கிளிநொச்சி பிரதேச செயலாளருக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்.

வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பற்றிய விபரங்களை மிக வேகமாக திரட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொடர்பான அவசர கலந்துரையாடலொன்று அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டிருந்தது.

இதன்போதே குறித்த அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் வழங்கியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளில் இருந்து மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் அல்லது வருகை தந்து திரும்பிச் சென்றவர்கள் பற்றிய விபரங்களை வேகமாக திரட்ட வேண்டும்.

இந்த நடவடிக்கையை கிராம சேவகர்களுடாக மிக வேகமாக மேற்கொள்ள வேண்டும். இந்த தகவல்களை திரட்டுவதன் மூலம் பொது மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.