Home Blog Page 108

யாழ்.செம்மணி புதைகுழி – சர்வதேச விசாரணையை கோரும் கனேடிய எம்.பி விஜய் தணிகாசலம்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிப்பதாக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டிருந்தார்.

செம்மணி மனிதப்புதைகுழியானது கடந்தகாலக் காயங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் ஆறாமல் இருப்பதை உணர்த்துவதாகவும், அம்மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் வலியுறுத்ததியிருந்தார்.

அதேவேளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின்போது குழந்தை உட்பட 3 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கனடாவின் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன் உறுப்பினர் விஜய் தணிகாசலம்,

ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் ஸ்காபரோ-ரக்பார்க் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற ரீதியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வலியுறுத்தலை தானும் மீளவலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ‘உயர்ஸ்தானிகரின் செம்மணி மனிதப்புதைகுழி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிக்கின்றது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரி கொண்டுவரப்பட்ட பிரேரணை செங்கலடி பிரதேச சபையில் நிறைவேற்றம்

யாழ். செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரி கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு கடந்த 26 ம் திகதி நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி அமர்வின் போது தமிழரசுக் கட்சியின் உப தவிசாளர் சர்வானந்தன் அவர்கள் விசேட பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தார்.

அதாவது யாழ் செம்மணி புதைகுழியில் தற்போது வரை பல மனித எலும்புக் கூடுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் குறித்த எழும்புக் கூடுகள் யாருடையது? எந்த காலத்திற்குரியது என்பதை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்த வேண்டியது அவசியமாகும்.

தற்போது வடகிழக்கில் செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை இந்த சபையில் நிறைவேற்றி அதனை இலங்கை அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமை ஆணையாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மூவின மக்களின் பிரதிநிநிகளை கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் சுயேட்சை குழுக்கள் என தமிழ், முஸ்லீம், சிங்களம் உட்பட 32 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் மேற்படி பிரேரணை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன் படி வடகிழக்கில் தமிழரசுக் கட்சியின் ஆட்சியமைத்துள்ள உள்ளூராட்சி சபைகளில் செம்மணி குறித்து நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானமாக இத் தீர்மானம் கருதப்படுகிறது. இதன் மூலம் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட அரச கட்டமைப்பு ஒன்றின் ஊடாக  செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கையர்கள் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர  காவல் படையினரால் கைது செய்யப்பட்டு   காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (27)  இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து படகில் இந்திய கடலோர பொலிஸ் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போதுதனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காம் மணல் திட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற மூன்று பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து கொடுப்பனவு அட்டை, கடன் அட்டை மற்றும் இலங்கை பணம் 46,000 உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதன்போது சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர் சந்தேக நபர்களை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு அழைத்து வந்து  காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34,43 மற்றும் 33 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் தமிழகத்திற்குள் சென்ற பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாக காவல்   விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட மீண்டும் தடை

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட  இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை (27) அனுமதி வழங்கியுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை (28) மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ,விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக வெள்ளிக்கிழமை (27) முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை (28) ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையை இராணுவத்தினர் மூடி முட்கம்பி வேலி அமைத்திருந்ததுடன், இரு இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

ஆலயத்திற்கு சனிக்கிழமை வழிபட சென்ற மக்கள், இராணுவத்தினர் அனுமதிக்காததால் முட்கம்பி முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி பூப்போட்டு வழிப்பட்டனர்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை

வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும் நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி அரசினை வலியுறுத்தி சனிக்கிழமை (28) பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சருக்கு விடுதலை வேண்டி பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தனர். இவ் நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம் பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இறைமையில் வாழாது விட்டு இருப்பினையும் இழக்க வைக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 345

