Home Blog Page 2421

யாழ்ப்பாணம் – புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து

யாழ்ப்பாணம் – புதுச்சேரிக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்திருந்த மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் உரங்கள் இரசாயனத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டலியாவை கோயில் இணை ஆணையாளர் ந.நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர்.

கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு பத்திரிகையாளர்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்தியா இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாண நகருக்கான போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது என்றார்.

Attachments area

கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்களே கஜேந்திரன் குற்றச்சாட்டு

கருணா, பிள்ளையான், மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்களே தவிர அவர்களினால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோப்பாவெளியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அரசாங்கத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது. அவர்களின் உறவினர்கள் வீதிகளில் கண்ணீருடன் அலைந்து திரிகின்றனர். அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். இதேவேளை, நாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி எந்த அரசாங்கத்தினையும் ஆதரிக்கவோ, எந்தவொரு சர்வதேச சக்திகளின் தேவைக்காவும் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவினை அரசாங்கத்திற்கு வழங்கப் போவதோ கிடையாது.

அத்துடன் எமது பகுதிகளைத் திட்டமிட்டு புறக்கணித்து எமது மக்களை பொருளாதர ரீதியாக அழிக்க முற்படுகின்ற போது அந்த அரசாங்கத்தின் முகவர்களாக செயற்படுகின்ற வியாழேந்திரன், கருணா, பிள்ளையான் ஆகியோரால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

ஏனெனில் இவர்கள் இந்த அரசாங்கத்தின் முகவர்களாவார்கள். அவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுகின்றனரே தவிர அவர்களினால் முடிவுகளை எடுக்க முடியாது. அவர்கள் எந்தக் கருத்துக்களையும் சொல்ல முடியாது.

மேலும் சி.வி.விக்னேஸ்வரனை ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம். அவரை வைத்துத் தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் சமஸ்டியை உருவாக்குவதற்கான அழுத்தத்தினை வழங்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டமும் எழுதப்பட்டது.

ஆனால் விக்னேஸ்வரனோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுபவர் என தன்னைக் காட்டிக் கொண்டு பேரவை தயாரித்த தீர்வுத் திட்டத்தில் தமிழ் தேசம் இறைமை என்பதை உள்ளடக்குவதற்கு அவர் மறுத்து விட்டார். எனவே விக்னேஸ்வரன் மாயமான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாரிற்குப் பின்னால் வராது, விக்னேஸ்வரனுக்குப் பின்னால் செல்ல வைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தினை முன்னெடுத்து வருகின்றார்” என்று கூறினார்.

தேசிய கீதத்தைப் பாடி போராட்டத்தை முடித்த சென்னை இஸ்லாமியர்கள்

சென்னையில் குடியுரிமைத் திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டம் நிறைவடைந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னையிலும் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் வகையில், பல்வேறு பகுதிகளிலிருந்து கலைவாணர் அரங்கம் அருகே ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்தனர்.

அங்கிருந்து பேரணியாகச் சென்று சட்டப் பேரவையை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்ததால், சேப்பாக்கம் வரை இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்றனர். 35 கமராக்கள் 100 கண்காணிப்பு கமராக்கள் மூலம் காவல்துறையினர் பேரணியை கண்காணித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர் தேசிய கீதம் பாடி போராட்டத்தை முடித்து வைத்தனர்.

உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதல் இந்தமுடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. முன்னதாக சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. 5 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்கும் நடைமுறையை பின்பற்றாததால், மார்ச் 11 ஆம் திகதி வரை இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ள சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது

அமெரிக்கா தடையை முதலில் எனக்கே விதித்தது: சரத் பொன்சேகா சொல்கின்றார்

அமெரிக்காவினால் முதலாவதாகப் பாதிக்கப்பட்டவன் நானே. அமெரிக்கா எனக்கே முதலில் விஸா வழங்க மறுத்தது. எனக்கு விஸா வழங்கப்படாமை தொடர்பில் எதுவும் பேசாதவர்கள் சவேந்திர சில்வாவுக்குத் தடை வந்தவுடன் முதலைக் கண்ணீர் வடித்தபடி பேசுவது அரசியல் இலாபம் தேடுவதற்கே என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்தி வைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவத் தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல. அவருக்கு ஏற்பட்டுள்ள நிலையை நானும் எதிர்க்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

பூரண குணடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சீனப் பெண்

கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த சீனப் பெண், வைத்தியசாலையிலிருந்து நேற்றுக் காலை வெளியேறினார்.

