Home Blog Page 136

இலங்கை வரும் வொல்கர் ரேக் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்ய வேண்டும் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் இம்மாதம் நாட்டுக்கு வருகைதருவதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், அவ்வாறு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும், தங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் உயர்ஸ்தானிகரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் நிலையில், வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளில் ஒரு தரப்பினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக இலங்கைக்கு வருகை தரவேண்டாம் எனக்கோரி உயர்ஸ்தானிகருக்கு ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இந்தநிலையில் அவர் இலங்கைக்கு வருகை தரும் பட்சத்தில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யுமாறும், பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அனுப்பி வைத்திருக்கும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

‘வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினராகிய நாம் நீதிகோரி சுமார் 3000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம்’.
‘அது யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் அரச படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் உண்மையையும் அதற்குரிய பொறுப்புக்கூறலையும் கோருகின்ற எமது இயலாமையின் வெளிப்பாடாகும்’.

பல ஆண்டுகளாக இப்போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் அதற்குரிய பதிலோ அல்லது நீதியோ கிட்டாமலே உயிரிழந்துவிட்டனர்.  உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதே எப்போதைக்குமான எமது அசைக்கமுடியாத இலக்காக இருந்திருக்கின்றது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59ஆவது கூட்டத்தொடர் 16ஆம் திகதி ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் இக்கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.
அதேவேளை இக்கூட்டத்தொடருக்கு மத்தியில் இம்மாத இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகைதர உத்தேசித்திருப்பதுடன், இவ்வருகை தொடர்பில் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அத்துடன் புதிய தீர்மானமொன்றைக் கொண்டு வருவது குறித்தும் ஆராயப்படும். இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கிடம் வடக்கு, கிழக்கு அரசியல், சிவில் தரப்பினர் கூட்டிணைந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலை முன்னிலைப்படுத்திய கோரிக்கைளை முன்னெடுத்தால் ஆட்சியில் உள்ள அநுர அரசாங்கம் சுயாட்சிக் கோரிக்கைக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணி – சிந்துப்பாத்தி மயானத்தில் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட பரீட்ச்சார்த்த அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறைவு செய்யப்பட்டன. அதற்கமைய, நேற்று வரையான 9 நாட்களில் மொத்தமாக 19 முழுமையான மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக் கூட்டுத் தொகுதிகளும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பார் எனவும் சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் 20 ஆம் திகதியை நீதவான் அனுமதித்துள்ளார். இந்த உத்தேச திகதிக்குள், சமர்பிக்கப்பட்ட பாதீட்டுக்கான நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியை உத்தேச திகதியில் ஆரம்பிக்க முடியுமா என்பதை நீதிமன்றம் அறிவிக்கும் என சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளா

ஜனாதிபதி பொது மன்னிப்பில் முறைகேடு – CID யில் முறைப்பாடு

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும்.

இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
இதற்கமைய ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
எவ்வாறாயினும்,குறித்த சம்பவத்திற்கு அமைவாக 2025-05-06 திகதியிடப்பட்டு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக , “ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக” என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலகம் நேற்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடளித்துள்ளது’ என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறைமையுள்ள சுதந்திர வாழ்வா? இறைமை இழந்த அடிமை வாழ்வா? ஈழத்தமிழரின் எதிர்காலம் முடிவாகும் மாதமிது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 342

ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில் 2025இல் ஈழத்தமிழ்த்தேசிய வாழ்வுக்கான உள்ளூராட்சி சபைகளை அவர்களுடைய தாயகத்திலேயே அமைக்கவியலாத அரசியல் ராஜதந்திரமற்றவர்களாகக் காட்சியளிக்கின்றனர். இவர்கள் உண்மையல்லாதவற்றையே பேசுபவர்களாகவும் இறைமையை மறுக்கும் ஈழத்தமிழ்தேசியப் பகைமைகளுடன் கூட்டுச் சேர்ந்தாயினும் பதவியில் அமரத் தவிப்பவர்களாக இவ்வாரத்தில் உள்ளனர். இதைப்பார்க்கையில் “ஒஹோ ஹோ ஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்? உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்” என்கின்ற ‘படித்தால் மட்டும் போதுமா’ திரைப்படத்தில் கண்ணதாசன் 1962களில் ரி.எம் சவுந்தரராஜனின் குரலில் சிவாஜிகணேசனின் நடிப்பில் தமிழ் அரசியல் உலகுக்கு விடுத்த திரைப்படப் பாடல் அழைப்புத்தான் நினைவுக்கு வருகிறது. இந்தப் பாடலை வைத்தே ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவர்களுடைய நிலையை விளக்கலாம் போல் தோன்றுகிறது. “உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது. காலம் போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிரைக் காப்பதுமில்லை. அடிப்படையின்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிக்காது. அழகாய் இருக்கும் காஞ்சிரைப் பழங்கள் சந்தையில் விக்காது. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது. விளக்கிருத்தாலும் எண்ணெயில்லாமல் வெளிச்சம் கிடைக்காது. கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர்கள் போலே” ஓடுவதெங்கே சொல்லுங்கள் என்ற வரிகள் ஒவ்வொரு ஈழத்தமிழ் அரசியல்வாதியையும் குறித்து அன்றே பாடப்பெற்றவை போல் தெரிகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் சிறிலங்காவுக்கான மனித உரிமைகள் மதிப்பீட்டுப் பயணத்தை இன்னும் இருவாரங்களில் மேற்கொள்ள இருக்கும் நேரத்தில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் உளறித்திரிவதை விடுத்து உருப்படியாக அவரைச் சந்திப்பது குறித்துச் செயற்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களையோ கொடுப்பதற்கான ஆவணங்களையோ ஒருமுகப்படுத்தி ஆயத்தம் செய்யாத நிலையில் உருப்படியாக எதுவும் நடக்காது என்கிற எச்சரிப்பை இலக்கு முன்வைக்க விரும்புகிறது. இதன் விளைவாக அமையும் முடிவுகள் இம்மாதத்தில் ஈழத்தமிழர்கள் இறைமையைப் பேணிச் சுதந்திரமாக வாழ்வார்களா அல்லது இறைமையை இழந்து அடிமை வாழ்வுக்கு உள்ளாவார்களா என்ற நிலையை அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தும். காரணம் சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தக்குற்றச் செயல்கள் மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறில்கள் தொடர்பான சாட்சியங்களைப் பதிவு செய்யும் ஐ.நா. வின் அலுவலகத்தின் எதிர்காலம் ஆணயாளரின் பயணத்தின் முடிவுகளிலேயே தங்கியுள்ளது.
அதனை மூடக்கூடிய வகையில் சிறிலங்காவின் பிரதமர் சிறிலங்காவின் சபாநாயகர் சிறிலங்காவின் நாடாளுமன்றச் செயலாளர் எனச் சிறிலங்காவின் அனைத்து சக்திகளுமே சிறிலங்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிரெஞ்சே மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி மற்றும் அபிவிருத்திகளுக்கான வதிவிட ஆலோசகர் பற்றிக் மக்கார்த்தி ஆகியோரைச் சந்தித்துச் சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையைத் திருப்திப்படுத்தக் கூடிய முறையில் செயற்படுத்தும் திட்டங்களை எடுத்துக்கூறி தங்கள் அரசு இனங்களிடை நல்லிணக்கத்துக்காக முயற்சிப்பதாகவும் நாடாளுமன்றத்தின் உள்ளேயே இவைகளை முன்னெடுப்பதற்கான சட்டப்பிரிவினையே உருவாக்கப் பேவதாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அனைத்துலகிலும் செயற்பாட்டாளர்களாக