இலங்கை மீன்பிடி படகுகளை கைப்பற்றிய இந்திய கடலோர காவல் படை

இலட்சத் தீவுகளுக்கு அருகே மூன்று இலங்கை மீன்பிடி படகுகளை தடுத்து, அதிலிருந்து  பெருமளவு போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் இந்திய கடலோர காவல்படையினர்.

முதற்கட்ட நடவடிக்கைகளின் படி, படகுகளில் இருந்து ஹெராயின், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் 1000 துப்பாக்கி ரவைகள் கடலோரக் காவல் படை பறிமுதல் செய்துள்ளது.

இந்திய  கடற்படையின் கூற்றுப்படி, கடற்படையின் ஒரு டோர்னியர் விமானம் கடந்த எட்டு நாட்களாக அரேபிய கடலில் நகர்ந்து காணப்பட்ட ஏழு இலங்கை படகுகளை கண்காணித்து வந்தது.

விமானம் தெற்கு கடற்படை கட்டளை மற்றும் இந்திய கடற்படைக்கு கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து படகுகளை தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கையை மேற்கொண்டது.

மினிகோய் தீவுகளுக்கு தென்மேற்கே 90 கடல் மைல் தொலைவில் இந்த படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இலட்சத் தீவுகள் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மார்ச் 7 அன்று, அங்கீகரிக்கப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் மூன்று இலங்கை படகுகள் இந்திய கடலோர காவல்படையினர்பறிமுதல் செய்ததுடன், படகில் பயணித்த 12 பேரும் கைது செய்யப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.