1945 இல் ஈழத்தமிழர்களை காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் சோல்பரி அரசியலமைப்பினை அறிமுகம் செய்து சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆட்சி முறைக்குள் ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்கி 80 ஆண்டுகள் 2025 உடன் நிறைவுபெறுகிறது. இந்நேரத்திலாவது ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் இறைமையை விளக்கி காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக இன்றும் உள்ள ஈழத்தமிழர் தேசிய பிரச்சினைக்கு அனைத்துலக நாடுகளின் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை உரிய தீர்வினை ஏற்படுத்த வேண்டுமென்ற உண்மையை உலகு புரிந்து கொளளவைக்க வேண்டும். இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ரோனியோ மனுயல் ஒலிவீரா குட்டர்ஸ் அவர்களின் சார்பாக சிறிலங்காவக்கு மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் மதிப்பீட்டுக்காச் செல்லவுள்ள இந்த யூன்மாதம் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் அனைத்துலக நாடுகளிலும் சிவில் சமுக அமைப்புக்களை அவரைச் சந்தித்து எவ்வாறு முள்ளிவாய்க்கால் முதல் இன்று காசா வரை உலகின் சிறுதேசஇனங்கள் திட்டமிட்ட முறையில் இனஅழிப்பால் பாதுகாப்பற்றவர்களாக்கப்பட்டு அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு இறைமை ஒடுக்கப்படுகிறது என்பதை விளக்கிட வேண்டும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
மேலும் போர்த்துக்கல்லின் சோசலிசக் கட்சியின் பிரதமராக அன்ரோனியோ குட்டர்ஸ் இருந்த 1995க்கும் 2002க்கும் இடையில் இலங்கைத் தீவு இருதேசங்களை கொண்ட தீவாக இருந்தமை அவருக்குத் தெரியும். அத்துடன் போர்த்துக்கல் தான் ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசின் இறைமையை 116 ஆண்டு கால பலவகையான போராட்டங்களின் பின் தனதாக்கிய நாடு. இந்த உண்மைகளின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டர்ஸ் அவர்களே ஈழத்தமிழர்களின் இருப்பினதும் இறைமையினதும் அரசியல் எதார்த்தத்தினதும் சாட்சியாகவுள்ளார் என்பதனை அவருக்கு மீள்நினைவுறுத்த வேண்டிய பொறுப்புள்ளவர்களாகத் தாயகத்திலும் அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்கள் உள்ளனர் என்பதும் இலக்கின் கருத்தாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் ஈழத்தமிழரின் மனித உரிமைச் செயற்பாட்டாளராகவுள்ள முப்பதாண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்ற பாரிசில் வாழும் திரு கிருபாகரன் அவர்கள் போர்த்துக்கல் அரசுடன் தொடர்பு கொள்வதற்கான சில முன்யோசனைகளை வெளியிட்டு வந்துள்ளார். இவர் அனைத்துலக மட்டத்தில் ஈழத்தமிழரின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களாக உள்ளவர்களை இணைத்து இந்த விடயம் தொடர்பாக போரத்துக்கல் அரசுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தொடர்புகளை மேற்கொண்டு போர்த்துக்கல் ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசின் இறைமையைக் கைப்பற்றிய வரலாற்றினை வெளிப்படுத்திட உழைக்க வேண்டுமென்பது இலக்கின் கருத்தாக உள்ளது.
கூடவே சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பு தொடர்பான சாட்சியங்கள் ஆவணங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரைச் சென்றடையச் செய்ய வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழர்களுக்கு உண்டு. இவ்விடயத்தில் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அது உருவாக்கிய ஈழத்தமிழர்களுக்கு நடந்த மனிதாயக் குற்றங்கள் யுத்தக்குற்றங்கள் மனித உரிமைகள் வன்முறைகள் தொடர்பான சாட்சியங்களைப் பதிவு செய்யும் அலுவலகத்தை நிலைப்படுத்த தம்மால் இயன்ற அளவு உழைத்து வரும் பிரித்தானியத் தமிழர் பேரவையினருடன் மற்றைய செயற்பாட்டாளர்கள் அனைவரும் இணைத்து தங்களிடை உள்ள வெறுப்பு விருப்புகளுக்கு அப்பால் தங்களாலான அனைத்துப் பங்களிப்புக்களையும் வழங்கி அந்த அலுவலகத்தைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்பதும் இலக்கின் கருத்தாக உள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் சிறிலங்கா