Home Blog Page 2402

உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவின் எழுச்சியைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இதில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும் மக்களாட்சிக் கட்சியும் ஒரே கருத்துடன் இருக்கின்றன.

பனிப்போர்க் காலத்திலும் அதற்குப் பிந்திய காலத்திலும் இந்தியாவிற்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய படைக்கலன்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது. 2018ஆம் ஆண்டில் தான் அமெரிக்கா தனது தயக்கத்தைக் கைவிட்டது. 2008ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான படைத்துறை வர்த்தகம் ஏதும் இல்லை என்று சொல்லுமளவிற்கு குறைந்த அளவாக இருந்தது. அதைத் தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக் கலன்களை வாங்கும் அளவிற்கு அதிகரித்தது.

படைக் கலன்களோடு தொழில் நுட்பமும் வேண்டும்

இந்தியா வெளிநாடுகளில் இருந்து படைக் கலன்களை வாங்கும் போது அப்படைக் கலன்களில் உள்ள தொழில் நுட்பத்தை இந்தியா பாவித்து அதே போன்ற படைக் கலன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமத்தையும் வாங்கும் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. இந்தக் கொள்கைக்கு ரஷ்யா மட்டுமே உடன்பட்டிருந்தது.

சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கை செய்து கொண்டமை சுட்டிக் காட்டியது. அமெரிக்காவும் இந்தியாவும் படைத்துறை வழங்கல் வசதிகளை பரிமாறிக் கொள்ளும் இந்த உடன்படிக்கை 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது.trump modi உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

பத்து ஆண்டுகளாக இழுபறிப்பட்ட இந்த உடன்படிக்கை இந்தியாவில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டது. 2017ஆம் ஆண்டு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்களை மின்காந்தம் மூலம் எழும்பவும் தரையிறங்கவும் செய்யும் தொழில் நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்கியது. அமெரிக்காவின் F-16 மற்றும் F-18 ஆகிய போர் விமானங்களின் தொழில் நுட்பங்களின் பாவனை தொடர்பாக அமெரிக்கா விடுத்த கட்டுப்பாடுகளால் இந்தியா அவற்றை வாங்காமல் பிரான்சிடமிருந்து ரஃபேல் விமானங்களை வாங்கியது.

2018 புதுடில்லிச் சந்திப்பு

2018ஆம் ஆண்டு அமெரிக்க – இந்தியப் படைத்துறை ஒத்துழைப்பில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அப்போதும் இந்தியாவும் அமெரிக்காவும் பல உலக விவகாரங்களில் முரண்பட்டிருந்தன. இந்தியா ஈரானில் இருந்து வாங்கும் எரிபொருட்களைக் குறைக்க வேண்டும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை வாங்கக் கூடாது, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து குவாட் என்னும் நான்கு நாடுகளின் படைத்துறை கூட்டமைப்பில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டும், கடற் பாதுகாப்பில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும், அமெரிக்காவுடன் செய்யும் படைத்துறைப் பயிற்ச்சிகளையும் ஒத்திகைகளையும் அதிகரிக்க வேண்டும் எனப் பல நிபந்தனைகளை இந்தியாவிற்கு அமெரிக்கா விதித்திருந்தது.

2018ஆம் ஆண்டு இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் புதுடில்லியில் சந்தித்து பல படைத்துறை ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டனர். இரு நாடுகளினதும் படைத்துறை தகவல்களைத் தடையின்றி பரிமாறும் The Communications Compatibility and Security Agreement (Comcasa) என்ற ஒப்பந்தமும் அதில் அடங்கும். தனது படைத்துறைத் தேவைகளுக்கு ரஷ்யாவில் அதிகம் தங்கியிருக்கும் நாடு என்ற நிலையில் இருந்து இந்தியாவை இந்த ஒப்பந்தங்கள் விலகச் செய்தன.

இந்தியா வாங்கும் உலகின் முதற்தர  உலங்கு வானூர்திகள்

3.5பில்லியன் உலங்கு வானூர்த்தி ஒப்பந்தம்:

  1. இந்தியக் கடற்படைக்கு 24 Sikorsky MH-60R Sea Hawk பற்பணி உலங்கு வானூர்திகள். இவற்றில் இருபத்தி இரண்டு உலங்கு வானூர்திகள்,  இந்தியா 2022இல் சேவைக்கு விடும் விக்ராந்த் என்னும் விமானம் தாங்கிக் கப்பலில் உள்ளடக்கப்படும். இரண்டு சிவாலிக், நில்கிரி ஆகிய புலப்படா பீரங்கிக் கப்பல்களிலும் டெல்லி வகை, கொல்கத்தா வகை, விசாகப்பட்டினம் வகை நாசகாரிக் கப்பல்களிலும் சுழற்சி முறையில் உள்ளடக்கப்படும். இந்தியா தனது நாசகாரிக் கப்பல்களுக்கு தலைநகர் டில்லியினதும் மாநிலத் தலைநகர்களினதும் பெயர்களைச் சூட்டியுள்ளது. 

    Sikorsky MH-60R Sea Hawk

    1000w q95 உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

2.இந்தியத் தரைப் படைக்கு ஆறு Guardian தக்குதல் உலங்கு வானூர்திகள்.இந்த உலங்கு வானூர்திக் கொள்வனவை 2018 ஓகஸ்ட்டில் இந்திய அரசும் 2019 ஏப்ரலில் அமெரிக்க அரசும் அங்கீகரித்திருந்தன. இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்கும் உலங்கு வானூர்திகள் தற்போது உலக அரங்கில் உள்ள உலங்கு வானூர்திகளில் முதன்மையானது எனக் கருதப்படுகின்றது. அவற்றின் சிறப்புக்கள்:

  1. நீர்மூழ்கிகளை அழிக்கக் கூடியவை. இந்தியாவிலும் பார்க்க இரண்டு மடங்கு எண்ணிக்கையிலான நீர்மூழ்கிகள் சீனாவிடமிருக்கின்றன.
  2. நீர் மேற்பரப்பில் உள்ள கடற் கலன்களையும் அழிக்கக் கூடியவை.
  3. சிறப்பாக வேவு பார்க்கக் கூடியவை.
  4. லேசர் வழிகாட்டலுடன் எதிரியில் தரை, கடல் மற்றும் வான் இலக்குக்களைத் தாக்கக் கூடிய ஹெல்ஃபயர் ஏவுகணைகளை இவற்றில் இருந்து வீசலாம்.
  5. ஆறாயிரம் இறாத்தல் எடையுள்ள பொருட்களை தூக்கிச் செல்லக் கூடியவை.
  6. இலத்திரனியல் போர் செய்யக் கூடியவை.
  7. படைத்துறைத் தொடர்பாடல்களை அஞ்சல் செய்யக் கூடியவை.

Apache-64 E (I) Guardian

WhatsApp Image 2019 05 13 at 12.32.33 2 உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

சீனாவிற்கு சவாலாகும் இந்தியக் கடற்படை

இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்கும் MH-60R உலங்கு வானூர்திகளின் படைத்துறைத் தகவல்களை அஞ்சல் செய்யும் திறன் அமெரிக்காவிற்கும் நன்மையளிக்கக் கூடியவை. இரு நாடுகளும் குறியீட்டாக்கிய படைத்துறைத் தகவல்களை தடையின்றியும் தானியங்கியாகவும் பரிமாறும் The Communications Compatibility and Security Agreement (Comcasa) என்ற ஒப்பந்தம் சரியாகச் செயற்பட இந்த வானூர்திகள் பெரிதும் பயன்படுத்தப்படும். இந்துமா கடற்பரப்பில் வல்லரசு நாடுகளிடையே உள்ள போட்டியில் யார் வலியவர் என்பதை, இந்தியா யார் பக்கம் நிற்கும் என்பதே தீர்மானிக்கும். அதற்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள LEMOA மற்றும் Comcasa ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்கு உதவியாயிருக்கும். இந்துமா  கடலிலும் பசுபிக் பெருங் கடலிலும் உள்ள அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் தன் படைத்துறை வழங்கல்களுக்கு பயன்படுத்தும் உரிமம் சீனாவின் கடற்படைக்கு பெரும் சவாலாக அமையும்.

