Home Blog Page 107

ரஸ்யாவின் ஏற்றுமதியில் 80 வீத எண்ணையை வாங்கிய இந்தியா

உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடு கள் பொருளாதார தடைகளை விதித்த போதும், ரஸ்யா கடல் மூலம் ஏற்றுமதி செய்யும் எரி பொருட்களில் 80 வீதத்தை இந்தி யாவே கொள்வனவு செய்துள்ளது.
இந்தியாவின் நயாரா மற்றும் றிலையன்ஸ் ஆகிய நிறுவ னங்கள் ரஸ்யாவில் இருந்து 80 வீத எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ளன. இந்த வருடம் மட்டும் இந்தியா 231 மில்லி யன் பரல்கள் எண்ணையை கொள்
வனவு செய்துள்ளதாக த புளும் பேர்க் என்ற ஊடகம் கடந்த புதன் கிழமை(25) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் செல்வந்தரன முகேஸ் அம்பானியின் றியலை ன்ஸ் நிறுவனம் மட்டும் இந்த வருடம் 77 மில்லியன் பரல்கள் உரல்ஸ் எண்ணையை கொள்முதல் செய்துள்ளது. தின மும் 500,000 பரல்கள் எண்ணெயை கொள் வனவு செய்வதற்கு அம்பானியின் நிறுவனம் வருடத்திற்கு 13 பில்லியன் டொலர்கள் பெறுமதி யான உடன்பாட்டைச் செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் – ரஸ்ய போர் ஆரம்பமாகிய பின்னர் ரஸ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவு நாள் ஒன்றிற்கு 1.8 மில்லியன் பரல்களாக உயர்ந்திருந்தது. கடந்த மாதம் இந்தியாவின் பிரதான எரிபொருள் விநியோகஸ்தராக ரஸ் யாவே இருந்தது.

கென்யாவில் மக்கள் போராட்டம் – பெருமளவானோர் பலி

கென்யாவில் அரசின் ஊழல்கள் மற்றும் காவல்துறையி னரின் வன்முறைகளுக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத் தில் கடந்த புதன்கிழமை(25) 23 பேர் கொல்லப்பட்டதுடன், 400 பேர் காயமடைந்துள்ளதாக கிழக்கு ஆபிரிக்க தேசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 23 மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள் ளன. கொல்லப் பட்டவர்களில் பெரும்பாலானோர் கென்யா காவல்துறையினரின் தாக்குதலில் இறந்துள்ளனர். கடந்த வருடம் மக்களிடம் இருந்து 2.7 பில்லியன் டொலர்களை வரிகளாக சேகரிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் 60 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
தற்போதைய போரட்டமும் அதன் தொடர்ச்சியாகவே மேற் கொள்ளப்படுகின்றது. பெருமளவான இளையோர் இந்த தடவை போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்கள் கடந்த வருடம் கொல்லப்பட்டவர்களின் படங்களையும் தாங்கி போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் அரச தலைவர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போரட்டத்தை முறியடிப் பதற்காக அரச படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் நா.உ. வலியுறுத்தல்

வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியு ள்ள பெரும்பான்மை இனத்தவர் களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடி யாதென  நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள் ளார்.
அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணி
களை, மீளவும் தமிழ் மக்களி டம் ஒப்படைத்துவிட்டு பெரும்பா ன்மை இனத் தவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டுமெனவும் எச் சரித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 25.06.2025 அன்று இடம் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கடற் றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார்.குறித்த கூட்டத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் கடற்றொழில்மேற்கொள்வதற்கு நாயாறுப் பகு தியில் இறங்குதுறை வழங்குமாறு அனுமதி கோரியிருந்தனர்.
இதன்போது கருத்துத்  தெரிவித்த  அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய்தொடக்கம், பேப்பாரப்பிட்டி வரைக்குமான பகுதியே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதியாகும். இந்த கரையோரப் பகுதிகளிலேயே கடற்றொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வெலிஓயா பிரதேசம் என்பது கடற்பகுதி யற்ற ஒரு பிரதேசம். இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு அங்கு அத்துமீறிக் குடியிருக்கின்ற பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களும் கடற்றொழில் செய் வதற்கு இறங்குதுறை கேட்டால், கடலைப் பிரதானமான வாழ்வாதாரமாக நம்பி வாழும் கடற்றொழிலாளர்கள் எங்குசெல்வது.
கடல்பகுதியே இல்லாத வெலிஓயா பகுதியில் அத்துமீறிக்குடியிருக்கின்றவர்களை கடற்றொழிலாளர் சங்கமாகப் பதிவுசெய்ததுயார். அவர்கள் நன்னீர் மீன்பிடிச்சங்கமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பின் கடலில் இறங்குதுறை கேட்கமுடியாது.
கடந்த 1984ஆம் ஆண்டிற்கு பிற்பாடு தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, தமிழர்க ளது பூர்வீக மணலாற்றை வெலிஓயாவாக மாற்றி அங்கு அத்துமீறித் தங்கியிருக்கும் பெரும்பான்மையினத்தவர்கள், தமிழ் மக்களிடம் காணிகளை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறவேண்டும்.வெலிஓயா பகுதியில் அத்துமீறிக் குடியிருக்கும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்களுக்கு நாயாற்றில் இறங்குதுறை வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடி யாது – என்றார்.

கைதுசெய்யப்பட்ட தமிழ் நாட்டு மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் மீனவர்களை  எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை உத்தரவிட்டார்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று ஞாயிற்றுக்கிழமை (29) ஞாயிறு அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து  கைது செய்யப்பட்ட  இராமேஸ்வர 8 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்கடையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை  மன்னார் கடற்றொழில் திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை  மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கச்சதீவை எக்காரணத்துக்காகவும் இந்தியாவிடம் மீள வழங்க முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

இராஜதந்திர ரீதியிலும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்ச தீவு எக்காரணத்துக்காகவும் இந்தியாவிடம் மீள கையளிக்கக்கப்பட மாட்டாது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் ஏற்படுத்தும் அழிவினால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவில் தேர்தல் அண்மிக்கும் போது குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கைகளிலெடுக்கும் முதலாவது ஆயுதம் கச்சதீவாகும். கச்சதீவினை இலங்கைக்கு வழங்கியது தவறு என்றும், அதனை நாம் மீளப் பெற்றுக் கொள்வோம் என்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது வழமையான ஒன்றாகும்.

இது அவர்கள் தமது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் உத்தியாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரும் இவ்விடயம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது தவறு என்றும், அந்த சந்தர்ப்பத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைளால் எமது மீன்வளம் மாத்திரமின்றி முழுக்கடல் வளமும் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். இந்த அழிவு தொடருமானால் வரும் 15 – 20 ஆண்டுகளில் இலங்கையின் கடல் பாலைவனமாகும் அபாயத்தை தவிர்க்க முடியாது. தமிழ்நாட்;டு அரசியல்வாதிகளின் சதித்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என ஜெய்ஷங்கரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

சர்வதேச சட்டத்துக்கமைய சட்ட ரீதியாக ஜனநாயகமான முறையிலேயே நாம் கச்சதீவினைப் பெற்றுக் கொண்டோம். எனவே அதனை மீண்டும் வேறு எவரும் கையகப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. நாம் இது குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திடமும், தமிழ்நாட்டு அரசாங்கத்திடமும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். எனவே இந்த பிரச்சினை தொடர்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.

இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்க இரகசிய நடவடிக்கை: மெதகொட அபேதிஸ்ஸ தேரர்

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர்  மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 ராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியா  குறிப்பிடுகிறது. இந்து பிராமண சூழலில் பௌத்த மதம் பாதுகாக்கப்படாது. இதனால் தான். இந்தியாவில் பௌத்த மதம் இல்லாதொழிந்தது. இவ்வாறான நிலை இலங்கையில் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் நட்பு நாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஊடாக தமது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்திக் கொள்ளவே இந்தியா முயற்சிக்கும்.