இவ்வாண்டுக்கான இரண்டாவது காலப்பகுதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பை போலந்து ஏற்கும் நிலையில் அதன் வெளி விவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி அவர்களை சிறிலங்கா அழைத்து சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மோரெனா உட்பட சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளையும் உள்ளடக்கிச் சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுரகுமாரதிசநாயக்காவும் பிரதமர் முனைவர் ஹரிணி அபயசேகராவும் அமைச்சர்களும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளமை ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகளிலும் தங்களுக்குச் சாதகமான நிலைகளை உருவாக்கிட முயலும் இவ்வாரத்தில் தாயக அனைத்துலக ஈழத்தமிழர்கள் தாம்வாழும் ஐரோப்பிய நாடுகளில் விரைவாக எதிர்வினைகளைச் செய்ய வேண்டும்
அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை சிறிலங்கா செய்யவுள்ள நேரத்தில் அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஈழத்தமிழரின் நாடுகடந்த அரசாங்கம் தனது செனட்டும் பாராளுமன்றமும் இணைந்த அவையில் மே மாதம் 27 அன்று “ட்ரம்பின் அரசுத்தலைவர் காலத்தில் தமிழீழத்திற்கான சந்தர்ப்பங்கள்” என்ற மையப்பொருளில் அனைத்துலகப் பேச்சாளர்களை அழைத்து அமர்வினை நடாத்தியுள்ளமையை இலக்கு காலத்தின் தேவையென வரவேற்கிறது. “அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் அரசு நிலைக்கான உரிமை என்ற மையப் பொருளிலும்” “சிறிலங்காவின் அரச இனவாதம் – தேசிய மக்கள் சக்தியும் அந்தப் பாரம்பரியத்தையே தொடர்கிறது” என்ற மையப்பொருளில் இருநாள் இடம்பெற்ற இவ் அமர்வுகளில் ‘அரசியல் சமுகமாக அரசுநிலை’ என்ற நூலின் ஆசிரியரும் கொங்கொங் சீனப்பல்கலைக்கழகத்தின சட்டத்துறைப் பேராசிரியருமான அலெக்ஸ் கிறீன், ‘தன்னாட்சி ஒரு உரிமை என்பதையும், குடியொப்பம் அதனை அறிந்து கொள்வதற்கான வழி என்பதையும் இதற்கான சம்பந்தப்பட்ட மக்களிடையான பங்களிப்பு ஊக்குவிப்புக்களும் அதற்கான நிபுணத்துவ வழிகாட்டல்களும் அவசியம் எனக் கூறியுள்ளார்.
தேசியவாதம் பயங்கரவாதம் நாட்டுப்பற்று இனவியல் போர் ஊகங்கள் என்ற நூலின் ஆசிரியரான சிரகியூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியை யமுனா சதாசிவம் அவர்கள் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களினங்கள் பூர்வ குடிகள் உள்ளடங்கலாக கூட்டமைப்புக்களை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் போரியல் ஆய்வாளருமான முனைவர் அரூஸ் தேசிய மக்கள் சக்தியும் முன்னைய அரசுக்கள் போலவே இனவெறித்தன்மையானதாகவே செயற்படுகிறது என்பதை அதனுடைய இனவெறி வரலாற்றுப் பதிவுகளுடனும் நடைமுறைச் செயற்பாடுகளுடனும் சுட்டிக்காட்டியதுடன் சிறுதேச அரசநிலை இன்றைய உலகில் சாத்தியமானவொன்று என்பதையும் விதந்துரைத்தார்.
இரண்டாவது நாளில் ட்ரம்பின் அரசுத்தலைவர் காலத்தில் சீனாவின் சிறிலங்கா தொடர்பான செயற் பாடுகளுக்கான எதிர்வினையாகத் தமிழீழத்திற்குச் சாதகமான அமெரிக்க நிலைப்பாடுகள் ஏற்படலாம் எனப் பலரும் விளக்கினர். அமெரிக்க இராணுவத்தின் 250 வது ஆண்டும். அரச அதிபர் ட்ரம்ப் அவர்களின் 79வது பிறந்தநாளும் யூன்மாதம் 14ம் நாளில் இடம்பெறுவதால் அமெரிக்கா இதுவரை காணாத பிரமாண்டமான வீதிகளையே சேதப்படுத்தக் கூடிய டாங்கிகள் உட்டபட்ட அனைத்து படைக்கருவிகளின் அணிவகுப்பினை அரச அதிபர் ட்ரம்ப் நடாத்தத் திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க ஈழத்தமிழர்களும் ட்ரம்ம்பின் அசராங்கத்துடனான தொடர்புகளில் நெருக்கமடைவது அவசியம். அதாவது நடைபெற்று வரும் புதிய உலக அரசியல் ஒழுங்குக்கான மாற்றங்கள் மற்றும் உள்ளூர் அரசியல் மாற்றங்களுக்கு அமைய எதிர்வினைகளைத் திட்டமிட்ட முறையில் நடாத்துவதன் மூலமே ஈழத்தமிழர் தங்கள் இறைமையைப் பேணலாமென்பதே இலக்கின் இவ்வார எண்ணம். கொள்கையின் அடிப்படையில் இணைப்பு என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தமிழரசுக்கட்சிக்கான உள்ளூராட்சி ஆட்சி அமைப்பது குறித்த பதில் இதற்கான நம்பிக்கையைத் தருகிறது.
ஆசிரியர்