இவ்வார ஆசிரிய தலையங்கத்தை எழுதுகின்ற பொழுது “இந்த நாடகம் – அந்த மேடையில் எத்தனை நாளம்மா – இன்னும் எத்தனை நாளம்மா” எனப் பாலும் பழமும் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில் பி. சுசிலாவின் இனிய குரலில் 1960களில் மக்கள் நாவுகளில் எல்லாம் ஒலித்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ட்ரம்ப் – இஸ்ரேல் நாடகம் உலக அரசியல் அரங்கிலும் வொல்கர் ரேக் – அநுர அரச நாடகம், உள்ளூர் அரசியல் அரங்கிலும் நடைபெற்றுள்ளதை மையமாக வைத்து இந்த நாடகங்கள் எத்தனை நாளுக்கு என்கின்ற கேள்வியை இலக்கை முன்வைக்க வைக்கிறது.
இஸ்ரேலை நோக்கியும் கட்டாரில் உள்ள அமெரிக்கத் தளம் மேலும் ஈரானின் தாக்குதல்கள் அதுவரை தங்கள் தாக்குதலால் தாங்கள் நினைத்ததைச் சாதித்து விட்டதாகக் கூறி வெற்றிவிழாக் கொண்டாடிய இஸ்ரேல் அமெரிக்கா என்னும் இருநாடுகளையும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வைத்தன என்பதே பல ஆய்வாளர்களின் கருத்து. இதனையே அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்ததாக ஈரானின் அதிபர் வருணிக்கின்றார். ஈரானின் உறுதி ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல சனநாயக வழிகளிலான அரசியல் போராட்டங்களிலும் கூட எந்த மக்கள் தம் மண்ணைக் காக்க உறுதியை வெளிப்படுத்துகின்றார்களோ அந்த மக்களுக்கு முன் பகைவர்கள் பணிந்தேயாக வேண்டும் என்கின்ற உண்மையை மீளவும் உலகில் நிரூபித்துள்ளது.
இதனை ஈழத்தமிழர்கள் தங்கள் சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் தங்களின் மண்ணின் மீட்புக்காக ஈழத்தமிழர்கள் “உறுதியின் உறைவிடமாக”  எந்த இழப்புக்களையும் முகங்கொள்ள தயாராக இருந்த 1978 முதல் 2009 வரையான காலத்தில் உலகநாடுகள் உலக அமைப்புக்கள் ஈழத்தமிழர்களின் இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற ஈழமக்களின் மக்கள் இறைமையில் அவர்களைச் சந்தித்தனர்-பேசினர் என்பது வரலாறு.  இந்த உறுதியை உடைக்க உலகின் வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான என்ன என்ன உத்திகளை சிறிலங்கா கையாள உதவியும் ஊக்கமும் அளித்தனவோ அத்தனை உத்திகளும் இஸ்ரேலின் உத்திகளாக இன்று கையாளப்படும் போக்கை உலகம் காண்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்காவின் ஈழத்தமிழன அழிப்பை வல்லாண்மைகள் எப்படி நியாயப்படுத்தினவோ அதே நியாயப்படுத்தலே இன்று இஸ்ரேலுக்கு அவற்றால் பயன்படுத்தப்பபடுவதையும் உலகம் காண்கிறது. மேலும் எவ்வாறாக நோர்வேயின் அனுசரணையுடன் தமிழீழ சிறிலங்கா போர்நிறுத்தத்தை முன்னிலைப்படுத்தி அதன் இலக்காக தமிழீழ நடைமுறை அரசின் வீழ்ச்சியை நடைமுறைப்படுத்தினவோ அதே பாணியில் இன்றும் இலக்கு நோக்கு உள்ளதை உலகம் உணர்கிறது. இதனால்தான் அன்று ஈழத்தமிழின நடைமுறையரசின் ஒடுக்கம் உலகின் பாதுகாப்பின்மைக்கும் அமைதியின்மைக்குமான   முதலாவது தொடக்கமாகிறது எனக் கூறிய எதிர்வு கூறலை இன்று உலகம் நடைமுறையில் காண்கின்றது. இந்நிலையில் இந்த அமைதி நாடகம் அந்த மேடையில் நடப்பது சில நாட்களுக்கா அல்லது வாரங்களுக்கா என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அவ்வாறே அநுர அரசின் அழைப்பின் பேரில் ஒன்பது ஆண்டுகளின் பின்னர் சிறிலங்காவின் இன்றைய மனித உரிமைகளின் நிலை குறித்து நேரடி மதிப்பீடு செய்ய  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் வொல்கர் ரேக் அவர்கள் இலங்கைக்குச் செல்கின்றார் என்ற செய்தி வெளியாகிய நாள் முதல்  அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என தாயக அனைத்துலக ஈழத்தமிழர்கள் நம்பிய பொழுதே அது நாடகமாக முடியுமென இலக்கு எடுத்துரைத்தது. இப்பொழுது அது நடந்துள்ளது.
