இஸ்ரேலின் ‘சிங்கத்தின் எழுச்சி’ உலகப் போருக்கான தொடக்கமாகையில்; ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பேண வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 343

ஈரானின் பல இடங்களில் இஸ்ரேலின் “சிங்கத்தின் எழுச்சி” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட வான் படையெடுப்பு தாக்குதல்கள், உலகின் சமகால வர்த்தக போர் தொழில்நுட்பப் போர் நிலையை முழுஅளவிலான நாடுகளுக்கு இடையிலான பெரும் உலகப் போராக பரிணமிக்க வைப்பதற்கான முதல்நிலையினை யூன் 13ம் நாள் 2025இல் தொடங்கியுள்ளது. இதில் ஈரானின் தலைநகருக்கு 140 மைல் தூரத்தில் உள்ள நட்டான்ஸ் (Natanz) அணுசக்திக்கான யுரேனிய உற்பத்தி வளப்பகுதிகளை இஸ்ரேல் தாக்கினாலும் கதிர்வீச்சுக் கசிவு ஏற்படவில்லையென ஈரான் அறிவித்துள்ளது. ஆயினும் ஆறு ஈரானிய அணுசக்தி பேராசிரியர்களும் விரிவுரையாளர்களுமான விஞ்ஞானிகளை இஸ்ரேல் தாக்குதல் கொலைசெய்துள்ளது. ஈரான் இராணுவத்தின் துணைப்படையான ஈரானிய புரட்சிகர காவல் படையின் தலைமைத்தளபதியாக 2009 முதல் பொறுப்பில் இருந்த குசைன் சலாமியையும் இஸ்ரேல் தாக்குதல் கொன்றுள்ளது. இந்தப் பாரதூரமான அனைத்துலக சட்டங்களை மீறிய இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடியை ஈரான் வழங்குமென்று ஈரான் அறிவித்துள்ள நிலையில் நீண்டகால நேரடிப் பெரும்போர் மத்திய கிழக்கில் தோன்றியுள்ளமையை உலகு உணர்கிறது.
இத்தகைய உலகப் போர்ச் சூழல்கள் ஏற்படுகையில் உலகில் தங்கள் தன்னாட்சிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சிறுதேச இனங்களின் மேலான அனைத்துலகக் கவனம் சிதறடிக்கப்படுவது உலக வழமை. இதனைப் பயன்படுத்திச் சிறுதேச இனங்களை ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு உட்படுத்தி நிற்கும் அரசாங்கங்கள் அவர்கள் உடைய இறைமையை இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பின் மூலம் ஒடுக்குவதும் உலக வழமை. இந்தப் பேரபாயத்ததுள் உலகின் மூத்த இனங்களில் ஒன்றாக இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் இன்று உள்ளனர். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் உலக இனமாக இன்று உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வரும் தங்களின் வரலாற்றுப் பரிணாமத்தைக் கவனத்தில் எடுத்து அனைத்துலக ஈழத்தமிழர்கள் பேரவை ஒன்றை இலங்கையிலும் உலகிலும் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களின் வறுமையையும் அறியாமையையும் நீக்கும் சமுகமூலதனப்பலத்தையும் அறிவூட்டலையும் அளிக்க வல்ல முறையில் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தாங்கள் தேசங்கடந்துறை மக்கள் என்ற பலத்துடன் அமைத்தாலே ஈழத்தமிழர்களின் இறைமை யைப் பாதுகாக்க இயலும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
