காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் ஐ.நா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் சி.வி.விக்னேஸ்வரன்

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதை அரசாங்கம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதை அரசாங்கம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் இதுவரையில் பதில் கூற முன்வரவில்லை. காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் எவரும் நாட்டின் எந்த சிறைகளிலும் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், இறுதி யுத்தத்தில் தமது பிள்ளைகளை உயிருடன் இராணுவத்திடம் கையளித்த மைக்கான ஆதாரங்களை வைத்துக்கொண்டே தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என எம்மவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றார்கள். இவர்கள் சிறையிலோ அல்லது படையினரிடமோ இல்லையென்றால் படையினர் இவர்களை என்ன செய்தனர் என்று அரசாங்கம் பதில் கூற வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளை கண்துடைப்பு நடவடிக்கைகளாகவும் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவுமே காணாமலாக்கப்பட்டோர் அலுவலகங்களை வடக்கு கிழக்கில் அரசாங்கம் திறந்து வருகின்றது.

ஆகவேதான், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை எமது மக்களும் நானும் ஆரம்பம் முதலே எதிர்த்துவந்தோம். பல்லில்லாத பாம்புகளாகவே தற்போது காணாமலா க்கப்பட்டோர் அலுவலகங்கள் காட்சியளிக்கின்றன.

ஆகவே, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் காத்திரமான ஒரு தலையீட்டை மேற்கொண்டு எமது மக்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும்.

 

இதேவேளை, வடக்கு கிழக்கின் காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை காலை 10.00 மணிக்கு வடக்கு கிழக்கு இணைந்த போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையிலும் வவுனியா மாவட்டத்தில் ஓமந்தையிலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதற்கு சகல தரப்பினரும் எந்த விதமான கட்சி வேறுபாடுகளும் அரசியல் வேறுபாடு களும் இன்றி தமது முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். தமிழ் மக்கள் கூட்டணி இந்த போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது. எனது கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.