Home Blog Page 15

பென்-க்விர் மீது இத்தாலி, பிரான்ஸ் விசாரணைகுழு அமைப்பு

காசாவிற்குச் சென்ற ஒரு உதவிப் படகுக் குழுவில் பங்கேற்ற பன்னாட்டு ஆர்வலர் களை, தீவிர வலதுசாரி இஸ்ரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் தவறாக நடத்தியதாகக் கூறப்படுவது குறித்து, பிரான்ஸ் இதேபோன்ற ஒரு விசாரணையைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இத்தாலி ஒரு விசாரணையை கடந்த வியாழக்கிழமை(11) தொடங்கியுள்ளது. கூறப்படும் இந்தத் தவறான நடத்தைக்காக பென்-க்விர் மீது ஐரோப்பிய ஒன்றி யம் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வரும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது.
இந்தப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றன. அதன் சுமார் 2.1 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மீது இஸ்ரேல் பலமுறை மிகவும் கடுமையான அணுகுமுறையைக் கையாண்டு வந்தாலும், பென்-க்விர் என்பவரின் செயல்களால் இந்த சமீபத்திய சம்பவம் மேலும் மோசமடைந்தது. கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கப்பலுக்கு அந்த அமைச்சர் ஒரு பெரிய இஸ்ரேலியக் கொடியை அசைத்தபடி வந்து, மண்டியிட்டுக் கட்டப்பட்டிருந்த ஆர்வலர்களைக் கேலி செய்து, அவர்களை நீண்ட காலம் சிறையில் அடைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். அவர் அந்த காணொளியையும் இணையத்தில் பதிவிட்டார்.
இந்தச் செயல் பென்-க்விர்க்கு பரவலான சர்வதேச கண்டனத்தையும், உள்நாட்டில் சில விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. “பிரெஞ்சு மற்றும் ஐரோப்பியக் குடிமக்களுக்கு எதிரான அவரது கண்டிக்கத்தக்க செயல்களை” காரணம் காட்டி, பிரான்ஸ் அவருக்கு நாட்டிற்குள் நுழையத் தடை விதித்தது. போலந்தும் அமைச்சருக்குப் பயணத் தடை விதித்தது. அதே நேரத்தில், கடந்த வாரம் அயர்லாந்து, ஃப்ளோட்டிலா விவகாரம் மற்றும் பாலஸ்தீன எதிர்ப்புக் கருத்துக்கள் காரணமாக, பென்-க்விர் மற்றும் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகிய இருவரையும் நாட்டிற்குள் நுழையத் தடை செய்தது.
இந்தப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் மிகவும் அவசியமாகத் தேவைப் படுகின்றன. அதன் சுமார் 2.1 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் இடம்பெயர்ந்துள்ளனர். இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மீது இஸ்ரேல் பலமுறை மிகவும் கடுமையான அணுகுமுறையைக் கையாண்டு வந்தாலும், பென்-க்விர் என்பவரின் செயல்களால் இந்த சமீபத்திய சம்பவம் மேலும் மோசமடைந்தது. கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கப்பலுக்கு அந்த அமைச்சர் ஒரு பெரிய இஸ்ரேலியக் கொடியை அசைத்தபடி வந்து, மண்டியிட்டுக் கட்டப்பட்டிருந்த ஆர்வலர்களைக் கேலி செய்து, அவர்களை நீண்ட காலம் சிறையில் அடைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். அவர் அந்த காணொளியையும் இணையத்தில் பதிவிட்டார்.
இந்தச் செயல் பென்-க்விர்க்கு பரவலான சர்வதேச கண்டனத்தையும், உள்நாட்டில் சில விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. “பிரெஞ்சு மற்றும் ஐரோப்பியக் குடிமக்களுக்கு எதிரான அவரது கண்டிக்கத்தக்க செயல் களை” காரணம் காட்டி, பிரான்ஸ் அவருக்கு நாட்டிற்குள் நுழையத் தடை விதித்தது.
போலந்தும் அமைச்சருக்குப் பயணத் தடை விதித்தது.  அதே நேரத்தில், கடந்த வாரம் அயர்லாந்து, ஃப்ளோட்டிலா விவகாரம் மற்றும் பாலஸ்தீன எதிர்ப்புக் கருத்துக்கள் காரணமாக, பென்-க்விர் மற்றும் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகிய இருவரையும் நாட்டிற்குள் நுழையத் தடை செய்தது.

