Home Blog Page 2403

பிணை முறி மோசடி விவகாரம்-ரவி உள்ளிட்ட சிலருக்கு எதிராக பிடியாணை பெறுமாறு ஆலோசனை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் சரத்சந்திர உள்ளிட்ட சிலரை நீதிமன்றின் ஊடாக பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்களை கைது செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இனப்படுகொலை: ஐ.நா. மனித உரிமைகள் பேரவை சுயேட்சையான விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து விசாரிக்க சுயேட்சையான விசாரணை அமைப்பை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(03) வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“2009ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை தொடர்ந்து உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக ஒரு விசாரணைப் பொறியமைவை உருவாக்க 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை அரசும் இருந்தது. அவ்வாறு தாங்கள் பங்கேற்று நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து வெளியேறுகிறோம். அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்ஸ அறிவித்துள்ளார். இது மீண்டும் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அனுமதிக்கக் கூடாது. இலங்கை இனப்படுகொலைகள் குறித்து சுயேட்சையான விசாரணை அமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 2015ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை முன்மொழிந்த இலங்கை அரசு, அதன் பின்னர் 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் கூடிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டங்களிலும் இந்தத் தீர்மானத்தை அன்றைய மைத்திரிபால அரசு வலியுறுத்தி வந்தது.

தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்ஸ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு ஒப்புக் கொண்ட எதையும் நிறைவேற்றப் போவதில்லை. அந்தத் தீர்மானத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த கோத்தபாயா ராஜபக்ஸ தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை அரசின் நடவடிக்கை அமைந்திருக்கின்றது.

உள்நாட்டு சட்டங்களைக் கொண்டு நாங்கள் நீதி வழங்க எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று கோத்தபாயா ராஜபக்ஸ கூறினாலும், அங்கு தமிழர்களுக்கு எவ்வித உரிமையும், நியாயமும் வழங்கப்படாது என்பதே வெளிப்படையான உண்மை. இந்நிலையில், தற்போதுள்ள அரசாங்கத்தைக் கலைத்து விட்டு புதிதாகத் தேர்தல் நடத்த கோத்தபாயா அறிவிப்புச் செய்துள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன் கையில் கொண்டு வருவதற்கு அவர் திட்டமிட்டிருக்கின்றார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தியே தமிழர்களுடைய உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கக்கூடிய ஆபத்து இருக்கின்றது.

எனவே, சர்வதேச சமூகம் இதை வேடிக்கை பார்க்கக்கூடாது. தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ள ஐ.நா.வின் மத சுதந்திரத்திற்கான பதிவாளர் இலங்கையில் இன அடிப்படையிலான பகைமை அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் வெறுமனே வருத்தம் தெரிவித்ததோடு நின்று விடாமல் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முன்வரவேண்டும். இலங்கை அரசு அந்தத் தீர்மானத்திலிருந்து வெளியேறி விட்ட நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை சுயேட்சையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைத்து இலங்கை இனப்படுகொலை குறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடடால் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகி விடும். அதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் 4,800 பேர் பாதிப்பு, அமெரிக்காவில் 6 பேர் பலி

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், உலகம் முழுவதும் இதுவரையில் 3,056 பேர் பலியாகியுள்ளதுடன், 90,000 பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் நான்காவது பெரும் பொருளாதார நாடான தென்கொரியாவில் 4,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 34 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவிலும் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் 40 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதுடன், இத்தாலிக்கு சுற்றுலாவுக்கு சென்ற பாடசாலை மாணவர்கள் பலருக்கு பாடசாலைகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வரும் பயணிகள் சிறீலங்காவில் தரையிறங்க தடை

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சிறீலங்கா அரசு அதிக அச்சமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகள் சிறீலங்காவில் தரையிறங்குவதை உடனடியாக தடை செய்வதாக சிறீலங்கா சுகாதார அமைச்சர் அனில் ஜெயசிங்கா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் தடுத்துவைக்க சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்ததாக இந்த 3 நாடுகளிலும் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவிகே சிவஞானத்தின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள்.

