ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இலங்கையில் பரவி வருவதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக யாழ். சர்வதேச விமான நிலையம் 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“ இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” என்று சொல்கின்றது திருக்குறள்.
ஒரு செயல் நடப்பதற்கு கருவி, கருத்தா இரண்டும் தேவை. மன்னர் காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே இது தொடர்பாக பேசியிருக்கின்றார். கருத்துக் கூறியிருக்கின்றார். திருக்குறள் எவ்வளவு காலத்துக்கு முன்பு சொல்லப்பட்ட ஒன்று. இப்பவும் அதை சொல்லிக்கொண்டு என்று சொல்லும் குரல்களும் கேட்கின்றது.
வாழும் காலத்தில், அனுபவ வாயிலாக, நிகழ்கால நிலையை சொன்னால், மக்கள் அல்லது படித்தவர்கள் என்று தம்மை சொல்பவர்கள் எத்தனை பேர் ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. இதனை எழுதும் நான் உட்பட எல்லோரும் பிறரை இழித்தும், பழித்தும் எம்மை நாமே உயர்த்தியும் பெருமைப்பட பழக்கப்பட்டு விட்டோம். சரிபிழை, நன்மைதீமை என்பன இங்கு அவசியமில்லை.
எமக்கு பயன் கிட்டுமானால் எதற்கும் துணைபோவோம். தவறின் எதிர்ப்போம். இதுதான் இன்றைய நிலை. நான் வாழவேண்டும், மற்றோரை ஆளவேண்டும், என்னை எல்லோரும் அறியவேண்டும, எனக்கு புகழ் வரவேண்டும் என்பதுதான் எமது கொள்கையே என்று சொல்ல முடியும். இந்த இடத்தில் இன்னுமொன்றையும் கூற விரும்புகின்றேன்.
ஆங்கிலேயன் வந்தான், அடிமை கொண்டான் என்று நாங்கள் சொன்னாலும், அவர்களின் வருகைதான் சாதாரண மக்களையும் தமிழ் படிக்கவைத்தது. தமிழை அறியவைத்தது. எங்களையும் சிந்திக்க தூண்டியது. ஆனால் அப்போதிருந்து சிக்கல் மறுவளமாக தொடங்கிவிட்டது. தமிழர்களில் ஒரு பகுதியினர் ஆங்கிலம் படித்தார்கள். தேர்ச்சி பெற்றார்கள். தாங்கள் உயர்ந்தவர்கள் என்று தமக்குத்தாமே முடி சூடிக்கொண்டார்கள். ஆங்கிலம் படித்தவர்களை அறிவாளிகள் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள்.
மீண்டும் தமிழ்மக்களுக்கு தெரியாதமொழித் தமிழ்மக்களிடம் தமிழர் சிக்கிக் கொண்டார்கள். பலர் ஆங்கில அரசின் தொழிலாளர்கள் ஆகினார். அவர்கள் வழங்கிய தொழிலினை மேன்மையாக கருதினர். தன் இனத்துக்கு துணை செய்யவேண்டியவர்கள், ஆங்கிலம் படிக்கவில்லை என்பதற்காக அந்த இனத்தையே இழிந்ததாக எண்ண ஆரம்பித்தனர். இதன் விளைவு என்ன என்பது யாபேரும் அறிந்த ஒன்று. இனி படித்தவர்களை சற்று பார்ப்போம்.
படித்தவர்கள் எப்படி இருப்பார்கள். படிக்கும்போதே பக்கத்தில் இருப்பவனை முந்தவேண்டும் என்று சிந்திப்பார்கள். மற்றவனுக்கு எதுவுமே சொல்லிக்கொடுக்க கூடாதென்று எண்ணுவார்கள். நான் முதலாவதாக வரவேண்டும் என்று யோசிப்பார்கள். எனக்கே நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று முயற்சி செய்வார்கள்.
