்ப்பு ஏற்படலாம், மக்கள் மீதான நெருக்கடி அதிகரிக்கலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கான பதில் என்ன?
இது பொய்ப் பயம். இராணுவ முகாம்களோ இராணுவத்தினரோ அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம், இப்போதைக்கே வடக்கு, கிழக்கிலுள்ள முகாம்களின் எண்ணிக்கையும் இராணுவத்தினரின் எண்ணிக்கையும், வரையறைக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. அதனால், அதுபற்றி அச்சம் தேவையில்லை. தேசியப் பாதுகாப்புக்கு மேலதிகமாக, எந்தப் படையும் நிலைநிறுத்தப்படாது.
இராணுவம் என்பது, சிங்கள இராணுவம் அல்ல. இது, இந்த நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்புக்காக உள்ள படையாகும். அந்தப் படை, அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கவே பணியாற்றும். தவிர, தமக்குத் தேவையான மாதரி பணியாற்ற, இராணுவத்துக்கோ பாதுகாப்புப் படையினருக்கோ அதிகாரம் இல்லை.
கே: அப்படியானால், படை அதிகரிப்போ, முகாம் அதிகரிப்போ மேற்கொள்ளப்பட மாட்டாதென, உங்களால் உறுதியளிக்க முடியுமா?
ஆம், பொதுமக்களுக்கு இடையூறாக, வடக்கில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பாதுகாப்புத் தரப்பினரை உருவாக்க மாட்டோம். அதை நிச்சயமாக என்னால் கூறிக்கொள்ள முடியும்.
கே: நீங்கள் ஆட்சிக்கு வந்ததும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, 6 மாதக் காலப்பகுதிக்குள் தீர்வு வழங்கப்படுமென்று டக்ளஸ் தேவானந்த எம்.பி கூறியுள்ளார். இது சாத்தியமா?
கொடுக்க முடிந்தால் நாம் கொடுப்போம். காரணம், இதுபற்றி நாம் பேசவேண்டும். உடனடியாக, சரி கொடுப்போம் என்று கூறிவிட முடியாது.
13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எனக்கு வாக்களிக்காமல், என்னிடம் அந்தத் தீர்வை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டும்.
தவிர, எங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாது. எங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், எங்களுடன் இணைந்து ஒரு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளலாம்.
கே: நீங்கள் என்னதான் வாக்குறுதிகளை வழங்கினாலும், மீண்டும் தாம் ஏமாற்றப்படுவோம் என்ற எண்ணமே இப்போது தமிழ் மக்களுக்கு உள்ளது. அந்த எண்ணத்தைப் போக்க, நீங்கள் என்ன செய்யவுள்ளீர்கள்?
வாக்குறுதியளித்துவிட்டு, எதை நாம் செய்யாமல் விட்டிருக்கிறோம் என்பதைக் கூறுங்கள். மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் 99 சதவீதமானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கவில்லை.
தெற்கிலுள்ள மக்கள், எனக்கு முதன்முறையாக வாக்களிக்கும் போது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்றுதான் கோரினார்கள். அதை நான் நிறைவேற்றினேன். அந்த நம்பிக்கையில் தான், இரண்டாவது முறையாகவும் அவர்கள் என்னையே தேர்ந்தெடுத்தார்கள். அந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்ததால் தானே, இன்று தமிழ் மக்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். இவ்வாவிட்டால், எத்தனை உயிர்களை இந்த யுத்தம் காவுகொண்டிருக்கும்.
தமிழ் மக்கள் மட்டுமன்றி, இந்நாட்டு மக்கள் அனைவரும், இந்த யுத்தத்திலிருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதனால் நான் உறுதியாகக் கூறுவதென்னவென்றால், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.
கே: மலையத் தமிழ் மக்கள் குறித்த பிரச்சினைகளுக்கான உங்களுடைய வேலைத்திட்டங்கள் என்ன?
உண்மையில், மலையக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். அங்கிருந்து வரும் இளைஞர் – யுவதிகள், புதிய வேலைவாய்ப்புகளை நோக்கி நகர வேண்டும். அதற்காக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாடசாலைக் கல்வி முறைகள், தொழில்நுட்பக் கல்லூரிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கான புதிய கல்வித் திட்டங்களைப் புகுத்த வேண்டியது கட்டாயம்.
மலையக மக்கள், எப்போது தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களாக இருக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கையும் முன்னேற்றங்காண வேண்டும். அம்மக்களுடைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அவர்களுக்கென்ற நிலையான சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதை வழங்க வேண்டுமாயின், தேயிலைத் தோட்டங்கள் இலாபம் பெறுவனவாக மாற வேண்டும். அதற்கு, தேயிலைகளின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும். உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
இதன்மூலமே, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதனால், அவர்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டு, பணிகள் முன்னெடுக்கப்படும்.
இந்திய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் ஆகஸ்ட் 25 – 29 வரை இடம்பெறும் கல்விச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டனர்.
இந்தப் பிரதிநிதிகளின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் உரம்குமாரத் சுரேஷ் குமார் அவர்கள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இம்மாதம் 26ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத் தலைமையதிகாரி மற்றும் பிரிகேடியர் நவ்பிரீட் சிங் அளங் ஆகியோரை சிறிலங்கா இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா வரவேற்று இராணுவத் தளபதியின் பணிமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற உயரதிகாரிகள் இராணுவத் தளபதியை சந்தித்து கலந்துரையாடினர். அத்துடன் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.
இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சூராஜ் பங்ஷஜயா, கருத்தரங்கிற்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி உயரதிகாரிகளுக்கு இராணுவத்தின் தற்போதைய பதவிகள் மற்றும் பணிகளை விளக்கினார். பின்னர் இந்த உயரதிகாரிகள் குழுவினர் பத்தரமுல்லவில் அமைந்துள்ள இந்திய சமாதான படையணி நினைவுத் தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களை நினைவுபடுத்தி தங்கள் கௌரவ அஞ்சலிகளை செலுத்தினர்.
அதன் பின்னர் இந்த உயரதிகாரிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் விமானப்படைத் தளபதியைச் சந்தித்தனர்.
இந்த தூதுக் குழுவில் இராணுவம், கடற்படை, இந்திய ஆயுதப்படைகளின் விமானப்படை அதிகாரிகள், பங்களாதேஸ் ஆயுதப்படைகள், பூட்டான் ஆயுதப்படைகள் சவூதி அரேபிய ஆயுதப்படைகள் மற்றும் பதினொரு துணைவர்கள் அடங்கிய அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே லெப். ஜெனரல் சவேந்திர சில்வா என்ற போர்க்குற்றவாளியின் நியமனத்திற்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், ஐநாவும், மேற்குலக நாடுகளும் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ள நிலையில் இந்தியா தனது படை அதிகாரிகளை அனுப்பி அவரை சந்தித்து வருவது அவருக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது.