உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவின் எழுச்சியைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இதில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும் மக்களாட்சிக் கட்சியும் ஒரே கருத்துடன் இருக்கின்றன.

பனிப்போர்க் காலத்திலும் அதற்குப் பிந்திய காலத்திலும் இந்தியாவிற்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய படைக்கலன்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது. 2018ஆம் ஆண்டில் தான் அமெரிக்கா தனது தயக்கத்தைக் கைவிட்டது. 2008ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான படைத்துறை வர்த்தகம் ஏதும் இல்லை என்று சொல்லுமளவிற்கு குறைந்த அளவாக இருந்தது. அதைத் தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக் கலன்களை வாங்கும் அளவிற்கு அதிகரித்தது.

படைக் கலன்களோடு தொழில் நுட்பமும் வேண்டும்

இந்தியா வெளிநாடுகளில் இருந்து படைக் கலன்களை வாங்கும் போது அப்படைக் கலன்களில் உள்ள தொழில் நுட்பத்தை இந்தியா பாவித்து அதே போன்ற படைக் கலன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமத்தையும் வாங்கும் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. இந்தக் கொள்கைக்கு ரஷ்யா மட்டுமே உடன்பட்டிருந்தது.

சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கை செய்து கொண்டமை சுட்டிக் காட்டியது. அமெரிக்காவும் இந்தியாவும் படைத்துறை வழங்கல் வசதிகளை பரிமாறிக் கொள்ளும் இந்த உடன்படிக்கை 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது.trump modi உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

பத்து ஆண்டுகளாக இழுபறிப்பட்ட இந்த உடன்படிக்கை இந்தியாவில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டது. 2017ஆம் ஆண்டு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்களை மின்காந்தம் மூலம் எழும்பவும் தரையிறங்கவும் செய்யும் தொழில் நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்கியது. அமெரிக்காவின் F-16 மற்றும் F-18 ஆகிய போர் விமானங்களின் தொழில் நுட்பங்களின் பாவனை தொடர்பாக அமெரிக்கா விடுத்த கட்டுப்பாடுகளால் இந்தியா அவற்றை வாங்காமல் பிரான்சிடமிருந்து ரஃபேல் விமானங்களை வாங்கியது.

2018 புதுடில்லிச் சந்திப்பு

2018ஆம் ஆண்டு அமெரிக்க – இந்தியப் படைத்துறை ஒத்துழைப்பில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அப்போதும் இந்தியாவும் அமெரிக்காவும் பல உலக விவகாரங்களில் முரண்பட்டிருந்தன. இந்தியா ஈரானில் இருந்து வாங்கும் எரிபொருட்களைக் குறைக்க வேண்டும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை வாங்கக் கூடாது, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து குவாட் என்னும் நான்கு நாடுகளின் படைத்துறை கூட்டமைப்பில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டும், கடற் பாதுகாப்பில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும், அமெரிக்காவுடன் செய்யும் படைத்துறைப் பயிற்ச்சிகளையும் ஒத்திகைகளையும் அதிகரிக்க வேண்டும் எனப் பல நிபந்தனைகளை இந்தியாவிற்கு அமெரிக்கா விதித்திருந்தது.

2018ஆம் ஆண்டு இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் புதுடில்லியில் சந்தித்து பல படைத்துறை ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டனர். இரு நாடுகளினதும் படைத்துறை தகவல்களைத் தடையின்றி பரிமாறும் The Communications Compatibility and Security Agreement (Comcasa) என்ற ஒப்பந்தமும் அதில் அடங்கும். தனது படைத்துறைத் தேவைகளுக்கு ரஷ்யாவில் அதிகம் தங்கியிருக்கும் நாடு என்ற நிலையில் இருந்து இந்தியாவை இந்த ஒப்பந்தங்கள் விலகச் செய்தன.

இந்தியா வாங்கும் உலகின் முதற்தர  உலங்கு வானூர்திகள்

3.5பில்லியன் உலங்கு வானூர்த்தி ஒப்பந்தம்:

  1. இந்தியக் கடற்படைக்கு 24 Sikorsky MH-60R Sea Hawk பற்பணி உலங்கு வானூர்திகள். இவற்றில் இருபத்தி இரண்டு உலங்கு வானூர்திகள்,  இந்தியா 2022இல் சேவைக்கு விடும் விக்ராந்த் என்னும் விமானம் தாங்கிக் கப்பலில் உள்ளடக்கப்படும். இரண்டு சிவாலிக், நில்கிரி ஆகிய புலப்படா பீரங்கிக் கப்பல்களிலும் டெல்லி வகை, கொல்கத்தா வகை, விசாகப்பட்டினம் வகை நாசகாரிக் கப்பல்களிலும் சுழற்சி முறையில் உள்ளடக்கப்படும். இந்தியா தனது நாசகாரிக் கப்பல்களுக்கு தலைநகர் டில்லியினதும் மாநிலத் தலைநகர்களினதும் பெயர்களைச் சூட்டியுள்ளது. 