செம்மணியில் அகழ்வு பணிகள் விஸ்தரிப்பு

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் (14) 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.

அகழ்வின் போது, இன்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.

அவற்றுள் 341 என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

இன்றையதினம் 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன மேலும் 02 என்புக்கூடுகள் வெளிப்பட்டதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.

இவற்றில் 04 என்புகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், ஒன்று குழந்தையினதும் என கண்டறியபட்டுள்ளன.

இதேவேளை, இன்று முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.

பின்லாந்தில் ஒரு புதிய நேட்டோ ஆர்க்டிக் குழு 

பின்லாந்தில் நேட்டோ ஒரு புதிய ஆர்டிக் குழுமத்தை உருவாக்குகிறது. ஸ்வீடன் இராணுவத்தின் நோர்போட்டன் படைப்பிரிவின் தளமான புடென் நகரில், வடக்கு திசைக்கான புதிய நேட்டோ முன்னணி தரைப்படைகள் (FLF) ஜூன் 6 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளன.
புடெனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு ஸ்வீடன் பட்டாலியன் குழுவும், பின்லாந்தின் ரோவானிமியில் உள்ள ஒரு பன்னாட்டுத் தலைமையகமும் இந்தக் குழுமத்தின் அடிப்படையாக உள்ளன. முறையாக, இந்தப் பிரிவு ஐரோப்பாவின் உச்ச நேசப்படைகளின் தளபதியின் (SACEUR) கீழ் செயல்படுகிறது. 2026 ஆம் ஆண்டில், ஸ்வீடன் இந்த முன்னணி தரைப்படைகளுக்காக சுமார் 600 இராணுவ வீரர்களை ஒதுக்கும், மேலும் இந்த எண்ணிக்கையை 1,200 பேராக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
எதிர்காலத்தில், தற்போதைய பட்டாலியன் குழு ஒரு முழுமையான பிரிகேடாக விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேட்டோ மற்றும் பின்லாந்து அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த புதிய கட்டமைப்பு ஆர்டிக் சூழ்நிலைகளில் செயல் படுவதற்கும், தூர வடக்கின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உண்மையில், இது ரஷ்யாவின் வடமேற்கு எல்லைகளில் கூட்டணியின் மற்றொரு நிரந்தரமாக செயல்படும் இராணுவ அமைப்பை உருவாக்குவதைப் பற்றியது. பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைந்த பிறகு, பால்டிக் கடல் மற்றும் ஆர்டிக் பகுதிகள் அந்த அமைப்பின் இராணுவத் திட்டமிடலின் முக்கிய திசைகளில் ஒன்றாக மாறியுள்ளன.

மயிலிட்டி மக்கள் இரு வேறு இடங்களில் போராட்டம்!

போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள் நாளைய தினம் (15) யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கு காணியுரிமைக்கான மக்கள் இயக்கம் பூரண ஆதரவு வழங்கவுள்ளதாகவும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்

மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புலம்பெயர்ந்தும் வசித்து வருகின்ற மயிலிட்டி மக்கள் தமது சொந்த காணிகளில் வாழ முடியாது துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது காணியுரிமைக்கான மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடாகும்.

அதிகளவான தனியார் காணிகள் வடக்கிலே முப்படைகளும் வைத்திருக்கின்றனர்.

