Home Blog Page 127

இஸ்ரேலின் ‘சிங்கத்தின் எழுச்சி’ உலகப் போருக்கான தொடக்கமாகையில்; ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பேண வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 343

ஈரானின் பல இடங்களில் இஸ்ரேலின் “சிங்கத்தின் எழுச்சி” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட வான் படையெடுப்பு தாக்குதல்கள், உலகின் சமகால வர்த்தக போர் தொழில்நுட்பப் போர் நிலையை முழுஅளவிலான நாடுகளுக்கு இடையிலான பெரும் உலகப் போராக பரிணமிக்க வைப்பதற்கான முதல்நிலையினை யூன் 13ம் நாள் 2025இல் தொடங்கியுள்ளது. இதில் ஈரானின் தலைநகருக்கு 140 மைல் தூரத்தில் உள்ள நட்டான்ஸ் (Natanz) அணுசக்திக்கான யுரேனிய உற்பத்தி வளப்பகுதிகளை இஸ்ரேல் தாக்கினாலும் கதிர்வீச்சுக் கசிவு ஏற்படவில்லையென ஈரான் அறிவித்துள்ளது. ஆயினும் ஆறு ஈரானிய அணுசக்தி பேராசிரியர்களும் விரிவுரையாளர்களுமான விஞ்ஞானிகளை இஸ்ரேல் தாக்குதல் கொலைசெய்துள்ளது. ஈரான் இராணுவத்தின் துணைப்படையான ஈரானிய புரட்சிகர காவல் படையின் தலைமைத்தளபதியாக 2009 முதல் பொறுப்பில் இருந்த குசைன் சலாமியையும் இஸ்ரேல் தாக்குதல் கொன்றுள்ளது. இந்தப் பாரதூரமான அனைத்துலக சட்டங்களை மீறிய இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடியை ஈரான் வழங்குமென்று ஈரான் அறிவித்துள்ள நிலையில் நீண்டகால நேரடிப் பெரும்போர் மத்திய கிழக்கில் தோன்றியுள்ளமையை உலகு உணர்கிறது.
இத்தகைய உலகப் போர்ச் சூழல்கள் ஏற்படுகையில் உலகில் தங்கள் தன்னாட்சிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சிறுதேச இனங்களின் மேலான அனைத்துலகக் கவனம் சிதறடிக்கப்படுவது உலக வழமை. இதனைப் பயன்படுத்திச் சிறுதேச இனங்களை ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு உட்படுத்தி நிற்கும் அரசாங்கங்கள் அவர்கள் உடைய இறைமையை இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பின் மூலம் ஒடுக்குவதும் உலக வழமை. இந்தப் பேரபாயத்ததுள் உலகின் மூத்த இனங்களில் ஒன்றாக இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் இன்று உள்ளனர். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் உலக இனமாக இன்று உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வரும் தங்களின் வரலாற்றுப் பரிணாமத்தைக் கவனத்தில் எடுத்து அனைத்துலக ஈழத்தமிழர்கள் பேரவை ஒன்றை இலங்கையிலும் உலகிலும் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களின் வறுமையையும் அறியாமையையும் நீக்கும் சமுகமூலதனப்பலத்தையும் அறிவூட்டலையும் அளிக்க வல்ல முறையில் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தாங்கள் தேசங்கடந்துறை மக்கள் என்ற பலத்துடன் அமைத்தாலே ஈழத்தமிழர்களின் இறைமை யைப் பாதுகாக்க இயலும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