கல்வி என்பது சமூக நேசம் கொண்டவனை வளர்க்காமல் தன்னை மட்டும் எண்ணும் இயல்பையே வளர்க்கின்றது. தன்னைமட்டும் எண்ணும் இயல்பும், தமது மக்களையே குறைத்து மதிப்பீடும் போக்கும் முசுலீம்கள் அல்லது சிங்கள மக்களிடம் மிகவும் குறைவு. தமிழரின் இந்த இனத்துக்கு எதிரான பண்பை சிங்கள அரசியல்தலைவர்கள் சரியாகவே பயன்படுத்துவர். அதனால்தான் முக்கிய பதவிநிலைகளில் தமிழர்களை நியமிப்பர். காரணம் பதவிக்கும் தனக்கு பதவி தந்தவனுக்கும் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கக்கூடிய நல்ல மனிதன் தமிழன். அதற்காக தன் இனத்தையே காட்டிக்கொடுப்பான். இனி மக்களாட்சி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
மக்களாட்சி என்று பெயர் இருந்தால் மட்டும் அது மக்களாட்சி அல்ல. அந்த ஆட்சி மக்களுக்காக நடந்தாலே அது மக்களாட்சி. இன்று எங்கெல்லாம் மக்களாட்சி நடக்கின்றது என்று எண்ணிப்பாருங்கள். அங்கெல்லாம் மக்களாட்சி நடக்கின்றதா என்று ஆய்வுசெய்து பாருங்கள்.
இன்றைய நாட்களில் பொதுவாக தேர்தல்கால பேச்சுக்களும், மக்கள் போடும் வாக்குகளும் மட்டும்தான் மக்களாட்சி என்ற பெயரை தம்வசம் தக்க வைத்திருக்கின்றன. தேர்தல்முடிவு வந்தபின்பு எதுவும் மக்கள் சார்ந்து நடப்பதாக தெரியவில்லை. நடப்பதுமில்லை.
மக்களாட்சி என்றால் ஒரு அரசு இருக்கவேண்டும். அந்த அரசினை நிர்வகிக்க ஒரு தலைவர், அந்த தலைவர் மட்டும் அனைத்து செயல்பாடுகளையும் செய்துமுடிக்க இயலாது எனவே மக்கள் தெரிவிலிருந்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், என்றும், இந்த ஆட்சியை இலகுபடுத்த, நடைமுறைப்படுத்த அரச ஊழியர்கள் செயல்படவேண்டும் என்றும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அன்றாட வாழ்நிலை சிக்கல்களையும் அவதானித்து தீர்க்கவேண்டும். அரச ஊழியர்கள் மக்களுக்கு தேவையான அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற உதவவேண்டும். இப்படியான கட்டமைப்பினூடாக பயணிக்க வேண்டிய ஆட்சி இன்று எப்படிப் பயணிக்கின்றது என்று எத்தனைபேர் சிந்திக்கின்றார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்று. இந்த பொதுவான கேள்வியுடன் ஈழத்து தமிழ் அரசியல் என்னவென்று பார்ப்போம்.
ஈழத்து தமிழ்அரசியல் என்பதை இன்றைய அரசியல் செயல்பாட்டு சூழலுடன் மட்டும் ஒப்பிட்டு நோக்கமுடியாது. இதனை கடந்தகால அரசியல் சூழலுடன் இணைத்தே சிந்திக்கவேண்டும். உலகத்திலுள்ள பல நாடுகள் குறுகிய காலத்துள் சனநாயக முறையில் அல்லது வேறு ஆட்சியமைப்பு வகையில் தம்மை வலுவான நாடுகளாக கட்டியெழுப்பியுள்ளன. இதனால் ஈழத்திலிருந்து தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர், முசுலீம்கள் கூட ஏனைய முன்னேறிய நாடுகளுக்கு படையெடுக்கின்றார்கள்.
இலங்கையில் அரசியல் செய்பவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு கடைசிகாலத்தில் தொடர்ந்து தங்களது அரசியலை செய்கின்றார்கள் என்று சொல்லலாம். இதற்கு காரணம் வெளிநாடுகளில் வசதியாக வாழலாம் என்பதால் என்று மட்டும் சொல்லமுடியாது.
