Home Blog Page 1309

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை, 538 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை, 538 பேர் மரணித்துள்ளார்.

இலங்கையில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை, 538 பேர் மரணம் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் இதுவரை 27 இலட்சம் பேர் கொரோனாவால் பலி

உலகளவில் இதுவரை 27 இலட்சத்து 02 ஆயிரத்து 316 பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். 

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.23 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 12,23,55,262 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,86,48,972 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 27 இலட்சத்து 02 ஆயிரத்து 316 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா  –  பாதிப்பு- 30,358,880 உயிரிழப்பு –  5,52,347, குணமடைந்தோர் – 2,25,23,799

இந்தியா   –   பாதிப்பு- 11,513,945, உயிரிழப்பு –  159,405, குணமடைந்தோர் –  11,081,508

பிரேசில்   –   பாதிப்பு -11,787,600, உயிரிழப்பு –  287,795, குணமடைந்தோர் –   10,339,432

ரஷ்யா    –   பாதிப்பு – 4,428,239, உயிரிழப்பு –    93,824, குணமடைந்தோர் –   4,037,036

இங்கிலாந்து – பாதிப்பு – 4,280,882, உயிரிழப்பு –   125,926, குணமடைந்தோர் –   3,593,136

கருணைக் கொலை செய்யும் சட்டத்திற்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல்

ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது.

எனவே இதுபோன்றவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் கூட்டம் ஸ்பெயின் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 202 எம்.பி.க்கள் வாக்களித்தனர். எதிராக 140 வாக்குகள் பதிவாகின.

வருகிற ஜூன் மாதம் முதல் இந்த கருணை கொலை சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை

சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

செங்கலடி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மாவட்ட பொறியியலாளரை சந்திக்க பாலமடு பகுதியினைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பொறியியலாளர் பதிலளிப்பதில்லை. நேரில் சந்திக்க சென்றாலும் அவர்களை சந்திப்பதில்லை. அதற்கு நேரமும் ஒதுக்குவது இல்லை.

பொறியியலாளரின் தற்போதைய நடவடிக்கைகளை பார்க்கும் போதே அவர் இவ்வாறு நடந்து கொள்பவர் என்பது நன்கு தெரிகின்றது. நீங்கள் சொல்லுகின்றீர்கள் சுமார் ஆறாயிரம் பேர் வரையில் மண் அகழும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என்று.

இருக்கலாம் மேசன் வேலைக்கு 1500 ரூபாய் வழங்கினால், இதற்கு 4000 ரூபாய் வழங்குகின்றனர். ஆனால் தற்போதுள்ள பிரச்சனை என்னவென்றால் மண் அனைத்தையும் எடுத்ததன் பின்னர் இரண்டு வருடங்கு பிறகு ஒருவருக்கும் ஒருவேலையும் இருக்காது. குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது. பயணிப்பதற்கு வீதியும் இருக்காது. விவசாயம் செய்ய நிலம் இருக்காது.

மண் அகழ்விற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்வதனால் வேலை வாய்ப்பு இல்லாமல் போகும். ஆனாலும் மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். நீங்கள் நிப்பாட்டாவிட்டாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். “எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

IMG 0195 1 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நீதிகோரிய எழுச்சிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

IMG 0170 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுவந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தின் 17வது நாளான இன்று அதனை நிறைவுறுத்தும் வகையிலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிகோரிய வகையிலும் இந்த போராட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.

IMG 0153 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

இந்த போராட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமைய காவல்துறையினரால் குறித்த போராட்டத்தில் ஈடுபடுவோர் என்ற ரீதியில் 25பேருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

IMG 0177 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

குறிப்பாக காந்தி பூங்கா,மாமாங்கம் ஆகிய பகுதிகளிலில் போராட்டம் நடாத்துதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் வடகிழக்கு ஏற்பாட்டாளர்களான வேலன் சுவாமி,எஸ்.சிவயோகநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலருக்கு நேற்று தடையுத்தரவுகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டதுடன் மாமாங்கேஸ்வரர் ஆலய மதில்களிலும் தடையுத்தரவுகள் ஒட்டப்பட்டிருந்தன.