உள்ள ஈழத்தமிழர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருடைய சிறிலங்காப் பயணத்தை எவ்வாறு ஒவ்வொருவரும் மக்களதும் மண்ணினதும் மனித உரிமைக்கான பாதுகாப்பாக மாற்ற முடியுமெனச் சிந்தித்து அனைவரையும் இணைத்து ஆவனசெய்யுமாறு இலக்கு வலியுறுத்திக் கேட்க விரும்புகிறது. அவ்வாறே “ஓதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரமாகாது. உருவத்தில் சிறிய கடுகென்றாலும் காரம் போகாது. பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ்பட்டுப் போகாது. பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது. காற்றைக் கையில் பிடித்தவனில்லை. தூற்றித் தூற்றி வாழ்ந்தவனில்லை. ஓடுவதெங்கே சொல்லுங்கள்” என நிறைவுபெறும் இந்தப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றினதும் பொருள்களை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து பழித்துப் பழித்தும் தூற்றித் தூற்றியும் வாழும் தன்மைகளால் எதனையும் சாதிக்க இயலாதென்பதைத் தெளிந்து, இறைமை பேண இணைந்து செயற்படுவதற்கான கொள்கைகளைக் கோட்பாடுகளைத் தெளிவாக்கி இறைமையை மீளுறுதி செய்வதே பாதுகாப்பான அமைதிக்கான அரசியல் பாதை. அதனை விட்டு விலகாது ஈழத்து அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் என்பது இலக்கின் வேண்டுகோளாக உள்ளது.
வடக்கில் பருத்தித் தீவு உட்பட சீன அரசாங்கத்தின் கடலட்டைப் பண்ணைகளின் பிளாஸ்ரிக் கழிவுகள், பயன்படுத்திய மீன்வலைகள் கடலில் கொட்டப்படுகிறது இவற்றை மீன்களும் உண்டு அவற்றைச் சாப்பிடும் மனிதர்களும் உண்டு நோய்வாய்ப்படுகின்றனர் என்ற விடயம் அனைத்துலகச் சூழல் சுற்றாடல் பாதுகாப்பு நாளான யூன் 5ம் நாள் ஈழமக்களால் எழுப்பப்பட்டுள்ளது. அவ்வாறே இந்திய மீனவர்கள் 16ம் நாள் முதல் மீளவும் மீன்பிடி ஆக்கிரமிப்பைத் தொடங்கப் போவதாக மக்கள் அஞ்சுகின்றனர். தையிட்டிக்கு ஆனி 10ம் நாள் ஆயிரக்கணக்கில் சிங்களவர்களை கொண்டு வந்து பௌர்ணமி வழிபாடு செய்வதற்கான முயற்சிகளும் கூடவே அதற்குச் சாதகமாக தையிட்டி புத்த விகாரையை நிலைநிறுத்தக் கூடிய பரிந்துரைத் தொகுப்புகளும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றையும் மக்களை தேசமாக ஒருங்கிணைக்காவிட்டால் தடுத்து நிறுத்த இயலாது என்பதை ஈழத்து அரசியல்வாதிகள் உணர வேண்டும். அதே வேளை மாறிவரும் புதிய உலக அரசியல் ஒழுங்கில் ஈழத்தமிழர்களின் இறைமையை உலகளாவிய நிலையிலும் மீளுறுதி செய்யத்தக்க பல வாய்ப்புக்கள் உருவாகி வரும் நேரம் இதுவென்பதால் அதனைச் செய்யுங்கள் என்பதே ஈழத்தமிழ்அரசியல்வாதிகளுக்கு ‘இலக்கின்’ இவ்வார அழைப்பாகவும் உள்ளது.
நடைமுறையில் உலக அளவில் ட்ரம்ப், எலன் மஸ்க் முரண்பாடு முதல் உள்ளூரில் சுமந்திரன் சிறீதரன் முரண்பாடு வரை தனிமனித நிலையிலும் வல்லாண்மை நாடுகளின் வர்த்தகப் போர்கள் தொழில்நுட்பப் போர்கள் பொதுமனித நிலையிலும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினையை உரிய வடிவத்தில் வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ ஈழத்தமிழ் மக்கள் வெளிப்படுத்தி தீர்வுகள் பெறுவதற்கான பல தடைகளை உருவாக்கும். இவற்றை எதிர் கொள்ள ஒவ்வொருதுறையிலும் செயற்படத்தக்க செயலாக்கக் குழுக்களை ஈழத்தமிழர்கள் உருவாக்க வேண்டும். அவற்றுக்கான அறிவூட்டல், தொழில்நுட்பப் பலம் அளித்தல் மூலதன உறுதிப்பாடளித்தலை அனைத்துலக ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டும். இத்தகைய ஈழத்தமிழரின் கூட்டாண்மையும் பங்காண்மையுமே ஈழத்தமிழர்களுக்கான வாழ்வியல் சக்தியை வழங்கி அவர்களைத் தாய் மண்ணில் இம்மாதத்தில் சுதந்திர வாழ்வில் நிலைப்படுத்தும் என்பது இலக்கின் உறுதியான எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்

