இவ்வார ஆசிரிய தலையங்கத்தை எழுதுகின்ற பொழுது “இந்த நாடகம் – அந்த மேடையில் எத்தனை நாளம்மா – இன்னும் எத்தனை நாளம்மா” எனப் பாலும் பழமும் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில் பி. சுசிலாவின் இனிய குரலில் 1960களில் மக்கள் நாவுகளில் எல்லாம் ஒலித்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ட்ரம்ப் – இஸ்ரேல் நாடகம் உலக அரசியல் அரங்கிலும் வொல்கர் ரேக் – அநுர அரச நாடகம், உள்ளூர் அரசியல் அரங்கிலும் நடைபெற்றுள்ளதை மையமாக வைத்து இந்த நாடகங்கள் எத்தனை நாளுக்கு என்கின்ற கேள்வியை இலக்கை முன்வைக்க வைக்கிறது.
இஸ்ரேலை நோக்கியும் கட்டாரில் உள்ள அமெரிக்கத் தளம் மேலும் ஈரானின் தாக்குதல்கள் அதுவரை தங்கள் தாக்குதலால் தாங்கள் நினைத்ததைச் சாதித்து விட்டதாகக் கூறி வெற்றிவிழாக் கொண்டாடிய இஸ்ரேல் அமெரிக்கா என்னும் இருநாடுகளையும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வைத்தன என்பதே பல ஆய்வாளர்களின் கருத்து. இதனையே அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்ததாக ஈரானின் அதிபர் வருணிக்கின்றார். ஈரானின் உறுதி ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல சனநாயக வழிகளிலான அரசியல் போராட்டங்களிலும் கூட எந்த மக்கள் தம் மண்ணைக் காக்க உறுதியை வெளிப்படுத்துகின்றார்களோ அந்த மக்களுக்கு முன் பகைவர்கள் பணிந்தேயாக வேண்டும் என்கின்ற உண்மையை மீளவும் உலகில் நிரூபித்துள்ளது.
இதனை ஈழத்தமிழர்கள் தங்கள் சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் தங்களின் மண்ணின் மீட்புக்காக ஈழத்தமிழர்கள் “உறுதியின் உறைவிடமாக” எந்த இழப்புக்களையும் முகங்கொள்ள தயாராக இருந்த 1978 முதல் 2009 வரையான காலத்தில் உலகநாடுகள் உலக அமைப்புக்கள் ஈழத்தமிழர்களின் இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற ஈழமக்களின் மக்கள் இறைமையில் அவர்களைச் சந்தித்தனர்-பேசினர் என்பது வரலாறு. இந்த உறுதியை உடைக்க உலகின் வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான என்ன என்ன உத்திகளை சிறிலங்கா கையாள உதவியும் ஊக்கமும் அளித்தனவோ அத்தனை உத்திகளும் இஸ்ரேலின் உத்திகளாக இன்று கையாளப்படும் போக்கை உலகம் காண்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்காவின் ஈழத்தமிழன அழிப்பை வல்லாண்மைகள் எப்படி நியாயப்படுத்தினவோ அதே நியாயப்படுத்தலே இன்று இஸ்ரேலுக்கு அவற்றால் பயன்படுத்தப்பபடுவதையும் உலகம் காண்கிறது. மேலும் எவ்வாறாக நோர்வேயின் அனுசரணையுடன் தமிழீழ சிறிலங்கா போர்நிறுத்தத்தை முன்னிலைப்படுத்தி அதன் இலக்காக தமிழீழ நடைமுறை அரசின் வீழ்ச்சியை நடைமுறைப்படுத்தினவோ அதே பாணியில் இன்றும் இலக்கு நோக்கு உள்ளதை உலகம் உணர்கிறது. இதனால்தான் அன்று ஈழத்தமிழின நடைமுறையரசின் ஒடுக்கம் உலகின் பாதுகாப்பின்மைக்கும் அமைதியின்மைக்குமான முதலாவது தொடக்கமாகிறது எனக் கூறிய எதிர்வு கூறலை இன்று உலகம் நடைமுறையில் காண்கின்றது. இந்நிலையில் இந்த அமைதி நாடகம் அந்த மேடையில் நடப்பது சில நாட்களுக்கா அல்லது வாரங்களுக்கா என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அவ்வாறே அநுர அரசின் அழைப்பின் பேரில் ஒன்பது ஆண்டுகளின் பின்னர் சிறிலங்காவின் இன்றைய மனித உரிமைகளின் நிலை குறித்து நேரடி மதிப்பீடு செய்ய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் வொல்கர் ரேக் அவர்கள் இலங்கைக்குச் செல்கின்றார் என்ற செய்தி வெளியாகிய நாள் முதல் அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என தாயக அனைத்துலக ஈழத்தமிழர்கள் நம்பிய பொழுதே அது நாடகமாக முடியுமென இலக்கு எடுத்துரைத்தது. இப்பொழுது அது நடந்துள்ளது.