IMG 0163 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

இன்று காலை மட்டக்களப்பு நகரில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் தாக்குதல் மேற்கொள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் கலகமடக்கும் காவல்துறையினரும் நிறுத்தப்பட்டு மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக அச்சநிலையேற்படுத்தப்பட்டிருந்தது.

IMG 0148 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

காவல்துறையினரின் அச்சுறுத்தல்கள் மற்றும் நீதிமன்ற தடையுத்தரவுகள் காரணமாக போராட்டம் நடைபெறும் இடம்மாற்றப்பட்டது. மட்டக்களப்பு காவல் தலைமையகத்திற்குள் தடையுத்தரவு காரணமாக அவை மாற்றப்பட்டு ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது.

சித்தாண்டிஇமாவடிவேம்பு மருங்ககையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து பேரணியாக சித்தாண்டி சந்திப்பிள்ளையார் ஆலயம் வரையில் பேரணியாக வந்தனர்.

IMG 0149 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

தமிழர் தாயகத்தினை அங்கீகரிக்கவும் இந்திய இராணுவத்தினை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதி உண்ணாவிரதம் ஆரம்பித்த இன்றைய தினத்தில் தமிழர்களுக்கான நீதிகோரிய இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமிழர் தாயகப்பகுதியை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்,அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தவேண்டும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாக தீர்வினை வழங்கவேண்டும், ஐநாவில் கொண்டுவரப்பட்ட 46இன் கீழ் ஒன்று தீர்மானத்தினை நிகாரிப்போம், கடத்தப் பட்டுகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும்,மேய்ச்சல் தரை நிலத்தினை மீட்டுத்தாருங்கள், எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் உட்பட பல்வேறு கோசங்கள் இந்த பேரணியின்போது எழுப்பப்பட்டன.

IMG 0148 1 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

இந்த பேரணி ஆரம்பமான நிலையில் அங்குவந்த ஏறாவூர் பொலிஸார் தடையுத்தரவு உள்ளதாக கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு கோரிய நிலையிலும் அவற்றினை கருத்தில் கொள்ளாமல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போலியான தடையுத்தரவினை காட்டி பேரணியை தடுக்கமுனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களையும் காவல்துறையினர் வீடியோ புகைப்படம் எடுத்தபோது அதற்கு எதிரான கோசங்களையும் பேரணியில் சென்றோர் எழுப்பினர்.

IMG 0104 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

தடைகளை தாண்டி முன்னெடுக்கப்பட்ட பேரணியானது சித்தாண்டி சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றதும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு ஐநா மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைக்கும் மனுவொன்றும் வாசிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் வடகிழக்கு ஏற்பாட்டாளர்களான வேலன் சுவாமி, எஸ்.சிவயோகநாதன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யேகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் மற்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG 0090 சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்

போராட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு சென்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தினர் அங்கு சமாதியில் ஈகச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

சிறீலங்காவுடனான உறவில் மனித உரிமைகளை மையப்படுத்தவும் -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜாங்கச் செயலருக்கு கடிதம்

சிறீலங்காவுடனான இராஜீக உறவில் மனித உரிமைகளை மையப்படுத்துமாறும் சிறீலங்காவுக்கான ஒரு பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஊக்குவிக்குமாறும் ஒன்பது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க ராஜாங்கச் செயலரான அன்ரனி பிளிங்கனுக்குக் கடிதம்.

குறித்த கடிதத்தின் மழு வடிவம்,

WhatsApp Image 2021 03 19 at 2.30.53 PM சிறீலங்காவுடனான உறவில் மனித உரிமைகளை மையப்படுத்தவும் -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜாங்கச் செயலருக்கு கடிதம்

WhatsApp Image 2021 03 19 at 2.31.04 PM சிறீலங்காவுடனான உறவில் மனித உரிமைகளை மையப்படுத்தவும் -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜாங்கச் செயலருக்கு கடிதம்

“மாநிலச் செயலாளராக நீங்கள் பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள்!

இலங்கையில் மனித உரிமைகளை நிவர்த்தி செய்வது உட்பட பல விடயங்களில் உங்களுடன் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம். அங்கு 2009இல் முடிவடைந்த ஆயுத மோதலுக்குப் பின்னர் நீதி மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அல்லது மதிக்க அரசாங்கம் தவறியதால் நாங்கள் கவலைப்படுகிறோம்.