    Sikorsky MH-60R Sea Hawk

    1000w q95 உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

2.இந்தியத் தரைப் படைக்கு ஆறு Guardian தக்குதல் உலங்கு வானூர்திகள்.இந்த உலங்கு வானூர்திக் கொள்வனவை 2018 ஓகஸ்ட்டில் இந்திய அரசும் 2019 ஏப்ரலில் அமெரிக்க அரசும் அங்கீகரித்திருந்தன. இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்கும் உலங்கு வானூர்திகள் தற்போது உலக அரங்கில் உள்ள உலங்கு வானூர்திகளில் முதன்மையானது எனக் கருதப்படுகின்றது. அவற்றின் சிறப்புக்கள்:

  1. நீர்மூழ்கிகளை அழிக்கக் கூடியவை. இந்தியாவிலும் பார்க்க இரண்டு மடங்கு எண்ணிக்கையிலான நீர்மூழ்கிகள் சீனாவிடமிருக்கின்றன.
  2. நீர் மேற்பரப்பில் உள்ள கடற் கலன்களையும் அழிக்கக் கூடியவை.
  3. சிறப்பாக வேவு பார்க்கக் கூடியவை.
  4. லேசர் வழிகாட்டலுடன் எதிரியில் தரை, கடல் மற்றும் வான் இலக்குக்களைத் தாக்கக் கூடிய ஹெல்ஃபயர் ஏவுகணைகளை இவற்றில் இருந்து வீசலாம்.
  5. ஆறாயிரம் இறாத்தல் எடையுள்ள பொருட்களை தூக்கிச் செல்லக் கூடியவை.
  6. இலத்திரனியல் போர் செய்யக் கூடியவை.
  7. படைத்துறைத் தொடர்பாடல்களை அஞ்சல் செய்யக் கூடியவை.

Apache-64 E (I) Guardian

WhatsApp Image 2019 05 13 at 12.32.33 2 உலங்கு வானூர்தியால் உயர்ந்த இந்திய-அமெரிக்க படைத்துறை ஒத்துழைப்பு– வேல் தர்மா

சீனாவிற்கு சவாலாகும் இந்தியக் கடற்படை

இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்கும் MH-60R உலங்கு வானூர்திகளின் படைத்துறைத் தகவல்களை அஞ்சல் செய்யும் திறன் அமெரிக்காவிற்கும் நன்மையளிக்கக் கூடியவை. இரு நாடுகளும் குறியீட்டாக்கிய படைத்துறைத் தகவல்களை தடையின்றியும் தானியங்கியாகவும் பரிமாறும் The Communications Compatibility and Security Agreement (Comcasa) என்ற ஒப்பந்தம் சரியாகச் செயற்பட இந்த வானூர்திகள் பெரிதும் பயன்படுத்தப்படும். இந்துமா கடற்பரப்பில் வல்லரசு நாடுகளிடையே உள்ள போட்டியில் யார் வலியவர் என்பதை, இந்தியா யார் பக்கம் நிற்கும் என்பதே தீர்மானிக்கும். அதற்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள LEMOA மற்றும் Comcasa ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்கு உதவியாயிருக்கும். இந்துமா  கடலிலும் பசுபிக் பெருங் கடலிலும் உள்ள அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் தன் படைத்துறை வழங்கல்களுக்கு பயன்படுத்தும் உரிமம் சீனாவின் கடற்படைக்கு பெரும் சவாலாக அமையும்.

பங்காளிகள் மட்டுமே

அமெரிக்காவையும் இந்தியாவையும் முழுமையான நட்புறவு பேணும் நாடுகள் எனச் சொல்ல முடியாது. இரண்டுக்கும் இடையில் உருவாகிக் கொண்டிருப்பது சீனாவிற்கு எதிரான கேந்திரோபாயப் பங்காண்மை மட்டுமே. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் படைத்துறையும் பொருளாதாரமும் அமெரிக்காவிற்கு சவாலாக உயர்வடைந்தால், இந்தியாவிற்கு எதிரான கேந்திரோபாயப் பங்காளி ஒன்று அமெரிக்காவிற்கு தேவைப்படலாம். அமெரிக்கா தனது போர் விமானங்களின் புலப்படாத் தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இன்னும் தயாராக இல்லை.