மணலாறில் காணாமல் போன பிள்ளையார்

வெலிஓயா (மணலாறு) நிக்கவெவ பகுதியில் சிங்களவர்களால் வழிபட்டு வந்த பிள்ளையார் சிலை காணாமல் போனது தொடர்பாக வெலிஓயா காவல்துறையினரிடம் சிங்கள மக்கள் புகார் அளித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிலை வெகுகாலத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதென்றும் அச்சிலை மிகப் பெறுமதி வாய்ந்ததென்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெலிஓயா பிரதேச மக்கள் நெல் பயிரிட்ட பின்னர் முதலாவது அறுவடையை பிள்ளையாருக்காக ஒதுக்குவதாகவும் அனைத்து அறுவடைகளும் முடிந்த பின்னர் பிள்ளையாருக்காக பால்சோறு சமைத்து படையல் செய்து விழா போல கொண்டாடுவது அப்பகுதி மக்களின் வழக்கமாக இருந்து வருகின்றது.

சம்பந்தப்பட்ட பிள்ளையார் சிலை கடந்த 27ஆம் திகதி இரவு யாரோ சிலரால் களவாடப்பட்டிருக்கலாம் என காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ள அப்பிரதேச மக்கள், அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிள்ளையார் சிலை காணாமல் போன பின் அப்பிரதேச மக்கள் பெரும் கவலையோடு இருப்பதாக அறிய முடிகின்றது.

எமது தாயகப் பிரதேசமான மணலாறு இன்று வெலிஓயா எனப் பெயரிடப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட ஒரு பிரதேசமாகும். இன்று மணலாறு என்ற பெயர் மறைக்கப்பட்டு (மறக்கப்பட்டு) வெலிஓயா என்ற பெயரே எல்லோருக்கும் தெரிந்த பெயராக உள்ளது. அத்துடன் அந்தப் பகுதியில் வசித்து வரும் சிங்கள மக்கள் அங்கு சுதந்திரமாக வாழ்வதுடன், நெல்பயிரிட்டு வளமாக வாழ்ந்து வருகின்றனர். இதே நேரம் இந்தப் பகுதிக்குச் சொந்தமான தமிழரோ இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தொழில் இன்றி, தங்குவதற்கு வீடு இன்றி பல இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.