இதனைப் பலமுறை இலக்கில் முன்னரும் கூறி வந்துள்ள போதிலும் இன்றைய உலக படைபல சமநிலை மாற்றங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேவையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய காலனித்துவல அரசாங்கத்தினால் தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களின் அரசியல் எதிர்காலத்தை அமைக்கும் தன்னாட்சி உரிமையினை தங்களின் அரசியல் உரிமையாக ஈழத்தமிழர்கள் பயன்படுத்த இயலாதவாறு ஈழத்தமிழர்களின் இறைமை சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் 04.02. 1948 இல் உட்படுத்தப்பட்டதன் விளைவாக இன்று வரை காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலக நாடுகளின் மன்றமான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நல்லுறவு தொடர்பாலர் நியமனத்தின் மூலம் ஈழத்தமிழரின் தன்னாட்சி மூலம் அவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய முறையில் அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் செய்யப்பட வேண்டிய வொன்றாக உள்ளது. இதற்காக 2023இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் குரல் எழுப்பிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்கள் தாயகத்தில் தமிழ்த்தேசியப் பேரவையாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகளை பொதுநோக்கில் இணைக்கும் பெரும் முயற்சியில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றார். ஆயினும் தமிழசுக்கட்சியினர் இந்த தமிழ்த்தேசியப்பேரவைக்கு ஈழத்தமிழ் மக்கள் அளித்த வாக்குப்பலத்தின் அடிப்படையிலான ஆணையின் கீழ் உள்ளூராட்சியில் அவர்கள் செயற்படாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முகவர்களாக தாயகத்தில் செயற்படும் கட்சிகளுடன் இணைந்து யாழ்ப்பாண மாநகரசபை உட்பட ஈழத்தமிழ்த்தேசியப் பேரவை ஆட்சி அமைக்கக் கூடிய பத்து முதல் பதின் மூன்று உள்ளூராட்சி சபைகளில் ஈழத்தமிழர்களின் வாக்களிப்பு நோக்குக்கு எதிரான வகையில் சனநாயகப்படுகொலை செய்து தங்கள் பதவிகளைப் பெற்றுள்ளனர்.
இதன்வழி ஈழத்தமிழர்களின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஒடுக்கப்படும் நிலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர். தந்தை செல்வநாயகத்தின் 1975ம் ஆண்டு சிறிலங்காப் பாராளுமன்ற வெளியேற்ற உரையான ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்துடன் நிறைவுற்றுவிட்ட தமிழரசுக்கட்சி என்ற 1949 மதல் 1975 வரையான 26 ஆண்டுகால கட்சியொன்றின் வரலாற்றுப் பெயரை இன்று தமது அரசியல் நோக்குகளுக்கான கட்சிப் பெயராகக் காட்டி மக்களை மயக்கி வரும் இன்றைய ஈழத்தமிழ் தமிழரசு அரசியல்வாதிகளை ஈழத்தமிழர்கள் இனங்கண்டு அவர்களுக்கான தமது எதிர்ப்பையும் வாக்கு மறுப்பையும் உறுதிப்படுத்துவதன் மூலமாகவே இன்றைய காலகட்டத்தில் சிறிலங்காவின் இன்றைய அரசின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஈழத்தமிழர் சிங்கள பௌத்த அரசில் வடக்கில் வாழும் கிழக்கில் வாழும் தனித்தனிச் சமுகம் என்ற அபாயகரமான புதிய அரசியல் வரவிலக்கணத்துள் இருந்து தப்பிக்க முடியும்.
தையிட்டியில் ஈழத்தமிழரின் தனிப்பட்ட நிலங்கள் பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்டுள்ள இன்றைய பிரச்சினையில் தேசிய மக்கள் சக்தி பிக்குவின் நில அபகரிப்பை அங்கீகரித்து பாதிக்கப்பட்ட காணிச் சொந்தக்காரருக்கு நட்டஈட்டுத் தொகை அல்லது இன்னொரு இடத்தில் காணி என்கின்ற தீர்வை அதன் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுதான் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையில்லையென்ற ஈழத்தமிழின அழிப்புச் சிங்கள அரசத்தலைவர் மகிந்தாவின் வழியிலும் சிங்கள