வனவளமே எம்மின வளம்”உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020″-விக்கிரமன்

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் 2014ஆம் ஆண்டு முதல் மார்ச் 3ஆம் திகதியை உலக வனவிலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தி, வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் வனவிலங்குகளின் அழிவு மனித குலத்தை எவ்வகையில் பாதிக்கும் என்பதையும் அதனை தடுத்து, நிரந்தர அபிவிருத்தியை எவ்வாறு நிலை நிறுத்தலாம் என்றும் அறிவுறுத்தி வருகிறது. இவ்வகையில் 2020ஆம் ஆண்டு “உலகில் அனைத்து உயிரினங்களதும் வாழ்வை நிலை நிறுத்தல்” எனும் தொனிப் பொருளில் வினவிலங்குகளும், தாவரங்களும் உயிரியல் விரிவாக்கத்திற்கும் நிலைத் தன்மைக்கும் மூலாதாரம் என்பதை வலியுறுத்தி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இச்செயற்பாடுகள் வறுமை ஒழிப்பு, நிலையான மூலவள பாதுகாப்பு, நிலத்திலும், நீரிலுமான உயிர்வள பராமரிப்பு, மற்றும் உயிரின விரிவாக்க மேம்பாடு என்பவற்றை பிரதான செயற்றிட்ட இலக்குகளாக கொண்டு முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.800x750 48 வனவளமே எம்மின வளம்"உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020"-விக்கிரமன்

உலகளாவிய இயற்கை தொடர்பான விழிப்புணர்வு

அண்மைக் காலங்களில் இடம்பெற்று வரும் காட்டுத்தீ, வெள்ளம், பனிப்புயல், நில அதிர்வு போன்ற இயற்கை அனர்த்தங்களும் புதிய வகை நோய் தொற்றுகளும் இயற்கையின் சீற்றத்தை கட்டியம் கூறி நிற்கின்றன. காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனம் 1992ஆம் ஆண்டு முதல் இயற்கை வளம் பேணல் தொடர்பான பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயற்பட்டு வருகின்ற போதும், தொழில்நுட்ப புரட்சியின் பேரில் அளிக்கப்பட்ட இயற்கை வளங்களை மீள கட்டியெழுப்புவதில் நவீன உலகம் பின்தங்கியே உள்ளது.

இதற்கு முதலாளித்துவ நாடுகளின் விட்டுக் கொடுப்பில்லாத பொருண்மிய போட்டியும், அசண்டையீனமும் பிரதான காரணமாக அமைவதாக கூறப்பட்டாலும், இயற்கையை பேணும் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனின் கைகளிலும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எமது சந்ததியின் பொறுப்புணர்வின்மை இளைய சமுதாயத்தை விழிப்படைய செய்துள்ளதுடன், அவர்கள் தமது எதிர் காலத்துக்காக வீதிகளில் இறங்கி போராடும் புறச்சூழலை நாமும் எம் அரசுகளும் ஏற்படுத்தியுள்ளோம் என்பதே இன்றைய யதார்த்தம்.download 1 வனவளமே எம்மின வளம்"உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020"-விக்கிரமன்

அண்மைக் காலங்களில் பிரபலமாகி வரும் கிரேட்டா தன்பேர்க் எனும் 17 வயது சிறுமி கிளர்ந்தெழுந்து வரும் இளைய சமுதாயத்தின் குறியீடாக திகழ்கிறார். அண்மையில் அவர் குறிப்பிட்டது போல்

“நாங்கள் இப்போது உரிய வகையில் செயற்படவில்லையானால், பின்பொரு நாளில் நீங்கள் என்ன செய்தீர்கள் எனும் கேள்விக்கு பதிலளிக்க முடியாதவர்களாவீர்கள்”.

இன்றைய சுற்றுச் சூழல் அனர்த்தங்கள் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்டு வருவதனால், எம்முனவர்களுக்காக சிறுவர்களாகிய நாம் தீவிரமாக செயற்பட நேரிட்டுள்ளது என கூறும் அவர், தவிர்க்க முடியாமல் நாம் எம் இளவயது இன்ப வாழ்வை துறந்து வீதிகளில் இறங்கி துப்பரவு செய்யவும் போராடவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என மனவேதனையோடு இளையோரே இயற்கையை பாதுகாக்க வாரீர் என அறைகூவல் விடுக்கிறார்.

இயற்கையும் தமிழர் வாழ்வியலும்

இயற்கையோடு இணைந்த வாழ்வை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மனித குலம் இனங்கண்டு கடைப்பிடித்து வந்திருக்கிறது. இவ்வகையில் தமிழினத்துக்கு என்று ஓர் தனித்துவம் உள்ளதை வரலாறு சான்று பகர்ந்து நிற்கிறது.

சங்ககால இலக்கியங்களிலும், திருக்குறள் முதலான நூல்களிலும் பல்வேறு இடங்களில் இயற்கையோடு இணைந்த வாழ்வை புலவர்கள் பதிவு செய்து சென்றிருப்பது இதற்கான ஆதாரமாக கொள்ளலாம். புறநானூற்றில் வரும் பாடல்கள் பல இயற்கையை பேணுதலின் முக்கியத்துவத்தை சுட்டிச் காட்டுவதாக அமைகின்றன.