Tamil News

 

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடினோம் : சி.வி.கே.சிவஞானம்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் மாத்திரமே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் தாம் கலந்துரையாடியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம்(05) இடம்பெற்ற குறித்த சந்திப்பு தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்த தரப்பினருடனும் கலந்துரையாடப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழரசு கட்சியின் தலைவருடனான சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று(06) ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தங்களது கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஆட்சியமைப்பதற்காக வேறு கொள்கைகளைக் கொண்டவர்களுடன் அணிதிரள்வதை இலங்கை தமிழிரசுக் கட்சி நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ilakku Weekly ePaper 342 | இலக்கு-இதழ்-342-யூன் 07, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 342 | இலக்கு-இதழ்-342-யூன் 07, 2025

Ilakku Weekly ePaper 342

Ilakku Weekly ePaper 342 | இலக்கு-இதழ்-342-யூன் 07, 2025

Ilakku Weekly ePaper 342 | இலக்கு-இதழ்-342-யூன் 07, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • இறைமையுள்ள சுதந்திர வாழ்வா? இறைமை இழந்த அடிமை வாழ்வா? ஈழத்தமிழரின் எதிர்காலம் முடிவாகும் மாதமிது | ஆசிரியர் தலையங்கம்
  • பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-02) – விதுரன்
  • தமிழ்த் தேசிய அபிலாசைக்காகவா? ஆட்சி அதிகாரத்திற்காகவா? ஒன்றிணைதல் முக்கியத்துவம்!பா. அரியநேத்திரன்
  • தமிழர் பூமியை பௌத்தமயமாக்கும் சிந்தனை கலையுமா?கிண்ணியான்
  • தமிழரின் தொன்மையான வரலாற்று ஆலயம் முன்பாக திடீரென முளைத்த புத்தர் சிலை – ஊடகவியலாளர் தாமோதரன் பிரதீபன்
  • ‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – (பகுதி-01) ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி
  • ஒரு இனத்தைக் குறிவைத்துக் கொல்வது இனப்படுகொலையா….! (பகுதி-02) – வல்வை ந.அனந்தராஜ்
  • மலையகத்தில் கல்வியும் மறுக்கப்படும் உரிமையும் –மருதன் ராம்
  • பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி-03) – தமிழில்: ஜெயந்திரன்
  • உக்ரைனின் தாக்குதல் ரஸ்யாவை பலவீனப்படுத்துமா? – வேல்ஸில் இருந்து அருஸ்

 

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா!

இந்தியாவில் ஒரே நாளில் 5,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் போதிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 08 பேருக்கு மாத்திரம் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000 ஐ நெருங்கியுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி: சட்டவிரோதமாகவோ,இரகசியமாகவோ உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம்!

இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி, சட்டவிரோதமாகவோ அல்லது இரகசியமாகவோ உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என அகழ்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி,  மயானத்தை ஒரு மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (ஜூன் 6) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்தனர்.

மனித உடல்கள் அந்த இடத்தில் குழப்பமான சூழலில் அல்லது  குழப்பமான முறையில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இது அகழ்வினை வழிநடத்தும் இரண்டு முக்கிய அரச அதிகாரிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிட்டுள்ளார்.

40 நாட்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்குத் தேவையான செயல்முறையை விரைவாக மேற்கொள்ளுமாறு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியில் நாம் அனைவரும் கைகோர்ப்போம்: ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கருத்து

ஒரு நாடாக நம் முன்னால் உள்ள சவால்களை முறியடித்து நாம் விரும்பும் முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரின் கூட்டு முயற்சி முக்கியமானது. ஹஜ் கொண்டாட்டம் அந்த பொதுவான நோக்கத்திற்காக கைகோர்க்க ஒரு சிறந்த தளத்தை உருவாக்குகிறது. உலக மக்கள் அனைவரின் இதயங்களிலும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் தியாக உணர்வுகளை உருவாக்கும் ஹஜ் கொண்டாட்டம் உலக அமைதிக்கான ஒரு சிறந்த செய்தியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்த ஜனாதிபதி, அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

“உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் இன்று சனிக்கிழமை (7) ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள் இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாக தனித்துவமானதாக அமைகிறது.

மதம் மானிட சமூகத்தை மனித நேயத்துடன் பூரணப்படுத்தவும் நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து வருகை தருகின்ற அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் இறைவனை வணங்குவதற்காக மக்காவிற்கு வரும் இந்த ஹஜ் யாத்திரை ஏனைய அனைத்து மதங்களுடனும் சமத்துவமாக வாழும் போதனையை உள்ளடக்கியது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும் இந்த ஹஜ் யாத்திரை அர்ப்பணிப்பு மற்றும் தியாக வாழ்க்கை தொடர்பான உதாரணங்களை சித்தரிப்பதுடன்  ஹஜ் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாகவும் இது இருக்கின்றது.உண்டு – இல்லை என்ற இடைவெளி மற்றும் வேறுபாடுகளைக் கடந்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவது ஹஜ்ஜின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

ஒரு நாடாக நம் முன்னால் உள்ள சவால்களை முறியடித்து நாம் விரும்பும் முன்னேற்றகரமான மற்றும் நாகரிகமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை மேற்கொள்வதில் அனைவரின் கூட்டு முயற்சி தலையீடு மற்றும் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.ஹஜ் கொண்டாட்டம் அந்த பொதுவான நோக்கத்திற்காக கைகோர்க்க ஒரு சிறந்த  தளத்தை உருவாக்குகிறது என்பதையும் நான் இங்கு நினைவுகூர்கிறேன்.

உலக மக்கள் அனைவரின் இதயங்களிலும் சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் தியாக உணர்வுகளை உருவாக்கும் ஹஜ் கொண்டாட்டம் உலக அமைதிக்கான ஒரு சிறந்த செய்தியாகும்.

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் வெறுப்புடனும் பார்க்கும் சமூகத்திற்குப் பதிலாக அனைவரும் சகோதரத்துவத்துடனும் அன்புடனும் வாழும் முன்னேற்றகரமான மற்றும் நாகரிகமான நாட்டைக் கட்டியெழுப்ப நமது அரசாங்கம் எடுக்கும் முயற்சியில் தமது புனிதமான நம்பிக்கையுடன் அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்றாகக் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாள் நமது பயணத்திற்குப் பெரும்  ஆசிர்வாதம் ஆகும்.

இந்நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!”