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சிவிகே சிவஞானத்தின் காலத்தில்தான் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்றதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையில் இன்றைய தினம் இடம்பெற்ற வரும் மாதாந்த கூட்டத்தின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சிவிகே சிவஞானத்தின் காலப்பகுதியில்தான் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட சட்டவிரோத வேலைத்திட்டங்களிற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவற்றை இன்றுவரை நிவர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஈபிடிபி கட்சியின் உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது மாகாண சபையின் அவைத் தலைவராக செயற்பட்டு வரும் சிவிகே சிவஞானம் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக செயற்பட்டு வந்த காலத்தில் தான் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மக்கள் பாவனையிலிருந்த வீதி ஒன்று மூடப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல் பல்வேறுபட்ட சட்டவிரோத வேலைத்திட்டங்கள் அவருடைய காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது அவற்றை இன்றுவரை திருத்திக் கொள்ள முடியாது காணப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே பல்வேறு கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன – ஸ்ரீநேசன்

வடகிழக்கில் தற்போது பல்வேறு கட்சிகள் சூழ்ச்சிகள் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று ஏமாற்றிவிட்டு அந்த வாக்கினைக்கொண்டு தங்களின் வியாபார முதலீடாகக் கொண்டு தாராளமாக உழைத்துக்கொண்டவர்கள், மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு ஆனந்த சங்கரியின் சூரியன் சின்னத்தினை வாடகைக்கு எடுத்து தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

வடகிழக்கில் இன்று பல்வேறு கட்சிகள் சூழ்ச்சிகள் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அமைச்சர் தெளிவாக ஒரு விடயத்தினை கூறியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் இருந்து வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற அழிவுகள், படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல், மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளன. இந்த விடயங்களில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகின்றது என்ற அர்த்தம் இதன் மூலம் கொள்ளப்படுகின்றது.

உள்ளக பொறிமுறை மூலம் இவற்றினை செய்யமுடியும் என இலங்கையால் கூற முடியும். ஆனால் உள்ளக பொறிமுறையென்பது வெற்றியளிக்காத ஏமாற்றுவித்தை என்பதை கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு செயற்பாடுகள் மூலம் நாங்கள் விளங்கியுள்ளோம்.

இந்த நிலையில், ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் இருந்து விலகியதன் ஊடாக இந்த நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தமுடியாது, மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றத்தினை அடையமுடியாது, பொறுப்புக்கூறமுடியாது என்பதன் அர்த்ததினையே நாங்கள் புரிந்துகொள்ளமுடிகின்றது” என மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கும் யாழ். மாநகரசபை மேயர்

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தான் களமிறங்கத் தயாராக உள்ளதாக யாழ். மாநகரசபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.

வடமாண சபை உறுப்பினராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இராஜினாமா செய்து, மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு யாழ். மாநகரசபை மேயராகப் பதவியேற்றிருந்தார்.

இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் களமிறங்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வனவளமே எம்மின வளம்”உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020″-விக்கிரமன்

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் 2014ஆம் ஆண்டு முதல் மார்ச் 3ஆம் திகதியை உலக வனவிலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தி, வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் வனவிலங்குகளின் அழிவு மனித குலத்தை எவ்வகையில் பாதிக்கும் என்பதையும் அதனை தடுத்து, நிரந்தர அபிவிருத்தியை எவ்வாறு நிலை நிறுத்தலாம் என்றும் அறிவுறுத்தி வருகிறது. இவ்வகையில் 2020ஆம் ஆண்டு “உலகில் அனைத்து உயிரினங்களதும் வாழ்வை நிலை நிறுத்தல்” எனும் தொனிப் பொருளில் வினவிலங்குகளும், தாவரங்களும் உயிரியல் விரிவாக்கத்திற்கும் நிலைத் தன்மைக்கும் மூலாதாரம் என்பதை வலியுறுத்தி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இச்செயற்பாடுகள் வறுமை ஒழிப்பு, நிலையான மூலவள பாதுகாப்பு, நிலத்திலும், நீரிலுமான உயிர்வள பராமரிப்பு, மற்றும் உயிரின விரிவாக்க மேம்பாடு என்பவற்றை பிரதான செயற்றிட்ட இலக்குகளாக கொண்டு முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.800x750 48 வனவளமே எம்மின வளம்"உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020"-விக்கிரமன்

உலகளாவிய இயற்கை தொடர்பான விழிப்புணர்வு

அண்மைக் காலங்களில் இடம்பெற்று வரும் காட்டுத்தீ, வெள்ளம், பனிப்புயல், நில அதிர்வு போன்ற இயற்கை அனர்த்தங்களும் புதிய வகை நோய் தொற்றுகளும் இயற்கையின் சீற்றத்தை கட்டியம் கூறி நிற்கின்றன. காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனம் 1992ஆம் ஆண்டு முதல் இயற்கை வளம் பேணல் தொடர்பான பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயற்பட்டு வருகின்ற போதும், தொழில்நுட்ப புரட்சியின் பேரில் அளிக்கப்பட்ட இயற்கை வளங்களை மீள கட்டியெழுப்புவதில் நவீன உலகம் பின்தங்கியே உள்ளது.