வயாவிளான் பகுதியில் மக்களுடைய காணிக்குள் இப்போதும் பாரிய இராணுவ மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு கொண்டிருக்கின்றது என்று காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலாலி சந்தி பகுதியிலும் நாளைய தினம் காலை 08.30 முதல் மாலை 4.30 வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா எச்சரிக்கை

 மூன்றாம நாட்டு நிறுவனங்கள் மீது விதிக்கப்படக்கூடிய தடைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை(11) தெரிவித்துள்ளதாவது.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு விஷயத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும்: சீனா என்பது பிரஸ்ஸல்ஸின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கும் ஒரு சிறிய நாடு அல்ல. சீன நிறுவனங்கள், துருக்கிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் உங்கள் ரஷ்ய எதிர்ப்பு கொள்கைக்குக் கீழ்ப்படிய மறுக்கும் வேறு எவர் மீதும் நீங்கள் தடை விதிக்க விரும்புகிறீர்களா?
சரி. ஆனால் சீனா பதிலளிக்கும்போது அதிர்ச்சியடைய வேண்டாம். சர்வதேச சட்டம் அல்லது ஐ.நா.வின் அங்கீகாரம் இல்லாமல் விதிக்கப்படும் ஒருதலைப்பட்சத் தடைகள் “விதிகள்” அல்ல. அவை அறநெறி என வேடமிட்ட அதிகார அரசியல். மேலும் ஐரோப்பாவிற்கான  பிரச்சினை எளிமையானது:
சீனா பாதுகாப்பற்றது அல்ல. தடைகளால் இரு தரப்பிலும் பாதிப்பு ஏற்படச் செய்வதற்குத் தேவையான தொழில்துறைத் திறன், சந்தை அளவு, விநியோகச் சங்கிலிகள் மற்றும் எதிர் நடவடிக்கைகள் சீனாவிடம் உள்ளன. ஐரோப்பா இன்னும் உலகப் பொருச்ளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவது போல் தொடர்ந்து செயல்படுகிறது. அது இல்லை. பிரஸ்ஸல்ஸ் தடைகளை ஒரு பழக்கமாக மாற்ற விரும்பினால், சீனாவாலும் எதிர் நடவடிக்கைகளை ஒரு பழக்கமாக மாற்ற முடியும்.
உலகத் தொழிற்சாலையுடன் சண்டைக்குப் போய்விட்டு, அந்தத் தொழிற்சாலை உங்கள் விநியோகச் சங்கிலியைச் சோதிக்கும்போது அழாதீர்கள் என அது மேலும்  தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந் துள்ள சமீபத்திய தடைகள் தொகுப்பில், இந்தியா மற்றும் சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களும் அடங்கியிருப்பதை தொடர்ந்து சீனா இந்த கடும் எச் சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இறைமையை மீட்டெடுக்க ஈழத்தமிழர் ஒவ்வொருவரையும் தமிழ் புலம்பெயர் செய்தி அழைக்கிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 395