அவ்வகையில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் எனும் புலவர் போரில் வென்ற பாண்டிய மன்னனை பார்த்து “கடிமரந் தடித லோம்புநின் நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே” என்று பாடியதாக ஓர் பாடல் வரியுண்டு. இங்கு அப்புலவர் நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க! ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக!

நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க! அவர் கடிமரங்களை (காவல் மரங்களை) மட்டும் தடியாமல் விடுக! அவை நின் யானைகட்குக் கட்டுத் தறியாகும் வன்மை யுடையவல்ல”

என்று பாடுகின்றார். இங்கு மனிதரை மற்றும் அவர் செல்வங்களை அழித்தாலும், இயற்கையின் செல்வங்களான மரங்களையும், விலங்குகளையும் அழித்து விடாதீர்கள் எனும் கருத்தினூடு தமிழர் தம் இயற்கையை பேணும் பாரம்பரியம் வெளிப்பட்டு நிற்கிறது.

அண்மைய முப்பதாண்டு வனவள மேம்பாட்டில் தமிழர் பங்கு

உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு தோன்றிய எண்பதுகளில் தமிழ்நாடு முன்மாதிரியாக விளங்கி மர நடுகையையும் சூழல் பாதுகாப்பையும் முதலமைச்சர் எம்.ஜி இராமச்சந்திரன் தலைமையில் முன்னெடுத்ததன் சான்றுகள் இன்றும் தமிழ் நாட்டின் வீதியோரங்களில் சான்று பகர்ந்து நிற்கின்றன.

ஈழத்தில் முதலாம் ஈழப்போரின் ஆரம்ப கட்டம் முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் மரம் நடுகை, இயற்கை விவசாயம் என்பவற்றை ஊக்குவித்தமையை எவரும் மறந்துவிட முடியாது. இதுவே இரண்டாம், மூன்றாம் ஈழப்போரின் போது மேன்மையடைந்து வனவள பிரிவென்ற தனிப்பிரிவின் கீழ் வனவள, வனவிலங்கு பாதுகாப்பு, மேம்பாடு என்பன உரிய விழிப்புணர்வு, மேம்பாட்டு செயற்றிட்டங்கள் மற்றும் கடுமையான சட்டங்கள் என்பவற்றினூடு செயற்படுத்தப்பட்டு வந்ததை எவரும் மறந்து விட முடியாது.tamil eelam defacto state 6 2 வனவளமே எம்மின வளம்"உலக வனவிலங்குகள் தினம் 3 மார்ச் 2020"-விக்கிரமன்

ஆனால் அவ்வாறு பேணப்பட்ட வனவளம் யாவும் 2009 இன் பின்னர் சிறீலங்கா அரச படைகளினால் சூறையாடப்பட்டு எமது தாயக வனவளம் சிதைக்கப்பட்டதும் தொடர்ந்து மின்வழங்கல், வீதி அபிவிருத்தி, பாதுகாப்பு, தொல்பொருள் பேணல் எனும் திரைகளின் பின் சிதைக்கப்பட்டு வருவதும் இனவழிப்பின் இன்னொரு பரிமாணமாகவே நோக்கப்பட வேண்டும். இவ்வகை இயற்கைவள அழிப்பிற்கும் அதனூடான இனவழிப்பிற்கும் எமது அரசியல்வாதிகளும், சுயநலம் மிக்க வியாபாரிகளும் துணை போவது மிகவும் வேண்டத்தகாததும், வேதனைக்குரியதும், வினைத்திறனுடன் முறியடிக்கப்பட வேண்டியதுமாக உள்ளது.

வனவளமே எம்மின வளம்

எம்மின விடுதலையில் அதியுச்சம் தொட்ட முப்பதாண்டுகளும் இயற்கையோடிணைந்த வாழ்வை கொண்டிருந்ததும், “இயற்கை எனது நண்பன்” எனும் தலைவனின் வாசகமும் எம் மனத்தடத்தில் இருந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டுமெனில், எம் இளைய தலைமுறை வளவள பாதுகாப்பிலும் இயற்கை வளம் பேணலிலும் முன்னின்று உழைக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

எனவே தாயகத்தின் இன்றைய இளைய தலைமுறை இதற்கான கிராமிய செயற் குழுக்களை அமைத்து செயற்படுவதுடன், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் வளவள பாதுகாப்பிற்கும் இயற்கைவள மேம்பாட்டிற்குமாக உழைக்க உறுதிபூண வேண்டும்.

அம்முயற்சிகளின் உந்துகோலாக புலம்பெயர் தேசமெங்கும் உள்ள எம் இயற்கைவள நிபுணர்கள் தாயக வனவள மேம்பாட்டிற்கான திட்டங்களை வரைந்து செயலுரு கொடுப்பதன் மூலம் எம்மின இருப்புக்கும், மேம்பாட்டுக்கும் மனிதகுல மேம்பாட்டிற்கும் வழிசமைக்க இன்றைய நாளில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.