லண்டன் கூட்டத்தில் திருமாவளவன் ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கினாரா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்ற போது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திருமாவளவன் எழுதிய “அமைப்பாய்த் திரள்வோம்“ நூலின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு “விம்பம்“ என்ற அமைப்பு லண்டனில் ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ஆகஸ்ட் 23ஆம் திகதி திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். இந்த புத்தக விமர்சனக் கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் திகதி லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள ட்ரினிடி சென்டரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் தொடங்கிய போது உள்ளே நுழைந்த சிலர், திருமாவளவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் கூட்ட அமைப்பாளர்களால் வெளியேற்றப்பட்டனர். இதற்குப் பிறகு அந்தக் கூட்டம் நடந்து முடிந்தது. இதற்கு அடுத்த நாள் லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்திலும் திருமாவளவன் பேசினார்.

புத்தக விமர்சனக் கூட்டத்தில் நடந்த சலசலப்பு குறித்து, சமூக வலைத்தளங்களில் பலவிதமான செய்திகள் பகிரப்பட்டன.

கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் உட்பட 100 தமிழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அவர்களால் அனுபவித்து வருகின்றோம். இதற்கு முடிவு கட்டி தமிழர்களின் கலாசாரததை, பண்பாட்டை காக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நிதி உதவி அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

Thiruma 2 லண்டன் கூட்டத்தில் திருமாவளவன் ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கினாரா?அப்போது இலங்கையைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஈழத்தமிழர், உன்னைப் போன்ற ஆட்களால் தான் தமிழ் இனமே அழிந்தது, எங்கள் மக்கள் அழிவிற்கு காரணமான தி.மு.க, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த துரோகி. உன்னைப் போல் உள்ளவர்களால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம். இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டு வை. பணம் தானே வேணும் பொறுக்கிக் கொள் என்று பணத்தை விட்டு எறிந்தார். மேலும் தமிழர்களை இனி ஏமாற்றி உங்களால் மதமாற்றம் செய்ய முடியாது. என்று திட்டித் தீர்த்தார்.

இது தொடர்பாக திருமாவளவன் ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில், “விம்பம்“ அமைப்பைச் சே்ந்தவ்கள் நீண்டகாலமாகவே இம்மாதிரி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டிருந்தார்கள்.  இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாகவே இந்த அமைப்பின் புலிகளுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்களால் நடத்தப்படும் கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்கலாமா என வலைத்தளங்களில் எழுதியிருந்தனர்.

கூட்டம் ஆரம்பமானதும் கூட்டத்திலிருந்த இருவர் பலத்த சத்தமிட்டனர். அவர்களின் கைகளில் கலைஞர், அண்ணா, ஸ்டாலின், சோனியா காந்தி ஆகியோரின் படங்கள் இருந்தன. அவர்களை கூட்ட அமைப்பாளர்கள் வெளியேற்றினர். அவர்கள் பேசியதோ, கூச்சலிட்டதோ எனக்குப் புரியவில்லை. சத்தம் போட்டவர்கள் வெளியேறியதும், கூட்டம் சுமுகமாக நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சிக்காக பணம் கேட்டதாக ஊடகவியலாளர் கேட்ட போது, திருமாவளவன் அதை கடுமையாக மறுத்தார்.

அந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல வேறு எங்குமே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களிடம் பணம் கொடுங்கள் என நான் கேட்டதில்லை என்று கூறினார்.

லண்டன் சென்ற மூன்று பேரும் (நான் உட்பட) எங்கள் செலவிலேயே சென்றோம் என்று கூறினார்.

இது பற்றி விழா அமைப்பாளரிடம் கேட்ட போது, திருமாவளவன் காசு திரட்டும் நோக்கில் வரவில்லை என்றும், தங்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு எதிர்கொள்ளும் சவால்களை பற்றிப் பேசவே வந்தார் என்றும் கூறினார். குழப்பவாதிகள் வெளியேறியதும் கூட்டம் சுமுகமாக நடைபெற்றதாகவும் சொன்னார்.