இதனைப் பலமுறை இலக்கில் முன்னரும் கூறி வந்துள்ள போதிலும் இன்றைய உலக படைபல சமநிலை மாற்றங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேவையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய காலனித்துவல அரசாங்கத்தினால் தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களின் அரசியல் எதிர்காலத்தை அமைக்கும் தன்னாட்சி உரிமையினை தங்களின் அரசியல் உரிமையாக ஈழத்தமிழர்கள் பயன்படுத்த இயலாதவாறு ஈழத்தமிழர்களின் இறைமை சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் 04.02. 1948 இல் உட்படுத்தப்பட்டதன் விளைவாக இன்று வரை காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலக நாடுகளின் மன்றமான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நல்லுறவு தொடர்பாலர் நியமனத்தின் மூலம் ஈழத்தமிழரின் தன்னாட்சி மூலம் அவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய முறையில் அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் செய்யப்பட வேண்டிய வொன்றாக உள்ளது. இதற்காக 2023இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் குரல் எழுப்பிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்கள் தாயகத்தில் தமிழ்த்தேசியப் பேரவையாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகளை பொதுநோக்கில் இணைக்கும் பெரும் முயற்சியில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றார். ஆயினும் தமிழசுக்கட்சியினர் இந்த தமிழ்த்தேசியப்பேரவைக்கு ஈழத்தமிழ் மக்கள் அளித்த வாக்குப்பலத்தின் அடிப்படையிலான ஆணையின் கீழ் உள்ளூராட்சியில் அவர்கள் செயற்படாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முகவர்களாக தாயகத்தில் செயற்படும் கட்சிகளுடன் இணைந்து யாழ்ப்பாண மாநகரசபை உட்பட ஈழத்தமிழ்த்தேசியப் பேரவை ஆட்சி அமைக்கக் கூடிய பத்து முதல் பதின் மூன்று உள்ளூராட்சி சபைகளில் ஈழத்தமிழர்களின் வாக்களிப்பு நோக்குக்கு எதிரான வகையில் சனநாயகப்படுகொலை செய்து தங்கள் பதவிகளைப் பெற்றுள்ளனர்.
இதன்வழி ஈழத்தமிழர்களின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஒடுக்கப்படும் நிலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர். தந்தை செல்வநாயகத்தின் 1975ம் ஆண்டு சிறிலங்காப் பாராளுமன்ற வெளியேற்ற உரையான ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்துடன் நிறைவுற்றுவிட்ட தமிழரசுக்கட்சி என்ற 1949 மதல் 1975 வரையான 26 ஆண்டுகால கட்சியொன்றின் வரலாற்றுப் பெயரை இன்று தமது அரசியல் நோக்குகளுக்கான கட்சிப் பெயராகக் காட்டி மக்களை மயக்கி வரும் இன்றைய ஈழத்தமிழ் தமிழரசு அரசியல்வாதிகளை ஈழத்தமிழர்கள் இனங்கண்டு அவர்களுக்கான தமது எதிர்ப்பையும் வாக்கு மறுப்பையும் உறுதிப்படுத்துவதன் மூலமாகவே இன்றைய காலகட்டத்தில் சிறிலங்காவின் இன்றைய அரசின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஈழத்தமிழர் சிங்கள பௌத்த அரசில் வடக்கில் வாழும் கிழக்கில் வாழும் தனித்தனிச் சமுகம் என்ற அபாயகரமான புதிய அரசியல் வரவிலக்கணத்துள் இருந்து தப்பிக்க முடியும்.
தையிட்டியில் ஈழத்தமிழரின் தனிப்பட்ட நிலங்கள் பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்டுள்ள இன்றைய பிரச்சினையில் தேசிய மக்கள் சக்தி பிக்குவின் நில அபகரிப்பை அங்கீகரித்து பாதிக்கப்பட்ட காணிச் சொந்தக்காரருக்கு நட்டஈட்டுத் தொகை அல்லது இன்னொரு இடத்தில் காணி என்கின்ற தீர்வை அதன் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுதான் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையில்லையென்ற ஈழத்தமிழின அழிப்புச் சிங்கள