கோவிட்-19 வைரஸ் – அமெரிக்காவில் 12 இலட்சம் மக்கள் பலியாகலாம்

தற்போது உலகில் வேகமாக பரவிவரும் கோவிட்-19 என்ற வைரசின் தாக்கத்தால் அமெரிக்காவில் 12 இலட்சம் மக்களும் பிரித்தானியாவில் 2,50,000 மக்களும் பலியாகலாம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இம்பீரியல் பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை பிரித்தானியாவில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. வைரசைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பொதுமானது அல்ல என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளது.

இந்த வைரஸ் 1918 ஆம் ஆண்டு பரவிய ஸ்பானிஸ் காச்சலை விட மோசமானது. எனவே இதனை கட்டுப்படுத்துவாற்கான நடைமுறையை 18 மாதங்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.

சீனா, இத்தாலி மற்றும் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு எட்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.

எல்லா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பிரித்தானியாவில் 2,50,000 மக்களும், அமெரிக்காவில் 11 இலட்சம் தொடக்கம் 12 இலட்சம் மக்களும் மரணமடையலாம் என பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.