ஆணையாளர் வொல்கர் ரேக் அவர்கள்  தனது சந்திப்புக்களின் முடிவில் சிறிலங்காவின் இன்றைய அநுர குமார திசநாயக்காவின் அரசாங்கம்  முன்னெடுக்கும் புதிய அரசியல் மாற்றம் மற்றும் சமூக மாற்றங்களைப் பாராட்டியதுடன், தேசிய ஒற்றுமை மற்றும்  நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் தனது முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
இதனை உறுதி செய்வது போல  வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் ஆணையாளர் கருத்து வெளியிட்டுள்ளார். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு ஆணையாளர் சென்றிருந்த நேரங்களில் ஈழத்தமிழரின் நேரடியானதும் எழுத்து மூலமானதுமான கோரிக்கைகளை தான் புரிந்து கொள்வதாகக் கூறிவிட்டு இதற்கான தீர்வை இந்தத் தேசத்துடன் இணைந்துதான் பெற வேண்டும் என்று வலியுறுத்தியமை சிறிலங்காவின் இறைமைக்குள் தீர்வு பெற வேண்டுமென்ற விதந்துரைப்பாக அமைந்தது. சுருக்கமாகச் சொன்னால் சிறிலங்கா எந்த நோக்குகளுக்காகச் மனித உரிமைகள் ஆணையாளரை அழைத்ததோ அந்த நோக்குகளை அடைவதற்கான நப்பிக்கையைச் சிறிலங்காவுக்கு மனித உரிமைகள் ஆணையக ஆணையாளர் வழங்கியுள்ளார் எனலாம்.
பிரித்தானியாவில் இன்றைய தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் பெரும் துன்பங்களை ஏற்படுத்தும் மக்கள் நலன்புரி சட்டவரைவு குறித்த துன்பகரமான உண்மை என்னவென்றால் தொழிலாளர் கட்சியினர் எதனையும் கற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் – கேட்கவும் மாட்டார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது என்பதாகும். இவ்வாறு பிரித்தானியாவின் காடியன் ஆங்கில நாளிதழின் பத்தி எழுத்தாளர் பொலி டொன்பீ தனது 27.06.25 காடியன் நாளிதழ்  கருத்தியல் கட்டுரைக்குத் தலையங்கமிட்டுள்ளார். இது இன்று இலங்கைத்தீவில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் இறைமைக்கு முக்கியத்துவம் அளிக்காது செயற்பட்டு ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி வாழ்வுக்கு ஏற்படுத்தி வரும் பெருந்துன்பங்களுக்கும் பொருந்தும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
இந்நேரத்தில் அநுர அரசாங்கம் ஈழத்தமிழர்களின் 5940 ஏக்கர் தனியார் காணிகளை கையகப்படுத்த நடாத்திய நாடகமும் அதனை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாது ஒருசில மணித்தியாலங்களுள் காணி அமைச்சுக்கு அதனை நடைமுறைப்படுத்தும் நிலை தோன்றுவதற்கு இருந்த நிலையில் சட்டத்தரணி சுமந்திரனின் இடைக்கால தடையுத்தரவு பெறும் வழக்கால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்குத்தான் சுமந்திரன் அவர்களை உங்களுக்கு உரிய சட்டத்துறையில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு அளப்பரிய சேவை செய்ய முடியும் அதனை விட்டு கொழும்பில் இருந்து நீங்கள் பார்த்து வளர்ந்த அரசியலுள் சுழலாதீர்கள் முடிந்து போன சமஸ்டியை மீளக்கேட்டு நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள் என இலக்கு பலமுறை வலியுறுத்தியது.
கடந்த வார நிகழ்வுகளை எல்லாம் கூட்டு மொத்தமாகப் பார்க்கையில் ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் இனியாவது தமது மண்ணை மீட்பதற்கான அமைதி வழிப் போராட்டமாக இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற இறைமையின் உரிமையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழரின் தாயகத்தைச் சிங்களக் குடியேற்றமாக்கி தேசியத்தை சிங்களத் தேசியத்தால் ஆக்கிரமித்து ஈழத்தமிழரின் தன்னாட்சியை ஒடுக்கி வடக்கு கிழக்கு என்னும் இரு சிறிலங்காவின்  பகுதிகளில் சிங்களவரில் தங்கி வாழும் வாழும் சமுதாயமாக  ஈழத்தமிழரை மாற்ற அநுர அரசு நடத்திக் கொண்டிருக்கும் நிழல் யுத்தம் நேரடியான யுத்தத்தை விடப் பயங்கரமானது என்பதை உலகம் உணர்ந்து ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை ஏற்று ஈழத்தமிழர்கள் பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் பெற அனுமதிக்கும் என்பது இலக்கின் உறுதியான கருத்தாக உள்ளது.
ஆசிரியர்

