ஐக்கிய நாடுள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதத் தொடக்க அமர்வில் இணை அனுசரணை செய்யும் நாடுகளால் சிறிலங்கா தொடர்பில் புதிய முன்மொழிவு கொண்டுவர வேண்டியிருப்பதால் பிரித்தானியா இணை அனுசரணை வழங்கும் மற்றைய நாடுகளுடன் பேச்சுக்களை இப்போதிருந்தே தொடங்க வேண்டியுள்ளது எனச் சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் மதிப்புக்குரிய அன்றூ பற்றிக் அவர்கள் யூன் 18இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனைச் சந்தித்த பொழுது கூறியுள்ளர். பிரித்தானியத் தூதுவரின் மனித உரிமைகளைப் பேணுவது குறித்த இந்தக் கடமை உணர்வு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அனைவருக்கும் அவர்களின் இவ்விடயம் தொடர்பான கடமைப் பொறுப்பையும் உடன் செயப்பட வேண்டிய நேரமுகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் சங்க உறுப்பினர்களைச் சந்தித்த பிரித்தானிய தூதுவர், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் நேரடியாகக் கேட்டறிந்தமையை இலக்கு பாராட்டுகின்றது. தூதுவர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பொழுது அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகத்தின் முக்கிய பங்களிப்பை பிரித்தானியா அங்கீகரிக்கிறது எனக் கூறியுள்ளமை சிவில் சமூக அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் சிறிலங்காவுக்கு இம்மாத இறுதி வாரத்தில் மனித உரிமைகளின் நிலை குறித்த மதிப்பீட்டுக்குச் செல்லும் நேரத்தில் மனித உரிமைகள் நிலை குறித்த கடந்த கால நிகழ்கால தரவுகளையும் தகவல்களையும் சான்றாதாரத்துடன் வெளியிட வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. மேலும் இஸ்ரேல் ஈரான் யுத்தத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் சிறிலங்காவுக்கான பயணம் கேள்விக்குறியானாலும் கூட பிரித்தானியத் தூதுவருக்குத் தகுந்த சான்றாதாரங்களை சிவில் சமூகத்தினர் விரைவாகக் கையளிப்பது ஏற்புடைய பலன்களை அளிக்கும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
இந்நேரத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்துடன் பணியாற்றிய தன்னார்வ அமைப்புக்கள் ஆணையகத்திடம் தேவையான அனைத்துலக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அளவுக்குச் சான்றுகள் இப்பொழுதே உள்ளன எனவும் இந்நிலையில் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதும் இதற்கான சான்றாதாரங்களை ஆவணப்படுத்தும் அலுவலகத்தை அமெரிக்காவின் இன்றைய நிலைப்பாடுகளால் நிதியளிப்பு இல்லாது மூடப்பட்டு விடாது தடுப்பதுமே இன்றைய சமகாலத்தின் தேவையாக உள்ளதெனக் கூறியுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். இதற்கு இரண்டு விடயங்களில் ஈழத்தமிழர்கள் தெளிவாகவும் ஒருங்கிணைந்தும் விரைவாகச் செயற்பட வேண்டும். ஒன்று ஈழத்தமிழர்கள் தாங்கள் இறைமையுள்ள மக்கள் என்பதை எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் மாறாத உறுதியுடன் வெளிப்படுத்துதல். அடுத்தது ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளைப் பேணுவதற்கான நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டாலே உலகின் குடிகளாக உள்ள ஈழத்தமிழர்கள் தமது நிதியுதவிகளை ஒருங்கிணைத்து நிதியின்றி தடைப்படக்கூடிய மனித உரிமைகளை பாதுகாப்பான அமைதியைப் பேணும் செயற்திட்டங்களைத் தொடர்ந்து இயங்க வைக்க முயற்கிக்க வேண்டும். இவை இரண்டிலும் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து செயற்படுகின்றார்களோ அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழரின் மனித உரிமைகள் பாதுகாப்புப் பெறும் என்பதே இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. மேலும் ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கான மனித உரிமைகள் பாதுகாப்புப் பேரவை ஈழத்தமிழர்களால் உலகளாவிய நிலையில் அனைத்து ஈழத்தமிழர் மனித உரிமைகள் மற்றும் ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதிக்கான செயற்பாட்டாளர்கள் அனைவரையும் இணைத்து நிறுவப்பட்டால் மட்டுமே சரியானதைச் சரியான நேரத்தில் சரியான முறையில் உலகின் முன்வைக்க இயலும் என்பது இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. இல்லையேல் கடந்த வார வீரகேசரி வார இதழில் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது போல 13வது திருத்தத்தை வலியுறுத்துமாறு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க எந்தச் சட்டநிலைத் தகுதியும் இல்லாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்குச் சில தமிழ் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளமை போன்ற செயற்பாடுகளே நடைமுறையாக அமையும்.