அரசத்தலைவர் மகிந்தாவின் வழியிலும் சிங்கள பௌத்த நாடாக எம்மை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்களவர்களுக்கே நாம் அரசு என்ற கோத்தபாய சிந்தனையின் வழியிலும் ஏக்கிய இராச்சிய என்ற ரணில் சிறிசேன சிங்கள அரசத்தலைவர்களின் கூட்டுப்படைப்பான ஒரே அரசு சிங்கள அரசு என்ற வழியிலும் ரணிலின் வடக்கு கிழக்கு என்று ஈழத்தமிழின இருப்பையே இல்லாதொழிக்கும் வழியிலும் இன்றைய தேசிய மகக்ள் சக்தி அரசாங்கமும் செயற்படுகிறது என்பதற்கான தெளிவான சான்றாகவுள்ளது. இந்நிலையில் தமிழரசுக்கட்சி இன்றைய அரசின் சிங்கள மயமாக்கல் முயற்சிகளை ஈழத்தமிழரிடை முன்னெடுக்கும் அரசியலைச் செய்கின்றார்கள் என்பதற்கு அவர்கள் ஈழத்தமிழினப் பகைமைகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தமையை விட இனியொரு சான்று தேவையில்லை.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளாந்த இதழ் ஒன்று ஈழத்தமிழ்த் தேசியம் குறித்து மீள்வரைவு செய்ய வேண்டும் என்னும் ஆசிரிய தலையங்கத்தைக் கடந்த வாரத்தில் எழுதியுள்ளது. இதனை வாசித்த பொழுது ஊடகங்களின் அறியாமையைத் தெளிவாக விளங்க முடிந்தது. அவ்வாறே தமிழகத்தில் திரைப்பட நடிகர் கமலகாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று தனது ‘தக் லைவ்’ திரைப்பட வெளியீடு தொடர்பான கூட்டமொன்றில் பேசியமைக்குக் கன்னட நீதிமன்ற நீதிபதி மன்னிப்புக் கேட்க வேண்டுமென நீதிமன்றத்தால் வலியுறுத்தியும் கமலகாசன் கேட்க மறுத்தத்தமை குறித்த தமிழகத்தின் கல்வித்துறையிலும் தமிழ் இலக்கியத்துறையிலும் குறிப்பிடத்தக்க புகழ்படைத்த பெருமாள் முருகன் ‘த இந்து’ தமிழ் நாளிதழுக்கு கமலகாசனின் கருத்துச் சுதந்திர உறுதிப்பாட்டைப் பாராட்டி எழுதிய கட்டுரையில் மூலத் தமிழில் (Proto-Tamil) இலிருந்து மொழிகள் தோன்றின என்ற உண்மையை மறுத்து மூலத் திராவிட மொழியில் (Proto-Dravidian Language) இருந்தே கன்னடம் உட்பட்ட திராவிட மொழிகள் தோன்றின என்ற கருத்தை மக்கள் மயப்படுத்தியுள்ளார். இதனை வீரகேசரி மறுவெளியீடு செய்துள்ளது. இந்த ஊடக வெளிப்பாடுகள் இரண்டுமே ஈழத்தமிழினத்துக்கான அறிவூட்டலில் தேவையை வெளிப்படுத்தி உள்ளன. ஈழத்தமிழ்த் தேசியம் என்பது இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற மக்களின் வரலாற்றுத் தாயகத்தினை மக்கள் மீட்கும் மண்மீட்பைக்குறிக்கிறது என்பதும் திராவிட மொழிக் குடும்பம் என மூலத் தமிழைக் கொண்ட மொழிகளின் குடும்பங்கள் குறிக்கப்பட்டனவே தவிர திராவிட மொழியென்று ஒரு மொழி இருந்தது இல்லை என்பதும் இவை குறித்து எழுதியவர்களுக்கே தெரியாத நிலை உள்ளது என்பதால் தான் ஈழத்தமிழர்களின் பொதுக்கருத்துக்கோளமொன்றை உருவாக்கிட வல்ல ஈழத்தமிழ்த் தேசிய ஊடகத்தை ஈழத்தமிழர்கள் உயிரோடைத் தமிழ் வானலையை இலக்கு மின்னிதழைக் கொண்டு பலமான ஈழத்தமிழர் ஊடகமாக உருவாக்குங்கள் என்று அடிக்கடி ஆசிரிய தலையங்கத்தில் எழுதி வருகின்றோம். உலகப் போர் மூண்டுவிட்ட இந்நிலையிலாவது தயவு செய்து விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஈழத்தமிழர்களுக்கான தேசிய ஊடகம் ஈழத்தமிழர்களுக்கான பொதுக்கட்டமைப்பு என்பவற்றில் உடனடிக் கவனத்தை ஒவ்வொரு ஈழத்தமிழரும் செலுத்த வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார கருத்தாகவுள்ளது.