உலகையே உலுக்கும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டு, கொழும்பு தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து அவர் குணமடைந்தபோதிலும், அவரது உடல் நிலை தொடர்ந்து கவனிக்கப்பட்டு, பூரண தேக ஆரோக்கியத்துடன் நேற்றுக் காலை வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

விக்னேஸ்வரன் ஒரு மாய மான்; சாடுகின்றார் கஜேந்திரன்

விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள், கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் தனக்குப் பின்னால் வரவைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தை அவர் முன்னெடுத்து வருகிறார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு – கோப்பாவெளியில் அமைக்கப்பட்டுள்ள குடிதண்ணீர்த் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“விக்னேஸ்வரனை நாங்கள் ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம். அவரை வைத்துத் தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.2014ஆம் ஆண்டு அரசலமைப்பினை உருவாக்கவிருந்த காலத்தில் ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கும் சமஷ்டியை உருவாக்குவதற்கான அழுத்தத்தை வழங்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படை யில் ஓரு தீர்வுத் திட்டமும் எழுதப்பட்டது.

ஆனால் இந்த விக்னேஸ்வரனோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்படுபவர் எனத் தன்னை காட்டிக்கொண்டு தமிழ் மக்களின் அபிலாஷை மீது பற்று கொண்டவர் எனக் காட்டிக்கொண்டு, தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத் திட்டத்தில் தமிழ்த் தேசம், இறைமை என்பதை உள்ளடக்குவ தற்கு அவர் மறுத்துவிட்டார்.

தமிழ் மக்கள் பேரவை ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு பேரெழுச்சியை விக்னேஸ்வரன் நாசமாக்கினார் – குழப்பியடித்தார். இன்று விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்றார். கூட்டமைப்பு தென்னிலங்கைக்கு விலை போய்விட்டதாகக் கூறுன்றார். ஆனால் இவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. விக்னேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படுவது போன்று ஒரு நாடகமாடுகின்றார்” என்றார்.

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம்: கெஹலிய ரம்புக்வெல உறுதி

சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை வைத்துக் கொண்டு அமெரிக்கா எம்மை மிரட்ட முடியாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு அடிபணியாது என்று அரச பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் எனவும், இந்தக் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசு விலக முடியாதவாறு அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமிபேரா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாளத்துக்கேற்ப அமெரிக்கா ஆடுகின்றதோ அல்லது அமெரிக்காவின் தாளத்துக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆடுகின்றதோ என எமக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த நாட்டின் ஜனாதிபதி சம்பந்தன் அல்லர் கோட்டாபய என்பதை அமெரிக்கா முதலில் கருத்தில்கொள்ள வேண்டும்.

கோட்டாபய அரசுடன் பேசாமல் சம்பந்தன் குழுவினர் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் கதைகளைக் கேட்டுக்கொண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா அநாவசியமான முடிவுகளை எடுப்பதுடன் விசமத்தனமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றது” என்றார்.

ஒரு வார பயணமாக நாளை இந்தியா செல்லும் ரணில்; குருவாயூர் கோவிலிலும் தரிசனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளாரென தெரிகிறது.

பெங்களூரில் நடக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் செல்லும் ரணில் அது முடிந்த பின்னர் குருவாயூர் கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளார்.

பெங்களூரில் ரணில் கலந்து கொள்ளும் நிகழ்வில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்து பத்திரிகை நடத்தும் இந்த நிகழ்வில் கடந்த வருடம் பிரதமர் மஹிந்த கலந்து கொண்டிருந்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ரணில் இந்தியா செல்வது குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுகின்றது: உத்தியோகபுர்வமாக அறிவித்தார் மஹிந்த

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா செல்ல பயணத்தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க பயணத்தடை விதித்திருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவை வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அப்பாற் சென்று 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இலங்கை பாதுகாப்பு தரப்பனருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உள்ளடங்கிய நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மாணவனின் வீட்டில் தாக்குதல்! மூவர் கைது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவனின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவனின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டு அவரது மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவன் பகிடிவதை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய 3 இளைஞர்களை சங்கானை பிரதேசத்தில் வைத்து மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரிடம் இருந்து இரும்பு கம்பிகள், தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மனிதர்களுக்கு காயம் ஏற்படுத்தும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.