ஆணையாளர் வொல்கர் ரேக் அவர்கள் தனது சந்திப்புக்களின் முடிவில் சிறிலங்காவின் இன்றைய அநுர குமார திசநாயக்காவின் அரசாங்கம் முன்னெடுக்கும் புதிய அரசியல் மாற்றம் மற்றும் சமூக மாற்றங்களைப் பாராட்டியதுடன், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் தனது முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
இதனை உறுதி செய்வது போல வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் ஆணையாளர் கருத்து வெளியிட்டுள்ளார். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு ஆணையாளர் சென்றிருந்த நேரங்களில் ஈழத்தமிழரின் நேரடியானதும் எழுத்து மூலமானதுமான கோரிக்கைகளை தான் புரிந்து கொள்வதாகக் கூறிவிட்டு இதற்கான தீர்வை இந்தத் தேசத்துடன் இணைந்துதான் பெற வேண்டும் என்று வலியுறுத்தியமை சிறிலங்காவின் இறைமைக்குள் தீர்வு பெற வேண்டுமென்ற விதந்துரைப்பாக அமைந்தது. சுருக்கமாகச் சொன்னால் சிறிலங்கா எந்த நோக்குகளுக்காகச் மனித உரிமைகள் ஆணையாளரை அழைத்ததோ அந்த நோக்குகளை அடைவதற்கான நப்பிக்கையைச் சிறிலங்காவுக்கு மனித உரிமைகள் ஆணையக ஆணையாளர் வழங்கியுள்ளார் எனலாம்.
பிரித்தானியாவில் இன்றைய தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் பெரும் துன்பங்களை ஏற்படுத்தும் மக்கள் நலன்புரி சட்டவரைவு குறித்த துன்பகரமான உண்மை என்னவென்றால் தொழிலாளர் கட்சியினர் எதனையும் கற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் – கேட்கவும் மாட்டார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது என்பதாகும். இவ்வாறு பிரித்தானியாவின் காடியன் ஆங்கில நாளிதழின் பத்தி எழுத்தாளர் பொலி டொன்பீ தனது 27.06.25 காடியன் நாளிதழ் கருத்தியல் கட்டுரைக்குத் தலையங்கமிட்டுள்ளார். இது இன்று இலங்கைத்தீவில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் இறைமைக்கு முக்கியத்துவம் அளிக்காது செயற்பட்டு ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி வாழ்வுக்கு ஏற்படுத்தி வரும் பெருந்துன்பங்களுக்கும் பொருந்தும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
இந்நேரத்தில் அநுர அரசாங்கம் ஈழத்தமிழர்களின் 5940 ஏக்கர் தனியார் காணிகளை கையகப்படுத்த நடாத்திய நாடகமும் அதனை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாது ஒருசில மணித்தியாலங்களுள் காணி அமைச்சுக்கு அதனை நடைமுறைப்படுத்தும் நிலை தோன்றுவதற்கு இருந்த நிலையில் சட்டத்தரணி சுமந்திரனின் இடைக்கால தடையுத்தரவு பெறும் வழக்கால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்குத்தான் சுமந்திரன் அவர்களை உங்களுக்கு உரிய சட்டத்துறையில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு அளப்பரிய சேவை செய்ய முடியும் அதனை விட்டு கொழும்பில் இருந்து நீங்கள் பார்த்து வளர்ந்த அரசியலுள் சுழலாதீர்கள் முடிந்து போன சமஸ்டியை மீளக்கேட்டு நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள் என இலக்கு பலமுறை வலியுறுத்தியது.
கடந்த வார நிகழ்வுகளை எல்லாம் கூட்டு மொத்தமாகப் பார்க்கையில் ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் இனியாவது தமது மண்ணை மீட்பதற்கான அமைதி வழிப் போராட்டமாக இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற இறைமையின் உரிமையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழரின் தாயகத்தைச் சிங்களக் குடியேற்றமாக்கி தேசியத்தை சிங்களத் தேசியத்தால் ஆக்கிரமித்து ஈழத்தமிழரின் தன்னாட்சியை ஒடுக்கி வடக்கு கிழக்கு என்னும் இரு சிறிலங்காவின் பகுதிகளில் சிங்களவரில் தங்கி வாழும் வாழும் சமுதாயமாக ஈழத்தமிழரை மாற்ற அநுர அரசு நடத்திக் கொண்டிருக்கும் நிழல் யுத்தம் நேரடியான யுத்தத்தை விடப் பயங்கரமானது என்பதை உலகம் உணர்ந்து ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை ஏற்று ஈழத்தமிழர்கள் பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் பெற அனுமதிக்கும் என்பது இலக்கின் உறுதியான கருத்தாக உள்ளது.
ஆசிரியர்