திருகோணமலை துறைமுகம் பற்றி தற்போது எவரும் கவனம் செலுத்துவதில்லை. திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்தியா பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.இந்த செயற்திட்ட வலயத்துக்குள் புராதன கோயில்கள் மற்றும் பௌத்த விகாரைகள் உள்ளன.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்திய ஆட்சியாளர்களால் பலவந்தமான முறையில் இலங்கைக்கு திணிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தத்தால் பல விளைவுகள் ஏற்பட்டன.நீதிமன்ற உத்தரவினால் தான் இந்த ஒப்பந்தம் இன்றும் இழுபறிநிலையில் உள்ளது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை செயற்படுத்துமாறு இந்தியா இன்றும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கிறது.

இந்தியாவுடன் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் எதிர்காலத்துக்கும் தாக்கம் செலுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு, வலுசக்தி மற்றும் டிஜிட்டல் துறை தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கத்தை அரசாங்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்வில்லை.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தத்தில் இலங்கை இராணுவத்தை இரண்டாம் நிலையாக்கும் வகையில் பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பை இலங்கை இராணுவத்தினர் இல்லாதொழித்தார்கள். மகாநாயக்க தேரர்கள் மற்றும் இராணுவத்தினர் இலங்கையின் காவல் தெய்வங்கள் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வலுசக்தி தொடர்பில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இலங்கையில் சுயாதீனம் மற்றும் இறையான்மையை பாதிக்கும் வகையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பங்களாதேஷ் நாட்டின் வலுசக்தியை இயக்கும் அதிகாரம் இந்தியாவிடம் உள்ளது. ஆகவே வலுசக்தி துறையின் இறையாண்மையை இந்தியாவிடம் விட்டுக்கொடுத்து நாட்டைக் காட்டிக்கொடுக்க முடியாது.இந்தியாவுடன் இந்த அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு நாட்டு மக்கள் அனுமதியளிக்கவில்லை.மக்கள் விடுதலை முன்னணி தான் அனுமதியளித்துள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக  இலங்கையில் 21 இராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியாகுறிப்பிடுகிறது. இந்து பிராமண சூழலில் பௌத்த மதம் பாதுகாக்கப்படாது. இதனால் தான் இந்தியாவில் பௌத்த மதம் இல்லாதொழிந்தது.இந்நிலைமை இலங்கையில் ஏற்பட இடமளிக்க முடியாது.

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால்  ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும். ஆகவே ஆட்சியாளர்கள் தாம் தற்காலிக உரிமையாளர்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டும்.

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கருத்து தங்களுக்கு ‘இடி விழுந்தது போல்’ இருப்பதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கவலை

தாம் கலப்புப்பொறிமுறை கூட வேண்டாம் என வலியுறுத்திவரும் நிலையில், சர்வதேச தரத்துக்கு அமைய உள்ளகப்பொறிமுறையைப் பலப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் கூறியிருப்பது ‘எமது துன்பத்தைக் கடவுளிடம் முறையிடுவதற்காகக் கோயிலுக்குச் சென்ற வேளையில், கோயிலுக்குள் வைத்து இடி விழுந்தது போல’ இருப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அவர் இவ்வாறு கூறினாலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரும் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையக்கூடும் என்ற நப்பாசை தம்மத்தியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  வோல்கர் டக்ர், கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பிரதம நீதியரசர், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தியிருந்தார்.

திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, அங்கும் பலதரப்பட்ட குழுக்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதுமாத்திரமன்றி செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்ட உயர்ஸ்தானிகர், அவரது விஜயத்தின் நிறைவு நாளன்று கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பில், சர்வதேசத்தின் ஆதரவுடன் உள்ளகப்பொறிமுறையை வலுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் உயர்ஸ்தானிகரின் விஜயம் மற்றும் அவரது வலியுறுத்தல்கள் என்பன தொடர்பில் கருத்துரைத்துள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா, தாம் யாழ்ப்பாணத்தில் உயர்ஸ்தானிகரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது, தங்களின் கோரிக்கைகளையும் உயர்ஸ்தானிகர் புரிந்துகொண்டிருப்பார் என நம்பியதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் உள்ளகப்பொறிமுறை தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்தைப் பார்க்கும்போது, தமது நம்பிக்கை தவறு என்ற எண்ணம் ஏற்படுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்கள் வாழாத பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கத்தின் போக்கு இன்னமும் மோசமானதாக இருக்கின்றது’.

அதனைப் பார்க்கும்போது தமிழர்களின் அடையாளங்கள் மிகவேகமாக அழிக்கப்பட்டுவிடும் என்றே தோன்றுகின்றது. இருப்பினும் போராட்டக்குழுவாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான போக்கினை உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் புரிந்துகொள்ளவில்லை போல் தெரிகிறது’ என்றும் லீலாதேவி ஆனந்தநடராஜா குறிப்பிட்டார்.

மேலும் தாம் கலப்புப்பொறிமுறை கூட வேண்டாம் என்றும், சர்வதேசப் பொறிமுறையே வேண்டும் என்றும் வலியுறுத்திவரும் நிலையில், சர்வதேச தரத்துக்கு அமைய உள்ளகப்பொறிமுறையைப் பலப்படுத்தவேண்டும் என உயர்ஸ்தானிகர் கூறியிருப்பது ‘எமது துன்பத்தைக் கடவுளிடம் முறையிடுவதற்காகக் கோயிலுக்குச் சென்ற வேளையில், கோயிலுக்குள் வைத்து இடி விழுந்தது போல’ இருப்பதாகவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.

உரிமை கோரப்படாத காணிகளை மீண்டும் அரசுடமையாக்கும் வகையிலேயே புதிய வர்த்தமானி வெளியீடு : சுமந்திரன்

காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக் கூடிய வகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,941 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் (27) இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
‘வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைபடப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்குப் போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதையும் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக மார்ச் 28ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படுகிறது’ என நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதைக் கருத்திற்கொண்டு அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கான கொள்கைத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதானது, மீண்டும் இவ்வாறானதொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியப்பாடு உண்டு என்பதையே காண்பிக்கிறது என சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்கீழ் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், ஆகவே எதிர்வருங்காலத்தில் அரசாங்கம் மீண்டும் இத்தகைய வர்த்தமானியை வெளியிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் முன்வைப்பு

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு, அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மையான நிலைவரத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளல், அவர்களது பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான முன்னேற்றகரமான வழிமுறைகள் குறித்து ஆராய்தல், அவர்கள் சார்ந்து தற்போது நிலவும் சவால்களுக்கான நிலையானதும் யதார்த்தபூர்வமானதுமான தீர்வுகளை அடையாளங்காணல் என்பனவே இச்சந்திப்பின் பிரதான நோக்கங்களாகும்.

இச்சந்திப்பில் இலங்கையிலுள்ள அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயன்முறையை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு ஆணைக்குழுவினால் பிரதானமாக 4 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1951ஆம் ஆண்டு அகதிகள் பிரகடனத்தையும் 1967ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அதன் கூறுகளையும் ஏற்று அங்கீகரித்தல், புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பிலும் பரந்துபட்ட கொள்கையை வகுத்தல், அகதிகள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அகதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலக்காகக்கொண்டு செயலாற்றிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாத்தல் என்பனவே அப்பரிந்துரைகளாகும்.

பரிசோதனைகளுக்காக செம்மணி மனித புதைகுழியில் மண் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக தகவல்

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் (29) வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேநேரம், புதைகுழியில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன
இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் (29) முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வு பணிகளின் போது மேலும் ,  மனித சில எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்புகூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், மீண்டும் நாளைய தினம் (30) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.