ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில் 2025இல் ஈழத்தமிழ்த்தேசிய வாழ்வுக்கான உள்ளூராட்சி சபைகளை அவர்களுடைய தாயகத்திலேயே அமைக்கவியலாத அரசியல் ராஜதந்திரமற்றவர்களாகக் காட்சியளிக்கின்றனர். இவர்கள் உண்மையல்லாதவற்றையே பேசுபவர்களாகவும் இறைமையை மறுக்கும் ஈழத்தமிழ்தேசியப் பகைமைகளுடன் கூட்டுச் சேர்ந்தாயினும் பதவியில் அமரத் தவிப்பவர்களாக இவ்வாரத்தில் உள்ளனர். இதைப்பார்க்கையில் “ஒஹோ ஹோ ஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்? உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்” என்கின்ற ‘படித்தால் மட்டும் போதுமா’ திரைப்படத்தில் கண்ணதாசன் 1962களில் ரி.எம் சவுந்தரராஜனின் குரலில் சிவாஜிகணேசனின் நடிப்பில் தமிழ் அரசியல் உலகுக்கு விடுத்த திரைப்படப் பாடல் அழைப்புத்தான் நினைவுக்கு வருகிறது. இந்தப் பாடலை வைத்தே ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவர்களுடைய நிலையை விளக்கலாம் போல் தோன்றுகிறது. “உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது. காலம் போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிரைக் காப்பதுமில்லை. அடிப்படையின்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிக்காது. அழகாய் இருக்கும் காஞ்சிரைப் பழங்கள் சந்தையில் விக்காது. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது. விளக்கிருத்தாலும் எண்ணெயில்லாமல் வெளிச்சம் கிடைக்காது. கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர்கள் போலே” ஓடுவதெங்கே சொல்லுங்கள் என்ற வரிகள் ஒவ்வொரு ஈழத்தமிழ் அரசியல்வாதியையும் குறித்து அன்றே பாடப்பெற்றவை போல் தெரிகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் சிறிலங்காவுக்கான மனித உரிமைகள் மதிப்பீட்டுப் பயணத்தை இன்னும் இருவாரங்களில் மேற்கொள்ள இருக்கும் நேரத்தில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் உளறித்திரிவதை விடுத்து உருப்படியாக அவரைச் சந்திப்பது குறித்துச் செயற்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களையோ கொடுப்பதற்கான ஆவணங்களையோ ஒருமுகப்படுத்தி ஆயத்தம் செய்யாத நிலையில் உருப்படியாக எதுவும் நடக்காது என்கிற எச்சரிப்பை இலக்கு முன்வைக்க விரும்புகிறது. இதன் விளைவாக அமையும் முடிவுகள் இம்மாதத்தில் ஈழத்தமிழர்கள் இறைமையைப் பேணிச் சுதந்திரமாக வாழ்வார்களா அல்லது இறைமையை இழந்து அடிமை வாழ்வுக்கு உள்ளாவார்களா என்ற நிலையை அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தும். காரணம் சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தக்குற்றச் செயல்கள் மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறில்கள் தொடர்பான சாட்சியங்களைப் பதிவு செய்யும் ஐ.நா. வின் அலுவலகத்தின் எதிர்காலம் ஆணயாளரின் பயணத்தின் முடிவுகளிலேயே தங்கியுள்ளது.
அதனை மூடக்கூடிய வகையில் சிறிலங்காவின் பிரதமர் சிறிலங்காவின் சபாநாயகர் சிறிலங்காவின் நாடாளுமன்றச் செயலாளர் எனச் சிறிலங்காவின் அனைத்து சக்திகளுமே சிறிலங்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிரெஞ்சே மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி மற்றும் அபிவிருத்திகளுக்கான வதிவிட ஆலோசகர் பற்றிக் மக்கார்த்தி ஆகியோரைச் சந்தித்துச் சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையைத் திருப்திப்படுத்தக் கூடிய முறையில் செயற்படுத்தும் திட்டங்களை எடுத்துக்கூறி தங்கள் அரசு இனங்களிடை நல்லிணக்கத்துக்காக முயற்சிப்பதாகவும் நாடாளுமன்றத்தின் உள்ளேயே இவைகளை முன்னெடுப்பதற்கான சட்டப்பிரிவினையே உருவாக்கப் பேவதாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அனைத்துலகிலும் செயற்பாட்டாளர்களாக உள்ள ஈழத்தமிழர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருடைய சிறிலங்காப் பயணத்தை எவ்வாறு ஒவ்வொருவரும் மக்களதும் மண்ணினதும் மனித உரிமைக்கான பாதுகாப்பாக மாற்ற முடியுமெனச் சிந்தித்து அனைவரையும் இணைத்து ஆவனசெய்யுமாறு இலக்கு வலியுறுத்திக் கேட்க விரும்புகிறது. அவ்வாறே “ஓதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரமாகாது. உருவத்தில் சிறிய கடுகென்றாலும் காரம் போகாது. பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ்பட்டுப் போகாது. பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது. காற்றைக் கையில் பிடித்தவனில்லை. தூற்றித் தூற்றி வாழ்ந்தவனில்லை. ஓடுவதெங்கே சொல்லுங்கள்” என நிறைவுபெறும் இந்தப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றினதும் பொருள்களை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து பழித்துப் பழித்தும் தூற்றித் தூற்றியும் வாழும் தன்மைகளால் எதனையும் சாதிக்க இயலாதென்பதைத் தெளிந்து, இறைமை பேண இணைந்து செயற்படுவதற்கான கொள்கைகளைக் கோட்பாடுகளைத் தெளிவாக்கி இறைமையை மீளுறுதி செய்வதே பாதுகாப்பான அமைதிக்கான அரசியல் பாதை. அதனை விட்டு விலகாது ஈழத்து அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் என்பது இலக்கின் வேண்டுகோளாக உள்ளது.
