தையிட்டி பகுதியில் காணி அளவீட்டுப் பணிகளுக்காக நாள் குறித்துவிட்டு, அந்த நாளில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளமையானது, “கல்யாணத்திற்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளை தப்பியோடிய கதை” போன்றது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சுற்றியுள்ள காணிகளை அளவீடு செய்து விடுவிப்பதாகக் கூறி உரிமையாளர்களை வரவழைத்துவிட்டு, அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் வெளிநாடு செல்வதாக இருந்தால், ஏன் இந்தப் பணிகளை வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
அளவீட்டுப் பணிகள் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு, தையிட்டி விகாரையின் விகாராதிபதி பலாலி காவல் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நில அளவைத் திணைக்களம் தனது பணிகளை இடைநிறுத்தியது.
காணி உரிமையைப் பரிசீலிக்காமல் காவல்துறையினர் விகாராதிபதியின் முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டமை இனவாதச் செயல் என அவர் சாடினார்.
மக்கள் காணிகளை விடுவித்தால் போதும் என்ற மனநிலையுடன் ஒத்துழைத்த போதிலும், அரசாங்கம் இதனை ஒரு நாடகமாகவே கையாண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இந்த விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாகச் செயல்படக்கூடாது எனத் தெரிவித்த பிரபாகரன், நிர்வாக ரீதியான விடயங்களை வெறும் தொலைபேசி அழைப்புகள் மூலம் கையாளாமல், உரிய முறையில் கடிதங்கள் மூலம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியினர் வெறும் “படம் காட்டுவதற்காகவே” மக்களைச் சந்திப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக வலிகாமம் வடக்கு பிரதேச சபை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்படாவிட்டால், பிரதேச சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப் போவதாக அந்த கட்சியின் உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