பௌத்த நாடாக எம்மை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்களவர்களுக்கே நாம் அரசு என்ற கோத்தபாய சிந்தனையின் வழியிலும் ஏக்கிய இராச்சிய என்ற ரணில் சிறிசேன சிங்கள அரசத்தலைவர்களின் கூட்டுப்படைப்பான ஒரே அரசு சிங்கள அரசு என்ற வழியிலும் ரணிலின் வடக்கு கிழக்கு என்று ஈழத்தமிழின இருப்பையே இல்லாதொழிக்கும் வழியிலும் இன்றைய தேசிய மகக்ள் சக்தி அரசாங்கமும் செயற்படுகிறது என்பதற்கான தெளிவான சான்றாகவுள்ளது. இந்நிலையில் தமிழரசுக்கட்சி இன்றைய அரசின் சிங்கள மயமாக்கல் முயற்சிகளை ஈழத்தமிழரிடை முன்னெடுக்கும் அரசியலைச் செய்கின்றார்கள் என்பதற்கு அவர்கள் ஈழத்தமிழினப் பகைமைகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தமையை விட இனியொரு சான்று தேவையில்லை.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளாந்த இதழ் ஒன்று ஈழத்தமிழ்த் தேசியம் குறித்து மீள்வரைவு செய்ய வேண்டும் என்னும் ஆசிரிய தலையங்கத்தைக் கடந்த வாரத்தில் எழுதியுள்ளது. இதனை வாசித்த பொழுது ஊடகங்களின் அறியாமையைத் தெளிவாக விளங்க முடிந்தது. அவ்வாறே தமிழகத்தில் திரைப்பட நடிகர் கமலகாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று தனது ‘தக் லைவ்’ திரைப்பட வெளியீடு தொடர்பான கூட்டமொன்றில் பேசியமைக்குக் கன்னட நீதிமன்ற நீதிபதி மன்னிப்புக் கேட்க வேண்டுமென நீதிமன்றத்தால் வலியுறுத்தியும் கமலகாசன் கேட்க மறுத்தத்தமை குறித்த தமிழகத்தின் கல்வித்துறையிலும் தமிழ் இலக்கியத்துறையிலும் குறிப்பிடத்தக்க புகழ்படைத்த பெருமாள் முருகன் ‘த இந்து’ தமிழ் நாளிதழுக்கு கமலகாசனின் கருத்துச் சுதந்திர உறுதிப்பாட்டைப் பாராட்டி எழுதிய கட்டுரையில் மூலத் தமிழில் (Proto-Tamil) இலிருந்து மொழிகள் தோன்றின என்ற உண்மையை மறுத்து மூலத் திராவிட மொழியில் (Proto-Dravidian Language) இருந்தே கன்னடம் உட்பட்ட திராவிட மொழிகள் தோன்றின என்ற கருத்தை மக்கள் மயப்படுத்தியுள்ளார். இதனை வீரகேசரி மறுவெளியீடு செய்துள்ளது. இந்த ஊடக வெளிப்பாடுகள் இரண்டுமே ஈழத்தமிழினத்துக்கான அறிவூட்டலில் தேவையை வெளிப்படுத்தி உள்ளன. ஈழத்தமிழ்த் தேசியம் என்பது இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற மக்களின் வரலாற்றுத் தாயகத்தினை மக்கள் மீட்கும் மண்மீட்பைக்குறிக்கிறது என்பதும் திராவிட மொழிக் குடும்பம் என மூலத் தமிழைக் கொண்ட மொழிகளின் குடும்பங்கள் குறிக்கப்பட்டனவே தவிர திராவிட மொழியென்று ஒரு மொழி இருந்தது இல்லை என்பதும் இவை குறித்து எழுதியவர்களுக்கே தெரியாத நிலை உள்ளது என்பதால் தான் ஈழத்தமிழர்களின் பொதுக்கருத்துக்கோளமொன்றை உருவாக்கிட வல்ல ஈழத்தமிழ்த் தேசிய ஊடகத்தை ஈழத்தமிழர்கள் உயிரோடைத் தமிழ் வானலையை இலக்கு மின்னிதழைக் கொண்டு பலமான ஈழத்தமிழர் ஊடகமாக உருவாக்குங்கள் என்று அடிக்கடி ஆசிரிய தலையங்கத்தில் எழுதி வருகின்றோம். உலகப் போர் மூண்டுவிட்ட இந்நிலையிலாவது தயவு செய்து விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஈழத்தமிழர்களுக்கான தேசிய ஊடகம் ஈழத்தமிழர்களுக்கான பொதுக்கட்டமைப்பு என்பவற்றில் உடனடிக் கவனத்தை ஒவ்வொரு ஈழத்தமிழரும் செலுத்த வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார கருத்தாகவுள்ளது.

ஆசிரியர்

Tamil News