இதற்கு முதலாளித்துவ நாடுகளின் விட்டுக் கொடுப்பில்லாத பொருண்மிய போட்டியும், அசண்டையீனமும் பிரதான காரணமாக அமைவதாக கூறப்பட்டாலும், இயற்கையை பேணும் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனின் கைகளிலும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எமது சந்ததியின் பொறுப்புணர்வின்மை இளைய சமுதாயத்தை விழிப்படைய செய்துள்ளதுடன், அவர்கள் தமது எதிர் காலத்துக்காக வீதிகளில் இறங்கி போராடும் புறச்சூழலை நாமும் எம் அரசுகளும் ஏற்படுத்தியுள்ளோம் என்பதே இன்றைய யதார்த்தம்.download 1 வனவளமே எம்மின வளம்"உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020"-விக்கிரமன்

அண்மைக் காலங்களில் பிரபலமாகி வரும் கிரேட்டா தன்பேர்க் எனும் 17 வயது சிறுமி கிளர்ந்தெழுந்து வரும் இளைய சமுதாயத்தின் குறியீடாக திகழ்கிறார். அண்மையில் அவர் குறிப்பிட்டது போல்

“நாங்கள் இப்போது உரிய வகையில் செயற்படவில்லையானால், பின்பொரு நாளில் நீங்கள் என்ன செய்தீர்கள் எனும் கேள்விக்கு பதிலளிக்க முடியாதவர்களாவீர்கள்”.

இன்றைய சுற்றுச் சூழல் அனர்த்தங்கள் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்டு வருவதனால், எம்முனவர்களுக்காக சிறுவர்களாகிய நாம் தீவிரமாக செயற்பட நேரிட்டுள்ளது என கூறும் அவர், தவிர்க்க முடியாமல் நாம் எம் இளவயது இன்ப வாழ்வை துறந்து வீதிகளில் இறங்கி துப்பரவு செய்யவும் போராடவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என மனவேதனையோடு இளையோரே இயற்கையை பாதுகாக்க வாரீர் என அறைகூவல் விடுக்கிறார்.

இயற்கையும் தமிழர் வாழ்வியலும்

இயற்கையோடு இணைந்த வாழ்வை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மனித குலம் இனங்கண்டு கடைப்பிடித்து வந்திருக்கிறது. இவ்வகையில் தமிழினத்துக்கு என்று ஓர் தனித்துவம் உள்ளதை வரலாறு சான்று பகர்ந்து நிற்கிறது.

சங்ககால இலக்கியங்களிலும், திருக்குறள் முதலான நூல்களிலும் பல்வேறு இடங்களில் இயற்கையோடு இணைந்த வாழ்வை புலவர்கள் பதிவு செய்து சென்றிருப்பது இதற்கான ஆதாரமாக கொள்ளலாம். புறநானூற்றில் வரும் பாடல்கள் பல இயற்கையை பேணுதலின் முக்கியத்துவத்தை சுட்டிச் காட்டுவதாக அமைகின்றன.

அவ்வகையில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் எனும் புலவர் போரில் வென்ற பாண்டிய மன்னனை பார்த்து “கடிமரந் தடித லோம்புநின் நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே” என்று பாடியதாக ஓர் பாடல் வரியுண்டு. இங்கு அப்புலவர் நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க! ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக!

நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க! அவர் கடிமரங்களை (காவல் மரங்களை) மட்டும் தடியாமல் விடுக! அவை நின் யானைகட்குக் கட்டுத் தறியாகும் வன்மை யுடையவல்ல”

என்று பாடுகின்றார். இங்கு மனிதரை மற்றும் அவர் செல்வங்களை அழித்தாலும், இயற்கையின் செல்வங்களான மரங்களையும், விலங்குகளையும் அழித்து விடாதீர்கள் எனும் கருத்தினூடு தமிழர் தம் இயற்கையை பேணும் பாரம்பரியம் வெளிப்பட்டு நிற்கிறது.