நிம்மதியாக வாழலாம் என்ற கருத்தும் இருக்கலாம். இந்தநிலை இலங்கை அரசியல்வாதிகளுக்கு சாதகமான நிலையை தோற்றுவிக்கின்றது என்று உறுதியாக கூறலாம். அதாவது குறித்த தொகுதியினர் மட்டுமே இன்று அரசியல் செய்கின்றார்கள். அவர்களைமீறி புதியவர்கள் அரசியலுக்குள் புகுவது முடியாத காரியம் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
அதற்கும் மேலாக அரசியல் என்பது குறிப்பிட்ட மக்களின் பிள்ளைகள், சொந்தக்காரர்கள் தவிர ஏனையோருக்கு ஆபத்தானாது என்றும் ஒருநிலை உண்டு. அத்துடன் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக எதனையும் துணிந்து சொல்லும் எண்ணமும் அரசியல்வாதிகளிடம் குடி கொண்டுவிட்டது. இதனை வைத்து பார்க்கும்போது தனிப்பட்ட நபரின் வெற்றியா அல்லது மக்களுக்கு வெற்றியா என்ற கேள்வி மக்களிடமும்/ அரசியல்வாதிகளிடமும் முன்னிறுத்தப்படவேண்டியது.
இன்றைய உலக அரசியல்சூழல் இன அடிப்படையில் கட்டமைப்பதாக சொல்லமுடியாது. தனித்த நாடுகள் மட்டத்திலும் சரி, உலகநாடுகள் மட்டத்திலும் சரி அரசியல் என்பது மத அடிப்படை சார்ந்ததாகவே முனைப்பு பெறுகின்றது என்று சொல்லமுடியும். இலங்கையில் பௌத்தம் வலுவாக இருப்பதால் அதுசார்ந்து அடக்குமுறை எழுகின்றது.
பௌத்த மதத்தின் இந்த வலுவான நிலை சைவத்தமிழர்களை மட்டுமே குறிவைப்பதாக தோன்றும். ஆனால் அந்த நிலை இன்று மாறிவருகின்றது. தமிழ்மக்கள் சிங்களவருடன் மோதுவது போல தெரியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது உண்மை அல்ல. ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து குழந்தைப்பிள்ளையை கடிக்கும் நிலைபோல சைவத்தமிழர்கள் தாக்கப்படும்போது அதனுடன் இணைந்த ஏனைய மதத்தினரான முசுலீம்கள், கிறித்தவர்கள் என்பவர்களும் தாக்கப்படுவர்.
உண்மையில் சைவத்தமிழர்கள் பரிதாபத்துக்குரிய மக்கள். காரணம் முசுலீம்கள், கிறித்தவர்கள் மதஅடிப்படையில் வலுவான பிணைப்புள்ளவர்கள். அவர்களுக்கென்று அமைப்புகள் கொண்டவர்கள். ஆனால் சைவர்கள் அவர்களுக்கென்று குரல் கொடுக்க வலுவான அமைப்புகள் அற்றவர்கள். காலம் முழுவதும் கோவில் கட்டுகின்றோம் என்று பணம் வசூலிப்பவர்களையும், சாமியார்கள் என்று தங்களை கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லுபவர்களையும், சாமியிடம் இவர்களின் செய்திகளை சொல்ல ஊதியமாக அருச்சனை செய்யப்பணம் வாங்குவபவர்களையும், அந்தப்பணத்தில் பங்குகேட்கும் கோயில் நிர்வாகங்களையும் நம்பி வாழ்பவர்கள்.
இறைவனை கும்பிட்டுவிட்டு உண்டியலில் காசுபோட்டு இறைவன் எங்களை வாழவைக்கிறான் என்று முழுமையாக நம்புபவர்கள். இவர்களை சுலபமாக ஏமாற்றலாம். எனவே உலகில் வலுவான மதங்கள் என்ற நிலையை கிறித்தவமும், இசுலாமுமே பிடித்துக்கொள்கின்றது. அவை இரண்டும் எதிர்த்து மோதும் வல்லமை கொண்டவை. அதேபோன்று பெளத்தம் உள்ள நாடுகளில் பெளத்த அடக்குமுறை நடந்தபடிதான் உள்ளது. எனவே தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்டதும் இலங்கையில் நடக்கக்கூடிய அடுத்த போர் இசுலாம், கிறித்தவம் சார்ந்ததாக இருக்கும் என்பது ஏற்கனவே காட்டப்பட்டுவிட்டது.