பங்காளிகள் மட்டுமே

அமெரிக்காவையும் இந்தியாவையும் முழுமையான நட்புறவு பேணும் நாடுகள் எனச் சொல்ல முடியாது. இரண்டுக்கும் இடையில் உருவாகிக் கொண்டிருப்பது சீனாவிற்கு எதிரான கேந்திரோபாயப் பங்காண்மை மட்டுமே. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் படைத்துறையும் பொருளாதாரமும் அமெரிக்காவிற்கு சவாலாக உயர்வடைந்தால், இந்தியாவிற்கு எதிரான கேந்திரோபாயப் பங்காளி ஒன்று அமெரிக்காவிற்கு தேவைப்படலாம். அமெரிக்கா தனது போர் விமானங்களின் புலப்படாத் தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இன்னும் தயாராக இல்லை.

 

முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை நள்ளிரவு எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பாக அனைத்து இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை உரிய காலத்திற்குள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில், எதிர்கால நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த அரசாங்க காலத்தில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், இதுவரை உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்கவில்லை என அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் மேலும் தெரிவத்துள்ளார்.

கோத்தபாயா ஜனாதிபதியாக இல்லாத போது வழக்குத் தொடரலாம்-அமெரிக்க நீதிமன்றம்

கோத்தபாயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகிக்காத காலத்தில் அவருக்கெதிரான வழக்கை தொடர முடியும் என லசந்த விக்கரமதுங்கவின் மகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்க நீதிமன்றம் கோத்தபாயா ராஜபக்ஸவிற்கு எதராக வழக்குத் தொடர முடியாது எனத் தெரிவித்த தீர்ப்பிற்கு எதிராக அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.

அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றில் அஹிம்சா விக்ரமதுங்க சார்பில் இவ் வழக்குத் தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான மையம் வாதிட்டது. இத் தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அஹிம்சா விக்ரமதுங்க இதுவொரு வெற்றியென்றும் கோத்தபாயா ராஜபக்ஸவிற்கான செய்தியென்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது கோத்தபாயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றமை பொறுப்புக் கூறலை தாமதப்படுத்துமே அன்றி தடுக்க முடியாது எனவும் அவரால் பாதிக்கப்பட்ட எம் போன்றவர்கள் நீதிக்காக போராடுவதை ஒருபோதும் கைவிடப்போவதிலலையென அஹிம்சா விக்ரமதுங்க மேலும் தெரிவித்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக இதுவரை இலங்கை அரசு ஏற்கனவே அல்லது மறுதலிக்கவோ இல்லையென இவ் வழக்கில் வாதாடிய நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான மையத்தின் சட்டப் பணிப்பாளர் காமன் செயுங் தெரிவித்தார்.

அஹிம்சா விக்ரமதுங்க இவ் வழக்கை மீண்டும் தொடர முடியும் என்பது குறித்து திருப்தி அமைகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொது வெளியில் தெரிவித்த கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களை துச்சமென மதித்து போராட்டக் களம் புகுந்திருந்தனர்.

கால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்து கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இது வரலாறாக இருக்க ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.

கடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாக செயற்பட்டனர். சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப்போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களை கிளறி விரிசல்களை ஏற்படுத்த பார்க்கின்றார்.

இவ்வாறிருக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன் போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.

ஆகவே, விடுதலைப் போராட்டத்தில் வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலை புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொது வெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அகௌரவப்படுத்தியுள்ளார்.

அது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க நபர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்து போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.

ஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தனது தனிப்பட்ட சிந்தனையில் விடுதலைப் புலிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் சுமந்திரன்,சம்பந்தன் போன்றவர்கள் அரசியலில் சுய இலாபத்தை ஈட்டுவதற்காக ஒட்டுமொத்த விடுதலை மறவர்கள் மீதும் சேறு பூசும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமந்திரனைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்களும் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் திரு பிரபாகரன் அவர்களையும் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களால் விமர்சித்தது மட்டுமன்றி கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை யென்பதை பகிரங்கமாக தெரிவித்து வந்திருக்கின்றார்.

ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கொடுரமானவர்கள் பயங்கரவாதிகள் என்று விமர்சித்துக்கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர்களது தியாகங்களை கொச்சைப் படுத்துபவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராளிகள்,மாவீரர் குடும்பங்கள்,பொது மக்கள் இவர்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்காக அனுமதிகளைப் பெறும் பணிகள் நாளைமுதல் ஆரம்பம்

2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி நாளைமுதல் ஆரம்பமாக இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் எனவும் விண்ணப்பங்களை ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான வழிகாட்டி நூல் நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், அங்கீகரிக்கப்பட்ட நூல் விற்பனை நிலையங்களிலும் மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

திருமலையில் 5 படகுகளுக்கு தீ வைப்பு – மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இறால்குழி பிரதேசத்தில் உள்ள நன்னீ எனும் இடத்தில் நேற்று (03) இரவு 5 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு படகு காணாமல் போயுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நன்னீ பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபடும் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மணல் அகழ்வு மற்றும் விற்பனை தொடர்பான முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என தமது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து எரியூட்டல் சம்பந்தமாக மணல் அகழும் குழுக்களிடையே மோதல்கள் அதிகரிக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் திருகோணமலை நகரில் இருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு நன்னீ மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் படகுகள் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை யாழ் மக்கள் வாக்குகளால் உணர்த்த வேண்டும்

சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை யாழ் மக்கள் வாக்குகளால் உணர்த்த வேண்டும்
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவிப்பு

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை யாழ் மாவட்ட மக்கள் தங்கள் வாக்குகளால் அவருக்கு உணர்த்த வேண்டும் என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்திருந்தார்.

வவுனியா விளக்குவைத்தகுளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில்

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காகவும் தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இம்முறையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிக ஆசனங்களைப்பெறும்.

இதுவரை காலமும் எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம். மக்களின் பிரச்சனைகளை எங்களது பிரதிநிதிகள் ஊடாக ஓங்கி ஒலிக்கச்செய்திருக்கிறோம். எனினும் நாங்கள் இந்த நாட்டின் அரசாங்கம் அல்ல. எங்களுக்கு கிடைக்கின்ற வளங்களின் ஊடாக எங்களது மக்களை ஒரளவுக்கேனும் திருப்திப்படுத்தியிருக்கிறோம். அந்த நம்பிக்கையில் நாங்கள் மீண்டும் இந்த தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம்.

இந்தவேளையில் உங்களுடைய வாக்குகளை சூறையாடுவதற்காகாவும் எங்களுடைய இருப்பை இல்லாது ஒழிப்பதற்காகவும் சிலர் வாக்குகளை கேட்பதற்காக இங்கே வருவார்கள்.

அவ்வாறானவர்கள் சிங்கள தேசிய கட்சிகளின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம் அல்லது அவர்களின் அருவருடிகளாக இருக்கலாம். அவர்கள் உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துதருவதாக கூறிக்கொண்டு தான் வருவார்கள்.

உங்களுடைய வாக்குகளை சுவீகரிப்பதற்காக வசீகரத்துடன் வருவார்கள். ஆனால் எதனையுமு; செய்து தரப்போவதில்லை.
இந்தநிலையில்தான் ஒன்றை நாங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையோடு பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அந்தவகையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பலத்தால் வளர்ந்திருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசிய கூட்டமைப்பை புறம்தள்ளி விடக்கூடாது. யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது கருத்துக்கள் தமிழ் மக்களின் மனதை புண்படுத்துவதாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் சகோதர படுகொலைகளை செய்துதான் தனி இயக்கமாக உருவாகினார்கள் என அவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று சுமந்திரன் இருக்கின்ற கட்சியும் சகோதர கட்சிகளை புறம்தள்ளி ஐந்து கட்சிகளாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை மூன்று கட்சிகள்தான் இருக்கின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஒன்று மட்டும்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை இருக்கின்ற கட்சியாகும். இந்நிலையில் இடையில் வந்த சிலரது கருத்துக்கள் காரணமாகவும் கொள்கை ரீதியான நிலைப்பாடுகள் காரணமாகவும் மற்றவர்கள் பிரிந்து சென்று விட்டார்கள். இந்நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரித்து விடக்கூடாது.

தான் சொல்வது சரிஇ தான் நினைப்பது சரிஇ தான் இலங்கை அரசாங்கத்துடன் உறவாடுவது சரி என சுமந்திரன் நினைத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் அவர் கதைப்பது சரியா பிழையா என உணர்ந்து கொள்ள வேண்டும்.