வடக்கில் பருத்தித் தீவு உட்பட சீன அரசாங்கத்தின் கடலட்டைப் பண்ணைகளின் பிளாஸ்ரிக் கழிவுகள், பயன்படுத்திய மீன்வலைகள் கடலில் கொட்டப்படுகிறது இவற்றை மீன்களும் உண்டு அவற்றைச் சாப்பிடும் மனிதர்களும் உண்டு நோய்வாய்ப்படுகின்றனர் என்ற விடயம் அனைத்துலகச் சூழல் சுற்றாடல் பாதுகாப்பு நாளான யூன் 5ம் நாள் ஈழமக்களால் எழுப்பப்பட்டுள்ளது. அவ்வாறே இந்திய மீனவர்கள் 16ம் நாள் முதல் மீளவும் மீன்பிடி ஆக்கிரமிப்பைத் தொடங்கப் போவதாக மக்கள் அஞ்சுகின்றனர். தையிட்டிக்கு ஆனி 10ம் நாள் ஆயிரக்கணக்கில் சிங்களவர்களை கொண்டு வந்து பௌர்ணமி வழிபாடு செய்வதற்கான முயற்சிகளும் கூடவே அதற்குச் சாதகமாக தையிட்டி புத்த விகாரையை நிலைநிறுத்தக் கூடிய பரிந்துரைத் தொகுப்புகளும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றையும் மக்களை தேசமாக ஒருங்கிணைக்காவிட்டால் தடுத்து நிறுத்த இயலாது என்பதை ஈழத்து அரசியல்வாதிகள் உணர வேண்டும். அதே வேளை மாறிவரும் புதிய உலக அரசியல் ஒழுங்கில் ஈழத்தமிழர்களின் இறைமையை உலகளாவிய நிலையிலும் மீளுறுதி செய்யத்தக்க பல வாய்ப்புக்கள் உருவாகி வரும் நேரம் இதுவென்பதால் அதனைச் செய்யுங்கள் என்பதே ஈழத்தமிழ்அரசியல்வாதிகளுக்கு ‘இலக்கின்’ இவ்வார அழைப்பாகவும் உள்ளது.
நடைமுறையில் உலக அளவில் ட்ரம்ப், எலன் மஸ்க் முரண்பாடு முதல் உள்ளூரில் சுமந்திரன் சிறீதரன் முரண்பாடு வரை தனிமனித நிலையிலும் வல்லாண்மை நாடுகளின் வர்த்தகப் போர்கள் தொழில்நுட்பப் போர்கள் பொதுமனித நிலையிலும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினையை உரிய வடிவத்தில் வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ ஈழத்தமிழ் மக்கள் வெளிப்படுத்தி தீர்வுகள் பெறுவதற்கான பல தடைகளை உருவாக்கும். இவற்றை எதிர் கொள்ள ஒவ்வொருதுறையிலும் செயற்படத்தக்க செயலாக்கக் குழுக்களை ஈழத்தமிழர்கள் உருவாக்க வேண்டும். அவற்றுக்கான அறிவூட்டல், தொழில்நுட்பப் பலம் அளித்தல் மூலதன உறுதிப்பாடளித்தலை அனைத்துலக ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டும். இத்தகைய ஈழத்தமிழரின் கூட்டாண்மையும் பங்காண்மையுமே ஈழத்தமிழர்களுக்கான வாழ்வியல் சக்தியை வழங்கி அவர்களைத் தாய் மண்ணில் இம்மாதத்தில் சுதந்திர வாழ்வில் நிலைப்படுத்தும் என்பது இலக்கின் உறுதியான எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்