அதேவேளை பௌத்த சிங்களம் எந்தக் கவலையும் இல்லாது இதனை பார்த்துக்கொண்டிருக்கும் என்பதே சரியானது. காரணம் முசுலீம்கள் தமிழர்கள், அதேபோல் தமிழர்கள் வாழும் பகுதிகளை பாதிப்பு பகுதியாக தெரிவுசெய்தால் அப்போதும் தமிழர்களே பாதிக்கப்படுவர்.
தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து நோக்கினால் அரசியல் விழிப்புணர்வு குறைந்த அல்லது விழிப்புணர்வு அற்ற மக்களாகவே வாழ்கின்றனர் என்று சொல்லமுடியும். அரசியல் என்பது தனித்து அரசியல்வாதிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரித்தானது. தமிழர்களிடம் அது இல்லை. “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பது வெறும் பேச்சாய் எம்முன் சொல்லப்படுகின்றது.
படிக்கும் மாணவர்கள் கூட பண்பற்றவர்களாகவே உள்ளனர். கொலை, கொள்ளை, வீதிவிபத்து, போதை, சாதி என்பன மக்களை வருத்துகிறது. சமூதாயத்தை சீர்படுத்தவேண்டிய கல்விச்சமூகம் அந்த மக்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்கின்றது. யாரையும் நாங்கள் பகைக்க வேண்டாம் என்று இவற்றை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றது அரசியல் தலைமைகள். சிங்கள அரசுதான் மக்களை கட்டுப்படுத்துகின்றது.
அரசுதானே கட்டுப்படுத்தவேண்டுமென்பது சரி. ஆனால் சட்டம் ஒழுங்குகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாட்டில் நல்ல நிலையை ஏற்படுத்தவேண்டியது யார் பொறுப்பு? எமக்குள் ஒற்றுமை, புரிந்துணர்வு வேண்டாமா?. இதனை மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடாதா?. அரசியல் என்பது மக்களுக்கு உரிமை பெற்றுத்தருவோம் என்று சொல்வதுதானா?. என்ற கேள்விகளை நாம் கேட்கவேண்டும். இதுவும் அரசியலுடன் சேர்ந்ததுதான்.
நான் சிறுவயதாக இருக்கும் காலத்தில் நடந்த கோவில் திருவிழாக்கள் எனக்கு ஞாபகமிருக்கின்றது. திருவிழாக்காலங்களில் அங்குள்ள இடங்கள் கடைகளால் நிரம்பும். பல்வகை பொருட்களால் அந்தக் கடைகள் நிரம்பியிருக்கும். கடலை, கச்சான், சோழப்பொரி, இனிப்புபண்டங்கள், குளிர்களி இப்படி இன்னும் சொல்லலாம். அதுபோல கோவிலுக்கு தேவையான பொருட்கள் விற்கும் ஒரு சிலகடைகளும் இருக்கும். ஆனால் கோவிலுக்கான பொருட்கள் விற்கும் கடையிலும் ஏனைய கடைகளிலே கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேவைப்படும் காலத்தில் அவர்கள் சரியாக வியாபாரம் செய்ய தவறமாட்டார்கள். ஏனென்றால் இக்காலத்தை விட்டால் அவர்களுக்கு வருமானமும் இல்லை. வாழ்க்கையும் இல்லை. எனவே எதனை எப்போது செய்யவேண்டுமோ அதனை அப்போதே செய்யவேண்டும்.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” யாருக்கும் பழக்கம் மாறாது. இன்றைய அரசியல் தலைவர்கள் பலர் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார்கள். எங்களால் முடியாது என்றால் அடுத்தவர்களை அனுமதிக்கவேண்டும் அதுவும் நடப்பதாக தெரியவில்லை. இந்த அரசியல் தலைவர்கள் அன்றே தமிழர்களுக்கு தனிஉரிமை, தமிழருக்கு விடுதலை, தமிழருக்கு தனிநாடு என்று முழங்கியவர்கள். எனவே தலைவர்களின் வல்லமையை தமிழர்கள் அறிவார்கள். தமிழர்களின் இயல்பை அரசியல் தலைவர்கள் அறிவார்கள். இளைய சமுதாயம்கூட தமிழ்மக்களின் எதிர்காலத்தை சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே அரசியல் கூட்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா என்பது மக்களுக்கே தெரிந்த ஒன்று.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், பா.கஜதீபன், தபேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
ஏனைய ஆறு பேரும் நாளை கையொப்பமிடுகின்றனர். இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பு மனு நாளை முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் பணிமனையில் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.
தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், வேட்பாளராக இணைக்கப்பட்டுள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.
அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை (16) பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றது. றியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய றியோ பணியாளர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தப்பியோடிவிட்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வைத்திய கலாநிதி நந்தகுமார் மற்றும் அவரது நண்பரான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த த.சிவரூபன் ஆகியோர் இன்று பிற்பகல் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வெளிநாட்டு பிரஜைகள் இருவர் றியோ ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தினுள் செல்வதை அவதானித்தனர்.
அங்கு சென்ற மருத்துவரும் அவரது நண்பரும் குறித்த வெள்ளை இனத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை றியோ விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கிய வைத்தியர் நந்தகுமார் அவர் வரும்வரை தமது நண்பருடன் அங்கு காத்திருந்தார். இதன்போது றியோ ஐஸ்கிறீம் நிலைய பணியாளர்களும் வேறு சிலரும் திடீரென இருவர் மீதும் மோசமாக தாக்குதல் நடத்தினர். கற்களாலும் எறிந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்ற இவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரை மட்டும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
சம்பவம் தொடர்பாக வைத்தியரும் அவரது நண்பரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமை மருத்துவ துறையினரிடையே அதிர்ச்சியையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்கத்கது.
வவுனியாவில் இன்று அதிகாலை வரையிலும் 449 கோரோனா வைரஸ் நோயாளர்கள் அழைத்து வரப்பட்டு பல்வேறு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் வவுனியா நகரம் பிரதான கோரோனா வைரஸ் பரிசோதனை நிலையமாக மாற்றமடைந்து வருகிறதா என பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிற்கு கடந்த 13ஆம் திகதி 265 கோரோனா வைரஸ் தொற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் விமான நிலையத்திலிருந்து பொலிசாரின் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் 16ஆம் திகதி மேலுமொரு தொகுதி 134 கேரோனா நோயாளர்கள் எனச்சந்தேகிக்கப்படும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து விமான நிலையத்திற்கு வந்திறங்கியவர்கள் பெரியகட்டு இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று அதிகாலை பூவரசன்குளம் வேலங்குளம் விமானப்படை முகாமிற்கு 15பெண்கள் , 35 ஆண்கள் உட்பட 50பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தற்போது வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 449ஆக அதிகரித்து வருகின்றனது.
இந்நடவடிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுவதுடன் கோரோனா வைரஸ் நோய்த் தொற்குற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளதுடன் வவுனியா பிரதான கோரோனா வைரஸ் நோய் தொற்றிற்குள்ளானவர்களை தனிமைப்படுத்தம் முகாமாக மாற்றமடைந்து வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளதுடன் பொதுமக்கள் மத்தியில் அச்ச நிலையையும் ஏற்படுத்திவருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியை சேர்ந்த கியூர்வேக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக முதல் மருந்தை உருவாக்கி உள்ளது. ஜூலை முதல், இந்த மருந்தை பயன்பாட்டிற்கு விடுவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது. .
ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனமான கியூர்வேக் என்னும் நிறுவனம் தான் கொரோனாவிற்கு எதிரான மருந்தை உருவாக்கி உள்ளது. இந்நிறுவனமானது தற்போது இந்த மருந்தை சோதனை செய்து வருகின்றது. வரும் ஜூலை முதல் இந்த மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மருந்து நிறுவனத்தை கையகப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார். ஜெர்மனி நிறுவனத்திடம் இருந்து மருந்தை கொள்முதல் செய்வதற்கும், மொத்தமாக நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கும் அதிபரின் நிர்வாகம் முயன்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிறுவனத்தை வாங்க முயற்சிக்கும் அதிபர் டிரம்ப், இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டுள்ளதாக ஜெர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.