Tamil News

Ilakku Weekly ePaper 345 | இலக்கு-இதழ்-345-யூன் 28, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 345 | இலக்கு-இதழ்-345-யூன் 28, 2025

Ilakku Weekly ePaper 345

Ilakku Weekly ePaper 345 | இலக்கு-இதழ்-345-யூன் 28, 2025

Ilakku Weekly ePaper 345 | இலக்கு-இதழ்-345-யூன் 28, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • இறைமையில் வாழாது விட்டு இருப்பினையும் இழக்க வைக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் | ஆசிரியர் தலையங்கம் | ஆசிரியர் தலையங்கம்
  • யாருக்கு சாதகம்? விதுரன்
  • பிட்டும் தேங்காய்பூவையும், கீரியும் பாம்புமாக மாற்றியவர் சஜீத்தின் தந்தை ஆர் பிரமதாசா-பா. அரியநேத்திரன்
  • செம்மணியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும்
  • ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரிடத்தில் கண்ணீரோடு நீதி கோரிய மக்கள்- கிண்ணியான்
  • துயர் தரும் செம்மணி ….. கலாநிதி உதயசீலன்
  • பெருந்தோட்ட மக்களின் குத்தகை ஒப்பந்தம் – வர்த்தக ஒப்பந்தமா? –மருதன் ராம்
  • ஈரானின் கண்களுக்கு முகமூடி போட்ட உளவாளி (பகுதி 1) – பருத்திவீரன்- வளைகுடா
  • நாட்டின் எல்லைகளைப் பகிராத இஸ்ரேல்; ஈரான் போரின் பின்னணி என்ன? (பகுதி-2 சென்றவார தொடர்ச்சி (இறுதிப் பகுதி)நேர்காணல் B.A. காதர்
  • போர் நிறுத்தமும் புதிய களமுனைகளின் மாற்றமும் –வேல்ஸில் இருந்து அருஸ்

 

இலங்கை: சர்வதேச விசாரணையும் பொறுப்புக்கூறலும் அவசியம்!

இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி,  சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என தெரிவித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ்.

சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள் செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது.

என, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு அவசியம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள், நாடற்றவர்கள் உள்ளிட்டோரின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எல்.ரி.பி.தெஹிதெனிய தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மையான நிலைவரத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளல், அவர்களது பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான முன்னேற்றகரமான வழிமுறைகள் குறித்து ஆராய்தல், அவர்கள் சார்ந்து தற்போது நிலவும் சவால்களுக்கான நிலையானதும் யதார்த்தபூர்வமானதுமான தீர்வுகளை அடையாளங்காணல் என்பனவே இச்சந்திப்பின் பிரதான நோக்கங்களாகும்.