ஆசிரியர்

Tamil News

Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025

Ilakku Weekly ePaper 343

Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025

Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • இஸ்ரேலின் ‘சிங்கத்தின் எழுச்சி’ உலகப் போருக்கான தொடக்கமாகையில்; ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பேண வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம்
  • பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-03) – விதுரன்
  • சந்திப்பு வருவது கண்டு சந்திக்கும் இடங்களும் உண்டு! சந்தர்ப்பவாத தமிழ்த் தேசிய அரசியல்.! –பா. அரியநேத்திரன்
  • கிளீன் சிறிலங்கா மூலம் சூழல் பாதுகாக்கப்பட்டதா ?கிண்ணியான்
  • தாயகத்தில் நடைபெறுகின்ற அரசியல் கட்சிகளின் கூத்துக்கள் அல்லது பிறழ்வுகள் குறித்து அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்
  • ‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – (பகுதி-03 (இறுதிப்பகுதி)) ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி
  • ஒரு இனத்தைக் குறிவைத்துக் கொல்வது இனப்படுகொலையா….! (பகுதி-03 (இறுதிப்பகுதி) – வல்வை ந.அனந்தராஜ்
  • தமிழர் தேசமும் தொடரும் காணி அபகரிப்புகளும்… தாமோதரம் பிரதீவன், மனித உரிமை செயற்பாட்டாளர், அம்பாறை மாவட்டம்
  • வீழ்ச்சிப் போக்கில் உள்ள மலையக சுகாதார நிலை –மருதன் ராம்
  • தமிழ்நாட்டில் ஈழ ஏதிலியர் நிலை….? – ஜோஸ்-தமிழ் நாடு

180 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை!

மத்திய மருந்து சேமிப்பு மையங்களில், சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மருத்துவமனைகளுக்குள், சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக புற்றுநோய் நோயாளிகளுக்கான மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் விளைவாக புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சில வரையறைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா: விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு

உலகை  உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெருந்துயா் நேரிட்ட இடத்தை நேற்று வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காயமடைந்தோரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171), இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புறப்பட்டது.

ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் பி.ஜே அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழப்பாக வெடித்துச் சிதறியது.

நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த பயங்கர விபத்தில் ஒரேயொரு பயணி தவிர 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா். இவா்களில் குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் ஒருவா். இந்தியப் பயணிகள் 169 பேருடன் பிரிட்டன் (52), போா்ச்சுகல் (7), கனடா (1) பயணிகளும் உயிரிழந்தனா்.

இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு:

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீட்புக் குழுவினர் விமானத்தின் கருப்புப் பெட்டியையும், மேலும் 29 உடல்களையும் மீட்டுள்ளனர். விமானத்தில் பயணித்தவா்கள் தவிர, அது விழுந்த இடத்தில் உயிரிழந்தவா்களையும் சோ்த்து இறப்பு எண்ணிக்கை 274 ஆக உயா்ந்துள்ளது.

இவா்களில் மருத்துவ மாணவா்கள் 10 பேர், விடுதி கட்டடம் அருகே டீக்கடை நடத்தும் குடும்பத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 6 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த நிலையில் உள்ள உடல்களை மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைய 3 நாள்கள் வரை ஆகும்.

மரபணு சோதனைப் பணிகள் முடிந்த பிறகு அரசுத் தரப்பில் முழு விவரங்கள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளிக்கிழமை (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் (Tourism and Travel Industry Associations) மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள்(Outbound Travel/Tour Operators) உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார்.

இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக  அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விசேடமாக சுற்றுலா வசதிகளை அதிகரித்தல், ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, நிலைபேறான சுற்றுலா பொறிமுறைகள் மூலம் இலங்கை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையில் மனித வளங்களை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரித்தல், கலாசார மற்றும் சூழல்சார் சுற்றுலாத்துறையை  ஊக்குவித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும்  ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இலங்கை கோரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளையும் நிதானத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், பதற்றநிலையைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான சமீபத்திய பதற்றங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, அவ்விரு நாடுகளிலும் உள்ள இலங்கைத்தூதரகங்களின் நிலைமையை உன்னிப்பாக அவதானத்துவருவதாகத் தெரிவித்துள்ளது.