யாழ் மாவட்ட மக்கள் வாக்களிப்பதில் இருந்து அவர் தான் கதைத்தது சரியாஇ பிழையா என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் எமது பிரச்சனைகளை கதைப்பதற்கு கொழும்பில் இருந்து எவரையும் இறக்குமதி செயயப்பட வேண்டிய தேவை எமக்கில்லை.

தற்போது சுரேன் ராகவன் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பத்தை கோருவதாக அறிகின்றேன். ஏற்கனவே சுமந்திரனது கருத்துக்களாலும்இ விக்னேஸ்வரனது கருத்துக்களாலும் நான்றாகவே பட்டுத்தெளிந்திருக்கிறோம்.

அவர்களது கருத்துக்களால் எமது பிரச்சனைகள் எவ்வளவு தூரம் சீரழிந்து போயுள்ளது என்பதையும் உணர்ந்துள்ளோம். அந்த வகையில் யாழ் மாவட்ட மக்களும் தமக்கான பாராளுமன்ற உறுப்பினரை சரியாக தெரிவு செய்வார்கள்.

ஆகவே வன்னி தேர்தல் தொகுதியிலும் மக்களோடு மக்களாக நண்பனாக செயற்படக்கூடிய செல்வம் அடைக்கலநாதனும். வினோநோகதாரலிங்கமும் களத்தில் இருக்கிறார்கள் அவர்களையும் ஆதரிக்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது என தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக இ. பிரதாபன் நியமனம்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இ. பிரதாபன் இன்று (4.3) பதவியேற்றுக்கொண்டார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழையமாணவரான பிரதாபன் முல்லைத்தீவில் உதவி பிரதேச செயலாளராகவும் புதுக்குடியிருப்பில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய நிலையில் தற்போது வவுனியா வடக்கிற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
unnamed 1 1 வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக இ. பிரதாபன் நியமனம்

unnamed 2 வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக இ. பிரதாபன் நியமனம்

unnamed 3 வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக இ. பிரதாபன் நியமனம்

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய க. பரந்தாமன் கடந்த இரு மாங்களுக்கு முன் கொழும்பிற்கு இடமாற்றப்பட்டதையடுத்து காணப்பட்ட வெற்றியடத்திற்கே இ. பிரதாபன் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் அவரை மாலை அணிவித்து வரவேற்றிருந்தனர்.
இதனையடுத்து உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இ. பிரதாபன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஆர். இந்திரராசாவின் மகனாவார்.

சிறீலங்காவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த 31 நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியதற்கு 31 நாடுகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளும், கனடாவும் எதிர்ப்பைத் தெரிவித்த நாடுகளில் அடங்கியுள்ளன. சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இனநல்லிணக்கப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு படையினரை மறுசீரமைப்பது தொடர்பில் சிறீலங்கா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், சிறீலங்கா வெளியேறினாலும், இணைஅனுசரணை நாடுகள் அடுத்த வருடம் இடம்பெறும் 46 ஆவது கூட்டத்தொடரில் தீர்மானம் ஒன்றை முன்வைப்பார்கள் எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

இறுதி ஆயுதத்தைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் – சம்மந்தன் ஐயா

வாக்குரிமையே தமிழ் மக்களிடம் இறுதியாக மிஞ்சி இருக்கின்ற ஆயுதமாகும். பலத்த போட்டிகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குரிமையை எமது மக்கள் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும். இதுவே எமது இலக்கு. இதற்கு எமது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்தத் தேர்தல் வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம்.

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.

பொதுத்தேர்தலில் 20 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்ற அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இறுதியாக எம்மிடம் மிஞ்சி இருக்கின்ற ‘வாக்குரிமை’ என்ற ஆயுதத்தை உரிய வகையில் எமது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நாம் பேரம் பேசும் சக்தியாக வந்தால் எமது உரிமைகளையும், அரசியல் தீர்வையும் வென்றெடுக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் ஆசனங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் அரசின் ஆதரவுடனும் வெளிச்சக்திகளின் ஆதரவுடனும் வடக்கு, கிழக்கில் இம்முறை பல கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்குத் துரோகம் இழைத்தவர்களும், தமிழினப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்தவர்களும் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எமது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வென்றெடுக்கக்கூடியதான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.