இச்சந்திப்பில் இலங்கையிலுள்ள அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயன்முறையை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு ஆணைக்குழுவினால் பிரதானமாக 4 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

1951 ஆம் ஆண்டு அகதிகள் பிரகடனத்தையும் 1967 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அதன் கூறுகளையும் ஏற்று அங்கீகரித்தல், புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பிலும் பரந்துபட்ட கொள்கையை வகுத்தல், அகதிகள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அகதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலக்காகக்கொண்டு செயலாற்றிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாத்தல் என்பனவே அப்பரிந்துரைகளாகும்.

அதேவேளை தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுத்தல், அகதிகள் தொடர்பான உள்நாட்டு சட்டங்களை மறுசீரமைத்தல், வலுகட்டாயக் கைது மற்றும் தடுத்துவைப்பு என்பவற்றை முடிவுக்குக்கொண்டுவரல், அகதி முகாம்களின் நிலையைத் தரமுயர்த்துதல், தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல், அகதி சிறுவர்களுக்கான கல்வியை உறுதிப்படுத்தல் ஆகிய பரிந்துரைகள் அகதிகள் பாதுகாப்பை முன்னிறுத்தி சிவில் சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன.

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்: சீமான்

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா?  என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து  சீமான் கூறியுள்ளதாவது:-

ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட மனித புதைகுழி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது.

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்தநாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக்கொடூர நிகழ்வால், பெரும் மனக்கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் இலங்கை இனவெறி அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் துணிச்சலுடன் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அவரது வாக்குமூலத்தின் படி 1995-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தம்முடைய உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும், பத்திற்கும் மேற்பட்ட புதைகுழிகளைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு காரணமாக அவர் அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால், வழக்கம்போல இலங்கை இனவெறி அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது. செம்மணி மனித புதைகுழிகளில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் ஒரு சிலரின் உடல்களே தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், அதற்கான விசாரணையும்கூட முழுமையாக நிறைவடையவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கள இனவெறி ராணுவ அதிகாரிகளுக்கும் எந்தத் தண்டனையும் வழங்கப்படவுமில்லை. அவ்வப்போது புதைகுழிகள் தோண்டப்படுவதும், விசாரணை நடைபெறுவதும், சில நாட்கள் ஊடகங்கள் அவை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகு அவ்வழக்குகளும், விசாரணைகளும் நீர்த்துப்போவதும் வழக்கமான ஒன்றாகிப்போனதுதான் தமிழினத்திற்கு நேர்ந்த பேரவலம்.

கொல்லப்பட்டவர்கள் யார், யார்? ஏன் கொல்லப்பட்டார்கள்? எப்போது கொல்லப்பட்டார்கள்? எப்படிக் கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்று எந்த விசாரணையும் இல்லாமல், எந்த நீதியும் கிடைக்காமல் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் இனத்தில் பிறந்த ஒற்றைக்காரணத்திற்காகக் கொல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் உடல்கள், செம்மணி புதைகுழிகளில் இன்றளவும் புதைந்து கிடக்கின்றன. மரிக்கும் முன் எழுப்பிய தங்களது இறுதி மரண ஓலங்களுக்கான நீதியானது, தமிழனாய் மரணித்த தங்களின் இறுதி பார்வைக்கான நியாயமானது, புதைக்கப்பட்ட தங்கள் எலும்புகள் முழுவதுமாய் அரிக்கும் முன்பாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் மண்ணுக்கடியில், ஈழத்தாய்மடியில் அவ்வுடல்கள் காத்து கிடக்கின்றன. செம்மணி மட்டுமல்ல ஈழத்தாயகம் முழுவதுமே சிங்கள இனவெறி ராணுவத்தாலும், இனவாத இலங்கை அரசின் பயங்கரவாதத்தாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புதைகுழிகள் நிரம்பியுள்ளன.

இன்றைக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தேடி அலைகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களான, பல்லாயிரம் தமிழர்களில் பெரும்பான்மையோர் இப்படி சிங்கள இனவெறி ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்தான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத துயரம் தோய்ந்த உண்மையாகும்.