அத்தோடு அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, அவர்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளிடமும் நிதானத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், பதற்றநிலையைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா – கொந்தளிக்கும் ஈரான்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதாக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலை பல நீண்ட தூர ஏவுகணைகளால் தாக்கத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க இராணுவம் உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

”இஸ்ரேலில் பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி ஈரான் எல்லை மீறிவிட்டது. இந்த கொடூரமான நடவடிக்கைகளுக்கு ஈரான் பெரும் விலை கொடுக்கப்போகிறது.” என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தின் அருகே மிகப்பெரிய வெடிப்புச்சத்தம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமைக்கு விசாரணை கோரி பொலிஸ்மா அதிபருக்கு மனு

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா, பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி பொலிஸ்மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
‘சரணடைந்தவர்களை கொன்றது தொடர்பான புகார் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்’ என்ற விடயத்தின் கீழ் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற குறித்த செயற்பாடு கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்டமீறலை குறிக்கின்றது. இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.
இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் தொடர்பான சம்பவங்கள் போர் நேரத்தில் சரணடைந்தவர்களிற்கான மீறல்களை குறிக்கும் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.

இவர்களின் இறப்புகள் குறித்து விசாரணை செய்யப்படாமல் விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸ் உண்மை, பொறுப்பு நியாயத்திற்கு வழிவகுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரான் : இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இன்று ( ஜூன் 13) ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது.

வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது இஸ்ரேலின் மொஸாட் (MOSSAD) அமைப்பும் ஈரானில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவ வானொலி தெரிவித்தது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதிகள், வீரர்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹுசைன் சலாமி உயிரிழந்திருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட தாக்குதல் என சர்வதேச செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் கூறியுள்ளன.   ஈரான் தரப்பில் முடிவெடுக்க கூடிய முக்கியஸ்தர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்.

இந்த தாக்குதலுக்கு என்ஐஏசி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இதில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், இது அமெரிக்காவை உள்ளடக்கிய பெரிய அளவிலான போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த தாக்குதலை தன்னிச்சையாக நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை இஸ்ரேலின் ஐநா தூதர் டேனி டானன் கூறியுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை அடுத்து இஸ்ரேலுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஈரானின் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி கூறியுள்ளார்.

மின்கட்டண உயர்வு: உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருப்பதாக IMF தெரிவிப்பு

மின்கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், கடினமான மறுசீரமைப்புக்களின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளை நிலையாகத் தக்கவைத்துக்கொள்வதற்கு விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தை முழுமையான நடைமுறைப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார்.

வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பின்போது ‘இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயற்திட்டம் நிதியியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டிருப்பதனால் அதுவே இலங்கை நாடும் இறுதிச்செயற்திட்டம்’ என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருப்பது பற்றி நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜுலி கொஸாக் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த நான்காம் கட்ட மீளாய்வு தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அந்த அறிவிப்பு 15 சதவீத மின்கட்டண உயர்வு மற்றும் மொத்த விநியோகக் கொடுக்கல், வாங்கல்களுக்கான கணக்கு வழிகாட்டல்களை வெளியிடல் என்பவற்றை உள்ளடக்கியிருக்கின்றது. அதன்படி ஏற்கனவே எட்டப்பட்ட உத்தியோகத்தர்மட்ட மீளாய்வு முடிவடைந்து, அதற்கு நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி அளித்ததன் பின்னர் இலங்கைக்கு 334 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும்.

அதேவேளை கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஆட்சியியல் மறுசீரமைப்புக்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட செயற்திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது. அச்செயற்திட்டத்தில் பொது கொள்வனவுச்சட்டம், குற்றச்செயல்களின் வரும்படிகள் சட்டம் மற்றும் ஏற்கனவே நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவான நடவடிக்கைகள் என்பன உள்வாங்கப்பட்டிருந்தன.

அதேபோன்று விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் ஆதரவுடன் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க பெறுபேறுகளைத் தந்திருக்கின்றன. அதற்கமைய நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு விரிவாக்கத்தைப் பதிவுசெய்திருக்கின்றது.

பொருளாதாரத்தின் சகல துறைகளும் விரிவடைவதற்கான குறிகாட்டிகள் தென்படுகின்றன. பணவீக்கம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. வெளிநாட்டுக்கையிருப்பு உயர்வடைந்திருக்கின்றது. வருமானத்திரட்சி மற்றும் நிதியியல் நிலை என்பன முன்னேற்றமடைந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அடைவுகளை நிலையாகத் தக்கவைத்துக்கொள்வதற்கு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தை முழுமையான நடைமுறைப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார்.