இறுதி மோதல், இலங்கையின் தமிழ் சமூகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் விளைவாக போரின் இறுதி மாதங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் இறந்தனர்.

இலங்கையுடனான இராஜதந்திர ஈடுபாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை மையப்படுத்தவும், இலங்கைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை ஊக்குவிக்கவும் எல்லா முயற்சிகளையும் செய்ய அமெரிக்காவை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்வைத்த தீர்மானத்தை (30/1) வரைவு செய்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது உங்களுக்குத் தெரியும். இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டதன் பின்னர், தற்போதைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியது. இந்த விலகலானது, உறுதியான முன்னேற்றத்தின் தோல்வி மட்டுமல்லாமல், உள்நாட்டு பொறுப்புக்கூறலுக்கான அரசியல் விருப்பமின்மையையும் வெளிப்படுத்துகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கம், போர்க் குற்றங்களில் சிக்கியுள்ள நபர்களை மூத்த அரசாங்க பதவிகளுக்கு உயர்த்தியுள்ளது, முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்களை மாற்றியமைத்தது, ஜனாதிபதி பதவியேற்புக்குப் பின்னால் அதிகாரத்தைப் பலப்படுத்தியது, போர்க் குற்றங்களில் ஈடுபடுவோரை விசாரிப்பதற்கும் வழக்குத் தொடுப்பதற்கும் தடையை ஏற்படுத்தும் முயற்சிகள், பெரும்பான்மை மற்றும் பிரிவினைவாத சொல்லாட்சியை ஊக்குவித்தது, மனித உரிமை ஆதரவாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலை மேற்கொள்வது மற்றும் எதிர்ப்பாளர்களைக் கடத்தி சித்திரவதை செய்ய பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் பற்றிய அந்த அறிக்கை நீடிக்கின்றது.

ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், “கடந்த கால மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன” என எச்சரித்துள்ளார்.

அத்துடன், அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரித்தானியா தலைமையில் கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து மனித உரிமைகள் பேரவையில் ஒரு வரைவுத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளன.

அந்தத் தீர்மானத்தில், இலங்கையில் கடந்த கால மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாதமை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் திறனை வலுப்படுத்த முற்படுகிறது.

மேலும், “மனித உரிமை மீறல்களுக்கான செயன்முறைகளுக்கான எதிர்கால பொறுப்புக்கூறலுக்கான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல், பாதுகாத்தல் மற்றும் இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்து மேம்பட்ட கண்காணிப்பு உள்ளிட்டவற்றை தீர்மானம் கோருகிறது.

இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், இது நிறைவேற்றப்படுவதற்கு மனித உரிமைகள் பேரவையின் வாக்களிக்கும் உரிமையுள்ள நாடுகளிடம் அமெரிக்கா தீவிரமாக ஆதரவைப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டச் சீர்திருத்தத்தை நோக்கி முன்னேற அமெரிக்காவை சர்வதேச அரங்கில் முன்னுரிமை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், இலங்கை விடயத்தில் உங்களின் அக்கறைக்கு நன்றி கூறுவதுடன் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அகதிகளை குப்பைகள் என விமர்சித்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

இந்நாடுகடத்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “இந்த குப்பைகளை அகற்றுவதன் மூலம் அவுஸ்திரேலியாவை பாதுகாப்பான இடமாக மாற்ற முடியும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய உள்துறையிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அத்துறையின் பேச்சாளர், தனிப்பட்ட நபரின் விவகாரம் குறித்து துறை சார்பாக பதலளிக்க இயலாது எனக் கூறியிருக்கிறார். அதே சமயம் 18வயதுக்குட்பட்ட ஒருவரின் விசா ரத்தினைப் பல்வேறு ஆலோசனைக்கு பிறகே மேற்கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

“அவுஸ்திரேலியாவில குற்றம் புரிந்து அதற்காக 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலான காலத்திற்கு சிறைத்தண்டனையை அவுஸ்திரேலியர் அல்லாதவர் ஒருவர் பெற்றிருந்தால் அந்நபர் வயது, எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது கருத்தில் கொள்ளப்படாமல் அவரது விசா இரத்து செய்யப்படும்,” என உள்துறை பேச்சாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் இறையாண்மையை  பாதுகாப்பதாக  இந்தியா உறுதியளித்துள்ளது – வெளியுறவு அமைச்சகம் தகவல்