தமக்கு விருப்பமானவர்களை ஆட்சியில் அமர்த்துவதையே ஆட்சி மாற்றம் என்று சதாம் ஹுசைன் முதல் பிரபாகரன் வரை செயற்பட்ட அதே வல்லாண்மைகளே, இன்று ஈரானில் தான் விரும்பிய ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுகின்றன. இஸ்ரேலுக்கு தனது இருப்பினைப் பாதுகாக்க ஈரான் மேல் தாக்குதல் நடாத்தலாம் என்னும் இதே அமெரிக்க மேற்குலக நாடுகள்தான், வரலாற்றக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமுள்ள இறைமையுடன் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பிலிருந்து பாதுகாக்க சனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்தாலும் சரி ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்த வல்ல நடைமுறையரசை அமைத்தாலும் சரி அவற்றை ஏற்க மறுத்து, ஈழத்தமிழர்கள் மேல் சிறிலங்கா மேற்கொள்ளும் இனஅழிப்பை அதன் தேசிய பாதுகாப்புக்கான செயற்பாடு என அங்கீகரித்து நிற்கின்றன. இந்நிலையில் ஈழத்தமிழர்களாலேயே ஈழத்தமிழர் இறைமை எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் மீளுறுதி செய்யப்படாத வரை மனித உரிமைகள் ஆணையகத்தால் சிறிலங்காவைக் கொண்டு பொறுப்புக்கூறலைச் செய்விக்கவே இயலாது என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
மேலும் பிரித்தானியத் தூதுவர் வடமாகாண ஆளுநர் வேதநாயகத்தைச் சந்தித்து தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினை, 5941 ஏக்கர் தனியார் நிலத்தை மூன்று மாதத்துள் உரிமம் காட்டாதவிடத்து அரசுட மையாக்கும் வர்த்தமானிப் பிரகடனப்பிரச்சினை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு போன்ற சமகால பிரச்சினைகள் குறித்தும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள், சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்தல் விமான மற்றும் கப்பல் சேவைகளை வளர்த்தல் என்பன குறித்தும் கேட்டறிந்துள்ளமை ஈழத்தமிழ் மக்கள் குறித்த அவரின் அக்கறையாக உள்ளமைக்கு இலக்கு அவருக்கு நன்றி கூறுகிறது. பணியாட்சியில் உள்ள தமிழ் ஆளுநர்கள் அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்கள் மனச்சாட்சிக்கு அமைய தரவுகளையும் தகவல்களையும் உண்மையாக வழங்குவார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்களின் நிர்வாகத்தில் ஈழத்தமிழர்கள் அனைத்துலக ஆதரவுகளை உதவிகளை வழிகாட்டல்களைப் பெறலாம். இது உள்ளூராட்சிக்கும் பொருந்தும். பிரித்தானியத் தூதுவர் யாழ்ப்பாண மாநாகரசபை முதல்வர் விவேகானந்தராசா மதிவதனியைச் சந்தித்து பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல்கள், மற்றும் இளையர்களுக்கான வேலை வாய்ப்பு, மாகாண மற்றும் நகராட்சி நிலையில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் குறித்து கலந்து பேசியுள்ளார். அவரின் இந்த ஆர்வத்தையும் முன்மாதிரியையும் பார்த்தாவது உள்ளூராட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் தனது மண்ணினதும் மக்களினதும் தேவைகள் அதற்கான வர்த்தகத் திட்டங்கள் கல்வி தொழில்நுட்ப இணைப்புக்கள் மூலதன மற்றும் மூலவள மனிதவள நிலைகள் குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணங்களைத் தயாரித்து கைகளில் வைத்திருந்தால் மட்டுமே ஈழத்தமிழர் மேல் அக்கறை காட்டும் அனைத்துலகத்தினர் வழி ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேவைகளை பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்க முடியும். அதுவும் உலகம் தன்னியங்கிகளதும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளதும் போருக்குள் போய்க் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களே தங்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கான வழியில் செயற்பட வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்