அண்மைய முப்பதாண்டு வனவள மேம்பாட்டில் தமிழர் பங்கு

உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு தோன்றிய எண்பதுகளில் தமிழ்நாடு முன்மாதிரியாக விளங்கி மர நடுகையையும் சூழல் பாதுகாப்பையும் முதலமைச்சர் எம்.ஜி இராமச்சந்திரன் தலைமையில் முன்னெடுத்ததன் சான்றுகள் இன்றும் தமிழ் நாட்டின் வீதியோரங்களில் சான்று பகர்ந்து நிற்கின்றன.

ஈழத்தில் முதலாம் ஈழப்போரின் ஆரம்ப கட்டம் முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் மரம் நடுகை, இயற்கை விவசாயம் என்பவற்றை ஊக்குவித்தமையை எவரும் மறந்துவிட முடியாது. இதுவே இரண்டாம், மூன்றாம் ஈழப்போரின் போது மேன்மையடைந்து வனவள பிரிவென்ற தனிப்பிரிவின் கீழ் வனவள, வனவிலங்கு பாதுகாப்பு, மேம்பாடு என்பன உரிய விழிப்புணர்வு, மேம்பாட்டு செயற்றிட்டங்கள் மற்றும் கடுமையான சட்டங்கள் என்பவற்றினூடு செயற்படுத்தப்பட்டு வந்ததை எவரும் மறந்து விட முடியாது.tamil eelam defacto state 6 2 வனவளமே எம்மின வளம்"உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020"-விக்கிரமன்

ஆனால் அவ்வாறு பேணப்பட்ட வனவளம் யாவும் 2009 இன் பின்னர் சிறீலங்கா அரச படைகளினால் சூறையாடப்பட்டு எமது தாயக வனவளம் சிதைக்கப்பட்டதும் தொடர்ந்து மின்வழங்கல், வீதி அபிவிருத்தி, பாதுகாப்பு, தொல்பொருள் பேணல் எனும் திரைகளின் பின் சிதைக்கப்பட்டு வருவதும் இனவழிப்பின் இன்னொரு பரிமாணமாகவே நோக்கப்பட வேண்டும். இவ்வகை இயற்கைவள அழிப்பிற்கும் அதனூடான இனவழிப்பிற்கும் எமது அரசியல்வாதிகளும், சுயநலம் மிக்க வியாபாரிகளும் துணை போவது மிகவும் வேண்டத்தகாததும், வேதனைக்குரியதும், வினைத்திறனுடன் முறியடிக்கப்பட வேண்டியதுமாக உள்ளது.

வனவளமே எம்மின வளம்

எம்மின விடுதலையில் அதியுச்சம் தொட்ட முப்பதாண்டுகளும் இயற்கையோடிணைந்த வாழ்வை கொண்டிருந்ததும், “இயற்கை எனது நண்பன்” எனும் தலைவனின் வாசகமும் எம் மனத்தடத்தில் இருந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டுமெனில், எம் இளைய தலைமுறை வளவள பாதுகாப்பிலும் இயற்கை வளம் பேணலிலும் முன்னின்று உழைக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

எனவே தாயகத்தின் இன்றைய இளைய தலைமுறை இதற்கான கிராமிய செயற் குழுக்களை அமைத்து செயற்படுவதுடன், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் வளவள பாதுகாப்பிற்கும் இயற்கைவள மேம்பாட்டிற்குமாக உழைக்க உறுதிபூண வேண்டும்.

அம்முயற்சிகளின் உந்துகோலாக புலம்பெயர் தேசமெங்கும் உள்ள எம் இயற்கைவள நிபுணர்கள் தாயக வனவள மேம்பாட்டிற்கான திட்டங்களை வரைந்து செயலுரு கொடுப்பதன் மூலம் எம்மின இருப்புக்கும், மேம்பாட்டுக்கும் மனிதகுல மேம்பாட்டிற்கும் வழிசமைக்க இன்றைய நாளில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பரீட்சை பெறுபேறுகள் குறித்து முக்கிய அறிவிப்பு.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட பெறுபேறு மற்றும் நாடளாவிய ரீதியான அடைவு மட்டம் வெளியிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் டிசம்பர் 2ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.

இந்த பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தது. பரீட்சைக்காக 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.