2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் கண் முன்னே 2 இலட்சம் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ, உரிய நீதியையோ பெற முடியாமல், பன்னாட்டு அவைகளில் முட்டி மோதி முற்றாகச் சோர்ந்து போயுள்ளது தமிழினம். ஈழத்தாயக விடுதலைத்தான் பெறமுடியவில்லை குறைந்தபட்சம் இனப்படுகொலை செய்யப்பட்ட நீதியைக்கூடத் தமிழினத்தால் பெறமுடியவில்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம். 2 இலட்சம் தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையையே பெற முடியாமல், அரசியல் அதிகாரம் ஏதுமற்றுத் தவித்துப்போயுள்ள தமிழினம், யாருக்கும் தெரியாமல் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களுக்கான நீதியை எப்படிப் பெறப்போகிறோம்? என்று தெரியாமல் கையறு நிலையில் தவித்து நிற்கும் நிலைதான் மற்றுமொரு பெருங்கொடுமையாகும்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணம் அருகே அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 5 தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது உலகத் தமிழர்களிடம் மிகப்பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஈழத்தாயக மக்கள் முன்னெடுத்த ‘அணையா தீபம்’ தொடர்ப்போராட்டத்தின் விளைவாக, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்கள், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளை நேரில் கண்டு விசாரணை மேற்கொண்டது தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது.

செம்மணி மனித புதைகுழிகள் என்பது இனவெறி இலங்கை அரசு மேற்கொண்ட கடலளவு தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே; செம்மணி போன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தோண்டி எடுத்து முழுமையாக விசாரித்தால் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் எத்தனை பெரிய இனப்படுகொலையை தமிழர்கள் மீது இனவெறி இலங்கை அரசு நிகழ்த்தி வந்திருக்கிறது என்பதை உலக மானுட சமூகம் அறிய முடியும். தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் போட்டு 2009 இல் 2 இலட்சம் தமிழ் மக்களைத் தம்மால் நேரடியாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான சுதந்திரமான நீதி விசாரணையையே நடைபெறவிடாமல் முற்று முழுதாக முடக்கியுள்ள இனவெறி இலங்கை அரசு, எவ்வித குற்றச்சாட்டும் இன்றி, எவ்வித விசாரணையும் இன்றி, எவ்வித காரணங்களும் இன்றி, எவ்வித ஆதாரங்களும் இன்றி, பல்வேறு காலகட்டங்களில், மறைமுகமாகக் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் குறித்தும், அப்படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் குறித்தும் முறையான நீதி விசாரணைக்கு ஒருபோதும் அனுமதியோ, ஒத்துழைப்போ வழங்கப்போவதில்லை.

ஆகவே, செம்மணி உட்பட ஈழத்தாயகத்தில் மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை நடத்தத் தேவையான பொறிமுறையை உருவாக்கி, புதைகுழிகளை அகழாய்வு செய்து, இனப்படுகொலை குறித்த விசாரணையை அறிவியல் பூர்வமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென்று ஐ.நா.அவையின் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துகிறேன். அதன் மூலம் மட்டுமே இலங்கை அரசின் சிங்கள இனவெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்துள்ளது என்பதையும், 2009 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடர்ச்சியாக, மிகக்கொடூரமாக ஈவு இரக்கமின்றி தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உலக நாடுகள் அறிந்துகொள்வதற்கான மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றாக அவை அமையும்.

தமிழர்களுக்கான தனித்த இறையாண்மை கொண்ட தமிழீழத் தாயகம் அமைவது ஒன்றே நிலைத்த, சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவும், ஆதரவளிக்கவும் செம்மணி புதைகுழிகள் குறித்த விசாரணை மிக முக்கிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித புதைகுழிகள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரி ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்!

ஈழத்தாயகத்தில் நடைபெறும் நீதிக்கான தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக இணைந்து நிற்கின்றோம்!

எங்களைக் கொன்று மண்ணில் புதைத்தாய்! – எங்கள் மண்ணைக் கொண்டுபோய் எங்கே புதைப்பாய்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.