கடந்த வாரத்தில் ‘ தமிழ் புலம்பெயர் செய்திகள்” ஈழத்தமிழ்க்கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய  அவரது சட்ட உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளை உறுதி செய்யவும், கலைஞன் என்ற வகையில் அவரது படைப்பாக்க மற்றும் வெளிப்பாட்டு மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் மீறி சனநாயக் கொள்கைகளுக்கு எதிராக அவர் சிறிலங்காவால் கைது செய்யப்பட்டதில் இருந்து அவரைப் பாதுகாக்கவும், சிறிலங்காவிலுள்ள பயங்கரவாதச் சட்டத்தை அனைத்துலக மனித உரிமைகள் தரத்துக்கு ஏற்ப ரத்து அல்லது சீர்திருத்தம் செய்யவும், மக்களின் அடிப்படை மனித உரிமைகளான கருத்துச் சுதந்திரம் மற்றும் பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்கவும்  அமெரிக்கா சிறிலங்காவிடம் வலியுறுத்த வேண்டுமென அமெரிக்காவில் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்க்கோரூபியோவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்வழி ஈழத்தமிழர் எத்தகைய மனிதஉரிமை பாதுகாப்பைப் பெறுகிறார்கள் என்பதை அனைத்துலக மயப்படுத்திய தமிழ் புலம்பெயர்  செய்திகளுக்கு  இலக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.  அவ்வாறே சிறிலங்கா பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாடகர் கைது தொடர்பாக அளித்த சட்டரீதியான அற்புதமான விளக்கத்தையும் இலக்கு பாராட்டுகிறது. பிணையில் பாடகர் விடுவிக்கப்பட்டிருந்தாலும்  அவர் மேலான வழக்கினைச் சிறிலங்காவை மீளப்பெற வைக்க அனைத்துலகத் தமிழர்களும் ஒன்றுபட்டுத் தொடர்ந்து உழைக்க வேண்டுமென்பது இலக்கின் இவ்வார அழைப்பாகவுள்ளது.
மேலும்  ‘தமிழ் புலம்பெயர் செய்தி’ ஈழத்தமிழர்களுடைய தன்னாட்சி உரிமைக்குக் கல்விக் கருத்தியல் பலத்தை அனைத்துலக அரசியலில் வழங்கக் கூடிய வகையில் ஈழத்தமிழரல்லாத ஐரோப்பிய பாதுகாப்பு ஆய்வுக்கழகத்தின் இணை ஆய்வாளரும் இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்லூரியின் பட்டதாரி மாணவருமான ஜோஸ் லுயெங்கோ தனது “ மக்களாட்சியும் இலங்கையில் உள்நாட்டுப்போரும்” என்ற ஆக்கத்தின் முக்கிய செய்திகளையும் ஈழத்தமிழர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
“பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் இலங்கையில் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற மாதிரியில் ஏற்படுத்திய சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சிமுறை தமிழர்களைப் புறக்கணிப்பதற்கும் தமிழர்களுடன் மோதல்களை உருவாக்கவும் சிங்கள பெரும்பான்மை ஆதிக்கத்தைத் தமிழர் மேல் ஏற்படுத்தவும் வழி வகுத்துள்ளது” என்பதை எடுத்துரைக்கும் இவ்வாக்கம் ஈழத்தமிழர் சமகால அரசியல் வரலாறு குறித்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
“இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியலமைப்புக்களும் தமிழர்களைப் பாதுகாக்கவில்லை. இதனால் சுதந்திரத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் பாணி சனநாயக ஆட்சி முறைமை உள்நாட்டுப்போருக்கு வழிவகுத்த துருவமயமாக்கலின் சுழற்சியைத் தூண்டியது. சிங்களப் பெரும்பான்மையினர் பிரிவினைக் கொள்கைகளை முன்னெடுக்கவும் தமிழ்ச் சிறுபான்மையினரை அரசியல் அதிகாரத்தை அணுகுவதிலிருந்து விலக்கி வைக்கவும் தூண்டியது” என ஜோஸ் லுயெங்கோவின் ஆய்வு விளக்குகையில் ஈழத்தமிழர் பிரிவினை கோரவில்லை மாறாகத் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் தாங்கள் அரசற்ற தேசஇனமாகச் சிறிலங்காவால் ஆக்கப்பட்ட பொழுது தாங்கள் பாதுகாப்புடன் கூடிய அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் நிர்ணயிக்கும் தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுடைய தாயகத்தின் இறைமையின் மீள் உறுதிப்படுத்தலையே கோரினர் என்ற வரலாற்று பரிணாமத்தை உலகிற்கு தெளிவாக்கி ‘சிங்களவர்களே பிரிவினைவாதிகள்’  என்ற உண்மையை இவ்வாய்வு உறுதிசெய்கிறது.
“இலங்கையின் மரபுவழி வெஸ்ட் மினிஸ்டர் பாணி சனநாயகம் மிகவும் மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசையும் முதலில் வருபவருக்கே வெற்றி’ என்ற தேர்தல் முறை இணைப்பையும் கொண்டதான அழிவுகரமான நிறுவனக் கட்டமைப்பையே உருவாக்கியது. இந்த அமைப்பு அரசியல் கட்சிகளை “ பெரும்பான்மை வாக்குகளின் மூலம் தனித்து ஆட்சி செய்ய அனுமதித்தது. இது பெரும்பான்மை இனக்குழுவின் ஆதிக்கம் மற்றும் பாகுபாடு நிறைந்த முறையில் பிரத்தியேக அரசியல் அதிகாரத்தை பெறவும் தக்கவைத்துக் கொள்ளவும் செயல்படுத்தவும் வழிவகுத்தது. இதனால் பிரச்சினை என்பது வெறும் ஒரு தலைவர், ஒரு கட்சி, அல்லது ஒரு காலகட்ட வன்முறையாக மட்டுமல்ல, அரசியல் அமைப்பிலேயே இருந்தது. அதாவது பெருகி வரும் தமிழ் விரோதக் கொள்கைகள் மூலம் ஒன்றுக்கொன்று போட்டியிடும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கு வெகுமதி அளிக்கும் அமைப்பாகவே அரசியலமைப்புக்கள் தொடர்ந்தன. சிங்களக் கட்சிகள் போட்டிப் பேரினவாதத்தில் ஈடுபட்டு சிறுபான்மையினரை அதிகாரமற்றவர்களாக்கும் கொள்கைகளையே கடைப்பிடித்தன. இதுவே தமிழ் தீவிரமயமாக்கலை அரசியல் புறக்கணிப்பு மற்றும் சார்பு இழப்புடன் தொடர்புடுத்தியது.” என ஜோஸ் லுயெங்கோ சான்றாதாரப்படுத்துகையில் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பு பயங்கரவாத அமைப்பல்ல ஈழத்தமிழ்ப்போராளிகள் பயங்கரவாதிகளல்ல என்ற உண்மைகளையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றது.  இதனை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் கவனப்படுத்த உழைக்க வேண்டுமென்பது இலக்கின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
மேலும் தமிழ் புலம்பெயர் செய்தி பின்வருவனவற்றையும் இவ்வாய்வின் பின்னணியில் தனது கருத்துக்களாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
1. தீவின் வரலாற்றுப் பிராந்திய யதார்த்தத்தை இவ்வாய்வு அறிக்கை அங்கீகரிக்கிறது. காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனி மற்றும் ஒப்பீட்டு அளவில் தன்னாட்சி பெற்ற சமுக அமைப்புக்ககளாக வாழ்ந்தனர் தமிழர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சிங்களவர்கள் முக்கியமாகத் தென் மேற்கு பகுதிகளிலும் வாழ்ந்தனர் என்பதை என்பது இவ்வாய்வில் தெளிவாக்கப்படுகிறது.
2. இலங்கையின் தற்போதைய மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பிராந்திய அடையாளத்தை அழித்த ஒரு காலனித்துவத்துக்குப் பிந்தியகட்டுமானம் என்ற தமிழ் நிலைப்பாட்டை இவ்வாய்வு நிலைப்படுத்துகிறது.
3. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்களின் வரலாற்றுத் தமிழ்த்தாயகத்தை சிங்களப் பெரும்பான்மை பாராளுமன்ற அதிகாரத்தின் வழி நிரந்தரமாக அட்சி செய்து விட்டு பின்னர் அதனைத் தவறாக தமிழ் மக்களின் பங்குபற்றிய சனநாயகம் என வர்ணிக்க முடியாது என்பதையும் இவ்வாய்வு ஆணித்தரமாக நிறுவுகிறது.
தமிழ் புலம்பெயர் செய்தி இன்று தாயகத்திலும் உலகெங்கும் உள்ள இளைய ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளிலொன்று என்ற அறிவூட்டல் இல்லாத காரணத்தினாலேயே இளையவர்கள் அவர்களை விட்டு யாராலும் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையுடையவர்கள் அவர்கள் என்ற அறிவு இல்லாது உள்ளார்கள் என்ற உண்மையைத் தெளிவாக்கியுள்ளனர். அத்துடன் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களைச் சிறுபான்மையினர் என்று அழைப்பதை உடன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வரவேற்கும் இலக்கு தேசமக்கள் (Nation) என்றே ஈழத்தமிழர்களைச் அழைத்து அவர்களின் தேசநிர்மாண (Nation Buliding Process) முயற்சிகளை அனைத்துலக மக்களும் அரசுக்களும் அமைப்புக்களும் அங்கீகாரமடையச் செய்ய  அனைத்து ஈழத்தமிழர்களும் உழைப்பது ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் சமகால வரலாற்றுக்கடமையாக உள்ளதென்பதை இலக்கு ஒவ்வொருவரின் நெஞ்சிருத்த விரும்புகிறது.
மேலும் தமிழ் புலம்பெயர் செய்தி  “மேலோட்டமான சீர்திருத்தங்கள், வெற்று நல்லிணக்கமொழி அல்லது மற்றொரு மையப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு ஆகியவற்றால் இலங்கையின் நெருக்கடியைத் தீர்க்க இயலாது என்பதை அங்கீகரிக்குமாறும் ஒரு தேசத்தை மற்றொரு தேசத்தின் கீழ் நிரந்தரமாக வைக்கும் ஒரு அரசியல் அமைப்பு நீதியையோ அமைதியையோ வழங்கமுடியாது என்பதை உணருமாறும் உலகை வேண்டியுள்ளது. இலக்கு இதனை வரவேற்கிறது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும் அர்த்தமுள்ள தமிழ் இறையாண்மையை மீட்டெடுப்பதும் அனைத்துலக அளவில் கண்காணிப்பு அமைந்த தமிழ் மக்களிடையான குடியொப்பத்தின் மூலம் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீரிமானிக்க உலகநாடுகள் அமைப்புக்கள் அனுமதிப்பதுதான் முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஒரே நேர்மையான வழியாகும் என்பதையும் தமிழ் புலம்பெயர் செய்தி வலியுறுத்தியுள்ளது. இதனை ஒவ்வொரு ஈழத்தமிழரும் நெஞ்சிருத்தி  அர்த்தமுள்ள இறையாண்மையை மீட்டெடுக்க இயலுமான வகையில் உழைக்க எங்கிருந்தாலும் சனநாயக வழிகளிலான செயற்திட்டங்களை அவரவர் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்றவாறு ஒத்த உணர்ச்சியுள்ளவர்களுடன் செயற்படுத்தினால் அதன் வழியாகவே தேசமாக எழுதல் நடைமுறைச்சாத்தியமாகி ஈழத்தமிழரின் ஒருமைப்பாடும் இறைமையும் மீட்டுருவாக்கம் பெறும் என்பது இலக்கின் உறுதியான நம்பிக்கையாகவுள்ளது. இதுவே ஈழத்தமிழர்கள் பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் உள்ளவர்கள் என்ற கருத்தியலை மாற்றுவதற்கான ஒரே வழியென்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
ஆசிரியர்

Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026

Ilakku Weekly ePaper 395

Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026

Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • இறைமையை மீட்டெடுக்க ஈழத்தமிழர் ஒவ்வொருவரையும் தமிழ் புலம்பெயர் செய்தி அழைக்கிறது | ஆசிரியர் தலையங்கம்
  • வரையறையற்ற சட்டமும் வளைக்கப்படும் ஜனநாயகமும் | விதுரன்
  • யாழ்ப்பாணத்தில் இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜாவின் சந்தோசம்.! | பா.அரியநேத்திரன்
  • ஈஸ்டர் தாக்குதல் திருப்பங்களும் பாடகர் கைதும் – ஐநாவைச் சமாளிக்கும் உத்தி!!! | பத்திரிகையாளர் – அ.நிக்ஸன்
  • சங்கீத்சன் கைது: இலங்கையில் தொடரும் இனவழிப்பு ஆட்சியை வெளிப்படுத்துகிறது! |  தீபச்செல்வன்
  • அழிந்துசெல்லும் வரலாறுகள்: பாதுகாப்பது அவசியம் | மட்டு.நகரான்
  • டிட்வா சூறாவளிக்கு பின்னரும் நீடிக்கும் மலையக மக்களின் அவலம்: அரசாங்கத்தின் உத்தரவாதம் | மருதன் ராம்
  • இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பேராளுமைக்கு புகழஞ்சலி | திலீபன்
  • ரஷ்யா யாருக்கும் எதையும் கடன்பட்டிருக்கவில்லை | தமிழில்: ஆர்தீகன்
    களத்தில் சிக்கிய ட்றம்ப் – வெளியேற வழிதேடுகின்றார் | வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே விவகாரத்தை மையப்படுத்தி இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, பொலிஸ் காவலில் உள்ள நிலையில் அவருக்கு மோசமான முறையில் நடத்தப்படுவதாக சமூகத்தில் எழுந்துள்ள விவாதங்களை அடுத்தே இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், முன்னர் பொலிஸ் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட அந்த காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான வடுக்கள், இந்த ஜனநாயக நாட்டில் மீண்டும் பதிவாகக் கூடாது என்பதே அனைவரினதும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உண்மைகளையும் சமநிலையான முறையில் ஆய்வு செய்து, முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானியையும் ஒரு சாதாரண சந்தேக நபராகக் கருதி, அவருக்கான சட்டத்தின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அந்த கடிதத்தின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், கலாநிதி குணபால ரத்னசேகர, கரு கொடிதுவக்கு, வைத்தியர் திலக் ராஜபக்ஷ, வைத்தியர் உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.

ஆப்கனில் புர்கா விதிகளை மீறியதாக 30 பெண்கள் கைது – ஐநா அமைப்பு தகவல்

ஆப்கானிஸ்தானில் புர்கா விதிகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெண்களுக்கான உரிமைகளை முன்னெடுக்கும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புர்கா அணிய வேண்டும், வாசனை திரவியங்களைப் பயன்படுத்தக் கூடாது போன்ற உத்தரவுகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஜூன் 9-ம் தேதி தலிபான்களால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலும், இந்த நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன.

இந்த நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதில், குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை நிபுணர்கள் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எனினும், இதற்காக உயிரிழப்பை ஏற்படுத்தும் வன்முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது. ஆப்கானிஸ்தானில் நடைமுறை அதிகார மையமாகத் திகழும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் கையெழுத்திட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

சமத்துவம், அமைதியான முறையில் ஒன்று கூடுதல், கருத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், தடுப்புக் காவலில் இருந்து பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகள், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் நிலைமை மேலும் மோசமடைவதை தடுப்பதற்கும் அவசியம்” என தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஐநாவின் பணிகளை வழிநடத்தும் துணை சிறப்பு பிரதிநிதி ஜார்ஜெட் காக்னான் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் கைது செய்யப்படுவது அல்லது தடுத்து வைப்பது சமூகத்தில் அவருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இதனால், விடுதலையான பிறகும் அவர்கள் குடும்ப வன்முறைக்கும் சமூக வன்முறைக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் செம்மணிக்கு பயணம்: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
செம்மணி புதைகுழி விடயத்தில் நாங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து ஆழமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம். கடந்த காலங்களில் இவ்வாறு மனித எச்சங்கள் தென்படும் போது அவற்றை தெரியாமல் மூடி மறைக்கும் செயற்பாடுகளே நடந்தன. ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை. அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்குகின்றது.
இதற்கு காரணம் என்னவென்றால் நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் தமிழ் மக்களிடையே நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் இவ்வாறான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் எமது அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது.

இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் அவ்விடத்திற்கு செல்லவுள்ளார். இதன்படி செம்மனி தொடர்பில் ஆழமான கருத்தாடல்கள் நடத்தபப்படவுள்ளன. அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்குள்ள பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்குள்ள பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் நடக்கவுள்ளது என்றார்.