கொரோனா மருந்து தயாரிப்பு நிறுவனத்தை வாங்கினால் மருந்து அமெரிக்கா வசம் வரும், அவ்வாறு வரும்பட்சத்தில் வேறு நாடுகளுக்கு மருந்தை விற்பனை செய்யாமல் அமெரிக்காவிற்கு மட்டுமே மருந்தை பயன்படுத்துவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கியூர்வேக் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையின்போது அதிபர் டிரம்ப் இதனை குறிப்பிட்டதாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான மருந்தை உருவாக்குவதற்கான செலவு அதிகம், அதே நேரத்தில் குறைந்த அளவு மருந்தை உருவாக்குவதற்கு பல நாட்கள் ஆகும் என்பதால் தான் அமெரிக்கா மருந்தை வாங்கும், ஆனால் யாருக்கும் விற்காது என பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவிற்கு எதிரான மருந்துக்கு மட்டும் 10 பில்லியன் டாலர்(ரூ.74,110கோடி) மற்றும் மொத்த நிறுவனத்தை வாங்குவதற்கு 25 பில்லியன் டாலர் (ரூ.1,85,275 கோடி) தருவதாகவும் அதிபர் டிரம்ப் அரசு விலை பேசியுள்ளது. நிறுவனத்தை விலை பேசியதற்கான ஆதாரங்கள் ஜெர்மன் நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தங்கள் நாட்டில் இருக்கும் கியூர்வேக் நிறுவனத்தை அமெரிக்காவிற்கு விட்டுகொடுப்பதற்கு ஜெர்மனி தயாராக இல்லை. எனவே அதுவும் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக விலை பேசி வருகின்றது.
உலக நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருந்தை வாங்குவதில் ஜெர்மனி, அமெரிக்கா இடையே கார்ப்பரேட் சண்டை ஏற்பட்டுள்ளது.
தற்போது உலகில் வேகமாக பரவிவரும் கோவிட்-19 என்ற வைரசின் தாக்கத்தால் அமெரிக்காவில் 12 இலட்சம் மக்களும் பிரித்தானியாவில் 2,50,000 மக்களும் பலியாகலாம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இம்பீரியல் பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை பிரித்தானியாவில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. வைரசைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பொதுமானது அல்ல என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளது.
இந்த வைரஸ் 1918 ஆம் ஆண்டு பரவிய ஸ்பானிஸ் காச்சலை விட மோசமானது. எனவே இதனை கட்டுப்படுத்துவாற்கான நடைமுறையை 18 மாதங்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.
சீனா, இத்தாலி மற்றும் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு எட்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.
எல்லா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பிரித்தானியாவில் 2,50,000 மக்களும், அமெரிக்காவில் 11 இலட்சம் தொடக்கம் 12 இலட்சம் மக்களும் மரணமடையலாம் என பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முறையாக மனிதர்களுக்கு தடுப்பூசிப் பரிசோதனை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, மனிதர்களுக்குப் போடப்பட்டது.
இந்தத் தடுப்பூசியின் பெயர் எம்ஆர்என்ஏ- 1273 ஆகும். இதை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இவர்களுடன் கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த மாடர்னா என்னும் பயோடெக்னாலஜி நிறுவனப் பணியாளர்களும் இணைந்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.
இதற்காக முதலில் 18 முதல் 55 வயதில் இருக்கும் ஆரோக்கியமான தன்னார்வலர்கள் 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனை முயற்சியாக தடுப்பூசி போடப்பட உள்ளது. பின்னர் 6 வாரங்களுக்கு இவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவர். முதல்கட்டமாக, பெண் ஒருவருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி சரியான முறையில் வேலை செய்கிறதா, பாதுகாப்பானதா என்று பலகட்ட முறைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதனால் கொரோனா தடுப்பூசி சந்தைகளில் கிடைக்க ஓராண்டில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸுக்குத் தனியாக இதுவரை எந்தவொரு மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு, சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பற்றிய விபரங்களை மிக வேகமாக திரட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொடர்பான அவசர கலந்துரையாடலொன்று அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டிருந்தது.
இதன்போதே குறித்த அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் வழங்கியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
வெளிநாடுகளில் இருந்து மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் அல்லது வருகை தந்து திரும்பிச் சென்றவர்கள் பற்றிய விபரங்களை வேகமாக திரட்ட வேண்டும்.
இந்த நடவடிக்கையை கிராம சேவகர்களுடாக மிக வேகமாக மேற்கொள்ள வேண்டும். இந்த தகவல்களை திரட்டுவதன் மூலம் பொது மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.