இந்தியா தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என உறுதியளித்துள்ளதாக சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சகம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு  நடந்த இன படுகொலைக்கு முன்பாக ஐ.நா. அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்து 10 ஆண்டுகளாகியும் சிறீலங்கா அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் இன படுகொலை குற்றங்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மனித உரிமைகள் மன்றம் தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. அப்போது தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என உறுதியளித்துள்ளதாக   சிறீலங்கா வெளியுறவுத்துறை செயலர் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.

மேலும் சிறீலங்காவின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்தியா நடந்துகொள்வதாக உறுதி அளித்திருப்பதாகவும் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஈழ தமிழர்களுக்கு எதிரான போர் குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெறும் போது ஈழ தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும், சிறீலங்காவில்  வாழும் ஈழ தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதேபோல் சிறீலங்காவிற்கு எதிராக வாக்களிக்க தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் சிறீலங்காவிற்கு ஆதரவாக இந்தியா முடிவெடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஒபாமாவை அடுத்து ஸ்டாலின்தான் – தேர்தல் மேடையில் வைகோ புகழாரம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்குப் பிறகு ஸ்டாலின்தான் தனது தொகுதிக்கு அடிக்கடி சென்று மக்களைச் சந்திக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாராம் சூட்டியுள்ளார்.

சென்னை கொளத்துார் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் அக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் போட்டியிடுகின்றார்.

அவரை ஆதரித்து பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பேசிய வைகோ, ”நான் உலக அரசியலை உற்று கவனிப்பவன். பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபர் ஆகும் முன்பு செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் மாதம் இரண்டு முறை தனது தொகுதிக்குச் செல்வார். தன்னுடைய தொகுதிக்குச் சென்று அனைத்து மக்களையும் சந்திப்பார். அவர்களின் குறைகளைக் கேட்பார். அந்தக் குறைகளைப் போக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பார்.

நான் அதன் பிறகு பார்க்கிறேன். வாரம் ஒரு முறையாவது தன்னுடைய தொகுதிக்கு வருகிற ஒரு அரசியல்வாதி இருக்கிறாரா என்று கேட்டால், அது ஸ்டாலின்தான். அவர் வீட்டில் இருக்கிறாரா? அல்லது தொகுதியில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை. அதுதான் மக்கள் பிரதிநிதியின் கடமை.

சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது, 9 பாலங்கள் கட்டப்பட்டன. இந்தியாவில் இதுபோன்று வேறெங்கும் நடக்கவில்லை. அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

  இலங்கை மீன்பிடி படகுகளை கைப்பற்றிய இந்திய கடலோர காவல் படை

இலட்சத் தீவுகளுக்கு அருகே மூன்று இலங்கை மீன்பிடி படகுகளை தடுத்து, அதிலிருந்து  பெருமளவு போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் இந்திய கடலோர காவல்படையினர்.

முதற்கட்ட நடவடிக்கைகளின் படி, படகுகளில் இருந்து ஹெராயின், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் 1000 துப்பாக்கி ரவைகள் கடலோரக் காவல் படை பறிமுதல் செய்துள்ளது.

இந்திய  கடற்படையின் கூற்றுப்படி, கடற்படையின் ஒரு டோர்னியர் விமானம் கடந்த எட்டு நாட்களாக அரேபிய கடலில் நகர்ந்து காணப்பட்ட ஏழு இலங்கை படகுகளை கண்காணித்து வந்தது.

விமானம் தெற்கு கடற்படை கட்டளை மற்றும் இந்திய கடற்படைக்கு கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து படகுகளை தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கையை மேற்கொண்டது.

மினிகோய் தீவுகளுக்கு தென்மேற்கே 90 கடல் மைல் தொலைவில் இந்த படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இலட்சத் தீவுகள் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மார்ச் 7 அன்று, அங்கீகரிக்கப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் மூன்று இலங்கை படகுகள் இந்திய கடலோர காவல்படையினர்பறிமுதல் செய்ததுடன், படகில் பயணித்த 12 பேரும் கைது செய்யப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.